Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பொருள் தனைப் போற்றி வாழ்
 
பக்தி கதைகள்
பொருள் தனைப் போற்றி வாழ்


காசு இல்லண்ணா பஸ்ஸ விட்டு இறங்குய்யா... காசு இல்லாமலா ஓட்டலுக்குச் சாப்பிட வந்த... வெளிய போய்யா... இதெல்லாம் நாம் அன்றாடம் கேட்கும் வசனங்கள். பணம்... காசு... இதைச் சுற்றியே உலகம். அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல்...மூதுரையில் அவ்வையார் வாக்கு. இதனை கண்ணதாசன் நமக்குப் புரியும் வகையில் குளத்திலே தண்ணியில்லே... கொக்கும் இல்ல... மீனும் இல்ல... பெட்டியிலே பணம் இல்ல... பெத்த புள்ள சொந்தமில்ல என்றார். இன்றைய உலகம் மட்டுமல்ல. என்றைய உலகமும் இப்படித் தான். இல்லானை இல்லாளும் வேண்டாள்... மற்று ஈன்று எடுத்த தாய் வேண்டாள் என்பார் அவ்வை நல்வழிப் பாடலில். ரொம்பவும் எதிர்மறையாக உள்ளதோ? பயம் வேண்டாம். அன்று அவர்கள் சொன்னதெல்லாம் நாம் கண்முன்னே காணும் காட்சிகள்.
    பொருள் இவ்வுலகத்திற்கு அவசியம் என்பது வள்ளுவம். பொருளைத் தேடி, உழைத்துப் பெறுங்கள். ஏனெனில் பகைவனின் செருக்கை அறுத்தெறிய அதை விடக் கூரிய ஆயுதம் இல்லை என்கின்றார் வள்ளுவர்.
    சேமிப்பு என்பது குண்டூசியால் குளம் வெட்டுவது மாதிரி. செலவு என்பது பலுானை ஊசி முனையால் உடைப்பது மாதிரி என்பார்கள். இந்த உலகம் பொருளைத் தேடித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சாலைகளில், முச்சந்திகளில், தியேட்டர்களில், அலுவலகங்களில், பார்க்குகளில், ஏன் கோயில் வாசல்களில் இரண்டு, மூன்று பேர் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களின் பேச்சில் பொருள் (அர்த்தம்) இருக்கிறதோ இல்லையோ அவர்கள் பேச்சின் சாராம்சம் நிச்சயம் பொருளைப் பற்றியே இருக்கும். மனிதனின் நேரமே பொருளுக்குத் தான் விற்கப்படுகிறது. காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை நாம் நமது நேரத்தை விற்றுத் தான் வயிற்றைக் கழுவுகிறோம். சிலருக்கு நுாற்றுக்கணக்கில், சிலருக்கு ஆயிரக்கணக்கில், சிலருக்கு லட்சக்கணக்கில், சிலருக்கு கோடிக்கணக்கில் கிடைக்கிறது. அது அவரவர் திறமை, கல்வி, வேலை எல்லாவற்றிற்கும் மேலே அதிர்ஷ்டம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. வாழ்நாளாலெல்லாம் மனிதன் பொருளின் பின்னாலேயே ஓடிக்கொண்டு இருக்கிறான்.
    இன்றைய சூழலில் உணவு, இருப்பிடம், மருத்துவம், கல்வி எல்லாமே பொருளாகவே மாற்றப்பட்டுவிட்டன. மருத்துவமும், கல்வியும் தர்மம் என்ற லிஸ்டில் இருந்து இன்றைக்கு வியாபாரம் என்ற லிஸ்டிற்குச் சென்றுவிட்டதால் அதனையும் பொருள் கொண்டே பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம். ஒரு காலத்தில் கல்வியும், மருத்துவமும் அரசாங்கத்திடம் இருந்தது. சாராயம் தனியாரிடத்திலே இருந்தது. இப்போது அது தலைகீழாக மாறியிருப்பதை எழுதித் தான் சொல்ல வேண்டும் என்றில்லை.
    எனவே தான் அவ்வையாரும். பொருளைப் போற்றி, பாதுகாத்து வாழ வேண்டும் என அறிவுரை வழங்கினாள். நமது முன்னோர்கள் சிக்கனமாக வாழ்ந்தார்கள். சிக்கனம் என்பதையும், கஞ்சத்தனம் என்பதையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. சிக்கனம் என்பது எது அடிப்படைத் தேவையோ அதனை மட்டும் செய்து கொள்வது. இது போதும் என்று ஒவ்வொரு நிலையிலும் உணர்ந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது ஆகும்.
    நடுத்தரக் குடும்பத்து நண்பர். வீடு கட்டத் தொடங்கினார். அவர் கையில் இருந்த பணம் போதாது என்பதால் வங்கியில் வீட்டு லோன் வாங்கி கட்டிக் கொண்டிருந்தார். வீட்டில் அடிப்படையான வசதிகள் எது தேவையோ அதை மட்டும் செய்து கொண்டு வீட்டை முடிக்கலாம் என்றால் சமுதாயம் விடுமா என்ன? சார்... இந்த டைல்ஸ் தான் சூட்டபிள்.... ஆனா கொஞ்சம் காஸ்ட்லி என்று தொடங்கி ஒவ்வொன்றிலும் புற அலங்காரங்களில், பெயிண்ட் அடிப்பது வரை நம்மைத் துாண்டித் துாண்டி பட்ஜெட்டிலிருந்து பல லட்சம் வரை ஏற்றிவிட்டு விடுவார்கள். அவர்களைச் சொல்லக் கூடாது. நமக்குத் தான் அறிவில்லை. என் வீடு இப்படித்தான் எளிமையாக இருக்கும் என்பதை கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் கூடி முடிவு செய்தால் பின்னர் கடன் ஏன் கூடப் போகிறது. சமுதாயம் கிரகப்பிரவேசம் அன்று வந்து பார்த்து விட்டுக் கேலி பேசுமே என நினைத்தால், நம் கடனை அவர்கள் கட்டுவார்களா என்ன? ஏதோ ஐநுாறோ ஆயிரமோ கவரில் கொடுத்து விட்டு அருமை எனச் சொல்லி விட்டுப் போய் விடுவார்கள். அதையும் திரும்பக் கொடுக்க வேண்டும். அவர்களிலும் எத்தனை பேர் இவனெல்லாம் வீடு கட்டிட்டாண்டா என மனதிற்குள் புழுங்குவார்களோ தெரியாது. நாம் நமக்காகத் தான் வாழ வேண்டுமே தவிர பிறருக்காக, பிறர் என்ன நினைப்பார்களோ என வாழ்ந்தால் கஷ்டப்படுவது நாம் தானே தவிர, மற்றவர்கள் அல்ல. இதனைத் தான் நம் பெரியவர்கள் விரலுக்குத் தகுந்த வீக்கம் என்றார்கள்.
    அதுவும் இன்றைய தொலைக்காட்சிகளும், சமூக ஊடகங்களும் ஒவ்வொரு தனிமனிதனையும் எப்படியாவது கடன்காரராக ஆக்கித் தீர வேண்டும் என்ற குறிக்கோளில் தான் செயல்படுகின்றன. அதில் தொண்ணுாறு சதவீதம் பேர் விழுந்துவிடுகிறோம் அல்லவா? தினசரி நமக்கு வரும் போன்களில் பாதி போன் கிரடிட் கார்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது தான்.
    பண்டிகைக் காலங்களைக் குறி வைத்து ஜீரோ ப்ரசண்ட் வட்டி என்ற ஆசை வலையில் நாம் எத்தனை பேர் விழுந்து தவிக்கிறோம். முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நம் பெற்றோர் தலைமுறையினர் கடன் வாங்கவே மாட்டார்கள். கஞ்சியோ, கூழோ இருப்பது போதும் என வாழ்ந்து சிறந்தார்கள். நாமோ இன்று கடன் வாங்குவதை நமது வாழ்வின் அங்கமாகவே மாற்றிவிட்டோம். இ.எம்.ஐ. இல்லாத அரசு அல்லது தனியார் ஊழியர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பிடித்தம் போக கையில் பெறும் சம்பளம் பார்க்கும் போது சோமாலியா நாட்டுக் குழந்தை போல இருக்கும்.
    சமீபத்தில் எதிர்பாராத சூழலில் கொரோனா வந்த போது தனியார் பணிகளில் உள்ள பல லட்சக் கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் அந்த வேலையை நம்பி வீடு, கார். பைக் என அவரவர் தரத்திற்கேற்ப கடன் வாங்கியிருந்தனர். ஆனால் திடீரென வேலை இல்லாத சூழல் உருவான போது முதல் கவலையே இ.எம்.ஐ எப்படிக் கட்டுவது என்பது தான். அவர்களில் பல பேரிடம் சேமிக்கும் பழக்கமே இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
    வீடு கட்டுதல், கார், பைக் வாங்குதல் என்பதை விடவெல்லாம் தற்போது நாம் கொஞ்சம் கூட சிந்திக்காமல் சமூக கவுரவம் பார்த்து பணத்தை அழிப்பது திருமணங்களில் தான். வீடுகளில் மட்டுமே திருமணம் நடந்த காலம்.
    உறவினர்களே ஒன்று கூடி சமையல் செய்து மகிழ்வுடன் உண்டு கலைந்து சென்ற காலம் உண்டு. ஆனால் இப்போது பத்திரிக்கை அடிப்பதிலேயே ஆடம்பரம் தொடங்கிவிடுகிறது. பத்திரிக்கை ஒரு மெசேஜ் தான். அதை சிம்பிளாக முன்னோர் அச்சிட்டு வழங்கி மகிழ்ந்தார்கள். ஆனால் இன்றோ.... அதிலேயே லட்சக்கணக்கில் செலவு. திருமணம் முடிந்ததும் கட்டாயமாக துாக்கித் தான் ஏறியப் போகிறார்கள் எனத் தெரிந்தும் அதில் தேவையில்லாமல் செலவு செய்கிறோம். மண்டபம், மண்டப அலங்காரம், போட்டோ, வீடியோ, மணமகள் அலங்காரம் என ஒவ்வொன்றிலும் ஆடம்பரத்தைப் புகுத்தி தேவையின்றிச் செய்கிறோம் எனத் தெரிந்தும் பணத்தை அழிப்பதைப் பார்க்கும் போது தான் ஏன் இந்த மனிதர்கள் தனக்கென வாழாமல் பிறருக்காகவே வாழ்கிறார்கள் என கவலைப்பட வைக்கிறது. எங்கள் அக்கா வீட்டில் அப்படிச் செய்தார்கள். மாமா வீட்டில், மச்சான் வீட்டில் என உறவுமுறை, நண்பர்களை எல்லாம் ஒப்பீடு செய்து திருமணங்களை நடத்திக் கொண்டிருக்கும் சூழலை நாம் கட்டாயம் மீளாய்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதிலும் உச்சக் கட்டக் கொடுமை உணவு தான். ஆடம்பரமாக சமைக்கப்பட்ட உணவு வகைகள். இலைகளை மட்டுமே அலங்கரித்து விட்டு, மனிதர்களால் கொரிக்கப்பட்டு விட்டு மீதமெல்லாம் குப்பைக் கூடைக்குச் செல்வதைப் பார்க்கும் போது கண்ணீர் வடிப்பதைத் தவிர சமூக அக்கறை உள்ளவனால் என்ன செய்ய இயலும்.
    எளிமையான வாழ்வில் இருந்து ஆடம்பரமான வாழ்க்கை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் இன்றைய சமுதாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவ்வையின் மொழிதான் பொருள்தனைப் போற்றி வாழ் என்பது.
    முதலில் நாம் பணத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கைகளில் இருந்து  எண்ணிக் கொடுக்காமல் கார்டுகளைத் தேய்த்துச் செலவழிக்கும் போது நமக்கு செலவு செய்வது குறித்த அக்கறையே குறைந்துவிட்டது என்று சொல்லலாம். செல்வம் பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைப்பதில்லை. செல்வம்... செல்வம்... செல்வோம் என ஓடிக் கொண்டிருக்கும். யார் பெண்களை மதிக்கிறார்களோ, யார் மனைவியை மதிக்கிறார்களோ, போற்றிப் பாதுகாக்கிறார்களோ அவர்களிடம் தான் செல்வம் நிலைத்திருக்கும் என்பது நம் முன்னோர் வாக்கு. அதற்காக பணத்தையே கட்டிப்பிடித்துக் கொண்டு தானும் அனுபவிக்காமல், பிறருக்கும் கொடுக்காமல் இருப்பது என்பது அல்ல அர்த்தம். பணத்தை வேலி போட்டுப் பாதுகாக்க முடியாது. ஆனால் அந்தப் பணத்திற்கும் ஒரு வேலி உண்டு. அது தான் தர்மம் என்பார் வாரியார் சுவாமிகள்.
    நமது செல்வம் வீண் செலவு ஆகாமல் தேவையானவற்றிற்கு மட்டும் செலவு ஆகி பத்திரமாக இருப்பதற்கான வழி ஒன்று உண்டு என்றால் அது நம் வருமானத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்வது மட்டுமே. தர்மம் என்றவுடன் பெரும் பணத்தை யோசிக்க வேண்டாம். ரோட்டில் திரியும் நாய்க்கு பிஸ்கட் போடலாம். பறவைகளுக்கு உணவு தரலாம், பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்களின் நினைவு நாட்களில் குறைந்த பட்சம் ஒரு இரண்டு பேருக்கு ஒரு நேர உணவு வழங்கலாம். நம் வீட்டில் அடிப்படை வேலை செய்பவர்களுக்கு திடீரென்று ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு உதவலாம். நம் உறவினர் இல்லத் திருமணங்களுக்கு ஏதோ ஒரு வகையில் சிறிய உதவிகள் செய்யலாம் எனச் சின்னச் சின்ன தர்மங்களை செய்தவதன் மூலம் தேவையற்ற செலவுகளை நாம் எதிர்கொள்ளாமல் இந்த தர்மங்களே நம்மைப் பாதுகாக்கும் என்பது வேதவாக்கு.
    நமது வருமானம் எதுவோ அதற்குத் தகுந்தாற் போல வாழப் பழகுவது தான் பொருளைப் பாதுகாப்பதின் அடிப்படையான செயல். குழந்தைகளுக்கு நம் குடும்பச் சூழல், பொருளாதாரச் சூழல் ஆகியவற்றை எடுத்துக் கூறி நம் வருமானத்தில் இப்படித் தான் வாழ இயலும் என்று உண்மையைக் கட்டாயம் படம்பிடித்துக் காட்டுவதும் பொருளைப் போற்றி வாழ்வதின் அடிப்படை.
    சமூக கவுரவம், பிறரை ஒப்பீடு செய்து வாழ்வது போன்ற மாய வலைகளில் வீழாமல் கடவுள் நமக்களித்ததைக் கொண்டு திருப்தியுடனும், சந்தோஷத்துடனும் வாழக் கற்றுக் கொள்வது அவசியமான ஒன்று. இவற்றிற்கெல்லாம் மேலாக கடன் இன்றி வாழ்வதே உண்மையாக வாழ்க்கை என்பதை நமது ஒவ்வொரு உயிர்ச் செல்களிலும் பதிவு செய்து பழக வேண்டும். நாடே கடன்ல இருக்கும் போது நாம் வாங்கினால் என்ன? என்ற போலியான சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பதிலே திருப்தி கொள்ளப் பழக வேண்டும். உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற வைர வரிகளை வீட்டில் பெரிதாக எழுதிக் கூட வைக்கலாம்.
    எளிமையான வாழ்க்கை, கடனில்லாத வாழ்க்கை, ஒப்பீடு இல்லாத வாழ்க்கை இவைகளே பொருளைப் போற்றி வாழ்வதற்கான வழிகள். பொருளைப் போற்றி மகிழ்ச்சியாக வாழ்வோம். அடுத்த தலைமுறைக்கு இந்தப் பாடத்தை அவசியம் சொல்வோம்.   


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar