Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கொலைகாரியின் மகள்
 
பக்தி கதைகள்
கொலைகாரியின் மகள்


“நான் ஒருத்தர உயிருக்குயிராக் காதலிக்கறேன்”
சொன்னவள் சஞ்சனா. பேரழகி.
“என் காதல்ல ஒரு சிக்கல்...”
“வீட்டுல ஒத்துக்கமாட்டேங்கறாங்களா?”
“அதைவிடப் பெரிய சிக்கல்”
“என்ன?”
“இத்தனை வருஷமா நான் யார எங்கம்மான்னு நெனச்சிக்கிட்டிருந்தேனோ அவங்க எங்கம்மா இல்லயாம். எங்கமாவோட தங்கையாம். எங்கம்மா... எங்கப்பாவக் கொல பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிட்டாங்களாம். அப்போ என் வயசு அஞ்சு”
“அதனால...”
“இந்த விஷயத்த என் காதலன் ரிஷிகிட்ட சொல்றதா வேண்டாமா?”
“இத எப்படி மறைக்கறது? கல்யாணத்துக்குப் பிறகு உன் காதலனுக்கு விஷயம் தெரிஞ்சா சிக்கலாயிரும்”
“இப்பவே சிக்கல்தான். எங்கம்மா ஏன் எங்கப்பாவக் கொலை செஞ்சாங்க? ஒருவேளை எங்கம்மா நடத்த சரியில்லாம...’’
சஞ்சனாவைச் சில நிமிடம் அழவிட்டேன்.
“உனக்குத் தெரிஞ்சத எல்லாம் ரிஷிகிட்ட சொல்லிரு. நல்லவனா இருந்தா பெரிசு படுத்தமாட்டான். இதனால கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நீ தப்பிச்சேன்னு நெனச்சிக்கம்மா”
“விஷயம் தெரிஞ்சா யாருமே என்ன ஏத்துக்க மாட்டாங்களே! வாழ்க்கை முழுசும் நான் தனிமரமா நிக்கணும்னு பச்சைப்புடவைக்காரி நெனைக்கறாளோ? விவரம் தெரிஞ்ச நாள்லருந்து பச்சைப்புடவைக்காரிய கும்பிட்டதுக்கு கைமேலப் பலன் கெடைச்சிருக்கு”
நான் மவுனம் காத்தேன்.
“உங்க வார்த்தைய மீற எனக்கு மனசு வரல. ரிஷிகிட்ட பக்குவமாச் சொல்லிப் பாக்கறேன்”
சஞ்சனா சென்றுவிட்டாள்.
மறுநாள் மாலை அலைபேசியில் அழைத்தாள்.
“எல்லாம் முடிஞ்சிருச்சி, அங்கிள்.. இப்போ திருப்திதானே! நடத்தகெட்ட கொலைகாரியோட மகளக் கட்டிக்க முடியாதுன்னு மூஞ்சில அடிஞ்சமாதிரி சொல்லிட்டுப் போயிட்டான் ரிஷி”
“விடும்மா. உனக்குன்னு ஒருத்தன் வருவான். உண்மையத் தெரிஞ்சிக்கிட்டு உன்னை ஏத்துப்பான். உன்னை உள்ளங்கையில வச்சித் தாங்குவான்”
“இதையெல்லாம் சினிமா வசனமாக் கேக்க நல்லாயிருக்கும் அங்கிள். சாகறவரைக்கும் நீ தனிமரமாவே இருடின்னு பச்சைப்புடவைக்காரி என்ன சபிச்சிட்டா”
என்ன பாடுபட்டும் என்னால் சஞ்சனாவை மறக்க முடியவில்லை. ஒருவேளை உண்மையை ரிஷியிடமிருந்து மறைத்திருக்காலாமோ என்று கூடத் தோன்றியது. நான் ஏன் அப்படி ஒரு விபரீதமான அறிவுரையைக் கொடுத்து அவள் வாழ்க்கையைப் பாழாக்கினேன்?
அன்று முழுவதும் விரதம் இருந்து மாலை அவள் கோயிலுக்கு நடந்தே போனேன். ஒரு நடுத்தர வயதுப் பெண் வழிமறித்தாள்.
“இந்தாங்க அவிச்ச கடலை”
“கடலை வேணும்னு உங்ககிட்ட கேட்டேனா?”
“உனக்குப் பசி பொறுக்காது. இதைச் சாப்பிடு. சஞ்சனாவின் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று காட்டுகிறேன்”
பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கி கடலைப் பிரசாதத்தை வாங்கிக்கொண்டேன்.
காட்சி விரிந்தது. வாழ்க்கையே வெறுத்துபோன சஞ்சனா சென்னையில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு மும்பை சென்றாள். அங்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பழைய காதலை மறக்கப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள்.
ஒருநாள் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சஞ்சனா வேலை பார்த்த நிறுவனத்தை சோதனையிட்டனர். ஐந்து நாட்கள் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டார்கள்.
அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை நிர்வகித்து வரும் சஞ்சனாவைக் கேள்விக் கணைகளால் துளைத்தார்கள். சஞ்சனாவிற்கு வெறுப்பாக இருந்தது.
ராஜேந்திரன் என்ற இளம் அதிகாரிதான் நிறைய கேள்விகள் கேட்டான். தன் எஜமானர்களைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்து பல விஷயங்களை அவனிடமிருந்து மறைத்தாள் சஞ்சனா.
கடைசியில் அவன் வெறுப்புடன், “மேடம், நான் இதுக்குமேல உங்கள வற்புறுத்தப் போறதில்ல. நீங்க நெறையக் கேள்விகளுக்குச் சரியா பதில் சொல்லல. உங்க முதலாளிங்களக் காப்பாத்த உண்மைய மறைக்கறீங்க. இது நம்ம நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யற துரோகம்”
“என்ன  சார் சொல்றீங்க?”
“உங்க கம்பெனி முதலாளிங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கறதா தகவல் கெடச்சிருக்கு. தீவிரவாதிகளுக்குத் தேவையான பணம் வங்கிக் கணக்குகள் வழியாத்தான் போயிருக்கு. அதனால எத்தனை குண்டுகள் வெடிக்குமோ, எத்தனை அப்பாவிகள் சாகப் போறாங்களோ...”
திடுக்கிட்டாள் சஞ்சனா.
“தீவிரவாதிங்களுக்குப் பணம் போயிருக்கா இல்லையான்னு எனக்கு சத்தியமாத் தெரியாது. ஆனா எங்க வங்கிப் பரிவர்த்தனைகள்ல எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கு”
“அதப் பத்திச் சொல்லுங்க”
ரகசிய கோப்பு ஒன்றை அந்த அதிகாரியிடம் கொடுத்து பல மணி நேரம் விளக்கினாள் சஞ்சனா.
ராஜேந்திரன் அவளைப் புதுமரியாதையுடன் பார்த்தான்.
“இன்னும் ஏதாவது வேணுமா?”
“ஆமா மேடம். நீங்க இனிமே இங்க இருக்கறது ஆபத்து. விசாரணைக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்லி அழைச்சிட்டுப் போறேன். ஓட்டல்ல பாதுகாப்பா தங்க வைக்கிறேன். அதுக்கப்பறம் உங்கள டெல்லிக்கு அழைச்சிட்டுப் போறேன்”
சஞ்சனாவிற்கு எல்லாமே கனவில் நடப்பது போலிருந்தது. அதன்பின் ராஜேந்திரன் அடிக்கடி அவளுடன் பேச ஆரம்பித்தான். வழக்கு விவகாரங்களையும் தாண்டிப் பொதுவாகப் பேசினார்கள். நிறையப் பேசினார்கள்.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு ராஜேந்திரன்”
“என் உயிரக் கொடுத்தாவது காப்பாத்துவேன் சஞ்சனா. வாழ்க்கை முழுசும் கண்கலங்காம வச்சிக் காப்பாத்தணும்னு தோணுது”
விரக்தியாகச் சிரித்தாள் சஞ்சனா.
“எங்கம்மா எங்கப்பாவக் கொலை பண்ணிட்டு ஜெயில்ல இருக்காங்க. எதனால கொலை செஞ்சாங்க. நடத்தை கெட்டவங்களா இருப்பாங்களோன்னு பயமா இருக்கு’’
“எனக்கு கொஞ்சம் டைம் கொடு சஞ்சனா. விவரங்களோட வரேன்”
பத்து நாள் கழித்து உற்சாகமாகத் திரும்பினான் ராஜேந்திரன்.
“கைகொடு சஞ்சனா. நீ உங்கம்மாவ நெனச்சி கர்வப்படலாம். உங்கப்பா பெரிய சூதாடி. அவருக்கு பணம் நெறையத் தேவைப்பட்டது. முதல்ல உங்கம்மா நகையெல்லாம் வச்சிச் சூதாடினாரு. அதுக்கு மேலயும் பணம் வேண்டியிருந்தது. எவனோ ஒருத்தன் அவர தீவிரவாத அமைப்புல சேத்துட்டான். அவங்களுக்குத் தேவைப்பட்ட தகவலக் கொடுத்து பணம் சம்பாதிச்சாரு உங்கப்பா. இது ஒருநாள் உங்கம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சி. தேசத் துரோகியான நீ உயிரோட இருக்கக்கூடாதுன்னு அரிவாள்மனையால வெட்டிப் போட்டுட்டாங்க.  அவங்க ஜெயில் தண்டனை முடிஞ்சி இப்போ காஞ்சிபுரம் காமாட்சி கோயில் ஆபீஸ்ல வேலை பாத்துக்கிட்டிருக்காங்க. குடும்ப சுகத்தோட நாட்டு நலம்தான் முக்கியம்னு நெனச்ச வீரத்தாயோட மகள் என் மனைவியா வருவது நான் செஞ்ச புண்ணியம், சஞ்சனா”
ராஜேந்திரன் எழுந்து நின்று சற்று பின்னோக்கி சென்று சஞ்சனாவிற்கு விரைப்பாக சல்யூட் அடித்தான். பெருத்த விம்மலுடன் ராஜேந்திரனின் மார்பில் முகம் புதைத்தாள் சஞ்சனா.
காட்சி முடிந்ததும் பச்சைப்புடவைக்காரி என்னிடம் கேட்டாள்.
“உன் மனதில் ஏதோ கேள்வி இருப்பது போல் தெரிகிறதே”
“சஞ்சனாவின் தாய் முற்பிறவிகளில் கொடிய பாவங்கள் செய்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் குடும்ப வாழ்வை இழந்து, கொலைகாரி பட்டத்தைச் சுமந்து, தன் ஒரே மகளையும் பிரிந்து... என்ன வாழ்க்கை...”
“அவள் மகா உத்தமி. அவள் என்னுடன் ஒன்ற வேண்டிய நேரத்திலும் என்னைக் குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் ஊன் உறக்கமின்றி தவம் செய்ய வேண்டும் என்ற வரத்தை யாசித்தாள். தவத்தின் பலனாக எதையும் கேட்கவில்லை. தவத்திற்கு இணையான ஒரு பிறவியைத் தருகிறேன் என்று சொன்னேன். ஏற்றுக்கொண்டாள். அதனால்தான் தேசத் துரோகி எனத் தெரிந்ததும் கணவனையே சம்ஹாரம் செய்து சிறைத் தண்டனையை ஏற்றாள். சிறையில் தவித்துக் கொண்டிருந்த பல பெண்களைச் சீர்திருத்தினாள். இனிமேல் தன் மகளோடு மகிழ்ச்சியாக வாழ்வாள். பின் என்னுடன் ஒன்றிவிடுவாள்”
“அந்த மாதரசியின் கால்களில் விழுந்து வணங்கவேண்டும் தாயே”
‘பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு காற்றோடு கலந்தாள் கனகவல்லி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar