Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தர்ம லட்சியத்தைப் புராணம் பூர்த்தி பண்ணுகிறது
 
பக்தி கதைகள்
தர்ம லட்சியத்தைப் புராணம் பூர்த்தி பண்ணுகிறது


முனிவர் பரத்வாஜரின் ஆசிரமத்தில் அவருடைய உபசாரத்தை ஏற்றுக் கொண்டிருந்த ராமன் சற்றே கவலையுடன் விண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆமாம், அனுமன் பரதனை சந்தித்திருப்பானா? இறுதி நாள் என்பதால் பரதன் ஏதேனும் விபரீத முடிவெடுத்திருப்பானோ? இங்கே பரத்வாஜரின் கோரிக்கையையும் தட்ட முடியாது. ராவண வதத்தைக் கொண்டாடும் வகையில் இவர் சிறப்பாக விருந்துபசாரம் அளிக்கிறார். விபீஷணன் அளித்த புஷ்பக விமானம் தன்னையும், தன்னைச் சார்ந்த நுாற்றுக் கணக்கானவர்களையும் எளிதாக சுமந்து கொண்டு மிகக் குறைந்த நேரத்தில் அயோத்தி சென்றடைந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும், பரதனின் மனப் போராட்டத்தை எண்ணிதான் பெரிதும் கவலை கொண்டான் ராமன்.
அதோ… அனுமன். மலர்ந்த முகத்துடன் அவன் வரும் அழகிலிருந்தே பரதனுக்கும், மற்றவர்களுக்கும் மனத் தெம்பளிக்கும் செய்தியைத் தெரிவித்து விட்டு வந்திருக்கிறான் என்பது புரிந்தது. ராமனும் மலர்ந்தான். நிம்மதி நெடுமூச்செறிந்தான். சீதையும், லட்சுமணனும் தாங்கள் விரைவில் அயோத்தி செல்லவிருக்கும் நல்ல நேரத்தை எதிர்நோக்கி ஆனந்தம் பொங்கக் காத்திருந்தார்கள்.
ராமனை வணங்கிய அனுமன், தான் பரதன் முதலானவருக்குத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதையும், தன் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையையும் தெரிவித்தான். பிறகு சீதை, லட்சுமணனுடன் ராமனின் பத்தாண்டுகால  தண்டகாரண்ய வாசம், அடுத்து பஞ்சவடிக்குச் சென்று வசித்தது, சூர்ப்பணகை வரவு, மாரீசனின் பொன்மான் தோற்றம், சீதை கடத்தப்பட்டது, ராமன் சுக்ரீவனைச் சந்தித்தது, வாலி வதம், கடலில் பாலம் அமைத்தது, விபீஷணன் சரணாகதி, ராவண வதம், சீதை மீட்பு என்று எல்லா விவரங்களையும் சுருக்கமாகச் சொல்ல, அவர்கள் பலவித உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டதையும் விவரித்தான். ராமன் நிம்மதி அடைந்தான்.  
பரத்வாஜர் ராமன் முதல் வானரத் தொண்டன் வரை அனைவரையும் சமமாகவே பாவித்து விருந்தோம்பல் பண்பில் சமத்துவத்தை நிலைநாட்டினார்.
விருந்து முடிந்தது. முனிவரிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு அனைவரும் புஷ்பக விமானம் ஏறி அயோத்தி சென்றார்கள்.
நந்தி கிராமத்தில் வான் பகுதியில் புதியதாய் ஓர் ஒளி தோன்றியது. எல்லோர் பார்வையும் சட்டென அதை நோக்கிச் சென்றது. விண்ணில் வெகு தொலைவில் ஒரு பிரம்மாண்ட பறவை பறந்து, நெருங்கி வந்து, பதவிசாய் இறங்குவதுபோல, புஷ்பக விமானம் பூமியில் இறங்கி நிலை கொண்டது. கடலிலிருந்து முகிழ்த்த சூரியனாய் ராமன் ஒளி பரப்பியபடி, அதிலிருந்து இறங்கினான். பின்னாலேயே சீதை, லட்சுமணன். கூடவே சுக்ரீவன், அனுமன் மற்றும் பலரும்…
கடிது செல்லும் கணையாய் பரதன் பாய்ந்து சென்று ராமன் பாதத்தில் விழுந்தான். மரவுரியுடன், கவலையால் நொந்த உடலுடன் காட்சியளித்த பரதனைக் கண்டு கண் கலங்கினான் ராமன். அவன் விழிகளில் இருந்து துளிர்த்து, பெருகி, விழுந்த கண்ணீர் பரதன் மீது விழுந்து அவனை ஆசீர்வதித்தது.
தாயார் மூவரையும் வணங்கி எழுந்தான் ராமன். அவனைத் தொடர்ந்து சீதையும், லட்சுமணனும் அவ்வாறே செய்தார்கள். லட்சுமணனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டான் சத்ருக்னன். கோலாகலமும், கொண்டாட்டமுமாக அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர்.
குலகுரு வசிஷ்ட மகரிஷி ராம பட்டாபிஷேகத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டார். தமக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்பார்க்காமலேயே ஆளாளுக்கு ஏதேனும் ஒரு பொறுப்பு எடுத்துக் கொண்டு பதினான்கு ஆண்டுகள் ஒத்தி போடப்பட்ட மகுடாபிஷேக விசேஷத்துக்கு தம் பங்கு உழைப்பை நல்கினார்கள்.
அனைவரும் புடைசூழ ராமன் அயோத்தி நகருக்குள் புகுந்தபோது அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, இரு கரம் கூப்பி வரவேற்றனர்.
அயோத்தி அரண்மனை மண்டபத்தில் சிம்மாசனமும் ராமனின் வரவு கண்டு பெரிதும் மகிழ்ந்து சிலிர்த்தது. ஆமாம் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்வரை தசரத சக்கரவர்த்தியைச் சுமந்த அந்த அரச பீடத்துக்கு, தான் வெறுமையாகக் காத்திருந்த காலம் முடிவுக்கு வந்ததில் சந்தோஷம். அதைவிட தசரதனின் பாசத்துக்குரிய புதல்வன், அயோத்தி மக்களின் அன்புக்குரிய ராமன் தன்மீது அமரப் போகும் தருணத்தை எண்ணியும் பேரானந்தம் கொண்டது.
சம்பிரதாய சடங்கு எல்லாம் அடுத்தடுத்து வேகமாக நடந்தன. புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட  நீரால் ராமனை நீராட்டினர். பட்டாடை, நகைகள், நறுமணப் பூச்சுகள் என ராஜ தோரணை பளிச்சிட அலங்கரித்தனர். பிறகு சிம்மாசனத்துக்கு அழைத்து வந்தனர். அரியணை அருகே சென்ற அனுமன் அதனடியில் அமர்ந்து, அதைத் தாங்கிக் கொண்டான். வாலியின் மைந்தனான அங்கதன் உடைவாளை உயர்த்திப் பிடித்து அருகே நின்றான். ராமனுக்கு மேலாக வெண் கொற்றக் குடையை பரதன் பிடித்துக் கொண்டான். லட்சுமணனும், சத்ருக்னனும் ஆளுக்கொரு பக்கம் நின்றபடி சாமரம் வீசினர். வசிஷ்ட முனிவர் ராமன் சிரசின் மேல் கிரீடம் ஏற்றி அவனை ராஜாராமனாக்கினார்.
சீதை பரவசமானாள். தன் கண்ணோடு கண் நோக்கிய இனிய நாளிலிருந்து ராமனைப் பிரிய வேண்டிய துர்பாக்கிய நிலையையும் அனுபவித்து, இப்போது எல்லோரும் போற்றித் தொழும் மாமன்னன் ஸ்ரீராமனுக்கு அருகில் பெருமையுடன் நின்றுகொண்டாள்.
தன் நோக்கம் ஆக்கபூர்வமாக நிறைவேறிய மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள் கைகேயி. அவளது உள்மனதைப் புரிந்து கொண்ட கோசலை கண்ணீர் மல்க அவளை அணைத்துக் கொண்டாள். சுமித்திரை இருவரையும் கட்டியணைத்துத் தன் சந்தோஷத்தைத் தெரிவித்தாள். குற்ற உணர்வால் சபைக்கு வரக் கூச்சப்பட்ட மந்தரை வெகு தொலைவிலிருந்தே நீர் பெருகும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
முடிசூட்டு விழாவிற்கு வந்திருந்த அகத்தியர் ராமனையும், அவன் சகோதரர்களையும் அனைவரையும் உளமாற ஆசீர்வதித்தார். ராவண வதத்தில் தம் பங்கிற்குத் தான் அளித்த அஸ்திரங்கள், ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகம் எல்லாம் தேவைக்கேற்ப செயலாற்றியிருந்ததில் அவருக்குப் பெருமை, மகிழ்ச்சி.
அரியணையில் ராமன் வீற்றிருந்த கம்பீரம் அனைவரையும் நெஞ்சு விம்ம வைத்தது. வீரம் செறிந்த அந்தத் தோற்றம், தான் என்றுமே அதர்மத்துக்கு எதிரானவன் என்பதைப் பறை சாற்றியது. அதேசமயம் அன்புக்கும், நியாயத்துக்கும் கட்டுப்பட்டவன் என்பதையும் அவனது கருணைக் கண்கள் தெரிவித்தன.
அயோத்தி மன்னனாகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் தன் முதல் பிரகடனமாக பரதனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான் ராமன்.
அயோத்தி மட்டுமல்லாமல் இந்தப் பிரபஞ்சம் எங்குமே நன்மைகள் விளையும் வகையில் கோலோச்சினான் ஸ்ரீராமன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar