Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பறவை இனமும் கோதையும்
 
பக்தி கதைகள்
பறவை இனமும் கோதையும்

தாவரங்கள், மலர்கள், பறவைகள் என எல்லா உயிர்களுடனும், இயற்கையுடனும் அன்பு கொண்டு வாழ்ந்த வாழ்வே சங்ககாலச் சிறப்பு.  அதிலும் பறவைகள்  உயரத்தில் பறக்கக் கூடியன. இந்த உலகத்தில் நிரந்தர பயணியாக வாழ்வது பறவைகள்தான். பறவைகள் பறப்பதைப் பார்த்தாலே தனி ஆனந்தம்தான்.  அந்தி சாயும் வேளையில் கூட்டமாகச் செல்லும் பறவைகளை வானில் பார்த்தால், ’கொக்கு பல்லாட,  கோழிக்குஞ்சு பல்லாட’ என்னும் பாடலை இரண்டு கை விரல்களையும் ஒன்றுக்கு ஒன்று எதிராக வைத்துக்கொண்டு நகங்களை தேய்த்து பள்ளிப்பருவத்தில் பாடியது பசுமையாக நினைவில் நிற்கிறது.  கொட்டும் பனி,  புயல், மழை, காடுகள், பாலைவனம்,  கடல், ஏரி, குளம்  பெரிய கோபுரங்கள், கட்டிடங்கள் என அனைத்தையும் கடந்து பறவைகள் பறக்கின்றன.   
   பறத்தலைப் போல மகிழ்ச்சி தரக்கூடியது வேறு என்னவாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது! என்னதான் நவீன சூழலில் நாம் வளர்ந்தாலும் நம் அன்றாட வாழ்வில் தினம் ஒரு பறவையையாவது பார்த்து விடுகிறோம். மனித இனத்துடன் மிக ஒன்றி வாழ்வது பறவை இனம்.  பொதுவாக விலங்கினத்தைப் பார்த்தால் மனதில் இனம் புரியாத பயம் தோன்றும். வீடுகளில் வளர்க்கப்படும் சிறிய விலங்கினம் கூட சமயத்தில் நம்மை அச்சுறுத்துவதாக அமைந்து விடும். வீடுகளுக்குள் அழையா விருந்தாளியாய் வரும் எலி, பூனையைக் கண்டால் கூட பலருக்கும் அருவருப்பு தோன்றுவதுண்டு. ஆனால் பறவைகள் அப்படி இல்லை.

பறவைகள் பறப்பதை பார்க்க பார்க்க மனம் இலகுவாகும். பறத்தல் எப்போதும் மனதை ஆனந்தப்படுத்தும். விலங்குகளைப் பார்த்து மருள்வதைப் போல பறவைகளை கண்டு நாம் பயப்படுவதில்லை. வாயில்லா பிராணி. ஆனால் ஒலிகளின் மூலம் அவற்றின் உணர்வுகளை வெளிப்படுத்தும்.

 திருப்பாவையின் ஏழாம் பாசுரத்தில் ஆண்டாள் ஆனைச்சாத்தனைப் பாடுகிறாள். சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம்பெறும் யானையங்குருகே இந்த பறவை இனம் என்கிறார் உ.வே.சா. ‘கீசுகீசு’ என ஒலி எழுப்பும் ஆனைச்சாத்தனைப் பற்றி கோதை வியந்து பாடுகிறார். இந்த பறவைக்கு பேசும் ஆற்றல் உண்டு என்றும் சொல்கிறார்.

கேசவன் வருவதை முன்கூட்டியே ஆனைச்சாத்தன் பறவைகள் பேசிக்கொண்டன என்கிறார் ஆண்டாள். இது விருந்துவரக் கரையும் காக்கை போலப் பேசும் என்பதை நாட்டுப்புறப்பாடல் ஒன்று தெரிவிக்கிறது. இது செம்போத்துப் பறவை என்று சொல்பவர்களும் உண்டு. செம்போத்து என்பது காக்கையை விடச் சற்றே பெரிதாக இருக்கும்.

அதுமட்டுமன்றி ஆனைச்சாத்தன் என்னும் இப்பறவைகள் விடியலின் அறிகுறிகளை உணர்ந்து தன் இனத்தையும் மேலெழுப்பி ஒன்றோடு ஒன்று கலந்து உறவாடும் மகிழ்ச்சியை பாருங்களேன். இப்பறவைகளை பார்த்தாவது கற்றுக் கொள்வோம் என அறிவுறுத்துகிறார் ஆண்டாள்.


ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தன் என்னும் இப்பறவை பற்றி பிற்காலத்தில் எந்தக் குறிப்பும் காணாது போகவே மிகப்பெரிய தேடல் தேவைப்பட்டிருக்கிறது.

பெரிய ஆராய்ச்சிக்குப் பிறகு அது ’செவன் சிஸ்டர்ஸ்’  என்று அழைக்கப்படும் சாம்பல் நிற பறவை என தெரியவந்ததாக சுஜாதா தேசிகன் அவர்கள் திருப்பாவை விளக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
அது தெரியவந்த பின்னரே அவர் படித்த பள்ளிக்கூடத்தில் இந்த பறவையை நிறைய பார்த்ததாக சொல்கிறார்.
விடியலின் அடையாளமான பறவைகளின் கீச்சொலி ஆனந்தமாக இருக்கும். அதை ரசித்தபடியே விடியலை வரவேற்பது எப்பேர்பட்ட மகிழ்ச்சியைத் தரும்!

பறவைகளின் மென்மைக்கும், மகளிரின் தன்மைக்கும் ஒப்புமைப்படுத்தி கூறுவர். பெண்களின் நடை அழகிற்கு அன்னத்தை உவமைப்படுத்துவர். இந்த அன்னப்பறவையை ஆண்டாள் பயன்படுத்தி இருக்கும் பாங்கே தனி. பொதுவாக, தேனை வண்டுகள் உண்ணும் என்று தான் கவிஞர்கள் பாடக் கேட்டிருக்கிறோம். ஆனால் ஆண்டாள் நாச்சியாரோ அன்னப்பறவை தேனைப் பருகுவதாக கற்பனை செய்து உவமை கூறியுள்ளார்.
          ’புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்’ என்று ஆறாவது பாசுரத்தில் பறவைகளின் அரசனான கருடனை பற்றி கூறுகிறாள். இங்கு கருடனுக்கு அரசனான பெருமாளுடைய இல்லம். ஆகவே பெருமாள் கோயில் என்பது தெரியவருகிறது. இப்பாசுரத்தில் எழுப்பப்படும் பெரியாழ்வார் கருடனின் அம்சமானவர். ஆகவே சிறப்பு பெற்ற கருடனை குறிப்பிட்டுள்ளார்.
    
விஷ்ணு ஒருசமயம் மகாலட்சுமியிடம் பறவைகளில் நான் பட்சிராஜன் என்று சொன்னாராம்.  இந்த பட்சி ராஜன் தான் கருடன். கருடனை தன் வாகனமாக அமைத்துக் கொண்டது சாதாரண சூழ்நிலையில் அல்ல. பறவைகள் ஆன்மிக அறிவை வளர்க்கக் கூடியது. ஆனால் முடியாத ஆன்மிக அறிவை விஷ்ணுவின் வாகனமான கருடன் மூலம் வெளிப்படுத்த முடியும் என்பதற்காக புள்ளரையன் என்று ஆண்டாள் இங்கு சேர்த்திருக்கிறார். வானத்தில் பறக்கும் பறவைகள் நான்கறிவு பெற்றவை. இந்த பறவைகள் விடியற்காலை 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் எழுந்து கானம் பாடும். இந்த கானத்தை கேட்டால் ஞானம் வளரும். பறவைகளின் ஓசை கேட்ட பின் ஞானம் பெருகும் என்பது நமக்கெல்லாம் புதிய செய்தியாக இருக்கிறது.

அடுத்ததாக கோழி! பதினெட்டாம் பாசுரத்தில் ‘எங்கும் கோழி அழைத்தன காண்’ என்கிறாள். இங்கே,  சேவல் அழைத்தது என்று கூறவில்லை. சேவல் கூவி தான் உலகம் விழித்துக் கொள்ளும்.   ஆண்டாளின் தன்மையை இங்கு பார்க்க வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தமாக சொல்லி இருக்கிறாள். படுத்திருக்கக்கூடிய எல்லா ஆயர்குலத்து பெண்களையும் எழுந்திருக்கச் சொல்வதுபோல் கோழி சப்தத்தை எழுப்புவதாக அமைத்திருக்கிறார். இந்த கோழியின் சத்தம் இரண்டு மணிக்கு தான் ஆரம்பிக்கும். மேலும் அதன் சத்தம் உடுக்கை ஒலி போல இருக்குமாம். அந்த உடுக்கை யாரிடத்தில் இருக்கும்? சிவன் இடத்தில் தானே! இரவு இரண்டு மணிக்கு சிவன் மயான பூமியில் காவல் இருப்பாராம். இந்த கோழிக்கு அதுபோன்ற ஒரு மகத்துவம். இந்த கோழி இடும் உடுக்கை போன்ற சத்தத்தினால் ஓம்காரம் என்ற சொல் உருவாகி படுத்து இருக்கக்கூடிய ஒரு பெண்ணின் காது வழியே சென்று காது நரம்பு மண்டலத்தைத் தாக்கி மூக்கினுள் நுழைத்து ’ஓம்’ என்ற வாசம் வருகிறதாம். கோழி அதை திரும்பத் திரும்பச் சொல்கிறதாம். அடைகாக்கும் போதுகூட இந்த சத்தம் வரும். எங்காவது சேவல் அடைகாத்து பார்த்திருக்கிறோமா?  கோழிதான் எக்காலத்திலும் அடைகாத்துக் கொண்டிருக்கிறது. சரிதான்! அப்படி காதுக்குள் போன இந்த ஒலி மூக்கிலே நரம்பில் தாக்கி வாசனை அடைந்து,  மூக்கு வழியே நரம்பில் தாக்குண்டு தொண்டைக்குழியில் உள்நாக்கில் இறங்குகிறதாம்.  
 சரி இந்த தொண்டைக்குழி உள்நாக்கு எதை நமக்கு நினைவுறுத்துகிறது? பீஷ்மர் அம்புப் படுக்கையில் விழுந்த போது கண்ணன் அவரை நோக்கி பாடுக என்றான்.  நானே மரண அவஸ்தையில் இருக்கிறேன். நான் என்ன பாடுவது என்றார்  பீஷ்மர். அப்போது ராகமாலிகா பாட இயலாது. கல்யாணியும் காபியும் வராது. எந்த ராகமும் இசைக்க இயலாது. அப்போது கண்ணன் பீஷ்மரின் உள்நாக்கில் இருக்கக்கூடிய எச்சிலில் நின்றாராம்.  அங்கே அப்போது விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்ததாக வரலாறு. இப்படி இந்தக் கோழியின் ஒலி உள்நாக்கில் உறைந்து குண்டலினியை எழுப்புவதாக ஆண்டாள் சொல்கிறாள்.
 அதுமட்டுமல்ல,  இதே பாசுரத்தில் ‘மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்’ என்கிறாள். கிராமப் புறங்களிலே பந்தல் அமைத்து அதில் கொடியைச் சுற்றி வளர்ப்பார்கள். அந்த பந்தலிலே கோழியும் உறங்குகிறது, குயில் இனங்களும் உறங்குகிறது.  இப்படி இடைவிடாமல் கோழியும் அடுத்து குயில் இனங்களும் ஒன்று சேர்ந்து ஒழித்து நடுநிசியில் எழுப்புவதாக அர்த்தமாகிறது.

ஆண்டாள் மட்டுமல்ல ஆழ்வார்களுக்கே பறவை இனத்தின் மீது பற்றுதல் அதிகம் போல. குலசேகர ஆழ்வார் தம்மையே ஒரு பறவையாக எண்ணிக் கொள்கிறார். (பெருமாள் திருமொழி, 692, 5-5)

‘புனம் கொள் மயில்’ என்று மயில் பற்றி திருமங்கையாழ்வார் கூறுகிறார். இது காட்டு மயில். காட்டுக்கு சிறைபிடித்துச் சென்றதால் சீதைக்கு உவமையாக சொல்கிறார்.

‘மயில் போன்ற அழகான நிறமும் உடையவன்’ என பெரியாழ்வார் மயிலை பற்றிக் கொள்கிறார்.

 இப்படி ஆழ்வார்களில் பெரும்பாலானோர் பறவை இனத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். பறவைகள் பற்றிய நமது பொது அறிவு பலவீனமானது என்ற கூற்றில் உண்மை உண்டு. படித்த செய்தி ஒன்று. ஒரு ஊரில் பருத்திச் செடியில் புழுக்கள் விழுந்தன. உயிர் கொல்லி மருந்துகளை அடிக்க புழு பெரியதாகிவிட்டதாம்.  சரி, அமிலக் கரைசலை தெளித்தால் சரியாகி விடும் என்ற சொல்லுக்கேற்ப அமிலத்தில் போட்டால் புழு இரண்டாகி விட்டதாம். இப்படி அனைவரின் கண் முன்னே ஊரிலிருந்த பருத்திச் செடிகளில் பாதியை தின்று போனது புழு.  நித்தம் அந்த புழுக்களோடு போராடிக் கொண்டிருந்தார்கள்.   ஒரு நாள் எங்கிருந்தோ கூட்டமாக வந்த கொக்குகள் ஊருக்குள் தரையிறங்கின. பருத்திச் செடியில் இருந்த புழுக்களை ருசித்து உண்டன.   சில மணி நேரங்களிலேயே ஒரு புழு கூட இல்லை.   புழுக்களைத் தின்று தீர்த்து விட்டு கொக்குகள் பறந்து போய்விட்டன. விவசாயிகள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.   இயற்கை ஒன்றை ஒன்றை சார்ந்து வாழ்வை பின்னியிருக்கிறது என்பதன் கண்கூடான காட்சி இது.  
’மயில் குட்டி போடும்’ என்று புத்தகத்தில் மயிலிறகை வைத்து பராமரிக்கும் நாமெல்லாம் கூட பறவை நேசிப்பாளர்கள் தானே! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பறவையை நேசிப்பவர்கள் தான் அதிகம். பெண்மையின் சிகரமான ஆண்டாளும் இத்தனை சிறப்பாக பறவை இனத்தை நேசிக்கிறார் என்பதை அறியும்போது மனம் மகிழ்கிறது.

அது சரி! ஆண்டாளின் இடப்புறத்தில் இருக்கும் கிளியை மறக்க முடியுமா?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar