Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீதா கல்யாணம் – 1
 
பக்தி கதைகள்
சீதா கல்யாணம் – 1

வா. ஜானகிராமன்

விஸ்வாமித்திரர் ஒரு மாபெரும் முனிவர். ஆனாலும் அவர் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் இல்லை. மேனகை விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். அவர் மூலம் அவளுக்கு பிறந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளாமல், மேனகையையே உதறிவிட்டு சென்றவர்.  
அடுத்து, இன்னொரு சம்பவம். இந்திர சபை. கற்றறிந்த பல அறிஞர்கள் பல பொருள்கள் பற்றி விவாதிக்க கூடியுள்ளார்கள்.  இந்த நிகழ்ச்சிக்கு  இந்திரன் வசிஷ்டரை தலைமை தாங்கி நடத்தி தரும்படி ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தான்.  அவர் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர்.  
அயோத்தியில் இக்ஷ்வாகு குலஅரசன் அரிச்சந்திரன் ஆட்சி.  அன்று அரிச்சந்திரனின் பிறந்த தினம். அதற்கான சடங்குகளை குலகுருவாகிய வசிஷ்டர் நடத்தி முடித்த பிறகு, அரிச்சந்திரன் கொடுத்த பரிசுகளுடன் இந்திர சபைக்கு வந்தார். ‘‘இவைகளையெல்லாம் யார் கொடுத்தார்கள்?’’ என்று இந்திரன் கேட்டான். ‘‘எப்பொழுதுமே சத்தியத்தை பேசும் அரிச்சந்திரன் கொடுத்தான்’’ என்று வசிஷ்டர் சொன்னார்.  இப்படி இவர்கள் இருவரும் பேசிக்கொண்டது விஸ்வாமித்திரருக்குப் பிடிக்கவில்லை. ‘‘ஏ! இந்திரா! வசிஷ்டர் சொன்னது தவறு’’ என்றார்.
’’ஐயா! நாங்கள் இங்கு பேசியது அவ்வளவு தொலைவில் இருக்கும் உங்கள் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லையே, பிறகு எப்படி தவறு என்கிறீர்கள்?’’ என்று கேட்டான் இந்திரன்.
’’என் காதில் விழவில்லை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், வசிஷ்டர் எது சொல்லியிருந்தாலும் அது தவறே’’! என்று வசிஷ்டர் மேலிருந்த பொறாமையில் சொன்னார்.
“அரிச்சந்திரன் உண்மையே பேசும் சத்தியவான் என்று சொன்னார். அது தவறா’’ என்று கேட்டான் இந்திரன்.  
’’நிச்சயமாக தவறே. அதை நிரூபிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். தான் சொன்னதை நிரூபிப்பதற்காக பூலோகம் வந்து அரசன் அரிச்சந்திரனை நாட்டை இழக்க வைத்து, மனைவி சந்திரமதியை ஒரு கொடியவனிடம் வீட்டு வேலை செய்யும் நிலைக்கு கொண்டுவந்து, அரிச்சந்திரன் சுடுகாட்டை காவல் காக்கும்படி செய்து, மகனை இறக்க வைத்து, இப்படி அந்த குடும்பத்தை படாத பாடு படுத்தி கடைசியில் தோல்வி அடைந்தார்.  பிறகு கடவுள் அருளால் அரிச்சந்திரனுக்கு மறுவாழ்வும் அரசபதவியும் கிட்டிற்று.  அவர்கள் குழந்தையும் பிழைத்து எழுந்து வந்தான். இருந்தாலும், விஸ்வாமித்திரரின் மனதில் உத்தமமான தம்பதிகளை பிரித்து மிகுந்த கஷ்டம் கொடுத்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு இருந்து கொண்டேயிருந்தது.  மேனகை விவகாரத்தை விட, இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை தந்தது.  
இந்த பாவத்திற்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் வெகு நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தார்..  அந்த சமயத்தில் தான், அதே இக்ஷ்வாகு குலத்தில் பிறந்து கோசல நாட்டை ஆண்டு கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தி தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய தக்க பெண்களை தேடிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்தது.
சர்வேஸ்வரனான நாராயணனே தசரதனுக்கு ராமனாக பிறந்திருக்கிறான், அவனுக்காகவே சாட்சாத் மகாலட்சுமியே விதேக நாட்டின் அதிபதி ஜனகரிடம் மிதிலையில் வளர்ந்து வருகிறாள் என்று அவருக்குத் தெரியும்.  இந்த தெய்வீக திருமணத்தை தான் முயற்சி எடுத்து செய்வித்து, தன் பாவத்தை போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணத்தில் தசரதனை காண அயோத்திக்கு வந்தார்.
அரண்மனை வாசலை அடைந்த விஸ்வாமித்திரன் (கௌசிகன் என்றும் கூறலாம்), ‘‘காதியின் மைந்தனும் கௌசிகனுமான நான் வந்திருப்பதாக உடனே போய்ச் சொல்’’ என்று காவலர்களிடம்  சொன்னார்.  அவருடைய குரல் கேட்டு அச்சமடைந்த, காவலர்கள் விரைவாக சபையை அடைந்து தசரதரிடம் முனிவர் வந்திருப்பதாக சொன்னார்கள்.
அதைக்கேட்ட தசரதன் மிகுந்த பரபரப்புடன் வேகமாக எழுந்திருந்து புரோகிதர்களுடன் விஸ்வாமித்திரனை எதிர்கொண்டழைத்து முறைப்படி உபசரித்து சபைக்கு அழைத்து வந்து தக்க இருக்கையில் அமரச் செய்தான்.
பிறகு தசரதன்,‘‘முனிவரே! நான் உம்மை வலம் வந்து வணங்கும்படி இந்த அரண்மனைக்கு தாங்கள் எளிதாக வந்தது என்னுடைய நாடு செய்த தவத்தால் அன்று, நான் செய்த நல்வினைகளினால் அன்று, முன்பு என் குலத்தோர் செய்த தவத்தின் பயன்’’, என்று மிகவும் தன்னடக்கமாக சொன்னான். தங்கள் வருகையை புனிதமாகவும் நல்ல சகுனமாகவும் கருதுகிறேன். தாங்கள் வந்த நோக்கம் எதன் பொருட்டு என்று கூறும்படி பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு சேவை செய்து அதன் மூலம் தங்கள் ஆசியைப் பெற விரும்புகிறேன்.  வந்த காரியத்தை முடித்துக்கொள்ளாமல் தாங்கள் இங்கிருந்து செல்லக் கூடாது.  எனக்கு தாங்கள்தான் தெய்வம். நான் வெறும் ஏவலாளி.  தங்கள் வருகையால் நான் இது வரை செய்த அறங்களின் பயனை அடைந்து விட்டதாக எண்ணுகிறேன் என்றான். தங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன்”.
தசரதனிடத்தில் ஒரு குறை.  அவசரத்தில் வாக்குறுதிகளை தந்துவிட்டு பின்னால் துன்பப்படுவது.  அது இங்கேயும் நிகழ்கிறது.  வாக்குறுதிகளை அள்ளிவிட்டான் தசரதன்.  
தசரதனையும் குறை சொல்லி பயனில்லை.  எதை வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்லும் பொழுது அவன், ‘‘இந்தக் கிழவன் என்ன கேட்டு விடப்போகிறான்? மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு யாகம் செய்யப்போகிறேன், இரண்டு குடம் நெய் வேண்டும், ஒரு வண்டி சமித்து வேண்டும் என்று கேட்பான். கொடுத்தால் போயிற்று’’ என்று எண்ணியிருப்பான்.
முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு கோரிக்கையை தசரதன் மட்டுமல்ல, யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. முனிவர் மன மகிழ்ந்து, ‘‘தசரத மன்னனே! என்னைப் போன்ற முனிவர்களும், தேவர்களும்,  துன்பம் நேரும் பொழுது, உதவி நாடி, வெள்ளி மலையான சிவபெருமானின் கயிலையும், திருமாலின் பாற்கடலையும், நான்முகனின் சத்தியலோகத்தையும், இந்திரனின் அமராவதி நகரையும், அழகிய பொன்மயமான மாட மாளிகைகளையும் உள்ள உன்னுடைய அயோத்தி நகரையும் அல்லாமல் வேறு இடம் செல்வதற்கு உள்ளதோ’’ என்றார்.  
’’தங்கள் வருகையால் அரசாட்சியை அடைந்த பயனைப் பெற்றேன்.  இப்பொழுது நான் தங்களுக்கு செய்ய வேண்டிய பணி யாது?’’ என வினவினான்.  
விஸ்வாமித்திரர் மனமகிழ்ந்து, ‘‘மன்னவா! நீ பேசியது உன் உயர்ந்த நிலைக்கு உகந்ததாக உள்ளது.  வசிஷ்டனின் அறிவுரைகளும் உனக்கு எப்பொழுதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.  என் மனதில் உள்ளதை சொல்கிறேன்.  நீ அதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.  நான் ஒரு யாகம் செய்கிறேன்.  சுபாகு, மாரீசன் என்னும் அரக்கர்கள் பல அரக்கர்களுடன் வந்து அந்த யாகத்தை கெடுத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் யாக குண்டத்தின் மீது மாமிசம், ரத்தம் முதலியவைகளை கொட்டுகிறார்கள்.  அதனால் யாகம் பூர்த்தி செய்ய முடியவில்லை. ‘சாபம் கொடுத்து நீ அவர்களை அழிக்கலாமே’ என்று நீ நினைக்கலாம். நான் செய்யும் வேள்வியின் நியமம் அதை தடுக்கிறது.  
‘‘மன்னவனே! பராக்கிரமம் மிக்கவனும், உன்னுடைய மூத்த புதல்வனுமான ராமனை என்னுடன் அனுப்பு.  அவன் இடையூறு செய்யும் அரக்கர்களை அழிக்கக்கூடியவன்.  தன்னையும் காத்துக் கொள்வான். நான் இவனுக்கு பலவிதமான மகிமைகளைக் கொடுப்பேன். அந்த அரக்கர்கள் ராமனுக்கு எதிரில் ஒருக்காலும் நிற்க முடியாது.  ராமனுடைய புகழ் இதன் மூலம்  மூன்று உலகங்களுக்கும் பரவும்.  ராமனைத் தவிர வேறு எவரும் அந்த அரக்கர்களை கொல்ல துணிய மாட்டார்கள்.  புத்திர பாசம் கொண்டு நீ இந்த பிரச்னையை பார்க்கக் கூடாது.  ராமனின் உண்மை சொரூபத்தை நான் அறிவேன்.  நிலையான புகழையும் தர்மத்தின் பலனையும் அறிய விரும்பினால், வசிஷ்டர் முதலானவர்களுடன் கலந்து பேசி, அவர்கள் அனுமதி கொடுத்தால், ராமனை என்னிடம் ஒப்படை. யாகத்திற்கு இன்னும் பத்து நாட்கள்தான் உள்ளன.  ஆகையால் ராமனை உடனே கொடு.  உனக்கு மங்கலமுண்டாகட்டும்’’.
விஸ்வாமித்திரன் இவ்வாறு கூறியது மார்பில் வேல் பாய்ந்து உண்டான புண்ணில் எரி கொள்ளி நுழைந்தாற்போல செவியில் நுழைய, மாபெரும் வீரனான தசரதன் பிறவியிலேயே பார்வையற்றவன் கண்களை பெற்று மீண்டும் அவைகளை இழந்தாற்போல கொடுந்துன்பம் அடைந்தான்.
சற்று துயரத்தை அடக்கிக் கொண்டு, முனிவனை நோக்கி தசரதன்,
’’இவ்வளவுதானா முனிவரே! இதற்கு ராமன் எதற்கு? அவன் சிறுபையன். இதோ நான் வருகிறேன். சிவபெருமானோ, பிரம்மனோ, யாராயிருந்தாலும் நான் அவர்களை தடுத்து நிறுத்தி தங்களுடைய வேள்வி நன்கு நடைபெறச் செய்கிறேன். புறப்படும் போகலாம்’’ என்றான்.
‘தன் வார்த்தைக்கு மறுப்பா’ கோபத்தோடு இருக்கையை விட்டு எழுந்தார் விஸ்வாமித்திரர்.  கண்கள் சிவந்தன! அண்டம் நடுங்கியது. தேவர்கள் கலங்கினார்கள்.  திக்குகள் இருண்டன.
பார்த்தார் வசிஷ்டர். ‘நீ பொறுத்திருக்க!’ என்று கூறி விட்டு, தசரதனை நோக்கி,‘‘பிறரால் தரமுடியாத பல நன்மைகள் ராமனுக்கு வரும்பொழுது அதை என் தடுக்கிறாய்? உன் மகனுக்கு அளவற்ற பெருமைகள், வித்தைகள் வந்து சேரும் காலம் இன்று நேர்ந்திருக்கிறது.  ராமனை உடனே அனுப்பி வை’’ என்றார்.  
குருவின் அறிவுரையைக் கேட்ட தசரதன் மகிழ்ச்சியுடன் ராம லட்சுமணர்களை வரவழைத்து, விஸ்வாமித்திரரிடம்‘‘இக்குழந்தைகளுக்கு இனி தந்தையும் நீரே, தாயும் நீரே’’ என்று கூறி ஒப்படைத்தான்.  
ஆகாயத்திலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.  துந்துபி வாத்தியம் ஒலித்தது.  பேரிகைகளின் ஒலி எழுந்தது.  
திருமாலின் அவதாரமாகிய ராமன், மிதிலையில் வளர்ந்து வரும் திருமகளை நோக்கிப் பயணம். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar