Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காளியின் அருள் பெற்ற கவிஞன்
 
பக்தி கதைகள்
காளியின் அருள் பெற்ற கவிஞன்


பொற்றாமரைக் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தேன். பச்சைப்புடவைக்காரியின் அன்பை அதிகமாகப் பெற என்ன செய்யலாம் என மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு அலைபேசியிலிருந்து வந்த கவிதை வரிகள் என்னை அப்படியே உலுக்கியது.
தாயின் மார்பில் வாய் வைக்க குழந்தை என்ன செய்கிறது
கடினமாக உழைக்கிறதா? கண்ணை மூடி ஜபிக்கிறதா?
தாயே தருவாள் தன் மார்பை;
தானே அருந்த மறுத்தாலும் அவளே அதற்கு வகை செய்வாள்
மார்பில் வாயை வைத்த குழந்தை பாலருந்தாமல் தவிக்குங்கால்
தாயின் தவிப்பே மிக அதிகம்

  தாய்ப்பாலுக்காகக் குழந்தை தவிக்கும் தவிப்பை விட அதன் தாய் தவிக்கும் தவிப்பே அதிகம் என்பதை இதை விட நயமாகச் சொல்ல முடியுமா என்ன? அன்னையின் அன்பைப் பெற நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பதை இதைவிட நச்சென்று சொல்ல முடியுமா என்ன?
அந்தக் கவிதையை எழுதியவர் திரையிசைக் கவிஞரான தாயன்பன் என்பதை அறிந்தேன். அவரது கவிதைகளைத் தேடித் தேடி வாசித்தேன். அப்பப்பா! எத்தனை உயிரோட்டமுள்ள கவிதைகள்! நான் எழுதுவது பச்சைப்புடவைக்காரி போட்ட பிச்சை என்று எனக்கு நன்றாக தெரியும்.  என்றாலும் அந்தத் தாயன்பனின் பிச்சைப்பாத்திரத்தில் அப்படி ஒரு தெய்வீகக் கவி புனையும் திறத்தை அநாயாசமாகப் பிச்சையிட்டு விட்டாளே அந்த அகிலாண்டேஸ்வரி.
அன்னையின் முன் நீண்ட இரண்டு பிச்சை பாத்திரங்களில் ஒன்றில் வைரம், வைடூரியம் எல்லாம் போட்டாள். மற்றொன்றில் ஈயம். பித்தளையை இட்டிருக்கிறாள். அவனுக்கு மட்டும் அப்படி பிச்சை போட்டீர்கள் என கேட்கும் உரிமை இந்தப் பிச்சைக்காரனுக்கு இல்லைதான். என்றாலும் இந்த பாழும் மனம் அடித்துக் கொள்கிறது.
தாயன்பன் மீது முதலில் பக்தி, மரியாதை என்று தோன்றி பின் அதுவே பெரிய பொறாமைத் தீயாக வளர்ந்தது. அவரைப் போல் கவி எழுத இன்னும் எத்தனை பிறவிகள் தவமியற்ற வேண்டுமோ தெரியவில்லை.
ஒருவேளை இப்போதே முயன்றால்? உடனே அமர்ந்து கவிதை எழுத முற்பட்டேன். அன்னையின் அன்பைப் பற்றி அதற்காக ஏங்கும் அடியவர்களின் மனநிலை பற்றி பல நுாறு வரிகள் எழுதிவிட்டேன். ஓரளவு நன்றாகவே இருந்தது. ஆனால் நான் எழுதிய எந்த கவிதையும் தாயன்பனின், “தாயே தருவாள் தன் மார்பை” என்ற வரிக்கு அருகில் கூட வர முடியவில்லை. பல மணி நேரம் போராடிக் கடைசியில் தலைவலி வந்ததுதான் மிச்சம். தாயன்பனைப் போல் அவரால் மட்டுமே எழுத முடியும். அப்படி எழுத எனக்குக் கொடுப்பினை இல்லை.
என்னைப் பற்றிக் கவலைப்படாமல் காலம் தன்போக்கில் ஓடிக் கொண்டேயிருந்தது. என் மனதில் எழுந்த பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிந்த அந்தத் தருணத்தில்தான் அது என்னுள் ஞான ஒளியைப் பாய்ச்சியது. அதில் என் மன இருட்டு ஓரளவு விலகியது.
பச்சைப்புடவைக்காரியின் சாம்ராஜ்யத்தில்தான் எத்தனை லட்சம் பேர் சேவகம் செய்கிறார்கள்! சிலர் அன்னையின் கர்ப்பகிரஹத்தில் அன்னைக்கு முன்பு நின்றபடி மந்திரம் சொல்லி தீபாராதனை காட்டுகிறார்கள். இன்னும் சிலர் அன்னையின் கோயிலுக்கு வெளியில் அடியவர்களின் காலணிகளைப் பாதுகாக்கும் புனிதமான  பணியைச் செய்கிறார்கள். காலணியைப் பாதுகாப்பவர், ‘நான் உங்களுக்கு தீபாராதனை காட்டவில்லையே! அவன் மட்டும் தீபம் காட்ட நான் இங்கே செருப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேனே!’ என மனம் வெதும்பினால் அது தவறல்லவா?
அவனுக்குக் கொடுத்ததை எனக்குக் கொடுக்கவில்லையே என நினைப்பது அடிமைக்கு அழகில்லையல்லவா? இந்த ஞானம் வந்தபின் அழுகை அதிகமாக வந்தது.
அன்று கோயிலுக்கு நடந்தே போனேன். காலணிகளை அதன் இடத்தில் விட்டுவிட்டு சற்றுத் தள்ளி அமர்ந்தேன். கோயிலுக்கு உள்ளே செல்ல மனம் இல்லை. என்னுடைய இடம் கோயிலுக்கு வெளியில்தான். தாயன்பனைப் போல் கவிதை எழுத முடியவில்லையே என ஆசைப்பட்டது தவறுதானே! இன்று இங்கிருந்தபடியே அன்னையை வணங்கப் போகிறேன்.
“யாருய்யா வழிய மறிச்சிக்கிட்டு உக்காந்திருக்கது?”  ஒரு பெண் போலீஸ் அதட்டினாள்.
பதறியபடி எழுந்தேன். அதட்டலையும் தாண்டி வெளிப்பட்ட புன்னகையில் அன்னையை அடையாளம் கண்டேன். விழுந்து வணங்கினேன்.
“இப்போது நீ பக்குவப்பட்டுவிட்டாய். தாயன்பனைப் போல என்னைக் குறித்து காவியம் புனையும் ஆற்றலைத் தரட்டுமா? காலம் கடந்து நிற்கும் எழுத்தைத் தரட்டுமா?”
“அதைவிடப் பெரிய ஞானத்தைக் கொடுத்துவிட்டீர்களே, தாயே! உங்கள் சன்னதியில் தீபாராதனை காட்டுவதும் இங்கே அடியவர்கள் காலணிகளைப் பாதுகாக்கும் பணி செய்வதும் ஒன்றுதான் என்ற பெரிய ஞானத்தை தந்து விட்டீர்களே, தாயே!”
“பாவம் தாயன்பன்”
“என்ன தாயே சொல்கிறீர்கள்?”
“அவ்வளவு பெரிய வரம் கொடுத்தும் வாழத் தெரியாமல் மாட்டிக்கொள்ளப் போகிறான். ஆறு மாதம் கழித்து நடப்பதைப் பார்.”
தாயன்பன் உலகளவில் புகழ் பெற்றிருந்தான். இலக்கியத்தில் பெரிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றான். நாடே அவனைக் கொண்டாடியது. ஒரு பெரிய காவியத்தை உருவாக்கிக் கொண்டிருந்தான்.
அந்தச் சமயத்தில்தான் நேகா என்ற நடிகையைச் சந்தித்தான். கண்டதும் காதல் என்பதற்கு உதாரணமாகப் போயிற்று தாயன்பனின் வாழ்க்கை. தன் மனைவி மக்களைப் பிரிந்து நேகாவே கதியென கிடந்தான் தாயன்பன்.
கவிதையை விட பெரிய இன்பம் நேகாதான் என் பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் தாயன்பன் கவிதை எழுதுவதை கைவிட்டான். திடீரென நேகா மர்மமான முறையில் இறந்துவிட, கொலைப்பழி தாயன்பன் மீது விழுந்து விட்டது. பல வருடங்கள் வழக்கு நடந்தது. முடிவில் தாயன்பனுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டது.
“தாயன்பன் பல பிறவிகளாகச் செய்த தவத்தின் விளைவாக அவன் நாவினில் கவிதை என்னும் அமுதத்தை வைத்தேன். அந்த அமுதத்துளி பல அழகான கவிதைகளாக வெளிப்பட்டது. இன்னும் சிறந்த காவியங்களாக கவிதைகளாக வெளிப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது! அவனது கர்மக்கணக்கு விவகாரம் கொஞ்சம் சிக்கலாகிவிட்டது. தன் வாயில் காலத்தை வெல்லும் கவிதை அமுதம் இருப்பதை உணராமல் சாக்கடையில் இறங்கி விளையாடினான். பெண் விவகாரத்தில் சிக்கினான். உடலெல்லாம் சேறானது. சிறைத் தண்டனையும் கிடைத்தது. மீண்டும் பழைய நிலைக்கு வர அவன் எத்தனை பிறவிகள் காத்திருக்க வேண்டுமோ? அவனை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்னப்பா வேண்டும்?”
“தாயன்பன் மீண்டும் சிறந்த கவிஞனாக வேண்டும், தாயே! ஆசை வலையில் சிக்கி அறியாமல் தவறு செய்து விட்டான். செய்த தவறுக்குத் தண்டனையும் பெற்று விட்டான்.  அவன் உங்கள் அருள் பெற்ற கவிஞன், தாயே! அவன் சிறையின் தனிமையில் வாடும்போது உங்கள் அன்பைப் பற்றி எழுதிய கவிதைகளை நினைவுகூரட்டும். இதனால் அவனுடன் இருக்கும் கைதிகளின் மனதில் அன்பு மலரட்டும்.  உங்கள் அன்பைப் பற்றி அவ்வளவு அற்புதமாகக் கவிதை எழுதியவன் தான் ஆராதித்த பெண்ணைக் கொலை செய்திருக்க வாய்ப்பேயில்லை. அவனது தண்டனைக் காலத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ குறைத்துவிடுங்கள். விரைவில் விடுதலை பெற்று உங்கள் அன்பைப் பற்றி காலம் கடந்து நிற்கும் கவிதைகளை புனையட்டும். அவனை வாழ வையுங்கள், தாயே!”
“அவனது கவி புனையும் திறனை உனக்குத் தரலாம் என நினைக்கிறேன்”
“வேண்டாம் தாயே! உங்கள் அடியவர்களின் காலணிகளைப் பாதுகாக்கும் வேலையை மட்டும் செய்கிறேன். கவிபுனைவதும் காலணிகளைக் காப்பதும் ஒன்றுதானே. இந்த ஞானம் என்னிடம் கடைசி வரை இருக்க அருள்புரியுங்கள், போதும்”
அன்னை பெரிதாகச் சிரித்தபடி மறைந்தாள். நான் தனியாக அழுது கொண்டிருந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar