Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திருமணத்துக்குத் தடையான தங்கம்
 
பக்தி கதைகள்
திருமணத்துக்குத் தடையான தங்கம்

ஸந்த் ஞானேஸ்வரர் எழுதிய ‘’ பாவேவீண பக்திபக்தி வீண முக்தி என்று தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள். மனம், வாக்கு ஆகியவற்றை ஈடுபாடு இல்லாமல் பக்தி செய்ய முடியாது. அப்படிப்பட்ட பக்தி இல்லாமல் முக்தி கிடைக்காது. முயற்சி செய்யாமல் இருந்தால் தெய்வம் எப்படி விரைவில் காட்சி தருவான்? இரவும் பகலும் உலக விஷயங்களில் உழல்கிறீர்கள். ஆனால் ஹரி பஜனை மட்டும் செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நான் ஹரி ஜபம் செய்து இந்த உலகின் மீது இருந்த பந்தத்தைத் தகர்த்து விட்டேன்.

சிறுவன் நாமதேவன் அழைத்ததற்கு இணங்க விட்டலனே நேரில் வந்து நாமதேவன் அளித்த உணவை தானும் உண்டு அவனுக்கும் அளித்ததை பத்மநாபன் கூறக் கேட்டதும் மயில்வாகனன் தன் ஆசையை வெளிப்படுத்தினான்.
‘‘நான் கூப்பிட்டாலும் விட்டலன் நேரில் வந்து நான் அளிக்கும் உணவை சாப்பிடுவாரா அப்பா?’’ என்று கேட்டான்.
பத்மநாதன் புன்னகைத்தார். ‘‘எதுவும் சாத்தியம்தான். ஆனால் உத்தவ முனிவரின் மறுபிறவி நாமதேவர் என்பதை நாம் மறக்கக்கூடாது. அவர் கூப்பிட்டு விட்டலன் வராமல் போயிருந்தால்தான் அதிசயம். குழந்தைகளின் அப்பழுக்கிலாத மனம் கடவுளுக்கு உகந்ததுதான். சிறுவன் பிரகலாதனின் பக்தியில் திளைத்து அவனைக் காப்பதற்காக தூணைப் பிளந்து வெளிப்பட்டாரே. சிறுவன் துருவன் கடுந்தவம் செய்த போது திருமால் நேரிடையாக அவனுக்கு காட்சி அளித்தாரே’’
இப்படி பத்மநாபன் அடுக்கிக் கொண்டே போனதும் மைத்ரேயி புன்னகையுடன் அவரைக் கொஞ்சம் கட்டுப்படுத்த எண்ணினாள். ‘‘நீங்கள் இப்படி எல்லாம் கூறிக் கொண்டிருந்தால் விட்டலன் நேரிடையாக தனக்கும் காட்சி அளிப்பான் என்று எண்ணி நம் மகன் ஏமாந்து வருத்தப்படப் போகிறான்’’ என்றாள்.
‘‘பத்மா...நான் கூறிக் கொண்டிருப்பதும் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதும் கதைகளோ கற்பனையோ அல்ல. எனவே உண்மையான, ஆழமான, சோதனைகளின் போதும் சஞ்சலப்படாத மனம் உள்ளவர்களுக்கு கடவுள் காட்சி தந்தால் வியப்பதற்கு இல்லை’’ என்று உறுதிப்படக் கூறிய பத்மநாபன் நாமதேவரின் வாழ்வில் நடைபெற்ற திருமணக் கட்டம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

வெற்றுத் தட்டுடன் வீடு திரும்பிய மகனைப் பார்த்து அன்னை குணாபாய் வியப்படைந்தாள்.  ‘‘மிகவும் பசியா நாமதேவா? நைவேத்யம் செய்த உணவை  வழியிலேயே சாப்பிட்டு விட்டாயா?’’  என்று கேட்டாள். ‘‘நானும் விட்டலனுமாக சாப்பிட்டோம்’’ என்று கூறியபடியே நடந்ததை விவரித்தான் சிறுவன். திகைத்தாள் குணாபாய். மகனின் உடலில் இருந்த பீதாம்பரமும் அவன் மேனியில் தடவப்பட்டிருந்த சந்தனமும் அவளை மேலும் திகைக்க வைத்தன
    இதற்குள் தாம்சேட்டியும் வீடு திரும்பினார். ‘‘நம் மகன் ஏதேதோ கூறுகிறான். அதெல்லாம் நம்பும்படி இல்லை. அதேசமயம் அவன் பொய் கூறுபவனும் அல்ல.  எனக்குக் குழப்பமாக இருக்கிறது’’  என்றபடி மகன் விவரித்ததை விளக்கினாள்.
    தாம்சேட்டியும் முதலில் குழம்பினாலும் விரைவில் தெளிவு பெற்றார். தெய்வவாக்கின்படி அவன் தனக்கு கிடைத்ததையும் முத்துச்சிப்பிக்குள் அந்த குழந்தை மிதந்து வந்ததையும் நினைவில் கொண்டு வந்தபோது நாம தேவனுக்கு விட்டலனே நேரில் காட்சி தந்திருக்க கூடும் என அவர் முடிவெடுத்தார். விட்டலன் பின்னர் எந்த அளவுக்கு நாமதேவருக்கு நண்பனானான் என்பது எண்ண எண்ண மயிர்க்கூச்செறிய வைக்கும் விஷயம். நாம தேவரின் திருமணத்தில் தொடங்கியது விட்டலனின் அடுத்த விளையாட்டு.
    நாமதேவர் வளர்ந்து இளைஞரானார். பேரழகுடன் விளங்கியவர் பெரும் விட்டல பக்தியையும் கொண்டிருந்தார். ஒருநாள் இரவு குணாபாய்க்கு ஒரு கனவு வந்தது. ‘‘அடுத்த ஊரில் வசிக்கும் வணிகரின் மகளான ராஜாபாய் என்ற பெண்ணை உன் மகனுக்கு மணமுடித்து வை’’ என்றது கனவில் தோன்றிய அசரீரி.
    காலையில் எழுந்ததும் தன் கனவை கணவரிடம் பகிர்ந்து கொண்டாள் குணாபாய். இம்முறை மனைவியின் கனவு குறித்து தாம்ஸேட்டி எந்த ஐயமும் கொள்ளவில்லை. உடனே அடுத்த ஊரை அடைந்தார். ராஜாபாயின் தந்தையின் வீட்டை அடைந்தவர் பிரமித்து நின்றார். அது பிரமாண்டமான மாளிகையாக இருந்தது. இவ்வளவு பணம் படைத்தவர் தன்னைப் போன்ற ஒரு ஏழை வணிகனிடம் சம்பந்தம் செய்து கொள்வாரா?
    அவரது ஐயம் சரியானதுதான் என்பது போல் நடைபெற்றன அடுத்தடுத்த சம்பவங்கள்.
    தாம்ஸேட்டியை ஏற இறங்கப் பார்த்த அந்த செல்வந்தன், ‘’என் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் மகன் தரப்பிலிருந்து ஆயிரம் பொன் பரிசம் தர வேண்டும்‘’ என்றான். மனம் தளர்ந்த தாம்ஸேட்டி அங்கிருந்து சோகத்துடன் வீடு திரும்பினார்
    வணிகனின் வீட்டிலும் ஓர் உள்ளம் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.
 நாமதேவரின் நற்குணங்களைப் பற்றி கேள்விப்பட்ட வணிகனின் மகளான ராஜாபாய் மகிழ்ந்தாள். ஆனால் அவளது இன்பம் நீடிக்கவில்லை. தன் தந்தை பணத்தாசையுடன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அவள் உள்ளம் நொறுங்கினாள்.
 
    தன் மனைவியிடம் நடந்ததை விவரித்த தாம்ஸேட்டி அவள் கனவு நிறைவேற இனி வழியில்லை என்று கூறினார்.

    அன்றிரவு உறங்கிக் கொண்டிருந்த தாம்ஸேட்டியும் குணாபாயும் திடுக்கிட்டு விழித்தார்கள்.  அவர்கள் வீட்டின் முற்றத்தில் பாறாங்கற்கள் விழுந்தது போன்ற சத்தம் கேட்டது. அங்கு விரைந்து சென்று பார்த்தார்கள். விழுந்திருந்தவை அத்தனையும் தங்கக் கட்டிகள்! அவற்றையெல்லாம் வீட்டின் ஒருபகுதியில் குவித்து வைத்துவிட்டு இருவரும் விட்டலனை வழிபடத் தொடங்கினர். அந்தத் தங்கக் கட்டிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அதன் மூலம் ராஜாபாயை தங்கள் மகனுக்கு மணமுடிக்க வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்குத் தோன்றவே இல்லை.

    மறுநாள் காலையில் ராஜாபாயின் தந்தை வீட்டுக் கதவு தட்டப்பட்டது.  திறந்து பார்த்தால் அங்கே தாம்ஸேட்டியும் குணாபாயும் நின்றிருந்தனர். ‘’நான்தான் என் முடிவைக் கூறி விட்டேனே’’ என்றார் அந்த செல்வந்தர் அகம்பாவத்துடன். அதற்கு தாம்ஸேட்டி, ‘‘இதோ முன் தொகையாகவே இந்த ஆயிரம் பொற்காசுகளைத் தருகிறோம்.  திருமணத்திற்கு இதைப்போல பல மடங்கு அதிகமாக மதிப்புள்ள நகைகளை அளிப்போம். மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்துவோம்’’ என்று கூறியபடி பொற்காசுகளை அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

    செல்வந்தர் வாயடைத்துப் போனார். சற்று நேரத்தில் அந்தணர் ஒருவர் அவரை அணுகினார். ‘‘தாம்ஸேட்டி உங்களை உடனே தன் வீட்டுக்கு வரச் சொன்னார். கூடவே உங்கள் மகளையும் அழைத்து வரச் சொன்னார்’’ என்றார். குணவான் மட்டுமே என்று தான் எண்ணிய நாமதேவர் மாபெரும் செல்வந்தனும் கூட என்று முடிவெடுத்திருந்த செல்வந்தர் உடனடியாக தன் மகளுடன் தாம்ஸேட்டியின் வீட்டை அடைந்தார்.
    தன் வீட்டுக்கு வந்த செல்வந்தரையும், அவர் மகளையும், அதுவரை அவர் அறிந்திராத அந்தணரையும் வரவேற்ற தாம்ஸேட்டி‘’ஐயா, முன்னர் நீங்கள் கேட்ட ஆயிரம் பொற்காசுகளை என்னால் இப்போது அளிக்க முடியும்.  நேற்றிரவு நாங்கள் தூங்கும்போது வானில் இருந்து தங்கக் கட்டிகள் வந்து சேர்ந்தன‘’ என்று அவற்றைக் காட்டினார்.   கூட வந்த அந்தணர் அப்போது திடீரென மாயமாக மறைந்தார்.
    முதலில் குழப்பம் அடைந்தாலும் ஒருவாறாக செல்வந்தர் தெளிவு பெற்றார்.  தன் வீட்டுக்கு தம்பதியாக வந்தது விட்டலனும் ருக்மணியும்தான் என்று அவருக்கு புரிந்தது.   அந்தணனாக வந்து தன்னை இங்கு அழைத்து வந்ததும் அளவற்ற தங்கத்தை தன் பக்தன் வீட்டில் பொழிய வைத்ததும் விட்டலனின் விளையாட்டு என்பதை அறிந்தார்.  தாம்ஸேட்டியின்  காலில் விழுந்தார்.
     நாமதேவர் ராஜா பாய் திருமணம் அதற்குப் பிறகு எந்த தடையும் இன்றி சிறப்பாக நடைபெற்றது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar