Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆயிரம் கோடி ராமர் உனக்கு நிகராவரோ?
 
பக்தி கதைகள்
ஆயிரம் கோடி ராமர் உனக்கு நிகராவரோ?


காலம் வேகமாகக் கடப்பது பரதனைப் பொறுத்தவரை ஆறுதலாக இருந்தது. பதினான்கு வருடங்களுக்கு முன் சித்ரகூடத்தில் இருந்து அண்ணன் ராமனின் பாதுகைகளைப் பெற்று அவற்றைத் தன் சிரம் மீது இருத்தி அயோத்திக்குக் கொண்டு வந்தது பசுமையாக நினைவிருக்கிறது. அயோத்தி நகர எல்லைக்கு வந்தபின் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு தங்கப் பல்லக்கை அரண்மனையில் இருந்து வரவழைத்து அதில் பாதுகைகளை அமர்த்தி, சத்ருக்னனோடும், சுமந்திரனோடும், தானும்  பல்லக்கை சுமந்து கொண்டு உள்ளே வந்த நினைவிலும் அதே பசுமை.
ஆனால் அந்தப் பாதுகைகளை தசரத மகா சக்கரவர்த்தி அமர்ந்து கோலோச்சிய அரியணை மீது அமர்த்தலாமா? அது முறையாகுமா என்ற கேள்வி அவனுள் எழுந்தது. பொதுவாகவே பாதுகைகள், அது யாருடையதாக இருந்தாலும், அதற்கு சிம்மாசன அந்தஸ்து தகுமா? அது மன்னர் தசரதனை அவமதிப்பது போலாகாதா? இதை ராமனும் விரும்ப மாட்டாரே!
அப்போது தந்தையார் மீது ராமன் பக்தி மிகுந்த மரியாதையைக் காட்டிய ஒரு சம்பவத்தை தாயார் கைகேயி விவரித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதாவது ஒரு வயது பாலகனான ராமனை, தசரதன் தன் கரங்களால் உயரே துாக்கிக் கொஞ்சுவாராம். அப்போது தந்தையார் முகத்திலோ, உடலிலோ தன் பாதங்கள் பட்டுவிடக் கூடாதே என்பதற்காக  ராமன் தன் கால்களைப் பின்னோக்கி மடக்கிக் கொள்வாராம்!
அத்தகைய பண்பு மிக்க ராமனால், தன் தந்தையார் அமர்ந்து கோலோச்சிய அரியாசனத்தில் தன் பாதுகை அமர்வதை சகித்துக் கொள்ள முடியுமா? இது ராம பண்புக்கு முரணானதாயிற்றே! ஆகவே அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும் என தீர்மானித்தான் பரதன். அதோடு ராமன் இல்லாத அயோத்தி அரண்மனையில் வசிக்கவும் அவன் விரும்பவில்லை. ஆகவே, சற்றுத் தொலைவில் உள்ள நந்தி கிராமத்தில் பதினான்கு ஆண்டுகள் தங்கியிருப்பது என்றும், ராமன் திரும்பிய பிறகு அவருடன் அயோத்தி புகுவது என்றும் முடிவு செய்தான்.  இந்த யோசனையை சத்ருக்னனும்  பாராட்டினான்.
உடனே நந்தி கிராமத்தில் முகாமிட்டான் பரதன். அதோடு அந்தப் பதினான்கு ஆண்டுகளுக்குத் தான் ராமனை எண்ணி தவமியற்றப் போவதாகவும் தெரிவித்தான். அவனது மனைவி மாண்டவியும், சத்ருக்னனின் மனைவி சுருதகீர்த்தியும் அந்த வேள்விக்குத் தம்மாலான ஒத்துழைப்பையும் நல்க முன்வந்தார்கள். லட்சுமணனின் மனைவி ஊர்மிளை மனசுக்குள் ஏக்கத்தைத் தேக்கி வைத்துக் கொண்டு கணவரின் வருகையை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தாள். தாயார்கள் மூவரும் தாமும் பரதனுடனேயே தங்கி அவனுக்கு ஆதரவாக இருக்கத் தீர்மானித்தார்கள். ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் நலமாகத் திரும்ப வேண்டுமே என அனைவரும் உளமுருக பிரார்த்தனை செய்தார்கள்.
நந்தி கிராமத்தில் அரசப் பிரதிநிதிகள், குருமார்கள், முனிவர்கள், பொதுமக்கள் என்று பலரும் குழுமியிருக்க, அங்கே பீடம் ஒன்றைப் பொருத்தி, அதில் ராம பாதுகைகளை வைத்தான் பரதன். விரிவாக இல்லாவிட்டாலும், சம்பிரதாயத்தை மீறாத வகையில் அவற்றுக்குப் பட்டாபிஷேகமும் செய்தான். அங்கிருந்தபடியே பாதுகைகளின் ‘வழிகாட்டலில்‘ ஆட்சி பரிபாலனமும் செய்து வந்தான்.
உடனிருந்த சத்ருக்னன், பரதனின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தான். சற்று தொலைவில் யாகசாலை போன்ற அமைப்பு பரதன் ஏற்பட்டில் உருவாகியிருந்தது. அதில் பிரமாண்டமான குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் சிறிய அளவில் யாகத் தீ கனன்று கொண்டிருந்தது. அடிக்கடி அதை பரதன் பார்த்துக் கொண்டிருந்தது, சத்ருக்னனின் அச்சத் துடிப்பை அதிகப்படுத்தியது.
கண்களில் பரவச ஒளியுடன் ராமன் வரவை எதிர்பார்த்திருந்த பரதன் ஒருநாள் திடீரென முகவாட்டம் கொண்டான். இன்னும் ஒரே நாள்தானே? இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்தவன் கடைசி காலகட்டத்தில் மனக் கலக்கம் கொள்வானேன்? அதோடு பரதனுடைய பார்வை அடிக்கடி யாக குண்டத்தை நோக்கிச் செல்வதும் சத்ருக்னனுக்கு பயத்தை உண்டாக்கியது.
பரதனை நெருங்கி, ‘என்னாச்சு அண்ணா? ஏன் இந்த மனமாற்றம், முக மாற்றம்?’ என பரிவுடன் கேட்டான்.
அவனை ஏக்கத்துடன் பார்த்த பரதன், பெருமூச்சு விட்டான். ‘நேற்று நான் ஒரு தீக்கனவு கண்டேன், தம்பி. அதில் நம் அண்ணன் ஸ்ரீராமன் மரவுரியில் தோன்றுகிறார். ராஜாராமனாக, பட்டாபிஷேக ராமனாக பேரரசுப் பேரழகுடன் அவர் தோன்றாதது எனக்கு மனக்குழப்பத்தைத் தந்திருக்கிறது. ஒருவேளை ராமன் வரவே மாட்டாரோ? அதுவும் அதிகாலையில் நான் இக்கனவைக் கண்டிருப்பதால் எனக்கு இன்னமும் பயம் அதிகரிக்கிறது’
என்ன சோதனை இது! வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடையும் போலிருக்கிறதே! உடனே பரதனிடம், ‘அண்ணா அது உங்கள் மனப் பிரமை. தாங்கள் பதினான்கு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமனை மரவுரி கோலத்தில் பார்த்தீர்கள் இல்லையா, அந்த உருவமே உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அதுவே உங்களுக்குக் கனவாகத் தெரிந்திருக்கிறது. நம் அண்ணன் யாரையும் கைவிட மாட்டார், அதுமட்டுமல்ல வாக்கு தவறுவது என்பது அவருடைய அகராதியிலேயே கிடையாது’ என்று ஆறுதலாகச் சொன்னான்.
‘அதாவது நாளைக்கு ஸ்ரீராமன் கட்டாயம் வந்துவிடுவார் என்கிறாய்?’ சந்தேகத்துடனும், அண்ணனை தரிசிக்காமலேயே தான் தீப்புக வேண்டுமோ என்ற ஆதங்கத்துடனும் கேட்டான் பரதன்.
‘நிச்சயமாக’ என்று உறுதியாக பதிலளித்தன் சத்ருக்னன்.
மறுநாள் பொழுது விடிந்தது. ராமன் வரவில்லை, வரும் அறிகுறியும் தெரியவில்லை. பரதன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். சத்ருக்னனை அழைத்தான். ‘தயாராக இரு, சத்ருக்னா, ஸ்ரீராமன் வரவில்லை என்றால், நான் வாக்களித்தபடி இன்று தீப்புகுவேன். ஆனால் அதற்காகக் கலங்காமல் நீ அயோத்தி அரச பீடத்தில் அமர்ந்து நல்லாட்சி வழங்க வேண்டும்’ என்று திடமாகச் சொன்னான்.
அதைக் கேட்டு பதறி அழுதான் சத்ருக்னன். ‘என்ன பேச்சு பேசுகிறீர்கள் அண்ணா? நாடாள வேண்டிய ஸ்ரீராமன் காடாளச் சென்று விட்டார். அவர் பாதம் தொட்டு அவருக்குப் பணியாற்ற லட்சுமணனும் உடன் சென்று விட்டான். அவர் திரும்பாததால் நீங்களும் உயிர் துறக்கத் தயாராக இருக்கிறீர்கள். இப்படி பிற இரு தம்பிகளும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும்போது நான் மட்டும் பேராசை கொண்டு அரசாள்வேனா? உங்களுக்குப் பின்னாலேயே தீக் குண்டத்தில் நான் இறங்குவேன் என்பது நிச்சயம்…. மனதிடத்தைக் கைவிடாதீர்கள் அண்ணா. ஸ்ரீராமன் நிச்சயம் வருவார்’
ஆனால் பரதனுக்குப் பொறுமையில்லை. குண்டத்தில் பெருந்தீ வளர்க்கச் சொல்லி உத்தரவிட்டான். அதனருகே சென்றான். அதைப் பார்த்து தாயார் மூவரும் பதறினார்கள். கோசலை ஓடோடி வந்தாள். ‘பரதா, நில். ராமன் காட்டுக்குச் சென்றதும், உன் தந்தையார் மரணமடைந்ததும் என்னுடைய விதியின் காரணமாக நிகழ்ந்தவை தான். அதேபோல் இப்போது ராமன் வராதிருப்பதற்கும் அதுவே காரணம். ஆனால் நீ ஏன் உன் விதியை முடித்துக் கொள்ள வேண்டும்? பரதா, நான் இப்போது சொல்கிறேன், எண்ணில்லாத பல கோடி ராமர்கள் ஒன்று கூடினாலும், உன் திறத்துக்கு ஒப்பாக மாட்டார்களப்பா, வேண்டாம், தீக்குண்டத்துக்கு அருகே போகாதே… ராமன் நிச்சயம் வந்துவிடுவான்’
கைகேயியும், சுமத்திரையும் உடன் வந்து அவனைத் தடுத்தார்கள்.
எல்லோரும் உணர்ச்சிப் பிழம்பாக தவித்துக் கொண்டிருக்க, அப்போது அங்கே அனுமன் வந்தான்.
அவனைப் பார்த்த  அனைவரும் திடுக்கிட்டனர். யாரேனும் அரக்கனோ என்றும் எண்ணி அஞ்சினர். அவர்களுடைய மனோபாவத்தைப் படித்த அனுமன், ‘ஸ்ரீராமன் வந்து கொண்டிருக்கிறார், எல்லோரும் கவலையை விட்டொழியுங்கள். இன்றுதான் கடைசி நாள் என்பது உண்மைதான், ஆனால் இந்த நாள் முடிய இன்னும் பல நாழிகைகள் இருக்கின்றன. ஆகவே பொறுமையாக இருங்கள்’ என்று ஆறுதலளித்தான்.
ஆனால் யாரோ, எவரோ என்ற அச்சம் சூழ அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம், தன்னை ராமனுடன் பொருத்தி அடையாளம் காட்டுவதற்காக ராமன் கொடுத்தனுப்பியிருந்த கணையாழியைக் காட்டினான்.
அதைப் பார்த்து பரதன் மகிழ்ந்தான்.  இவன் ராமனின் துாதன்தான் என்பதை சந்தேகமின்றி புரிந்து கொண்டான். ஏனைய அனைவரும் உற்சாகம் பெற்று ராமனின் வரவுக்காகக் காத்திருந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar