Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனைவியின் துரோகம்
 
பக்தி கதைகள்
மனைவியின் துரோகம்

என் முன்பு அமர்ந்திருந்த ராகேஷுக்கு 35 வயதிருக்கும். அழகாக இருந்தான். ராகேஷ் சென்னையின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞன்.
அவன் ஆடை கசங்கியிருந்தது. கண் கலங்கியிருந்தது.  அப்படி என்னதான் பிர்ச்னை?
“உங்ககிட்ட எதையும் மறைக்காமச் சொல்லிட்டு, தற்கொலை பண்ணிக்கலாங்கற முடிவோடதான் வந்திருக்கேன்.”
பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தேன். ராகேஷ் சொல்லத் தொடங்கினான்.
ராகேஷின் மனைவி பிரியா பேரழகி. பெரிய தொழிலதிபரின் ஒரே மகள். சில ஆண்டுக்கு முன்  பிரியாவின் தந்தையின் அலுவலகத்தை வடிவமைத்துக் கொடுத்தான் ராகேஷ். அப்போது பிரியாவைப் பார்க்க காதல் மலர்ந்தது. மணமாகி குழந்தைகள் பிறந்தாகி விட்டது..
ராகேஷ் தொழிலில் அசுர வேகத்தில் முன்னேறினான். இப்போதெல்லாம் அடிக்கடி வெளிநாடு போகிறான். லண்டனில் ஒரு வீடு, துபாயில் ஒரு வணிக வளாகத்தை வடிவமைக்கிறான்.
ராகேஷ் – பிரியா உறவு சுமுகமாக போய்க்கொண்டிருந்தது.
“நீங்க எப்ப பாத்தாலும் வேலையை கட்டிக்கிட்டு அழுதுக்கிட்டிருக்கீங்க.  எனக்கு வாழ்க்கை போரடிச்சிப் போச்சு.  நாம சேர்ந்து வெளியூர் போய் எத்தனை நாளாச்சு?”
“லண்டன் பிராஜெக்ட் முடிஞ்சவுடன நான் பிரீயாயிருவேன். வெளியூர் என்ன, வெளிநாட்டு டிரிப்பே அடிச்சிருவோம்டா கண்ணு”
ஆனால் லண்டன் வேலை முடிவதாக இல்லை. இப்போதெல்லாம் ராகேஷிடம் பிரியா முகம் கொடுத்துப் பேசுவதேயில்லை. சென்ற மாதம் ராகேஷ் ஒரு விலை உயர்ந்த வைர நகையை பிரியாவிற்குப் பரிசளித்தான். அதைப் பார்த்தவுடன் அவள் சமாதானமாகி விடுவாள் என கணக்குப் போட்டான்.
பிரியா அதைக் கண்டுகொள்ளவில்லை. ராகேஷிடன் விட்டேற்றியாக பேசினாள்.
ராகேஷுக்கு லேசாக உறுத்த ஆரம்பித்தது. ஏதோ தப்பு நடக்கிறது என தோன்றியது. அவன் காதில் விழுந்த தகவல்கள் எதுவும் சரியாக இல்லை.
ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் அவளது நடவடிக்கைகளைக் கவனிக்க ஏற்பாடு செய்தான். அவர்கள் சொன்னதைக் கேட்டு நிலைகுலைந்தான் ராகேஷ்.
பிரியாவிற்கு அவளுடன் கல்லுாரியில் படித்த ரிஷி என்ற இளைஞனுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இருவரும் பலமுறை வெளியூருக்கு ஒன்றாகப் பயணம் செய்திருக்கிறார்கள்.
“பிரியாவுக்கு என்ன சார் குறை வச்சேன்? அவ ஏன் துரோகம் செய்யணும்? என் முதுகுல ஏன் குத்தணும்? ரொம்பவே வலிக்குது”
“அடுத்து என்ன செய்யப் போறீங்க, ராகேஷ்?”
“என் தற்கொலைக்கு என் மனைவி பிரியாதான் காரணம். அவளுக்கும் ரிஷிக்கும் இருக்கற கள்ளக்காதல்தான் காரணம்னு லெட்டர் எழுதிவச்சிட்டுத் துாக்குல தொங்கப்போறேன். விபரம் தெரிந்த வயசுலருந்து பச்சைப்புடவைக்காரிய தெனம் தெனம் கும்பிட்டதுக்கு என்ன நல்லா வச்சி செஞ்சிட்டா சார். இப்போ தேவையில்லாம பச்சைப்புடவைக்காரிக்காகத் வாய்தா வாங்காதீங்க. கெட்ட கோபம் வரும்”
நான் திகைத்தேன். என் உதவியாளர் பதட்டத்துடன் உள்ளே வந்தார்.
“போலீஸ் வந்திருக்கு”
வெளியே ஓடினேன். ஆறடி உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்த அந்தப் பெண் காவல்துறை அதிகாரி இல்லை, நம்மை காக்கும் தெய்வம் என்பதைக் உணர்ந்த விழுந்து வணங்கினேன்.
“ரொம்பப் புலம்புகிறானோ?”
தலையாட்டினேன்.
“உள்ளே போய்ப் பேசு. உன் வார்த்தைகளில் நான் இருப்பேன்.”
அவளை வணங்கிவிட்டு உள்ளே சென்றேன்.
“என் மனைவி செஞ்ச துரோகம்…’’
“நிறுத்துய்யா. நீ செஞ்ச துரோகத்த யாரு சொல்றது?”
“என்ன சார் அபாண்டமா பழி சுமத்தறீங்க?  என் மனைவிக்கு நான் மனசாலகூடத் துரோகம் நெனச்சது இல்லன்னு உங்களுக்குத் தெரியுமா? லண்டன்ல அந்தக் கம்பெனில வேல பாக்கற மேனேஜர் என்கிட்ட வழிஞ்சா. உங்க ஹோட்டல் ரூமுக்கு வரட்டுமான்னு பூடகமாக் கேட்டா. “நீ நெனக்கற மாதிரி ஆள் நான் இல்லம்மா” ன்னு முகத்துக்கு நேர சொல்லிட்டேன். என்னைப் போய்.. “
“நீங்க உங்க மனைவிக்குத் துரோகம் செய்யலங்கறது உண்மைதான். உங்க வாடிக்கையாளர்களுக்கு...’’
ராகேஷ் சன்னமாக அதிர்ந்தான்.
“பிரியா அப்பா கட்டின ஆபீஸ்ல எத்தன லட்ச ரூபாய் கமிஷன் அடிச்சீங்க?  சென்னையில பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் டிசைன் பண்ணீங்க. 25 லட்ச ரூபாய் பீஸ் வாங்கினீங்க. கட்டிட மேற்பார்வையில காண்ட்ராக்டர்கிட்டருந்து நீங்க அடிச்ச கமிஷனே அம்பது லட்ச ரூபாய்க்கு மேல இருக்குமே.  என்கிட்ட பெரிய லிஸ்டே இருக்கு ராகேஷ்..”
“அது தொழில் சார். எல்லாரும் செய்யறதுதானே”
“துரோகம் ஒரு நாளும் தொழிலாக முடியாது. உங்க வாடிக்கையாளர்கள் உங்க மேல வச்ச நம்பிக்கைக்குத் துரோகம் செஞ்சீங்க. நீங்க உங்க மனைவிமேல வச்ச நம்பிக்கைக்குத் அவங்க துரோகம் செய்யறாங்க.  வினை வெதச்சீங்க. வினை அறுத்தீங்க.”
“என் மனைவிக்கு இன்னொருத்தனோட தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சவுடன் நான் துடிச்சிப்போயிட்டேன்….”
“உங்கள சொந்த மகன் மாதிரி நடத்தின பிரியாவோட அப்பா பிராஜெக்டுலயே ந கமிஷன் அடிச்சீங்கன்னு தெரிஞ்சா அவர் எப்படித் துடிச்சிப் போவாரு?  அவருக்கு லட்சங்கள் பெரிசில்ல. மகன் மாதிரி நம்பிக்கை வச்ச ஒருத்தர் தன்னை ஏமாத்திட்டாரேன்னு தெரிஞ்சா அவர் மனசு என்ன பாடுபடும்?”
“நான் இப்போ என்னதான் செய்யறது? கமிஷன் அடிச்ச பணத்தத் திருப்பிக் கொடுத்துரட்டுமா?”
“வேண்டாம். சிக்கல் வரும். அந்தப் பணத்த எல்லாம் கணக்கு பண்ணி அத வச்சிக் கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்யுங்க. அதோட பலன் உங்க வாடிக்கையாளர்களுக்குப் போய்ச் சேரணும்னு பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கங்க”
“அப்படிச்  செஞ்சா பிரியா திருந்திருவாளா?”
“நிச்சயமாச் சொல்ல முடியாது. முதல்ல உங்க கர்மக் கணக்க நேர் செய்யுங்க. அப்புறம்  பிரியாகிட்ட பேசுங்க. அவளுக்கு முழுச் சுதந்திரத்தக் கொடுங்க.  ரிஷியோட வாழணும்னு ஆசையா இருந்தா  உனக்கு விவாகரத்து கொடுக்கறேன்னு சொல்லுங்க. ரிஷி நல்ல ஆளு கெடையாது.  நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு பிரியா கேட்டா அவன் தெறிச்சி ஓடிடுவான். பிரியா திருந்திருவா. வாழ்க்கைய புதுசா ஆரம்பிங்க. அதுல  குடும்பத்துக்குன்னு நேரம் ஒதுக்குங்க. பணத்தாசையக் குறைங்க. சந்தோஷமா வாழுங்க.”
சிறிது நேரம் எங்கோ வெறித்துப்பார்த்தபடி உட்கார்ந்திருந்தவன் என்னைப் பார்த்துக் கைகூப்பிவிட்டுக் கிளம்பிச் சென்றான்.
பச்சைப்புடவைக்காரியை சிந்தித்தபடி தொய்வாக வெளியே நடந்தேன். வாசலில் காவல் துறை வண்டி நின்று கொண்டிருந்தது. காவல் அதிகாரி உருவில் இருந்த என் காவல் தெய்வத்தை விழுந்து வணங்கினேன்.
“நன்றாக வழிகாட்டிவிட்டாய். நடக்கவிருந்த ஒரு தற்கொலையைத் தவிர்த்துவிட்டாய்”
“இனிமேல்...”
“ராகேஷ் திருந்தி வாழ்வான். அவன் மனதில் இருக்கும் பணத்தாசை குறையும். பிரியாவும் ரிஷியைப் பற்றித் தெரிந்து கொள்வாள். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் சொல்”
“அதுதான் பெரிய ஞானத்தைக் கொடுத்து விட்டீர்களே, தாயே?”
“என்ன ஞானமப்பா?”
“தாயே! எனக்குப் பலர் துரோகம் செய்திருக்கிறார்கள். நான் மலைபோல் நம்பியவர்கள் என் முதுகில் கத்தியால் குத்தியிருக்கிறார்கள். நண்பர்கள் என நினைத்தவர்கள் நயவஞ்சகர்களாக மாறி அழிக்க முற்பட்டிருக்கிறார்கள். எனக்குத் துரோகம் செய்தவர்கள் அழிய வேண்டும், அவர்கள் வலியிலும் வேதனையிலும் சாகவேண்டும் என பல
முறை சபித்திருக்கிறேன் நான் செய்த தவறு இன்றுதான் எனக்குப் புரிந்தது.”
“என்ன தவறு”
“எனக்கு யாரும் துரோகம் செய்யவில்லை. நான் செய்த துரோகங்கள்தான் என்னைத் துன்புறுத்தியிருக்கின்றன. எனவே இப்போதிலிருந்து எனக்குத் துரோகம் செய்தவர்களுக்காக உங்களிடம் பிரார்த்தனை செய்யப் போகிறேன்.”
“என்ன பிரார்த்தனை?”
“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்.”


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar