Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சொல் சோர்வு படேல்
 
பக்தி கதைகள்
சொல் சோர்வு படேல்

உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்பார் மகாகவி பாரதி. எனவே நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நேர்மறையாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். ஒருவர் நமக்கு குட்மார்னிங் சொன்னால் நாம் அதற்கு வெரிகுட் மார்னிங் என்ற பதிலைத் தர வேண்டும். வெரிகுட்மார்னிங் என்ற சொல்லில் உள்ள அழுத்தம் அன்று முழுவதும் ஒருவரை உற்சாக வைத்திருக்க வேண்டும். கடந்து போகும் ஒவ்வொருரையும் பார்க்கும் நேசிக்கும் பார்வையுடன், ஒரு புன்னகை சிந்தி, வணக்கம் சொன்னால் சோர்ந்து போய் இருக்கும் உள்ளம் கூட உற்சாகமாய் மாறும்.
    ஒரு சாலையோர கண் தெரியாத பிச்சைக்காரர் ஒரு போர்டு எழுதி அருகில் வைத்துக் கொண்டு பிச்சை எடுத்து வந்தார். யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. யாரோ ஒரு சிலர் மட்டுமே சில நாணயங்களை வீசிச் சென்றனர். உற்சாகமான ஒரு இளைஞன் அந்த போர்டைப் பார்த்தான். எனக்குக் கண்கள் கிடையாது. உதவுங்கள் என எழுதியிருந்தது. உடனே அதே இடத்தில் அந்த போர்டை எடுத்துவிட்டு இந்த உலகம் எவ்வளவு அழகானது. ஆனால் அதனைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் என்று எழுதி வைத்தான். கடந்து சென்றவர்கள் வார்த்தைகளால் கவரப்பட்டு நிறைய உதவிகளைச் செய்தார்கள். இது தான் ரகசியம். உற்சாகமான, நேர்மறையான வார்த்தைகள் இந்த உலகில் அனைவரையும் மகிழ்ச்சிகரமாக மாற்றும்.
     மன்னர் ஒருவர் ஜோதிடர்களை அழைத்து தன் எதிர்காலம் குறித்துக் கேட்டார். ஒருவர் மன்னா! உங்கள் கண் முன்னரே உங்கள் வாரிசுகள் மறைந்து போவார்கள் என்றார். கோபமுற்ற மன்னர் அவரைச் சிறையிலடைக்க உத்தரவிட்டார். அடுத்த ஜோதிடர் மன்னரைப் புகழ்ந்து மன்னா! உங்கள் வாரிசுகளை விட நீங்கள் நீண்டநாள் வாழ்வீர்கள் என்றார். மன்னன் அவருக்குப் பொன்னும், பொருளும் கொடுத்து கவுரவப்படுத்தினார். இருவர் சொன்ன செய்தியும் ஒன்று தான். ஆனால் இரண்டாமவர் சொன்ன செய்தி நேர்மறையாக இருந்தது.
    நாம் காலையில் எழுந்ததும், சிரித்த முகமுள்ள, உற்சாகமான லட்சுமி கடாட்சம் பொருந்திய, வெற்றியான ஒருவரைச் சந்தித்தால் அந்தநாள் முழுவதும் நமக்கு உற்சாகமாகவும், வெற்றியுள்ளதாகவும் இருக்கும். ஆனால் தினசரி அவ்வாறு உள்ள ஒருவரை எங்கே தேடுவது?

 ஒருவர் மனைவியிடம் இத்தனை நல்ல குணங்களும் உள்ளதே எனக் கண்விழிக்கும் போது மனைவியை அழைத்தார். அந்தம்மா காலை பரபரப்பில் இருந்தார். போங்க உங்களுக்கு வேற வேலை இல்ல... என்று கத்திவிட்டுச் சென்றாள். நாம் என்ன செய்வது? நமக்கு நமது முன்னோர்கள்  வழிகாட்டியிருக்கிறார்கள். பிள்ளையார் பிடிக்க, குரங்காய் முடிந்தது என்றொரு பழமொழி உண்டு. அதெப்படி? தினசரி வழிபாடு காலை விநாயகரில் தொடங்கி இரவு அனுமனில் நிறைவு செய்ய வேண்டும்.
    விநாயகரின் பதினாறு பேர்களில் முதல் பெயரே ஓம் சுமுகாய நம: என்பது தான். சிரித்த முகத்துடன் இருப்பவருக்கு நமஸ்காரம் என்பது இதன் பொருள். விநாயகரின் திருமுகம் யானை வடிவானது என எல்லோருக்கும் தெரியும். மகாலட்சுமி ஐந்து இடங்களில் நித்யவாசம் செய்வதாகப்  கூறுவார்கள். தாமரை மலர், வில்வ இலையின் பின்பகுதி, பசு மாட்டின் பின்பகுதி, சுமங்கலிப் பெண்களின் உச்சிப் பொட்டு, யானையின் மஸ்தகம் அதாவது தலையின் முன்பகுதி. எனவே யானைத் தலையுடைய விநாயகப் பெருமானின் முகத்தில் அன்னை மகாலட்சுமி அருள்புரிகிறாள். அடுத்ததாக நம் எல்லோருக்கும் தெரிந்த கதை நாரதரின் பழக்கதை. நாரதர் பழம் கொண்டு வர, அதை சிவபெருமானிடம் கொடுக்க, அவர் அதை அம்பிகையிடம் வழங்க, பராசக்தி தன் இரு புதல்வர்களுக்கும் பிரித்துத் தர முற்பட்ட போது முழுமையாகக் சாப்பிட்டால் தான் பலன் என்று சிவன் சொல்வார். யார் உலகை முதலில் சுற்றி வருகிறீர்களோ அவர்களுக்கே பழம் என்று கூறியவுடன், முருகப்பெருமான் மயில் மீதேறி வலம் வரத் தொடங்கினார். விநாயகரோ உலகத்தையே தன் தந்தையான சிவனிடமும், பராசக்தியிடமும் கண்டார். எனவே அவர்களை வலம் வந்து பழத்தைப் பெற்றார்.  அருணகிரிநாதரும், கைத்தலம் நிறை கனி எனவும், தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே! எனவும் திருப்புகழில் பாடிப் பரவுவார். எனவே சிரித்த முகத்துடனும், லட்சுமி கடாட்சத்துடனும், வெற்றிக் கனியை எப்போதும் கையில் வைத்துக் கொண்டு இருப்பவருமாகிய விநாயகரை  வழிபட்டு நாளைத் தொடங்கினால் அந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் வெற்றி தான். எனவே தினமும் காலையில் விநாயகரை வழிபாடு செய்து பலன் பெற வேண்டும்.
    ஒரு மன்னரிடம் பலம் பொருந்திய யானை ஒன்று இருந்தது. பல போர்க்களங்கள் கண்டு மன்னருக்கு வெற்றியைத் தேடித் தந்த யானை அது. ஒரு சூழலில் மன்னருக்கு வழங்கும் மரியாதை அந்த யானைக்கும் வழங்கப்பெற்றது. காலம் உருண்டது. யானைக்கும் வயதாகியது. இளம் யானைகள் வந்தன. இருப்பினும் அதன் வீரம் குறையவில்லை. யானைக்கு ஓய்வளித்தனர். ஒருநாள் காட்டுக்குச் சென்ற போது தண்ணீர் குடிக்க ஏரியில் இறங்கியது.  சேறு அதிகம் இருந்ததால் சகதியில் யானை மாட்டிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் வெளியே வர இயலவில்லை. பிளிறியது. அதன் சப்தமே அனைவரையும் நடுங்கச் செய்தது. வீரர்கள் ஓடி வந்தனர். சங்கிலிகளைக் கட்டி இழுத்துப் பார்த்தனர். செய்தி அறிந்து மன்னரே வந்து விட்டார். வீரர்களின் முயற்சியில் யானை வெளியே வரவில்லை. மன்னர் கவலை கொண்டார். மந்திரி உடனே வீரர்களை அழைத்து அரண்மனையில் உள்ள படை யானைகளைக் கொண்டு வரச் சொன்னார். ஒரு யானையின் மேல் மன்னரை அமரச் செய்து போர்க்களம் போல் அனைவரும் வெற்றி வேல்! வீரவேல்! என முழங்கச் செய்தார். படையானைகள் ஏரியைச் சுற்றி வலம் வரத் தொடங்கின. சகதியில் இருந்த யானை பார்த்தது. இவர்களின் உற்சாக சப்தத்தில் தானும் போரில் கலந்து கொள்ள முயற்சி செய்தது. சிறிது நேரத்தில் தானே முயற்சி செய்ய, வீரர்கள் உதவ யானை சகதியில் இருந்து மீண்டு வெளியே வந்தது. மன்னர் மகிழ்ந்து மந்திரியைப் பாராட்டினார். மந்திரி சொன்னார் அரசே! நாமும் இப்படித் தான் அடிக்கடி கவலை என்னும் சேற்றுக்குள் மாட்டிக் கொள்கிறோம். பிறர் தருகின்ற உற்சாகமான வார்த்தைகள்  நம்பிக்கை தந்து மீண்டிட உதவியாய் இருக்கிறது என்றார். என்ன ஒரு அற்புதமான செய்தி.
    அன்னை சீதையைத் தேடி கடற்கரை வரை சென்ற வானர வீரர்கள் இனிமேல் தேவியைத் தேட இயலாது எனச் சோர்ந்து நின்றனர். அந்த நேரத்தில் அங்கு வந்த சம்பாதி என்னும் கழுகரசன்  இலங்கையில் சீதை இருக்கிறாள். யாரேனும் ஒருவர் சென்று பார்த்து வரலாம் என்றது. அப்போது அந்த ஒருவர் அனுமனே எனத் தேர்ந்து  அனுமனின் புகழைப் பாடத் தொடங்கினார் ஜாம்பவான். அனுமனின் ஆற்றல்களை ஒவ்வொன்றாகச் சொல்ல அனுமன் விஸ்வரூபம் கொண்டான். பிறகு ஜெய் ஸ்ரீராம் என்றபடி கடலைத் தாண்டி அன்னை சீதையைக் கண்டு வந்த செய்தி அனைவரும் அறிந்ததே! உற்சாகமாக ஒருவரிடம் உள்ள நல்ல குணங்களைக் கூறினாலே அவர்கள் மனத்தளவில் விஸ்வரூபம் கொள்வதை இன்றும் காண்கிறோம்.
    காலையில் சந்திக்கும் நபர்கள் ஒருவரைப் பார்த்து என்னங்க டல்லா இருக்கீங்க... என்றும், என்னங்க உடம்பு சரியில்லையா என்று ஒருவரும், என்னங்க ஆச்சு.... இப்படி ஆயிட்டீங்க என ஒருவரும் தொடர்ந்து கேட்டாலேயே அந்த மனிதர் மனத்தளவில் தளர்ந்து ஒரு நோயும் இல்லாமலேயே நோயாளி ஆகி விடுவார். சந்திக்கும் நபர்களில் யார் ஒருவரையும் பார்த்து என்னங்க குண்டாயிட்டீங்க.... தொப்பை போட்டுருச்சு... கறுத்துப் போயிட்டீங்களே.... என்றெல்லாம் எதிர்மறையாக கூறுவதைத் தவிர்க்க வேண்டும். உடல் ரீதியாக, குண ரீதியாகக் குறைகள் இருப்பினும் மெதுவாகத் தணியிடத்திலே நேர்மறையாக எடுத்துச் சொல்வதே நாகரிகம் ஆகும். சிலர் இருக்கிறார்கள். அவர்கள் யாரைப் பார்த்தாலும் என்னங்க! உங்களுக்குத் தெரியுமா என ஆரம்பித்தாலே அவர் நிச்சயம் ஒரு கெட்ட செய்தியைத் தான் சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சில நாட்களில் அவரைப் பார்த்தாலே நமக்கு வெறுப்பாகி விடும்.
    எங்கள் ஊரில் ஆஞ்சநேயர் என ஒருவர் இருந்தார். அவர் யாரைப் பார்த்தாலும் நல்லா இருங்க! கோடி கோடியாய்ப் பெருகட்டும் என்பார்கள். தொன்னூறு வயதிற்கு மேல் வாழ்ந்த அவரிடம் வாழ்த்துப் பெற அனைவரும் விரும்புவார்கள். வேதாத்ரி மஹரிஷி´ மூலம் ‘வாழ்க வளமுடன்’ என்ற சொல் மந்திரச் சொல்லாகி இன்று எங்கும் பரவியிருப்பது மகிழ்வைத் தருகிறது.
    பகவத்கீதையின் சாரமே உற்சாகமாக எழச் சொல்வது தான். சோர்ந்து நின்ற அர்ஜுனனைப் பார்த்து ஏன் இத்தனை தயக்கம்? எங்கிருந்து வந்தது இந்த சோர்வு? உற்சாகமாய் எழுந்து நின்று கடமையைச் செய் என்று கிருஷ்ணர் அவனைப் பூரணமான மனிதனாக மாற்றிய செய்தி அனைவரும் அறிந்ததே!
    எனவே தான் அவ்வையார் சொன்னார் சொல் சோர்வு படேல் என்று. எப்போதும் உற்சாகமாகப் பேசுவோம்! உற்சாகமாக வாழ்வாம்! வெற்றி நமதே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar