Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆண்டாள் என்றாலே மங்களம் தான்
 
பக்தி கதைகள்
ஆண்டாள் என்றாலே மங்களம் தான்

ஆண்டாளின் பாசுரங்களில் நேர்த்தி, ஒழுங்கு என கட்டுக்குலையாத கட்டமைப்பு காணப்படுகிறது. உதாரணத்திற்கு மாலே மணிவண்ணா எனத் தொடங்கும் பாசுரத்தை எடுத்துக் கொள்வோம். இதில்  ஆண்டாள் சொல்கிறாள், “கண்ணா…நோன்பு இருக்கும் போது உன்னை வழிபட எங்களுக்கு ஆறு விஷயங்கள் தேவை. சங்கு, பறை, பல்லாண்டு இசைப்பவர்கள், கோலவிளக்கு, கொடி, விதானம்.  இந்த ஆறையும் எங்களுக்கு அருள்வாய் கண்ணா!” என்கிறாள். எப்படி அவள் இந்த வரிசையை தேர்ந்தெடுத்தாள்? கோயிலை விட்டு மிகத் தொலைவில் நீங்கள் இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். கோயிலில் நடக்கும் விசேஷத்தின் போது முதலில் நமக்கு கேட்பது இந்த சங்கின் ஒலி தான். கோயிலை விட்டு நாம் நெடுந்துாரம் இருந்தாலும் இந்த சங்கின் ஒலி தான் நம்மை முதலில் வந்தடையும். அது பேரொலி அல்லவா? சரி நாம் இன்னும் கொஞ்சம் கோயிலை நெருங்கிச் செல்கிறோம் என்றால் பறையோசை நமக்கு கேட்கும். அதையும் தாண்டி இன்னமும் நெருங்கும் போது பல்லாண்டு இசைப்பவர்களின் இனிய இசை கேட்கும். அதையும் கடந்து நாம் உள்ளே செல்லும்போது கோயிலின் உள்ளே இருக்கும் விளக்கை பார்க்க முடியும். விளக்குக்கு அடுத்தபடியாக கொடி இருக்கும். அது கருடனின் கொடி. அதற்கு அடுத்தபடியாக விதானம் இருக்கும். இங்கு விதானம் என்பது எம்பெருமானின் தலையில் கட்டும் மேற்கட்டு என்ற ஆடையை குறிக்கும்.  ஆக கேட்கப்படும் அந்த 6 பொருள்களையும் சீரான வரிசையில் கேட்கிறாள்.

ஒரு கோயில் இருக்கக்கூடிய தெருவில் நடந்து போனோமானால் என்னென்ன விஷயங்களை முதலில் உள்வாங்குவோமோ அதை அப்படியே தன் பாசுரங்களில் அழகாக பதிவேற்றி உள்ளாள் ஆண்டாள். சம்பவங்களின் கட்டமைப்பு அவ்வளவு நேர்த்தியாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்ல, பொருட்களின் கட்டமைப்பு கூட அப்படி இருக்கிறது. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்னும் நோன்பு நிறைவு பாசுரத்தில், “ஏ கோவிந்தா… நீயும் நாங்களும் கூடியிருந்து உள்ளம் குளிர்ந்து நாட்டில் உள்ளவர்கள் புகழும்படியாக கையில் வளையல்களையும்,  தோளில் அணியும் தோல்வளையாகிய வங்கியையும், காதில் அணியும் தோடும், காதின் மேல் பகுதியில் அணியும் செவிப்பூ என்ற கொப்பும், காலில் அணியும் பாடகம் என்ற தண்டையும், அதற்கு அடுத்து புத்தாடையும் அணிந்து கொள்வோம். பால் சோற்றை நெய் மூடுமாறு விட்டு, கையில் வாங்கினால் முழங்கையில் நெய் வழிந்தோடுமாறு உண்ணுவோம் என வரிசைப்படுத்துகிறாள். குளித்து முடித்து, அலங்கரித்துக் கொண்டு, புத்தாடை அணிந்து பின் உணவருந்தும் முறை சீராக இருக்கிறது. அன்றாட நிகழ்வுகளையும், இயற்கையையும், வாழ்வியல் பழக்க வழக்கங்களையும் எவ்வளவு அழகாக கவனித்து அதை உள்வாங்கி, மேலும் இலக்கண மரபுப்படி செதுக்கியிருக்கிறாள் என பார்க்கும்போது நமக்கெல்லாம் ஆச்சரியத்துடன் ஆனந்தமும் பெருக்கெடுக்கிறது.  

ஒரு தலைவாழை இலையில் விருந்து பரிமாறினால் முதலில் இலையை கழுவி தரையில் கிடத்தி முதலில் இனிப்பு வைத்து, பொரியல், அவியல், கூட்டு போன்ற பதார்த்தங்களை இட்டு, சாதம் வைத்து பின் சாம்பார், ரசம், பாயாசம், மோர் என அடுத்தடுத்து பரிமாறுவோம் அல்லவா… அப்படி ஒரு பரிமாறல்! ஒரு ஏணியில் ஒவ்வொரு படியாக கால் வைத்து ஏறும் போது சீரான வேகத்தில் சரியான பாதையில் சிறப்பாக மேலேறிச் செல்ல முடியும். இதைப் போன்ற செம்மையான செயலை திருப்பாவையில் நாம் பார்க்க முடியும்.

திருப்பாவையில் மார்கழியில் பாவை நோன்பு நோற்க ஆரம்பித்து அந்த நோன்பிற்கான வழிமுறைகள், செய்வன, செய்யாதனச் சொல்லி தோழியருக்கு எல்லாம் முன்பே அதை பற்றி அறிவுறுத்தி, அவர்களை எல்லாம் போய் துயில் எழுப்பி, அந்த பரந்தாமனை எப்படி அடையலாம் என்ற வழிமுறைகளை காண்பித்து நோன்பையும் சீராக முடித்து வைத்து என அந்த வரிசையை சரியாக நிறைவு செய்கிறாள் ஆண்டாள்.  நோன்பு முடித்த கையோடு 28ம் பாசுரத்தில் ஒரு வார்த்தை சொல்கிறாள் பாருங்கள். அதுதான் பக்தியின் உச்சம்.  பக்தியின் முதிர்ச்சி நிலை என்று கூடச் சொல்லலாம். “ கண்ணா… உன்னோடு எனக்கு இருக்கும் உறவை ஒழிக்கவே முடியாது.  பிறவிகள் தாண்டியும் நீ என்னுடன் வர வேண்டும். அவ்வாறு  உடன் வரக்கூடியவனும் நீ ஒருவன் மட்டும் தானே. ஆம், இந்த பிறவியில் தற்போது இருக்கும் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், சொந்த பந்தம் அனைத்தும் அடுத்த பிறவியில் அறுந்து போகலாம்.   இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் அனைத்து செல்வங்களும்,  சொத்து சுகங்களும் அடுத்த பிறவியில் தொடரலாம். வெவ்வேறு பிறவிகளில் வேறு வேறு சேர்க்கை ஏற்படலாம். நமக்கு அதை பற்றி அறிவு, ஞானம் கூட அந்த நேரத்தில் இருக்குமோ தெரியாது. ஆனால் கடவுளாகிய நீ என்னுடன் பிறவி தோறும் தொடர முடியும். அதனால் உன்னோடு இருக்கும் உறவை என்னால் ஒழிக்க முடியாது கண்ணா. இது ஏதோ ஒரு பிறவி இரண்டு பிறவியோடு முடிந்து விடும் பந்தம் அல்ல. ஏழேழு பிறவிக்கும் தொடரக்கூடிய பந்தமாக நீயே இருக்க வேண்டும் கண்ணா” என பணிந்து நெகிழ்கிறாள்.  எப்படி ஒரு பக்தி மார்க்கம்!  என்ன ஒரு தெய்வீக அலை! அந்த பக்தி அலையை நம்மிடமும் அனுப்பி உருக வைக்கிறாள் பாருங்கள்! அதுதான் அவளின் சிறப்பு. ஏணியில் முதலில் அவள் ஏறியதோடு  நம்மையும் கைபிடித்து ஏற்றி மேலே அழைத்துச் செல்கிறாள். ஏன் அவளே ஒரு ஏணியாக இருந்து நம்மையெல்லாம் அவளைப் பற்றிக் கொள்ள வைக்கிறாள் என்று கூட தத்துவார்த்தமாக உணர முடியும்.

ஒரு சமயம் ஸ்ரீ பராசரபட்டர் கதாகாலட்சேபம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அதில் தினமும் திருப்பாவையை பாடுங்கள் என்றார். அப்போது இளைஞன் ஒருவன், “ கல்யாணமாகி பிள்ளை குட்டி என தினசரி உழன்று கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு இந்த 30 பாசுரங்களையும் பாட நேரம் இருப்பதில்லை. அதனால் என்ன செய்யலாம்?” எனக் கேட்டார்.

 30  பாசுரங்களை படிக்க நேரம் இல்லை என்றால் கடைசி இரண்டு பாசுரங்களையாவது பாடுங்கள்’’ என்றார். உடனே அந்த இளைஞர், “அதற்கும் நேரமில்லை என்றால் என்ன செய்வது?” எனக் கேட்டார்.

“ ஆண்டாள் திருவடிகளே சரணம் என்று சொல்லுங்கள். அதுவும் முடியவில்லை என்றால் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் என்று ஒருத்தி இருந்தாள். அவள் பெருமாளுக்கு திருப்பாவை பாடினாள் என்றாவது மனதில் நினையுங்கள். அந்த நினைவு உங்களை நற்கதிக்கு அழைத்துச் செல்லும். “சூடிக் கொடுத்தாளை சொல்லு”  என்று உய்யக்கொண்டார் சொல்லிச் சென்றதும் இதையேதான்” என்றார் முடிவாக.   

சுவாமி தேசிகன் தன்னுடைய கோதாஸ்திதியில் ஆண்டாளை விசேஷமாக போற்றுகிறார். “விஷ்ணு சித்தரின் மகளான ஆண்டாள் என்னுடைய மனதில் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும்” என்று உருகுகிறார்.  அது மட்டுமா?  ”கோதை என்னும் பெயர் கொண்டு விஷ்ணுசித்தர் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வாரின் குலத்தில் வந்து அவதரித்து அந்தக் குலத்திற்கே பெரிய மகிழ்ச்சி அளித்த பிராட்டியே“  என்று புகழ்கிறார்.

அதாவது விஷ்ணு சித்தர் எப்படிப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர் என்பதை நாம் உணர்ந்தால் தான் சரியான விளக்கம் நமக்குக் கிடைக்கும். சதா சர்வ காலமும் பெருமானுக்கு கைங்கரியம் செய்து கொண்டு தொண்டாற்றுபவர்கள் விஷ்ணுசித்தர் குடும்பத்தினர். தமக்கு முன்னோர்கள் அனைவரும் எதை செய்து காட்டினார்களோ அதையே தானும் செய்து காட்டி பெருமாளுக்கு தொண்டு செய்து கொண்டு இருப்பேன் என தெரிவிக்கிறார் பெரியாழ்வார். அப்படி தொண்டே செய்து என்றும் பெருமாளை வணங்கும் குலத்தில் புதல்வியாய் வந்து அவதரித்தவளே என கோதையை மனதார புகழ்கிறார்.  

கோதை எப்படி மங்களம் என்னும் சொல்லுக்கு அடையாளமாகிப் போனாள்? கோதை பூமி பிராட்டியின் அம்சம். அவள் எப்படி சில விஷயங்களில் மகாலட்சுமியை மிஞ்சுகிறாள் என்று பார்க்கும் போது, எம்பெருமான் நம்மை பாவம் செய்தவர்கள் என்று விலக்கி விடுகிறான் எனில் அப்போது மகாலட்சுமி தாயார் குறுக்கிட்டு, “பாவம் செய்யாதவர்கள் எவர் உண்டு இந்த உலகத்தில்?” என நமக்காக பரிந்து பேசுவாள். பூமி பிராட்டியோ, “ பாவமா? இவர்கள் யாரும் அப்படிப்பட்ட பாவம் ஏதும் செய்யவில்லையே’’ என கருணை பொங்க எம்பெருமானிடம் எடுத்துச் சொல்லி நமக்கு நற்கதியை பெற்று தருகிறாள். நம் குடும்பத்தில் அப்பாவிடம், நமக்காக பரிந்து பேசுவது அம்மா போலத் தான். ஆக கருணையில் மகாலட்சுமி தாயாருக்கு ஒப்பானவள் இந்த பூமி பிராட்டி என்கிறார். ஸ்லோகத்தின் கடைசி வரியில் “ கோதாம் அனத்ய சரண:  சரணம் பிரபத்யே“ என்று அருளியுள்ளார் சுவாமி. அதாவது கோதையே என்னுடைய கருமங்களில் இருந்து என்னை மீட்டுக் கொள்ள உன் திருவடிகளையே தஞ்சமாக அடைகிறேன் என்றும்,  உன் திருவடிகளைத் தவிர எனக்கு வேறு புகலிடம் இல்லை என்றும் உரைக்கிறார்.  கோ என்றால் நல்வாழ்த்துக்கள் என்று பொருள். தா என்றால் தருபவள். கோ என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளும் இருப்பதால் தனது பாசுரங்களாலே உயர்ந்த ஞானத்தை அருள்வதால் கோதை என்றும் சொல்லலாம். கோ என்றால் மங்களம் என்ற பொருளும் உண்டு. எனவே மங்களங்களை அருள்பவள் கோதை.

பெரிய ஆன்றோர்களும் மகான்களும் பக்தர்களும் கோதையை இப்படியெல்லாம் புகழ்ந்து பாட நாமெல்லாம் எம்மாத்திரம் அவளைப் பற்றிச் சொல்ல! இப்படியே ஆண்டாள் என்றால் மங்களம் என்று நிலை பெற்றுவிட்டது. அவளுடைய அருள் என்னும் நிழலில் தொடர்ந்து இளைப்பாறுவோம் வாருங்கள்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar