Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இயல்வது கரவேல்
 
பக்தி கதைகள்
இயல்வது கரவேல்


என்ன சார்... ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்துருக்கக் கூடாதா? இப்பத்தானே மாடி வீட்டுக்காரர் அவசரம்ன்னு கேட்டார்... கொடுத்துட்டேனே... வேணும்ன்னு ஒரு வார்த்தை போன்ல சொல்லியிருந்தாக் கூட அவருக்குக் கொடுக்காம உங்களுக்குக் கொடுத்திருப்பேனே... நாம் ஒருவரிடம் சென்று உதவி கேட்கும் போது எதிர்கொள்ளும் வசனங்கள் இவை. உலகம் இப்படித்தான். தன்னிடம் இருப்பதைக் கொடுக்க பெரும்பாலும் மனிதர்களுக்கு மனம் வருவதில்லை. எனவே தான் அவ்வையாரும் தன்னால் கொடுக்க இயன்றதை ஒளிக்காமல் கொடுக்க வேண்டும் என்கிறார்.
வாயாலேயே வடை சுடுவார்கள் என்பார்கள். ஆம், எனக்கிட்ட மட்டும் ரெண்டு வண்டி இருந்தா ஒண்ண அவர்கிட்டக் கொடுத்திருப்பேன் என்பார் ஒருவர். வண்டி ரெண்டு வேண்டாங்க.... உங்கக்கிட்ட ஓட்டாம பழைய சைக்கிள் இருக்கே... அதக் குடுக்கலாமில்ல... என்றால்.... சார் அது எங்க அப்பா ஞாபகமாக வைச்சுருக்கேன் என்பார். கொடுப்பது என்பது ஒரு உயர்ந்த குணம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நெஞ்சில் யாருக்கு ஈரம் இருக்கிறதோ, பிறர் துன்பத்தைக் கண்டதும் கசிந்து கண்ணீர் வருகிறதோ அவரால் தான் கொடுக்க இயலும். துரியோதனன் தான் கர்ணனுக்கு தன் தேசத்தில் ஒரு பகுதியைக் கொடுத்தான். ஆயினும் கர்ணன் போல் துரியோதனனால் கொடுக்க இயலவில்லை. ஒருமுறை ஒரு ஏழை துரியோதனனிடம் சென்று தன் மகள் திருமணத்திற்கு உதவி கேட்டான். துரியோதனனும் அப்புறம் வா பார்க்கலாம் என அனுப்பி விட்டான். அது ஒரு மழைக்காலம். எனவே மன்னரை எந்த அளவிற்கு நம்புவது என்று தெரியாமல் தயை உள்ளம் படைத்தவர்களிடம் சென்று கேட்டு திருமணத்திற்கு ஓரளவு பொருட்கள் சேகரித்துவிட்டான். ஆயினும் மழைக் காலமாதலால் விறகு மட்டும் கிடைக்கவில்லை. காரணம், பத்து நாளாக தொடர்ந்து ஒரே மழை. யாரும் விறகு கொடுக்க முன்வரவில்லை. வேறு வழியின்றி மீண்டும் துரியோதனனிடமே சென்றான். மஹாராஜா! திருமணத்திற்கு எல்லாம் சேகரித்துவிட்டேன். விறகு மட்டும் வேண்டும்.  தயை கூர்ந்து அரண்மனையிலிருந்து விறகு மட்டுமாவது தரச் சொல்லுங்கள் என்றான். துரியோதனனோ கோபமுடன் அடேய்... முட்டாளாக இருக்கின்றாயே! இந்த நாட்டில் தானே நானும் இருக்கிறேன். அடைமழை காலத்தில் எப்படி விறகு கொடுப்பது? ஓடி விடு! என்றான். அவனும் புறப்பட்டான். இரண்டு முறை கேட்டும் மன்னர் மறுத்துவிட்டாரே என்ற ஆத்திரத்தில் வெளியேறும் போது, ‘இதுவே கர்ணனாக இருந்திருந்தால் கொடுத்திருப்பார்’ என கத்தினான். துரியோதனனுக்கு மேலும் கோபம் வந்தது.
    கர்ணனுடைய தேசத்திலும் மழைதானே பொழிகிறது. அவனால் எப்படி சாத்தியம் என எண்ணியபடி, உதவி கேட்டு வந்தவனுக்கு தெரியாமல் ஒரு வேலைக்காரனை அனுப்பி, கர்ணன் எவ்வாறு விறகு கொடுக்கிறான் என்பதைப் பார்த்து வரச் சொன்னான். வேலைக்காரனும் கர்ணனின் அரண்மனைக்குச் சென்றான். இந்த ஏழையை எதிர்கொண்டு வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்டான். அவனும் மகளின் திருமண சூழலைச் சொன்னான். திருமணத்திற்காக பொருட்களை அளித்த பிறகு தன் குதிரை லாயத்தின் மேற்கூரையைப் பிரித்து அந்த மரங்களையே அடுப்பு எறிக்க விறகாகக் கொடுத்தான். ஏழை கண்ணீர் சிந்தினான்.
    வேலைக்காரன் நடந்ததை எல்லாம் துரியோதனனிடம் தெரிவித்தான். மனமிருந்தால் எந்த நிலையிலும் கொடுக்க முடியும் என அப்போது தான் புரிந்தது. ஆனாலும் துரியோதனனால் எப்போதும் கர்ணன் மாதிரிக் கொடுக்க இயலவில்லை என்பதே உண்மை.
    கொடுக்கிலாதானைப் பாரியே என புகழினும் கொடுப்பாரிலை என்பார் சுந்தரர் தேவாரத்தில், அப்படி ஒருவர் தன்னிடம் இருப்பதை மறைக்காமல் கொடுத்துப் பழக வேண்டும். அதற்குப் பரந்த மனம் வேண்டும். முன்பு கூட்டுக் குடும்பமாக இருந்த காலத்தில் சித்தப்பா, பெரியப்பா குழந்தைகள், அத்தை, மாமா குழந்தைகள் என்று எல்லோருடனும் கலந்து பழகி வாழும் போது சிறியதாக ஏதாவது ஒரு தின்பண்டம் கிடைத்தால் கூட அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை நம்மிடம் இருந்தது. ஆனால் இப்போது வீட்டுக்கு இரண்டு குழந்தைகள் என்று ஆகி, இப்போது ஒண்ணே ஒண்ணு போதும் என்று ஆகி அதனால் அந்தக் குழந்தைக்குப் பகிர்ந்து கொடுப்பது, விட்டுக் கொடுப்பது என்பதே குறைந்துவிட்டது.
    எனவே தான் பெரியவர்கள் தர்மம் செய்யும் போது குழந்தைகள் மூலம்  கொடுக்கச் செய்வார்கள். காரணம் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை பெருகும் என்பதால் தான். பிறருக்கு இயன்றதைத் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை சிறிய வயதிலேயே உருவாக வேண்டும் என்பதால் தான்.
    ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தினார். ஆளுக்கு ஒரு பலுானைக் கொடுத்து ஊதச் சொன்னார். பிறகு அதைக் கட்டி, அதன் மீது அவரவர் பெயரை எழுதி பலுான்களை அடுத்துள்ள அறையில் போட்டு விட்டு வரச் சொன்னார். அங்கு மின்விசிறியை சுழலச் செய்ய அவை பறந்து கலந்தன. பிறகு மாணவர்களிடம்,
‘‘நீங்கள் பத்து நிமிடத்திற்குள் உங்கள் பெயருள்ள பலுானை எடுங்கள்’’ என்றார். முண்டியடித்துக் கொண்டு தேடியும் யாராலும் முடியவில்லை. பிறகு ஆசிரியர், ‘‘ஏன் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்று. மாணவர்கள் அமைதியாக இருந்தனர். ஆசிரியர் சொன்னார், நீங்கள் அனைவரும் உங்கள் பெயருள்ள பலுானையே கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறீர்கள். மாற்றி சிந்தித்தால் என்ன? நீங்கள் ஒவ்வொருவரும் கையில் கிடைக்கும் பலுானை எடுத்துக் கொண்டு அதில் பெயருள்ள உங்கள் தோழனிடம் கொடுக்கலாம் அல்லவா? அப்படி செய்தால் அனைவருக்கும் அவரவர் பலுான் கிடைத்திருக்குமே... என்றார். மாணவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ‘‘ஒவ்வொருவரும் அவரவர் தேவையை மட்டுமே தேடுகிறோம். பிறரைப் பற்றி சிந்திப்பதே இல்லை. எப்போது பிறர் நலன் பற்றி சிந்திக்கிறோமோ அப்போதே  கடவுளின் அருள் நம்மை வந்தடையும் என்றார்.
    கர்ணனை விடக் கொடையில் சிறந்தவர் உண்டா என்ற கேள்வி அனைவரிடமும் உண்டு. ஆம்... நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் தான் அதைச் செய்த சிறந்தவர். யார் என்ன கேட்டாலும் அள்ளி வழங்கும் வள்ளலர் அவர்.  உலகத்தின் இயல்பு என்பது தனக்கு என எல்லாவற்றையும் வைத்துக் கொள்வது. ஆனால், இவரோ தனக்கென எதையும் வைக்காமல் பிறருக்கு வழங்குவதால் இயல்புக்குப் பகையாக இருப்பதால் இயற்பகை எனப்பட்டார்.
    ஒருநாள் அடியவர் ஒருவர் தேடி வந்தார். உபசரித்து உணவு வழங்கினார். அடியவரோ நீர்தான் எதைக் கேட்டாலும் வழங்கும் இயற்பகையோ? என்றார். அதற்கு இயற்பகையாரோ கடவுள் தந்ததை அடியவர்களுக்கு வழங்கும் பேறு பெற்றுள்ளேன் என்றார்.     
    உடனே அடியவரும் அப்படியானால் நீர் உன் அன்பிற்குரிய மனைவியை தருவீரா? என்றார். இயற்பகையார் மனைவியை ஒரு கணம் பார்த்தார். திகைத்த மனைவி, பின்னர் கணவரின் குணம் அறிந்து ஒரு வார்த்தையும் பேசாமல் அடியவர் அருகில் வந்தார். எந்த ஒரு மனிதனும் தர்மம் செய்ய வேண்டுமானால், அதற்கு அவனது வாழ்க்கைத்துணையும் அதே சிந்தனை உடையவராக இருத்தல் வேண்டும். அப்படி அமையாவிட்டால் தர்மம் செய்ய இயலாமல் போகும்.  இங்கே இயற்பகையாரின் மனைவி இத்தனை நாள் தன்னால் இயன்ற வரை கணவர் செய்யும் செயல்களுக்கு உறுதுணையாக இருந்தார். இப்போது அவரின் உயர்ந்த தர்மத்திற்காக தன்னையே அளித்துவிட்டார். எத்தகைய பெரும் கொடை அடியவர் தன் மனைவியை அழைத்துச் செல்லும் போது தடுத்த அத்தனை பேரையும் விலக்கி அடியவரை தன் மனைவியுடன் பத்திரமாக ஊர் எல்லையில் கொண்டு போய்ச் சேர்த்தார்.
    பின்னர் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இயற்பகை முனிவா ஓலம்... ஈண்டு நீ வருவாய் ஓலம்.... அயர்ப்பிலா தானே ஓலம் என்று மூன்று முறை ஓலமிட்டார் அடியவர். மீண்டும் அடியவருக்கு ஏதேனும் ஆபத்து உண்டாயிற்றோ எனக் கலங்கித் திரும்பிப் பார்த்தார். அங்கே ரிஷப வாகனத்தில் சிவனும், பார்வதியும் காட்சியளித்தனர். மனைவியுடன் இனிது இருந்து ஏராளமான தர்மங்கள் செய்து வர அருளி மறைந்தார். இந்த வரலாறு வேறேங்கும் இருக்குமா என்பது சந்தேகம் தான். எனவே கொடுத்தலின் உச்சம் உள்ளது நம் தமிழர் வரலாறு.
    யாசிப்பவர் வந்து கேட்கும் போது தம்மிடம் வைத்துக் கொண்டே இல்லை என்று சொன்னவுடனேயே யாசிப்பவனின் உயிர் போய்விடுகிறது. வைத்துக்கொண்டே மறைக்கும் இவர்களின் உயிர் எங்கே போய் ஒளித்து கொள்ளும்? இவர்கள் உணர்வே இல்லாத ஜடமா என்ன? என இரவச்சம் அதிகாரத்தில் திருவள்ளுவர் கேட்கிறார்.
    ஈயன இரத்தல் இழிந்தன்று; ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று என்கிறது புறநானுாறு. எனவே கேட்பதைக் காட்டிலும் கேட்பவருக்கு இல்லை என்பது சொல்வது இழிவான செயல். எனவே நம்மிடம் உள்ளதை மறைக்காமல் கொடுப்போம். கடவுள் நமக்கு அள்ளிக் கொடுப்பார் என்பதில் ஐயமில்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar