Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தங்கமான தோண்டோபா
 
பக்தி கதைகள்
தங்கமான தோண்டோபா

ஸந்த் நாம தேவர் எழுதிய ‘வைகுண்டீம் பொஹே தவ சதுர்புஜதிஸே’ என்று தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள்.  
‘வைகுண்டத்தில் அசாதாரணமாக நீ நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறாய். அதை உன்னுடைய சுந்தர வடிவமாக என்னால் ஏற்க முடியவில்லை. பாற்கடலிலோ நீ நித்திரை செய்கிறாய். எனவே அதையும் உன் சுந்தர வடிவமாக என்னால் ஏற்க முடியவில்லை. துவாரகையில் உன் விஸ்வரூபம் காரணமாக உன் பாதங்கள் பாதாளத்தில் உள்ளன. எனவே அதையும் உன் சுந்தர வடிவம் என்று என்னால் கருத முடியவில்லை. என் இதயத்தில் பார்த்தால் நீ ஜோதி வடிவமாக அங்கு இருக்கிறாய்.  எனவே சுந்தர வடிவம் என்று அதையும் கூறுவதற்கில்லை. ஆனால் பண்டரிபுரத்தில் சம்பூர்ணமாக நின்று மகா சுந்தர வடிவமாக சோபிக்கிறாய் விட்டலா‘.

நாமதேவர் கதையை விவரித்துக் கொண்டிருந்த பத்மநாபன் ‘உங்களுக்குத் தெரியுமா? விட்டலன் கோயிலின் முக்கிய நுழைவாயில் நாமதேவர் பெயரில்தான் அழைக்கப்படுகிறது’ என்றார்.
    பத்மாசனி தயங்கித் தயங்கி தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்தினாள். ‘குடும்பத்தின் தரித்திர நிலையை பற்றி சிறிதும் கவலைப்படாமல் நாமதேவர் விட்டலனை மட்டுமே நினைத்துக் கொண்டு இருப்பதாக கூறுகிறீர்கள். இது சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்க இது முழுவதும் நியாயமா என்கிற கேள்வியும் எழுகிறது. பெற்றோரையும் மனைவியையும் பாதுகாக்க வேண்டியது ஒருவரின் தர்மம் இல்லையா?’
    பத்மநாபன் புன்னகைத்தார். ‘நீ கூறுவது சரிதான். ஆனால் அதையும் தாண்டி மேல் நிலையை அடைந்தவர்கள் நாமதேவர் போன்றவர்கள். விட்டலனை ஒருபுறம் நண்பராகவே கொண்டிருந்தாலும் விட்டலனின் தெய்வீகத்தை உணர்ந்து அவனிடம் சரணாகதி அடைந்தவர்கள் அவர்கள். ‘எனக்கு நீ எதை விதித்திருக்கிறாயோ அது நடக்கட்டும் உனக்குத் தெரியாததா?’ என்று மனதார நினைத்து கடவுளை வழிபடுதலையே வாழ்வின் தலையாய குறிக்கோளாகக் கொண்டவர்கள் அவர்கள்’.
    பத்மாசனியின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது. ‘உண்மைதான் நான் படித்த திருவாசகப் பாடலின் சில பகுதிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன’ என்று அந்த வரிகளைப் பாடத் தொடங்கினாள்.
வேண்டத் தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உன் தன் விருப்பு அன்றே?
பத்மநாபன் சிலிர்த்தார். ‘மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்’ என மனைவியைப் பாராட்டும் விதமாகக் கூறியபடி நாமதேவர் கதையைத் தொடர்ந்தார்.

 ஒருமுறை மகன் நாமதேவனிடம் ஒரு மூட்டைத் துணியை கொடுத்து ‘இதை ஊரில் விற்று வா’ என்று அனுப்பினார் தாம்ஸேட்டி. தெருவில் துணி மூட்டையோடு சென்ற நாமதேவர் ‘அற்புதமான துணிகளைக் கொண்டு வந்திருக்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள் மக்களே’ என்றெல்லாம் கூவி விற்கவில்லை. மாறாக அப்போதும் விட்டல பக்தியுடன் பாண்டுரங்கனின் குறித்த பாடல்களை பாடிக் கொண்டே நடந்தார். இப்படி நடந்தால் அவர் துணிகளை விற்க வந்திருப்பது யாருக்குத் தெரியும்? மாலை நேரமாகியும் ஒரு துணி கூட விற்கவில்லை.
    அந்த சமயத்தில் அவர் நடந்து கொண்டிருந்த சாலையின் பக்கத்தில் இருந்த நிலப்பகுதியில் இருந்து ஒரு குரல் கேட்டது. ‘நாமதேவா, உன் துணிகள் மொத்தத்தையும் வாங்கிக் கொள்கிறேன்’ என்றது அந்தக் குரல். திரும்பிப் பார்த்தார் நாமதேவர். அங்கே ஒரு கல் மட்டுமே இருந்தது. கல் பேசுமா என்ற இயல்பான கேள்வி கூட நாமதேவரின் மனதில் எழவில்லை! ‘சரி உன்னை நம்பி இதைத் தருகிறேன். எட்டு நாட்களுக்குள் இதற்கான தொகையை என்னிடம் தந்து விட வேண்டும். என் பெயரைச் சொல்லி அழைத்ததால் உனக்கு என் வீடு எங்கே இருக்கிறது என்பதும் தெரிந்திருக்க வேண்டுமே, அங்கே கொண்டு வந்து கொடு’ என்றபடி துணி மூடையை அந்தக் கல்லின் அருகில் வைத்து விட்டு கிளம்பி விட்டார்.
    வெறும் கையை வீசியபடி வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்து தொடக்கத்தில் அதிர்ச்சி அடைந்தார் தாம்ஸேட்டி. துணிகளை எங்காவது தொலைத்து விட்டானோ? ஆனால் அத்தனை துணிகளையும் தோண்டோபாவிடம் விற்று விட்டதாக மகன் கூறியதும் மகிழ்ந்தார்.
     அப்போது தோண்டோபா என்ற பெயர் கொண்டவர்களும் உண்டு ஆனால் மராத்தி மொழியில் கல் என்பதையும் தோண்டோபா என்பார்கள். அந்தப் பொருளில்தான் நாமதேவர் கூறியிருந்தார்.
    எட்டு நாட்களாகியும் பணம் வந்து சேரவில்லை. தந்தை கடிந்து கொள்ள, வெகுவேகமாக அந்தக் கல் இருந்த இடத்துக்கு சென்றார் நாமதேவர். ‘என் துணிக்கான பணத்தை நீங்கள் இன்னமும் தரவில்லையே தோண்டோபா! எப்போது தரப் போகிறீர்கள்?’ என்று கேட்டார்.  விட்டலனையே நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு எதிரில் இருப்பது உயிரற்ற கல் என்பது புலப்படவே இல்லை.   பலமுறை கேட்டும் பதில் கிடைக்காததால் அந்தக் கருங்கல்லைத் துாக்கி வந்து தன் வீட்டிலிருந்த ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டினார்.  
    பின்னர் தந்தையிடம் ‘தோண்டோபா பணம் கொடுக்கவில்லை. எனவே தோண்டாபாவை அறையில் வைத்துப் பூட்டி விட்டேன்’ என்றார். தாம்ஸேட்டிக்குப் பதற்றம் உண்டானது. ‘அறைக்குள் அந்த வியாபாரி மயக்கம் அடைந்து விழுந்து இருந்தால்?’  வேகமாக பூட்டப்படிட்டிருந்த அந்த அறையைத் திறந்தார் உள்ளே இருந்த கல்லைப் பார்த்து தந்தை மகன் இருவருமே வியப்படைந்தனர் அந்த கருங்கல் தங்கக்கல்லாக மாறி விட்டிருந்தது.
    விட்டலனின் கருணை மீண்டும் மீண்டும் நாமதேவருக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.   இந்த அதிசய நிகழ்வுகள் ஊருக்குள் பரவின. ஊரைத் தாண்டியும் பரவின. விட்டலனின் தனியருள் பெற்ற ஞானேஸ்வரர் காதுகளையும் இது எட்டியது.
    நாமதேவரைக் காண நேரிலேயே வந்து சேர்ந்தார் ஞானேஸ்வரர். இரண்டு பக்தர்களும் ஒருவரை ஒருவர் மகிழ்வுடன் ஆலிங்கனம் செய்து கொண்டனர். ‘நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் ஞானேஸ்வரரே, ஆணை இடுங்கள் செய்கிறேன்’ என்றார்  நாமதேவர். ‘நாம் இருவருமாக வட இந்தியாவுக்குச் சென்று அங்கு விட்டல பக்தி மார்க்கத்தைப் பரப்பலாம் வாருங்கள்’ என்றார் ஞானேஸ்வரர்.  
    ‘கரும்பு தின்ன கூலியா?’ என்றபடி உடனடியாக இதற்கு நாமதேவர் ஒத்துக்கொள்வார் என எண்ணினார் ஞானேஸ்வரர். ஆனால் நாமதேவரின் முகத்தில்  வாட்டம் தெரிந்தது. பண்டரிபுரத்தை விட்டு நீங்கினால் விட்டல தரிசனம் என்னாவது? எனவே சாமர்த்தியமாக பதிலளித்தார். ‘விட்டலனின் சன்னதிக்குச் சென்று அவனிடமே இது குறித்து கேட்போம். விட்டலன் கூறுவதைக் கேட்டு அதன்படி நடந்து கொள்கிறேன்’ என்றார்.
    இருவரும் விட்டலனின் சன்னதியை அடைந்தனர். ‘விட்டலா, நான் உன்னை விட்டு ஞானேஸ்வரரோடு வட இந்தியா செல்வது உனக்கு சம்மதமா?’  என்று கேட்டார் நாமதேவர். அடுத்த கணமே விட்டலனின் குரல் கேட்டது. ‘தாராளமாகச் சென்று வா நாமதேவா’   நாமதேவர் திகைத்து விட்டார். என்றாலும் ஞானேஸ்வரரோடு அவர் கிளம்பினார். பக்தியைப் பரப்பச் செல்லும் தன் பக்தர்களின் பெருமை பெரிதும் பரவ வேண்டும் என்று விட்டலன் முடிவெடுத்ததை யார்தான் தடுக்க முடியும்?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar