Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » 24. பருவத்தே பயிர் செய்
 
பக்தி கதைகள்
24. பருவத்தே பயிர் செய்

 பருவத்தே பயிர் செய்  என்று அவ்வை கூறியது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் தான். அந்தக் காலத்தில் ஆடி மாதம் விதைக்கத் தொடங்கினால் ஆறு மாதங்கள் அதாவது மார்கழியில் அறுவடை செய்து தை முதல் நாள் பொங்கல் பண்டிகைக்கு புது அரிசியைப் பயன்படுத்துவது வழக்கம். எனவே தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி தமிழகத்தில் உண்டு. பயிர் செய்வதற்கான பருவம் என்று ஒன்று உண்டு. அந்த நேரத்தில் நாம் அதைச் செய்யாவிட்டால் உலகத்தோடு இணைந்து வாழ்வதற்கு ஒத்துவராதவர்கள் என்று பொருள். உழுகிற நாளில் ஊருக்குப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை என்பதும் பழமொழி. உழுது, பயிரிட வேண்டிய காலத்தில் ஒருவன் வெளியூர் சென்று விட்டு காலம் தாழ்ந்து, எல்லோரும் உழுது, பயிரிட்டு, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து, உரமிட்டுப் பணிகளை முடிக்கும் தறுவாயில் இவன் ஊருக்குத் திரும்புவானேயானால் இவன் வயலில் அறுவடை செய்வதற்கு ஆட்களைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் இவன் உழுது பயிரிட்டால் தானே அறுவடை செய்ய இயலும். வாழ்க்கையும் அப்படித் தான். ஒரு சக்கரம் போன்றது. உரிய நேரத்தில் கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள், அவர்கள் உரிய நேரத்தில் வளர்ந்து பெரியவர்களாதல், அவர்களுக்குத் திருமணம், பேரப்பிள்ளைகள் என்று இந்தச் சக்கரமானது சரியான பருவங்களில் சரியான நேரங்களில் (அதாவது வயதில்) சுழல வேண்டும். அதற்கு மனிதன் முயன்று கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஓரிடத்தில் தடைப்பட்டுவிட்டாலும் கூட அது தேங்கி விடும். ஓடினால் தான் ஆறு. அனைவருக்கும் பயன்படக் கூடியது. தேங்கினாலோ அது குட்டை. கொஞ்சநாளில் துர்நாற்றம் எடுத்துவிடும் அல்லவா! எனவே பருவங்களிலேயே செய்ய வேண்டியதைச் செய்து விட வேண்டும். அதற்கு கடவுளின் அருளும் அவசியம் வேண்டும்.
    ஒரு கிராமத்திற்கு ஒரு ஞானி வந்தார். வந்தவரை அங்குள்ள மக்கள் அவரின் பெருமை புரியாமல் வரவேற்கவில்லை. வரவேற்காவிட்டால் கூடப் பரவாயில்லை. அவமதிக்கவும் செய்தனர். அதனால் அவர் கோபம் கொண்டு உங்கள் ஊருக்கு ஐந்து ஆண்டுகள் மழையே பெய்யாது என்று சாபமிட்டுச் சென்றுவிட்டார். மக்கள் அஞ்சி நடுங்கினர். ஆனால் திரும்பிப் பார்க்காமலேயே போய்க் கொண்டிருந்தார். போகிற வழியில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளைப் பார்த்துப் பெருமாளே! நீ சங்கெடுத்து ஊதினால் தான் மழை பெய்யும். அதனால் நீயும் ஐந்து ஆண்டுகளுக்குச் சங்கெடுத்து ஊதக் கூடாது எனவும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
    கிராமத்து மக்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நாட்களிலேயே அவர்கள் அனைவரும் மழை தான் பெய்யாதே. அதனால் நாம் ஏன் விவசாய வேலைகளைச் செய்ய வேண்டும் எனச் சோம்பேறிகளாய் மாறத் தொடங்கினர். இருக்கின்ற உணவுப் பொருட்களை வைத்து சமாளித்துக் கொள்வோம் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் அந்த ஊரில் ஒருவன் மட்டும் வயலுக்குச் செல்வதும், உழுவதும், நிலத்தைச் சீர் செய்வதுமாக இருந்தான். அவனைப் பார்த்து ஊரே சிரித்தது. கிறுக்குப் பய.... அஞ்சு வருஷத்துக்குத் தான் மழை பெய்யாதே, பிறகு எதற்கு இப்படி முட்டாள்த்தனமா உழுதுகிட்டு இருக்கான்னு ஊரே கேலி பேசியது. ஆனால் அவன் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஒருநாள் அந்த ஊர்ப் பெருமாளே அவனைப் பார்த்து ஏனப்பா நானே ஐந்து வருடம் சங்கே ஊதக் கூடாது என்று சங்கை எடுத்து ஓரமாக வைத்துவிட்டேன். நீ ஏன் புரியாமல் இப்படி தோளில் கலப்பையை மாட்டிக் கொண்டு உழவுத் தொழிலுக்காகச் சென்று கொண்டிருக்கிறாய் எனக் கேட்டான். அவனோ மிகவும் பணிந்து நானும் இப்போது மற்றவர்கள் மாதிரி சோம்பி எந்த வேலையையும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் ஐந்து வருடம் கழித்து மழை பெய்யும் பொழுது எனக்கு உழவுத் தொழிலே மறந்து போய்விட்டால் என்ன செய்வது? எனவே எனக்கு உழவுத் தொழில் மறக்காமல் இருப்பதற்காகவே நான் மழை எப்போது வந்தாலும் பரவாயில்லை என தினசரி உழவுத் தொழிலை செய்து கொண்டிருக்கிறேன் என்றான்.
    பெருமாள் யோசித்தார். நானும் ஐந்து ஆண்டுகள் சங்கே ஊதாமல் இருந்தால் சங்கு ஊதுவது மறந்து போய்விட்டால் என்ன செய்வது? எனவே நானும் ஒருமுறை சங்கினை ஊதிப் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி சங்கை எடுத்து ஊதத் தொடங்கினார். உடனே மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துவிட்டது. பெருமாளுக்குத் தெரியாமல் போகுமா என்ன? இந்த ஏழை விவசாயியின் முயற்சியை உலகுக்கு எடுத்துக்காட்ட அவரும் ஒரு நாடகம் ஆடினார். பிறகென்ன மக்கள் மகிழ்வோடு தத்தம் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.
    ஒரு தனி மனிதனின் விடாமுயற்சி பருவத்தில் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என்கின்ற ஊக்கம் ஊரையே வாழ வைத்துவிட்டது.
    இன்னும் சிலர் எனக்கு எல்லாமே நான் நினைத்தபடியே நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால் கடவுளுக்கு மட்டுமே தெரியும். நமக்கு எப்போது எதனை வழங்க வேண்டும் என்று. ஆயினும் நாம் பிடிவாதம் பிடிக்கிறோம். அப்படித்தான் ஒரு விவசாயி கடவுளிடம் வரம் வேண்டித் தவம் செய்தான். கடவுளும் நேரே வந்தார். என்னப்பா வேண்டும் எனக் கேட்டார். உடனே விவசாயியும் கடவுளே! நான் ஒரு விவசாயி. நான் பயிரிடும் போது பல இன்னல்கள் நேர்கின்றன. மழையை எதிர்பார்த்து இருக்கும் போது மழை வருவதில்லை. தேவையில்லாத நேரத்தில் காற்று கடுமையாக வீசுகிறது. வெயில் அது இஷ்டத்திற்கு அடிக்கிறது. அதனால் எனக்கு மிகவும் சங்கடமாகிறது. எனவே வெயில் அடிப்பது, காற்றடிப்பது, மழை பெய்வது எல்லாம் நான் நினைத்த போது வெயிலடிக்கவும், மழை பெய்யவும், காற்று அடிக்கவும் வரம் வேண்டும் என்றான். கடவுளும் தந்தேன் என்று அருளி மறைந்தார். விவசாயிக்கு ஏகப்பட்ட சந்தோஷம் அப்பா... இனிமேல் நான் வைத்தது தான் சட்டம். இயற்கையே என் கைக்குள்ளே என்று கூவியபடி வந்தான்.
    உழுதான், பயிரிட்டான், மழையே வா என்றான். மழை பெய்தது. வயலில் கூடுதல் தண்ணீர் உள்ளது. வெயிலே கொஞ்சம் அடித்து நீரை உறிஞ்சு என்றான். நீரை வெயில் உறிஞ்சியது. காற்றை அழைத்து அவ்வப்போது வீசச் சொன்னான். காலம் உருண்டது. கதிர் முற்றியது. ஒரு நல்ல நாளில் அறுவடை செய்தான். நெற்கதிர் மலைபோலக் குவிந்து கிடந்தது. விவசாயிக்கு ஏகப்பட்ட குஷி. ஆட்களை விட்டு நெற்கதிரை அடிக்கச் சொன்னான். நெல்லை எடுத்துப் பார்த்தால் எல்லாம் ஒரே சாவியாக (உள்ளே ஒன்றும் இல்லாமல்) இருந்தது. திகைத்தான். கடவுளே.... என்று கத்தினான்.
    கடவுள் நேரே வந்தார். என்ன சாமி. இப்படி நெல்லுக்குள்ளே ஒண்ணும் இல்லாமல் பண்ணிட்டே! என்று கத்தினான். கடவுள் முறுவல் பூத்தார். பின்னர் அமைதியாக அன்பனே! இயற்கையை உனது கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனக் கேட்டாய். கொடுத்தேன். ஆனால் தேவைக்கெல்லாம் தண்ணீர், காற்று, சூரிய ஒளி ஆகியவை கேட்காமலேயே கிடைத்ததால் அந்தப் பயிர்கள் இயற்கையை எதிர்த்துப் போராடும் சக்தியை இழந்துவிட்டது. அதனால் தானும் வளர வேண்டும் என வளர்ந்ததே தவிர தனக்குள் நெல் மணியை பால்பிடித்து அரிசியாக உருவாக்க வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமல் சோம்பேறியாகி தண்டத்திற்கு வளர்ந்து நின்றது. யார் ஒருவரால் (மனிதனோ அல்லது பயிரோ) இயற்கையை எதிர்த்துப் போராட முடியும் என்கிற எண்ணம் வருகிறதோ அவர்களால் தான் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ இயலும். அதற்குத் தான் பருவத்தே பயிர் செய்து இயற்கையின் போக்கோடு போராட விட வேண்டும் என்றார். விவசாயிக்கு மட்டுமல்ல நமக்குமான பாடம் தான் இது. பருவத்திலே எல்லாம் நடந்தாலும் பக்குவம் என்பது எதிர்நீச்சலிலே தானே உள்ளது.            
    சிறிய வயதிலேயே பெற்றோர்கள் நல்ல பழக்கங்களை, நல்ல ஒழுக்கத்தை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும். ஐந்திலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? என்பார்கள். நேராக வளரும் மூங்கில்கள் கொட்டகை (பந்தல்) போடத் தான் பயன்படும். ஆனால் வளைத்து நிமிர்த்திய, வளைந்த மூங்கில்கள் பல்லக்கின் மேற்பகுதியை அலங்கரித்து கடவுளின் மணிமுடிக்கு மேலே இருக்கும் பேற்றினைப் பெறும் என்பார் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர். எனவே சிறிய வயதிலேயே கடவுள் வழிபாட்டினைப் பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். அதற்குப் பெற்றோர்கள் அந்த வழியிலே நடந்திட வேண்டும். வெற்று உபதேசத்தை விட வாழ்ந்து காட்டுவது தான் முக்கியமானது. எனவே பெற்றோர்கள் மாடல்களாக இருந்தால் எந்த வித உபதேசமும் இன்றி, அறிவுரையும் இன்றி குழந்தைகள் நேர் வழியில் பயணம் செய்வார்கள்.
    காமம் (ஆசைகள்) புகுவதற்கு முன்னர் காயத்ரி மந்திரம் மனத்திற்குள் புகுந்திட வேண்டும் என்பார்கள். காரணம் உலகத்து ஆசைகள் மனதை நிரப்பி விட்டால் பின்னர் கடவுள் பக்தி நுழைவது கடினமாகும்.
    கடவுள் பக்தி என்பது மட்டுமல்ல, அன்பாகப் பேசுதல், பெரியோரை மதித்தல், பண்பாக நடத்தல், பணிவாக இருந்தல், எளிமையாக வாழ்தல், எல்லோரிடமும் இணக்கமாக நடத்தல் என எல்லா நற்பழக்கங்களும் பருவத்தே (இளமையிலிருந்து) பயிர் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பழக்கப்ட்டவர்களே நேர்மையான மனிதர்களாக வருவார்கள். மனிதன் மனிதனாக வாழ்வதற்கான அடிப்படைத் தகுதிகள் இவையாகும்.
    கர்ணன் தொட்டிலில் கிடந்தான். வான் வழியே சென்ற சப்தரிஷிகள் குழந்தையைக் கண்டவுடன் கீழே வந்து குழந்தையைச் சுற்றி நின்று கைகளைத் தட்டி குழந்தையை வா! வா! என்றார்கள். உடனே கர்ணக் குழந்தை முனிவர்கள் ஏதோ கேட்கிறார்கள் என எண்ணி தன் முன் தலையிலிருந்த நெற்றிச் சுட்டியைக் கழற்றிக் கொடுத்தது என்பார்கள். சமீபத்தில் ஒரு குறும்படம் பார்த்தேன். ஒரே குழந்தை உடைய தம்பதியர் ஒரு நாள் தந்தை டிவியை ஆன் செய்து பார்க்கின்றார். டி.வி ஓடவில்லை. பலவாறு முயன்றும் ஆன் ஆகாததால் மெக்கானிக்கை அழைத்துப் பார்க்கிறார்.
    மெக்கானிக்கும் பலவாறு முயல்கிறார். நிறைவாக ‘டிவி’ யின் பின்புறத்தைப் பிரித்துப் பார்க்கிறார். நிறைய பிரட் துண்டுகள். மெக்கானிக் புரியாமல் பார்க்கிறார். புரியாமல் பெற்றோரும் தனது குழந்தையை அழைத்துக் கோபத்துடன் கேட்கிறார்கள். குழந்தை மெதுவாகச் சொன்னது. அம்மா! நாள் நேற்று டி.வி. பார்த்த போது நிறைய குழந்தைகள் பட்டினியால் தவிப்பதைப் பார்த்தேன். எனக்கு அழுகை, அழுகையாக வந்தது. எனவே டிவிக்கு உள்ளே ரொட்டியைப் போட்டேன் என்றது. உடனே பெற்றோர் அந்தக் குழந்தையின் கருணை உள்ளத்தை எண்ணி வியந்தவாறே அணைத்து முத்தமிட்டனர்.
    ஆம், அடுத்த தலைமுறைக்கு நல்ல விஷயங்களை உரிய பருவத்திலேயே பயிர் செய்வோம். பண்பான பாரதத்தை உருவாக்குவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar