Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீதா கல்யாணம் – 3
 
பக்தி கதைகள்
சீதா கல்யாணம் – 3


அப்படியே நடந்து ராஜ வீதிக்கு வந்து விட்டார்கள்.  

முதலில் அலைகள் மிகுந்து நீர் பொங்கி வரும் கங்கையைப் போல் ஆழம் உள்ள அகழியை கண்டார்கள். அந்த அகழியில்  அரண்மனைக்கு அருகே தேவர்களும் வந்து தங்குவதற்கு தகுதி வாய்ந்த மாளிகைகளின் நிழல் அந்த அகழியில் பிரதிபிம்பமாக தெரிந்தது. அது மட்டுமா?

பொன்னின் பேரொளியும், பூவின் நறுமணமும், தேனின் சுவையும், சிறந்த சொற்களினால் அமைந்த கவியின் இன்பமும் ஒன்றேயாகி, ஒரே வடிவம் கொண்டு விளங்குவது போல் சீதா பிராட்டி, கன்னி மாடத்தின் மேலே தோன்றுவதையும் அந்த அகழியில் கண்டு, அம்மூவரும் அப்படியே நின்றனர்.
மூவரும் கண்டாலும், ராமன் சிந்தையில்தான் சீதை ஆழமாய் பதிந்து நின்றாள்.
ராமன் திரும்பி கன்னி மாடத்தை பார்க்கிறான். அதே நேரம் சீதையும் பார்க்கிறாள்.  இருவர் கண்களும் சந்திக்கின்றன. என்ன நேர்ந்தது?

அறிந்த பாடல்தான்.  இருந்தாலும் அப்பாடலின் சிறப்பு கருதி மீண்டும் பார்ப்போம்.

‘‘எண்ணரும் நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணோடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’’

அருணாசலக் கவிராயர் இயற்றிய அற்புதமான பாடல் “யாரோ இவர் யாரோ என்ன பேரோ” நினைவில் வருகிறது.

பருகிய அந்த பார்வையென்னும் கயிற்றால் கட்டி ஒருவர் உள்ளத்தை மற்றவர் உள்ளம் இழுத்ததால், கட்டமைத்த வில்லை ஏந்திய ராமனும் வாள் போன்ற கண்களை உடைய சீதையும் மாறிமாறி மற்றவர் இதயத்தை சேர்ந்துவிட்டனர்.  

பார்வையோடு சரி! பேச முடியவில்லை!  அதனாலென்ன?  பேச்சு தேவைப்படவில்லை.  இவர்கள் இருவரும் யார்? கொஞ்ச நாள் முன்பு திருப்பாற்கடலில் சேர்ந்து இருந்தவர்கள் தானே? இப்பொழுது பிரிந்து வந்து இங்கு மறுபடியும் கூடவிருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொள்ளக் கூட வேண்டுமோ? தேவையில்லை!

பார்த்துக்கொண்டே இருக்கிறாள் சீதை. அவள் உள்ளமும், உடலழகும் தன் பின்னே வருமாறு ராமன், விஸ்வாமித்திரன் பின்னே, சீதையின் கண்களுக்கு எட்டாமல் மறைந்து சென்று விடுகிறான்.  

ராமன் சென்று மறைந்த பின், சீதையின் உள்ளம் தவிக்கிறது. மனம் அடங்க மறுக்கிறது.  உறுதி தளர்கிறது. பெண்களுக்கு உறுதி தளர்ந்தால் என்னவாகும்? பெண்மையின் பண்புகள் பலகீனமடைகின்றன.  காதல் நோய் உடல் முழுதும் பரவுகிறது.  சிந்தை நொந்தாள் சீதை.

ராமனும் கிட்டத்தட்ட சீதையின் நிலையில் தான் இருந்தான். மேகத்தை விட்டுவிட்டு வந்த மின்னல் இத்தகைய பேரழகு வாய்ந்த பெண்ணின் உருவைப் பெற்றுள்ளதோவென்று எண்ணிப் பார்க்க முற்பட்டால் இந்த பெண்ணின் வடிவைத் வேறு எதையுமே எண்ண முடியவில்லையே! அவளை என் கண்ணுக்குள்ளும், கருத்துக்குள்ளும் காண்கிறேன்.
ஒரு வழியாய் இரவு முடிந்து பொழுது புலர்ந்தது. ஒரு யுகம் முடிந்ததை போலிருந்தது.  நித்திய கடமைகளை முடித்து விஸ்வாமித்திரன் பாதங்களை தொழுது, மகுடம் மாலை அணிந்து, முனிவருடனும் தம்பியுடனும் ஜனகனின் வேள்விக் கூடத்தை அடைந்தான்.

ஜனகன் வேதங்கள் கூறிய விதிப்படி வேள்வியை செய்து முடித்து சிங்கம்போல் அரண்மனையில் நுழைந்தான்.  அங்கே விஸ்வாமித்திர முனிவன் இருந்தான்.  அவருடன் அருகில் கையில் வில்லை ஏந்தி ராமனும் அவன் தம்பியும் இருந்தனர்.  மன்னன் ஜனகன், ராம லட்சுமணர்கள் அழகை பருகியபடி, விஸ்வாமித்திரரை வணங்கி ‘‘அடிகளே! இக்குமாரர்கள் யார், உரைத்தருளவேண்டும்’’ என்று வேண்டினான்.  

‘‘இவர்கள் தசரத சக்கரவர்த்தியின் மைந்தர்கள்.  உன் வேள்வியைக் காண வந்தார்கள்.  நீ விரும்பினால் உன்னிடம் உள்ள சிவதனுசுவின் வலிமையையும் காண்பார்கள்’’ என்று முனிவன் விஸ்வாமித்திரன் சொன்னான்.
பிறகு விஸ்வாமித்திரன் ராமனின் இக்ஷ்வாகு குலத்தை, ஆதித்தன் முதல் கூற ஆரம்பித்தான். விசுவான் எனப்படும் சூரியனது குலத்தில் தோன்றிய முதல் மன்னனான வைவஸ்வதன் என்னும் மனு சக்ரவர்த்தியை அறியாதார் யார்? எவரும் இல்லை. உலக மக்கள் பசியால் வருந்தாதபடி பூமியை செழிப்பாக்கிய பிருது சக்கரவர்த்தி இவர்களின் குலமே.

இப்படி ஆரம்பித்து, விஸ்வாமித்திரர், ராமனது வம்சத்தை முதலிலிருந்து தசரதன் வரை சொல்லி பிறகு, ‘‘உலகில் தீவினை செய்த தீவினையாலும், அறம் செய்த அறத்தாலும், கவுசல்யாதேவி ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தையும் கருங்கடல் போன்ற நிறத்தையும் உடைய ராமனை ஈன்றெடுத்தாள்.

நீதியில் சிறந்தவனும், இகழ முடியாத குணத்தாலும், அழகாலும், இதோ இங்கிருக்கிற ராமனையே ஒத்தவனுமாகிய பரதனை கேகய மன்னனின் மகளாகிய கைகேயி பெற்றெடுத்தாள்.

பிறரால் வெல்வதற்கு அரிய பெரும் வலிமை உடையவர்களும், தருமத்தை கெடுக்கும் செயலில் தொடக்கத்தில் வெற்றி பெரும் தன்மை உடையவர்களுமான அரக்கர்களே அஞ்சும் வலிமை பெற்றவர்களும், கையில் வில்லை ஏந்தி நடந்து வரும், பொன்மயமான மேருமலையையும், வெள்ளிமயமான கயிலை மலையையும் போன்ற லட்சுமணன்,  சத்ருக்கனன் இருவரையும் மூன்றாவது பட்டத்தரசியான சுமித்திரை பெற்றாள்.  

நான்கு வேதங்களைப் போல நான்கு புதல்வர்களும், அறிவில் கலைமகளை விட உயர்ந்தவர்கள், வில்வித்தையை ஆராய்ந்து கூறும் தனுர்வேதம் தோற்று இவர்களுக்கு குற்றேவல் செய்தன.  தசரதனின் புத்திரர்கள் என்பது பெயரளவில் மட்டுமே.  இவர்களுக்கு அனைத்து சடங்குகளையும் செய்து, வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்பித்து, ராஜநீதிகளை போதித்து, வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் ஆகிய போர் முறைகளையும் கற்பித்து வளர்த்தவன் வசிஷ்ட முனிவனே.  

ராமன் செலுத்திய ஒரே அம்பு தாடகையின் மார்பை துளைத்து, வெளிப்போந்து குறுக்கிட்ட மலைகளை துளைத்து, மரங்களை துளைத்து, குறுக்கிடும் பொருள்கள் இல்லாமையினால் நிலத்தை துளைத்து அப்புறம் சென்றது.  

எனது வேள்விக்கு இடையூறாயிருந்த அரக்கர்களை அழித்து, தாடகையின் புதல்வன் சுபாகுவை வானுலகத்துக்கு அனுப்பினான்.  மற்றொரு மகன் மாரீசன் போன இடம் தெரியவில்லை.  நான் வேள்வியை எளிதாக நியமப்படி முடித்துக்கொண்டு இங்கு வந்தேன்.

‘‘நான் இவனுக்கு கொடுத்த அஸ்திரங்களெல்லாம், நானே நாணும்படி, இந்த ராமனுக்கு குற்றேவல் செய்கின்றன.  
‘‘கவுதம முனிவரின் பத்தினி அகல்யைக்கு, கல்லுருவிலிருந்து முன்னேயிருந்த நல்லுருவத்தைக் கொடுத்தது ராமனின் பாத துாசியே என்று அறிக.  
‘கரிய திருமேனி கொண்ட இந்த ராமனிடம் எனக்கு அன்பு உண்டு’ என்று கூறி முடித்தான் முனிவன்.  

இதைக் கேட்ட ஜனகன், ‘‘தாங்கள் கூறியவற்றிக்கு விடையாக நான் கூற ஒன்றுமில்லை.  சீதையின் திருமணத்திற்கு நான் ஏற்படுத்திய நிபந்தனை என்னைக்  கட்டுப்படுத்தியுள்ளது.  அதனால் என் மனம் கவலை அடைந்துள்ளது.  இந்த ராமன் சிவனது வில்லை வளைத்து நாணேற்றினால் நான் துன்பத்திலிருந்து விடுபடுவேன்.  சீதையும் அவள் தவத்தின் பயனைப்  பெறுவாள்’’ என்றான்.

இவ்வாறு சொன்ன ஜனகன், தன் எதிரிலிருந்த பணியாளர்களை பார்த்து ‘‘வில்லைக் கொண்டுவாருங்கள்’’ எனப் பணித்தான். வில் வந்து சேர்ந்தது.

சங்கையும் சக்கரத்தையும் தரித்த சிங்கம் போன்ற அந்த திருமாலை அல்லாமல், இவ்வில்லைத் தொடும் ஆற்றலுள்ளவன் எங்கே இருக்கிறான்? அந்த திருமால் வந்து இவ்வில்லை நாணேற்றினால் சீதையின் திருமணம் நடைபெறும், என்று நகரமக்கள் பேசிக்கொண்டார்கள்.

இந்த வில்லை அரசன் எதற்கு கொண்டுவரச் சொன்னது வீண் வேலை என்று ஐயுறுவர் சிலர். இதனை வளைப்பதை திருமணத்திற்கு நிபந்தனையாக்கின நம் அரசனைப்போல் புத்தி கெட்டவர் யாரேனும் இருப்பாரோ? என்று சிலர் வினவுவார்.  முன் செய்த புண்ணியத்தின் பலனாக சிலர் வளைக்கக் கூடும் என்று நம்புவோர் சிலர்.  இந்த வில்லை சீதை கண்டிருப்பாளோ என்று ஆராய்வார் சிலர்.

விஸ்வாமித்திரன் ராமனைப் பார்த்தான். முனிவரின் எண்ணத்தை அறிந்துகொண்ட ராமன், நெய் சேர்க்கப்பட்ட ஆகுதி தீயைப் போல எழுந்தான்.  உடனே தேவர்கள் ‘வில் அழிந்தது’ என்ற ஆரவாரம் செய்தார்கள்.  முனிவர்கள் ஆசி கூறினார்கள்.  ராமன் வில்லை நோக்கி நடக்கிறான்.  சிறப்புற்ற சிங்கமும், பெருமை மிகுந்த காளையும், பொன்மயமான மேருமலையும், யானையும் தன் நடையை கண்டு நாணமடையும்படி வில்லை நோக்கி நடந்தான்.

நடந்து வில் அருகில் சென்றான் ராமன், அதை ஒரு பார்வை பார்த்தான். சீதையின் எண்ணம் மனதில் நிறைந்திருந்தால், அவளுக்கு சூட்டும் மாலையை எடுப்பதாக நினைத்து எளிதாக அந்த வில்லை கையில் எடுத்தான்.

ஜனகரின் அரண்மனையில் ராமன் வில்லை வளைக்கும் நிகழ்ச்சியை பார்க்க ஊரே கூடி நின்றது.  

ராமன் பூமாலையைப் போல் வில்லை எடுத்ததை அனைவரும் கண்டனர். அடுத்து இடியை போல ஒரு பெரிய முழக்கத்தை கேட்டனர். இடையில் ராமன் வில்லை பாதத்தில் வைத்து அழுத்தி வளைத்தையோ, அம்பு பூட்டியதையோ, காதளவு இழுத்ததையோ அவை நடந்த வேகத்தினால் யாரும் காணவில்லை.

வில் முறிந்த வல்லோசையைக் கேட்ட தேவர்கள் அண்டகோளமே பிளந்துவிட்டது நாம் எங்கே செல்வது என்று வருந்தினார்கள் என்றால், சாதாரண மக்கள் அடைந்த நிலையை சொல்வது வீண்.  இந்த பூமியை தாங்கி நிற்கும் ஆதிசேடன் தன் மேல் இடி விழுந்துவிட்டது என்றெண்ணி பயந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar