Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆண்டாளின் சொற்களில் உள்ள அன்யோன்யம்
 
பக்தி கதைகள்
ஆண்டாளின் சொற்களில் உள்ள அன்யோன்யம்

நோன்பு இருப்பதால் உடலும் உள்ளமும் துாய்மையடையும் என்பது அனுபவ ரீதியான உண்மை.  சரி...நோன்பால் ஏற்படும் உளவியல் உண்மையையும் பார்ப்போம்.

நண்பர் ஒருவருக்கு வாயைத் திறந்தால் கெட்ட வார்த்தை தான் வரும். தொட்டதற்கெல்லாம் திட்டுவார். உறவினர் சிலரின் உந்துதலால் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கினார். 48 நாட்கள் விரதம் இருந்து கடவுளை மனதில் இருத்தினார். கெட்ட வார்த்தை பேசக் கூடாது என சபதம் செய்ததால் அவ்வாறு இருக்க முடிந்தது. அதுமட்டுமல்ல... விரதம் முடிந்த பின்பும் அந்த பழக்கம் தொடர்ந்தது. அது முதல் அவர் கனிவாக பேசத் தொடங்கினார்.
சில நேரங்களில் நோன்பு இருப்பது தனக்கு மட்டுமல்ல தன்னைச் சார்ந்த, சாராத பிறருக்கும் நன்மை தரும் என்பதற்கு இது ஒரு சான்று. ஆண்டாளும் அப்படித்தான். நோன்பு நாளில் தனக்கும் தன் மக்களுக்கும் மட்டும் நன்மை வேண்டும் என்றோ தன் குலத்துக்கு மட்டும் சிறப்பு சேர வேண்டும் என்றோ பிரார்த்திக்கவில்லை. சிறுமியரை அழைப்பது போல் நம் அனைவரையும் அழைக்கிறார். சமயங்களைக் குறிக்கவில்லை. ஜாதி, மதங்களைப் பற்றி பேசவில்லை. ஆண்டாளுக்குத் தான் எத்தனை பெரிய சமத்துவ பண்பு இருக்கிறது!

சரி... ஆண்டாள் அனைவரையும் வாருங்கள் என நோன்பிருக்க அழைக்கிறாளே… அவ்வாறு நோன்பு நோற்க என்ன செய்ய வேண்டும் எனச் சொல்கிறாள். கடவுளைப் பற்றிக் கொண்டு நெய், பால் என்று சுவையான உணவுகளை விலக்குவதன் மூலம் புலன்களை கட்டுப்படுத்துவதோடு கண்களுக்கு மை தீட்டவோ, கூந்தலுக்கு பூச்சூடவோ மாட்டோம் என்கிறாள்.

இங்கு கவனிக்க தக்கது என்னவெனில் ’மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்’ என  ’நாம்’ என்ற வார்த்தையில் தன்னையும் அவர்களுடன் சேர்த்து உறவு கொண்டாடுகிறார். அவளின் சொற்களில் ஒளிவிடும் பண்பும் நாகரிகமும் இணைப்பை உருவாக்கும் தன்மை கொண்டது.

‘செல்வச் சிறுமீர்காள், வையத்து வாழ்வீர்காள்! நாங்கள் நம் பாவைக்கு’  போன்ற சொற்கள் அன்னியப்படாதவை. நம்மிடம் நெருங்கி வருபவை. எல்லா வார்த்தைகளும் மனதை அன்புடன் பிணைப்பவை. இந்த வரியை எடுத்துக் கொள்ளுங்கள். ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து’.  மனிதர்களை கலவரப்படுத்தி அச்சப்படுத்தாத மழை வேண்டும் என்கிறாள் ஆண்டாள். இப்படி பாசுரத்தின் அனைத்து வரிகளிலும் பிறர் நலன் பேணும் அன்னியோன்ய நடை வெளிப்படுகிறது. சரி, அன்யோன்யம் எப்போது வரும்? அன்பு இருந்தால் தானே! அவளின் மொழிநடை அன்பை பறைசாற்றுகிறது.

தாய் குழந்தையை பேணுவது போல உயிர்கள் அனைத்துக்குமாக ஆண்டாள் அன்பை பொழிகிறாள். வார்த்தைகளின் ஒட்டுதல் அவள் நம்மைச் சேர்ந்தவள் எனும் பற்றுதலை ஏற்படுத்துகிறது.  இதனால் சூடிக்கொடுத்தவள் நம் மனதில் நீங்காத இடம் பிடித்தவள் ஆயினாள்.


‘இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்ற வள்ளுவரின் கொள்கை  ஆண்டாளிடம் வெளிப்படுகிறது.

நோன்பு நோற்கும் போது தான் தன்னம்பிக்கை நமக்கு தெரியவரும். உணவு உண்ணாமல் இருக்கும் போது ஒரு சட்டதிட்டத்தை நமக்குநாமே வகுத்துக் கொள்கிறோம். அப்படி அதனுள் புழங்கும் போது தான் அதன் வீர்யம் விளங்கும். ஒரு சிவராத்திரி நாளில் இளம்பெண் ஒருத்தி திருவண்ணாமலைக்குச் சென்றாள். திருவண்ணாமலையில் இருக்கும் தன் தோழியையும் உடன் அழைத்தாள். அவளோ,  ‘என்னால் இரவில் விழிக்க முடியாது. 12 மணி வரை தான் தாக்குப் பிடிப்பேன். இதில் கிரிவலம் எப்படி வருவது...முடியாது’ என முதலில் மறுத்தாலும் பின்னர் உடன்வர சம்மதித்தாள். அன்று 12 மணிக்கு மேல் தான் கிரிவலம் துவங்கி அதிகாலையில் நிறைவு செய்தனர்.  அன்றைய இரவு முழுதும் தோழி உற்சாகமாகவே இருந்தாள். அதிகாலையில் மிக உற்சாகமுடன், ‘‘எனக்குள் இவ்வளவு உறுதி இருக்கிறது என்பதே இன்று தான் தெரிய வருகிறது’’  என்றாள்.
கடவுள் சக்தியை கருப்பொருளாகக் கொண்டு நாம் உறுதியை நிலைநிறுத்தும் போது நம் சக்தி பல மடங்காக வலுப்பெறுகிறது. இது விரத உளவியல்.
      ஐம்புலன்களை அடக்கி ஆள்வதால் மனம், உடல், புத்தி கட்டுப்படுகிறது. நோன்பால் நாம்  கட்டுப்பாடான வாழ்க்கை முறையில் பயணிக்க முடியும். அது நமக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். சாலையில் செல்லும் போது அதன் விதிகளுக்கு கட்டுப்பட்டு செல்வதால்தான்  பயணம் இனிதாகிறது. ஆளுக்கு ஒரு வழிமுறை என மீறத் தொடங்கினால் விபத்து தானே நிகழும். அது போல தான் இதுவும். மனம் போன போக்கில் போகாமல் புத்தி சில சிந்தனைகளை நம்முள் கொளுத்திப் போடுகிறது.

நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற நிதர்சனம் புரிபடும். இதுதான் எதையும் நின்று சமாளித்து சாதிக்கும் உத்வேகத்தை அளிக்கும்.

விரதங்களை அடுத்த சந்ததியினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமே உடல், மனத்துாய்மை என ஆன்மிகம் சொன்னாலும் உளவியல் ரீதியாக ஒருவரை பலம் கொண்டவராக மாற்றுகிறது என்பது தான்.

இந்த உண்மையை விரதம் கடைபிடிப்பவர்கள் உணர்ந்திருப்பர். விரதம் என்பதே கடுமை தான். அதனாலேயே ஆண்டாள் தன் பக்குவமான பேச்சால் விரதமிருக்க அழைக்கிறாள். கடவுள் என சொன்னாலே அனைவருக்கும் சொந்தம் தானே. அதனால் அவரைப் பற்றி கூறும் போது அனைவரும் நெருங்கி வருவர் என்பதும் மற்றொரு சிறப்பு.

விரதம் பற்றி அறிவுறுத்தும் ஆண்டாள் தோழியரை உறக்கத்தில் இருந்து எழுப்பும் போது அன்யோன்யத்துடன் குரல் கொடுக்கிறாள். இதனால் தான் அவளால் உரிமையுடன் உரையாட முடிகிறது.

ஒன்பதாம் பாசுரத்தில் மாமி அவர்களே, உறக்கத்திலிருந்து அவளை எழுப்பக் கூடாதா? உம் மகள் என்ன வாய் பேசாத ஊமையா? கேட்கும் சக்தியற்ற செவிடா? பேருறக்கத்தால் உண்டான சோர்வோ? பெருந்துாக்கத்தில் எழ முடியாதபடி காவலிடப்பட்டாளோ? உறக்கம் கலையாதபடி மந்திரத்தால் கட்டுண்டாளோ? மாமாயன், மாதவன், வைகுந்தன் என அவன் திருநாமங்களை பலமுறை சொல்லி விட்டோம். இனியாகிலும் உன் மகளைத் துயில் எழுப்பலாகாதோ? என்கிறாள்.
 நப்பின்னை பிராட்டியை எழுப்பும் போதும், ”மணக்கும் கூந்தலை உடையவளே! கதவைத் திறப்பாயாக, பந்து பொருந்திய விரல்களை உடையவளே,  உன் கணவனின் புகழை உன்னுடன் சேர்த்து பாடும்படியாக சிறப்புமிக்க வளையல்கள் ஒலி எழுப்ப மகிழ்வுடன் செந்தாமரைக் கையால் கதவைத் திறப்பாயாக” என்கிறாள்.
முறை சொல்லி கூப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு நம்மிடம் நிலவி வருவது. அந்த காலத்தில் சொந்த பந்தம் எல்லாம் சுற்றிலும் குடியிருப்பர். ஆனால் இன்று தெரிந்தவர்களே நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிறார்கள். அவர்களை அத்தை, மாமா, அண்ணா, அக்கா என அழைத்துப் பாருங்கள். ஒரு இணக்கம் உண்டாகும்.  நிறைய வீடுகளில் பெற்றோரை வாய்நிறைய கூப்பிடுவதில்லை. ‘இங்க வா, அங்க போ’ என அதிகார தொனி இளைய தலைமுறையினரிடம் வெளிப்படுகிறது. உறவினர் வீடுகளுக்கு சென்றால் நம் வரவை அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்க, ”அவங்க வந்திருக்காங்க, இவங்க வந்திருக்காங்க“ என்கிறார்களே ஒழிய முறை சொல்லி கூப்பிடுவதில்லை. காரணம் அவர்களை அவ்வாறு பழக்கப்படுத்தவில்லை.  சமத்து பிள்ளைகளோ தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அங்கிள், ஆன்ட்டி என்ற வரையறைக்குள் அழைப்பார்கள். இது ஒரு கூத்து!  மாமா, சித்தப்பா, பெரியப்பா, அண்டை வீட்டார் என எல்லோரும் அங்கிள் தான். அத்தை, மாமி,  அக்கா, சித்தி என அனைவரும் ஆண்ட்டிகள் தான். நம் மொழியில் காணப்படும் வளமும் ஈர்ப்பும் அந்நிய மொழியில் உண்டா... இல்லையே!
  இந்த வித்தையை அறியாதவளா ஆண்டாள்? ‘மாமீர்’,  ’மாமன் மகளே’ என முறை வைத்து அழகு ததும்ப அழைக்கிறாள் பாருங்கள்! பிள்ளாய், பாவாய் என்கிறாள். அப்படி நெருங்கி அழைப்பது யாருக்குத்தான் பிடிக்காது?!
நமக்கு அன்பு இருப்பவர்களிடம் தான் உரிமையுடன் சொல்வோம். அதில் நிச்சயம் இணக்கம் இருக்கும். இப்படி ஆண்டாள் பெண்களிடம் நெருங்கி பேசுவது அவளின் அன்பை வெளிக்காட்டுவதாக அமைகிறது. ஆண்டாளை இன்னும் இன்னும் மனதுக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றது இந்த அன்யோன்யம் தான்.
கடல் பெரியது. ஆனால் சின்ன சின்ன அலைகள் தானே நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதுபோல சின்ன சின்ன வார்த்தைகளில் உள்ள அன்யோன்யம் பெரிய நிறைவைத் தரும். உண்மைதானே?!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar