Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒப்புரவு ஒழுகு...
 
பக்தி கதைகள்
ஒப்புரவு ஒழுகு...

 நீ யாருன்னே தெரியாதுப்பா... ஆனால் கடவுள் போல வந்து காப்பாத்திட்டே.... ரொம்ப நன்றிப்பா.... உங்களுக்குக் கோடி புண்ணியமா போகும்... எப்படி செஞ்சு முடிக்கப் போறேன்னு திகைச்சுப் போய் நின்னேன்.... கடவுள் மாதிரி வந்தீங்க.... இப்படி அன்றாடம் நாம் வசனங்களைக் கேட்கிறோம். வசனங்கள் என்பது கூடத் தவறு. இவை இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிவருபவை. ஒப்புரவு என்பது இன்னார், இனியார் என்று பாராமல் எல்லோருக்கும் உதவி புரிந்து வாழ்வது.
    ஒருபுறம் மனித மனங்கள் சுருங்கி விட்டன என நாம் ஆதங்கப்பட்டாலும், இன்னும் உலகில் நல்லவர்களும் உதவுபவர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை. உலகம் இத்தனை கோடி ஆண்டுகளாய் அழியாமல் இயங்குகின்றதே ஏன் என ஆராய்ந்தால் அமுதமே தனக்குக் கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல் பிறருக்கு பகிர்ந்தளித்துக்கும் மனம் கொண்டவர்களும், தன்னலம் கருதி பிறரிடம் கோபம் கொள்ளாதவர்களும், உலகம் பழிக்கும் செயலுக்கு அஞ்சுவோரும், உலக நலனுக்காக சோம்பலின்றி உழைப்பவர்களும், புகழ் பெறுவது என்றால் உயிரைக் கொடுக்கத் தயங்காதவர்களும், பழிக்குரிய செயல் என்றால் அதற்காக உலகமே ஈடாகக் கிடைத்தாலும் ஏற்காத உயர்பண்பை உடையவர்களால் தான் உலகம் இன்னும் வாழ்கிறது என்கிறது புறநானுாறு.
    அன்பு, இரக்கம் என்பது மனிதர்களைத் தாண்டி புல், பூண்டு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள் மீதும் காட்டுவதே நம் பண்பாடு. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார். முல்லைக் கொடி படரக் கொம்பு இன்றிக் காற்றிலே தள்ளாடி நிற்கிறது. அந்தப் பகுதியைக் கடந்த வள்ளல் பாரி அதைக் கண்டார். உடனே பணியாட்களை வரவழைத்து கொடி படர ஒரு பந்தலை அமைக்கச் சொல்லி இருக்கலாம். ஆனால் மனதில் அன்பு ஊற்றெடுக்க உடனடியாகச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. உடனே தன் தேரை அருகில் நிறுத்தி அதன் மீது படரவிட்டான். சுற்றிலும் இருந்த மண்ணை சரி செய்து நீர் வார்த்தான். நிம்மதியாக நடந்தே புறப்பட்டார். இது பைத்தியக்காரத் தனமாகத் தோன்றலாம். ஆனால் அவரது அன்பை யாரால் அளக்க இயலும். அதனால் தானே இன்று வரை  வள்ளல் பாரி பற்றிப் பேசுகிறோம். மயிலுக்குக் குளிர் அடிக்கிறது எனக் கருதி அது ஆடும் போது அதன் மீது தன் விலை மதிப்பற்ற சால்வையைப் போர்த்தியவனின் மனநிலையை எப்படிக் கூற முடியும்?
    காலை நேரப் பரப்பான சூழல். சாலையோரம் பழம் விற்கும் கிழவரும், கிழவியும் ஒருவரை ஒருவர் கண்ணால் பார்த்துக் கொள்கிறார்கள். வெயில் வந்தும் பனி விலகவில்லையே... குளிர் அதிகமாக உள்ளதே... டீ குடிக்கலாமா? என அவள் கண்ணால் கேட்பதைக் கிழவர் புரிந்து கொள்கிறார். ஒரு துாக்குச் சட்டியுடன் சாலையை கடந்து டீயும், வடையும் வாங்கிக் கொண்டு நடந்தார். அவசர கதியில் இளம்பெண் இவர் முன்னால் பிரேக் போட்டு, தன் மீதுள்ள தவறை மறைக்க கன்னா பின்னா எனத் திட்டுகிறாள். அவள் வந்த வேகத்தில் வடை பொட்டலம் சிதறியது. திட்டிவிட்டு அவள் பறந்துவிட்டாள். வடையை எடுத்துக்க் கொண்டு கிழவர் வந்து சேர்ந்தார். கிழவி கேட்டாள். என்னவென்று.... ஒண்ணுமில்ல தாயி... சின்னப்புள்ளக்கு போற அவசரம். நான் கொஞ்சம் பாதுகாப்பாக வந்திருக்கலாம். இதப்பாரு அது பறந்த அவசரத்துல அதோட போனை விட்டுப் போயிருச்சு.... எனக் கவலைப்பட்டார். அந்தப் புள்ள இந்தப் பக்கந்தான் போகும் வரும். பாத்துக் கொடுத்துருய்யா... என்றாள் கிழவி. வடையில் ஒட்டிய மண்ணை ஊதிவிட்டு இருவரும் சாப்பிட்டனர்.
    மறுகாலையில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார் கிழவர். அந்தப் பெண்ணை கையைக் காட்டி நிறுத்தினார். அவளோ பயந்தாள். நேத்து திட்டியதற்கு ஏதேனும் சொல்வாரோ என்று. ஆனால் மடியிலிருந்து போனை எடுத்துத் தாயீ.... போற அவசரத்துல்ல விட்டுட்டுப் போயிட்டியே என்றார். அவளின் கண்கள் கசிந்தன. தாத்தா  மன்னிச்சிடுங்க... நான் பேங்க் ஆபீசர். போனைக் காணாம, நேத்து பூரா தவிச்சிட்டேன், உங்களத் திட்டினது தப்புத்தான். தப்பு என் பக்கந்தான். ஆனாலும் அதை நினைக்காம போனை பத்திரமா கொடுத்துட்டீங்களே... தாத்தா நீங்க கிரேட் என நன்றிப் பெருக்குடன் நகர்ந்தாள். கிழவரைப் பார்த்த பக்கத்துக் கடைக்காரன் ஏய் பெருசு.... அது ஐபோன்யா.... அதை வித்துட்டு ஜாலியா, ஒரு வாரம் இருக்கலாமுல்ல.... என்றான். உடனே கிழவர் அட போப்பா.... அது என் பேத்தி வயது.... என்னோட பேத்தி திட்டியிருந்தா பொறுத்துக்க மாட்டேனா? அது மாதிரி தான். அடுத்தவங்க பொருள் நமக்கெதுக்கு என்றார் கிழவர்.  கிழவி தன் கையால் அவரைச் சுற்றிச் சொடக்கு போட்டாள். ஆமாம், இது போல ஆயிரம் ஆயிரம் பேர் அமைதியாக, நேர்மையாக வாழ்ந்துட்டு இருக்காங்க. நம்மாலான உதவியைப் பிறருக்குச் செய்வதும், அனுபவத்தால் உலகம் இப்படித்தான் என உணர்ந்து நடப்பதும் தான் அமைதியான வாழ்க்கைக்கான வழி.
    அனுபவம் என்பது காலத்தைச் செலவிட்டு பெறுவதை விட நுண்ணறிவால் நாம் புறச்சூழலை அறிந்து நடப்பதும் தான்.
    ஒரு மன்னர் இருந்தார். கோபக்காரர். அது தவிர அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர். சேடிஸ்ட் என்கிறார்களே அது போல, பத்து வேட்டை நாய்களை வளர்த்து வந்தார். யாரேனும் தவறு செய்தால் அவர்களை நாய்களிடம் ஏவி விடுவார். மன்னர் என்பதால் கேள்வி கேட்கவே அஞ்சினர் மக்கள். மன்னருக்கு அருகில் நின்று சாமரம் (அந்தக் காலத்து விசிறி) வீசுபவன் இருந்தான். மன்னரின் குணம் தெரிந்திருந்ததால், அவன் மிக கவனமாகப் பணிபுரிந்தான். ஏதேனும் தவறு செய்தால் தனக்கும் அதே கதி தான் என்று. இருப்பினும் ஒருநாள் சாமரம் வீசும் போது கண்ணயர்ந்து மன்னரின் அருகில் விழுந்துவிட்டான். அவர் தலையில் இருந்த கிரீடம் நழுவி அவரின் தொடையைப் பதம் பார்த்துவிட்டது. மன்னர் கோபத்தில் வேட்டை நாய்களுக்கு இவனை உணவாகப் போடுங்கள் என உத்தரவிட்டார்.
    சாமரம் வீசுபவன் கால்களில் விழுந்து கதறினான். நான் சொன்னது சொன்னது தான் என பிடிவாதமாக இருந்தார். மன்னா... தண்டனையை ஒரு பத்து நாட்கள் மட்டும் ஒத்தி போடுங்கள் என்றான். இவன் நல்ல நேரம் மன்னரும் ஏற்றார். பத்து நாட்கள் கழித்து நாய்களுக்கு இரையாகப் போடுங்கள் என உத்தரவிட்டார் மன்னர்.
    சாமரம் வீசுபவன் வீட்டிற்கு வந்தான். மனைவியுடன் தன் நிலையை விளக்கினான். அவள் தன் யோசனைப்படி நடங்கள் என்றாள்.  மன்னரின் வேட்டை நாய்களைப் பராமரிப்பவனிடம் சென்றான். ஐயா! வேட்டை நாய்களை ஒரு பத்து நாட்களுக்கு நான் பராமரிக்கிறேன்; அனுமதி தாருங்கள் என்றான். அவன் சற்று யோசித்தாலும் மன்னரின் அருகில் இருப்பவன் என்பதால் சம்மதித்தான். சாமரம் வீசுபவன் வேட்டை நாய்களைப் பராமரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான்.
    முதல் இரண்டு நாள் நாய்கள் குரைத்து வேலை செய்யவிடாமல் ரகளை செய்தாலும் அடுத்தடுத்த நாட்களிலே நாய்களுடன் ஐக்கியமாகிவிட்டான். நாய்களைக் குளிப்பாட்டுவது, உணவு வைப்பது, கழிவுகளைச் சுத்தம் செய்வது, அதன் காயங்களுக்கு மருந்து இடுவது என பணிவிடை செய்தான். பத்து நாட்கள் முடிந்ததும் அரண்மனைக்குப் போனான். அப்போதும் மன்னரின் கோபம் தணியவில்லை. இவனை நாய்களுக்கு இரையாக இடுங்கள் என்றான். நாய்கள் கடித்துக் குதறுவதைப் பார்க்க  காத்திருந்தார்.
    என்ன ஆச்சரியம் நாய்கள் கடிப்பதற்குப் பதிலாக வாலை ஆட்டி, நக்கி முகர்ந்து கொண்டிருந்தன. என்னாச்சு இந்த நாய்களுக்கு? எனக் கத்தினார் மன்னர். சாமரம் வீசுபவன் உடனே எழுந்து வந்து ‘‘மன்னிக்க வேண்டும் மன்னா! உங்களிடம் அவகாசம் வாங்கிய பத்து நாட்களிலே என் மனைவியின் ஆலோசனைப்படி நாய்களைப் பராமரித்ததால் அவை என்னிடம் அன்பு கொண்டன. பத்து நாட்கள் வேலை பார்த்ததற்கே குறைந்த அறிவுள்ள நாய்களே அன்பு காட்டுகிறது என்றால், இத்தனை ஆண்டுகள் உங்கள் அருகில் பணி செய்துள்ள தாங்கள் என்னை மன்னிக்கக் கூடாதா? என வேண்டினான். மன்னரும் மன்னித்தார். மன்னருடன் நேரடியாக மோதாத காரணத்தாலும், புத்திசாலித்தனத்துடன் நாய்களுக்கு சேவை செய்ததாலும் உலக அனுபவத்தால் கடும் சூழலைக் கடவுள் துணையுடன் வென்றான் என்றால் மிகையில்லை.
    பக்தர் ஒருவர் யார் வந்தாலும் உணவு தருவார். நேரம் காலம் பார்க்கமாட்டார். அவர் குணம் தெரிந்து வெளியூரிலிருந்து வருபவரும்  கூட அவரிடம் உணவு உண்டு செல்வர். ஒரு நாள் இரவு. தளர்ந்த நடையுடன் ஒருவர் வந்தார். நீண்ட நேரம் நான் நடந்து வந்தேன். களைப்பாக இருக்கிறது. உணவு தரலாமா? எனக் கேட்டார். பக்தரும்  உணவை எடுத்து வந்தார். பின்னர் வந்தவரிடம் கை கால் கழுவி கடவுளைக் கும்பிட்டு வாருங்கள் என்றார். வந்தவரோ நான் கடவுள் மறுப்பாளன். கடவுளைக் கும்பிட முடியாது. உணவிடுங்கள் என்றார். பக்தரோ கடவுள் மறுப்பாளருக்கு உணவிட முடியாது. வெளியே போங்கள் என விரட்டினார். அவரும் போய்விட்டார். அன்றிரவு பக்தரின் கனவில் கடவுள் தோன்றி, ‘‘பக்தனே! நீ நற்செயல்கள் செய்கிறாய். எனினும் இன்று ஒருவனுக்கு உணவு தர மறுத்துவிட்டாயே என்றார். உடனே பக்தரும் உன்னை வணங்காதவனுக்கு எப்படி உணவு தருவது? என்றார். கடவுள் சொன்னார் இத்தனை நாள் என்னை ஏற்றுக் கொள்ளாத அவனுக்கு நானே யார் மூலமாவது உணவு வழங்கிக் கொண்டு தானே இருக்கிறேன். ஒரு வேளை நீ பொறுத்துக் கொண்டு உணவு தந்திருக்கலாமே என்றார். பக்தர் எழுந்தார். தன் கடமை உணவு தருவதே என்று கருதி அன்று முதல் யார் வந்தாலும் உணவு தந்தார் எதுவும் கேட்காமலேயே.
    ஆம், நாம் இந்த உலகத்தின் நீதிபதிகள் அல்ல. நம் கடமை அன்புடன் சேவை செய்வது. இந்த உலகத்துடன் பிறர் குறைகளைக் காணாமல் இணங்கி வாழ்வது. இதையே செய்வோம். அன்பால் உலகை நிரம்புவோம்.
    
18 படியேற இருமுடி தேவையில்லை
தென்காசியில் இருந்து 10 கி.மீ., துாரத்திலுள்ள சாம்பவர் வடகரையில்  ஐயப்பன் கோயில் உள்ளது. இருமுடி கட்டாமலேயே இங்கு 18 படிகள் ஏறி தரிசிக்கலாம். ஆண், பெண் என்ற பாகுபாடு இங்கு இல்லை.    
தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணுதுர்கை, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மாளிகைபுறத்தம்மன் சன்னதிகளும் உள்ளன. நவக்கிரகங்கள் மனைவியருடன் உள்ளனர். இவர்கள்  ஐம்பொன்னால் ஆனவர்கள்.  
 குழந்தைகள், குருசுவாமிகள் கருவறைக்குள் சென்று அபிஷேகம் செய்யவும், பெண்கள் மலர் அபிஷேகம் செய்யவும் அனுமதி உண்டு.  காலை 7:00, 11:00, மாலை 5:00 மணிக்கு இந்த அபிஷேகம் நடக்கும். காலை 6:00 –  இரவு 9:00 மணி வரை நடை திறந்திருக்கும்.  தமிழ்மாதப் பிறப்பன்று தரிசிப்பது சிறப்பு. 2023 பிப்.1 காலை 9.00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.      
தொடர்புக்கு: 94862 85978


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar