Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மாயதைத்யர்
 
பக்தி கதைகள்
மாயதைத்யர்

துரியோதனன் ‘பிராயோபவேசம்’  நிகழ்த்தப் போகிறான் என்கிற செய்தி பாண்டவர்களை அடைந்த போது அவர்கள் அடைந்த ஆச்சரியத்திற்கு ஒரு அளவேயில்லை.
‘பிரயோபவேசம்’ என்பது மிகுந்த மானஸ்தர்களின் செயல். உயிரும் உடம்புமாக சொர்க்கம் புக செய்கின்ற முயற்சி. ஆனால் அதற்கு சரியான காரணம் இருக்க வேண்டும். அதை சொர்க்கத்தை அடைவதற்கான குறுக்கு வழியாக பயன்படுத்தி விடக் கூடாது.
ஊர் வாழ, உலகு வாழ, சத்தியம், தர்மம் வாழ ஒருவர் தன்னுயிரை பலி பிரசாதமாக ‘பிரயோபவேசம்’ என்னும் பெயரில் அளிக்கலாம். இந்த காரணங்கள் இல்லாமல் அவமானம் காரணமாகவோ, நோய் காரணமாகவோ ஒருவர் சகிப்புத் தன்மையற்றுப் போய் பிரயோபவேசம் செய்தால் அது தற்கொலையாகும்.
தற்கொலைக்கு உள்ளாகும் ஆத்மாக்கள் பஞ்சபூத கங்ணகளின் சேர்க்கையாலான உடம்பை பெறவே முடியாது. ‘சுவேதம்’ எனப்படும் ஒலியுடலை தான் பெற்றிடும். இந்த ஒலியுடம்பானது கோரமானதாக இருக்கும். மிருகக் கலப்புள்ள ஒரு உடலாக இவர்கள் உடல் அமைந்து விடும். புலியின் நகம், சிங்கத்தின் பற்கள், முதலையின் தோல், ராஜாளியின் நாக்கு என்று இவர்கள் அங்கங்கள் கலப்பாக இருக்கும்.
மங்கலச் சின்னங்களும், வாத்தியங்களும் இவர்களுக்கு நாராசமாய் ஒலித்திடும். வேத மந்திரங்கள் இவர்களை நெருப்பாய் சுடும். பஞ்ச பூத சக்தி மிகுந்த இடங்களில் இவர்களால் திரிய முடியாது. இருள் சூழ்ந்த பகுதிகள், பிரேதங்களுக்கான இடங்கள், விஷவாயு சுரந்திடும் மரங்கள், வாஸ்து பலமில்லாத இடிந்த கட்டிடங்கள் போன்றவைகளே இவர்களின் இடமாகி ஆகி விடும்.
இதை எல்லாம் அறிந்த சகுனியும் கர்ணனும் எப்பாடுபட்டாவது துரியோதனனின் பிராயோபவேசத்தை தடுக்க உறுதி பூண்டனர். கர்ணனை சந்தித்த துரியோதனன் மனைவி பானுமதி கதறி அழுதாள். கர்ணனாலும் அவன் மனைவி சுபாவாலும் கூட அவளுக்கு ஆறுதல் கூற முடியவில்லை.
..................
துரியோதனனின் இந்த முடிவால் தர்மனும் அவன் சகோதரர்களும் கூட பெரிதும் சஞ்சலப்பட்டனர்.
‘‘அண்ணா! உங்கள் பெருந்தன்மையை துரியோதனன் புரிந்து கொண்ட லட்சணத்தை பார்த்தீர்களா? இவனுக்காக நாம் பரிந்து பேசுவது, விட்டுத் தருவது தவறு என்று சொன்னேனே கேட்பீர்களா?’’ என்று பீமன் பூமிக்கும் வானத்துக்குமாய் குதித்தான்.
‘‘துரியோதனன் இவ்வளவு சுயமரியாதை உணர்வுள்ளவனா? என்னால் நம்பவே முடியவில்லை’’ என்றான் நகுலன்.
‘‘பிறக்கும் போது எல்லோரும் நல்ல பிள்ளைகளாகத் தான் பிறக்கிறோம். வளர்க்கப்படும் விதத்தால் தான் கெட்டு குட்டிச் சுவராகி விடுகிறோம். துரியோதனனும் அப்படியே... சகுனி என்கிற ஒருவன் மட்டும் துரியோதனன் வாழ்வில் இல்லாமல் போயிருந்தால் இப்படி ஒரு நிலை அவனுக்கு வந்திருக்காது. நாமெல்லாம் கூட இந்த வனத்தில் இப்படி புலம்பிக் கொண்டிருக்க மாட்டோம்’’ என்றான் சகாதேவன்.
‘‘கவுரவர்கள் அவ்வளவு பேருமே பொறாமை நெருப்பில் பிறந்தவர்கள். நாம் பிறக்கவுமே காந்தாரி அன்னைக்கு தாபம் உணடாகி விட்டது. அது வயிற்றில் அடித்துக் கொண்டு அழவும் செய்து விட்டது. அதனால் உண்டான குருதியில் பிறந்தவர்களே கவுரவர்கள். வந்த விதமே தவறாக இருக்கும் போது வாழும்விதம் மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்?’’ என்றான் அர்ஜுனன்.
மொத்தத்தில் துரியோதனனின் ‘பிரயோபவேசம்’  பாண்டவர், கவுரவர் என்ற பாகுபாடு கடந்து மற்றவர்களையும் பெரிதாக பேச வைத்து விட்டது.
துரியோதனனும் பிராயோபவேசத்துக்கு தயாரானான். அதற்காக அந்தணர்களை அழைத்து இந்த விஷயத்தில் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அந்த அந்தணர்கள் திகைத்துப் போய் பார்த்தனர். அவர்கள் காலத்தில் யாரும் பிராயோபவேசம் செய்ததில்லை. எனவே அது குறித்து அவர்களுக்கு தெளிவில்லை. ஆயினும் வன்மீகர் என்னும் அந்தணர் இது குறித்து அதர்வண வேதத்தில் தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறி பிராயோபவேசம் செய்பவன் தன் ஆடைகளை களைந்து விட்டு மரவுரி எனப்படும் தர்பைப் புல்லால் வேயப்பட்ட ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தெற்கு நோக்கி அமர்ந்து கொண்டு சுற்றிலும் தர்பையை குவித்து அதற்கு தீ மூட்டிட வேண்டும். தர்பை எரிந்து அணிந்திருக்கும் ஆடையும் எரியத் தொடங்கி உடல் கருகத் தொடங்கும். அப்போது அந்த வெப்பத்தை தாங்கிக் கொண்டு அக்னி பகவானிடம் சொர்க்கத்தை யாசிக்க வேண்டும். தர்ப்பையுடன் கூட எரிவது எதுவாயினும் அது புனிதமானதாகி பிரசாதமாகி விடும்’’ என்றார்.
துரியோதனனும் தான் முகாமிட்டிருந்த வனத்தில் ஒரு வன்னி மரத்தின் கீழ் தர்ப்பையை பரப்பி மரவுரி தரித்தவனாக அதன் மீது அமர்ந்து கொண்டு விட்டான். முன்னதாக தன் பந்துக்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தான்.
துச்சாதனனிடம், ‘‘நீ தான் இனி ஹஸ்தினாபுரத்துக்கு அரசன். நாம் தாய் தந்தையரை கவனமாக பார்த்துக் கொள்’’ என்றான். கர்ணனிடம், ‘‘நண்பா! என்னை மன்னித்து விடு. எனக்கு இந்த மரணத்தால் மட்டுமே மனம் சமாதானம் அடையும்’’ என்றான்.
துரியோதனனின் மனஉறுதியையும் கலக்கத்தையும் கவனித்தபடி இருந்த சகுனியிடம் பானுமதி வந்து கதறத் தொடங்கினாள்.
‘‘சகல விஷயங்களிலும் உங்கள் பேச்சை இவர் கேட்கும்படி செய்தீர்களே... இப்போது ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள்? இவரை எப்படியாவது இந்த பிரயோபவேசத்தில் இருந்து தடுத்து திரும்பச் செய்வது உமது கடமை. இதில் நீங்கள் தவறினால் உங்களை நான் சும்மா விட மாட்டேன்’’ என அழுதாள்.
சகுனியும் அதற்கு மேல் துரியோதனனை வேடிக்கை பார்க்கத் தயாரில்லை. துரியோதனனை  யாரால் தடுத்து நிறுத்த முடியும் எனத் தீவிரமாய் யோசித்தவனுக்கு பாதாள லோகத்தை தங்கள் இருப்பிடமாய் கொண்டு வாழும் தைத்யர்களும், தானவர்களும் நினைவுக்கு வந்தனர்.
இவர்கள் அதர்வண வேதத்தை கரைத்து குடித்தவர்கள் யந்திர மந்திர தந்திரங்களில் கரை கண்டவர்கள். அல்பாத்மாக்கள் எனப்படும் தற்கொலை செய்து கொண்டு இறந்த ஆத்மாக்களை தங்களின் ஏவல் சக்தியாக்கி ஆட்டிப் படைப்பவர்கள். இவர்களாலேயே பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, கோரம், மாந்தம் போன்றவைகள் வடிவம் பெற்று இவைகளுக்கென துர்தேவதைகளும் தோன்றினர்.
அப்படிப்பட்ட இந்த தைத்யர்களின் குருவான ‘மாயதைத்யர்’ என்பவரை சகுனி தொடர்பு கொண்டான். அவரிடம் துரியோதனனின் அப்போதைய நிலையை கூறி துரியோதனனை அல்பாத்மா ஆகிடாது தடுத்து அவனை மீண்டும் வாழும் விருப்பத்துக்கு ஆளாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

மாயதைத்யரும் அதன் பொருட்டு ‘நவகுண்டி’  என்ற ஒரு வேள்வியை செய்தார். அதில் ஆஹுதியாக ஊர்வன, பறப்பன, நடப்பன, கிடப்பன, மிதப்பன என்ற ஐவகை உயிரினங்களை பலியாகக் கொடுத்து மாயாசக்தியின் பிரசன்னத்தை வேண்டவும் மாயாதேவியும் பிரசன்னமானாள். அவளிடம் துரியோதனனை மீட்கும்படி வேண்டினார் மாயதைத்யர். மாயாதேவி அதை ஏற்று தன் அம்சமான ‘க்ருத்யை’ என்ற பூதத்தை துரியோதனனை நோக்கி ஏவி விட்டாள்.
தர்பாசனத்தில் தீயிட்டுக் கொண்டு உயிரை விட தயாராக இருந்த துரியோதனனை கிருத்யை என்கிற அந்த பூதம் அப்படியே துாக்கிக் கொண்டு பாதாள லோகத்தில் இருக்கும் மாய தைத்யர் முன்னாலே கொண்டு சென்று நிறுத்தியது. துரியோதனனும் மாய தைத்யரை கண்டு, ‘‘யார் நீ... என்னை இப்படி அழைத்து வர காரணம் என்ன?’’ என்று கேட்டான். மாய தைத்யரும் காரணத்தைக் கூறலானார்.
‘‘திருதராஷ்டிர புத்திரனே! நீ மிக விசேஷ சக்திகள் பல கொண்டவன். அதை உன்னிடத்தில் யாரும் தெரிவிக்கவில்லை. அதனால் உனக்கு தெரியவில்லை. முதலில் நீ யார்... எதற்காக உன் தாய் தந்தையர் வயிற்றில் பிறந்திருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்.
உன் தாயான காந்தாரி ஒரு நிகரில்லாத சிவபக்தை! அவள் கோடி சிவநாமம் சொல்லி பூஜித்த பயனாக நீயும் உன் சகோதரர்கள் நுாறு பேரும் பிறந்தீர்கள்.
இவர்களில் உன் தேகம் மட்டும் மிக விசேஷமானது. உன் நாபிக்கு மேலான பாகம் வஜ்ரம் போன்றது. அதை அம்போ, கதையோ, நீரோ, நெருப்போ, விஷக்காற்றோ எதனாலும் எதுவும் செய்ய முடியாது. இதனால் நீ இப்போது தீப்பாய்ந்தாலும் எரிந்து போக மாட்டாய்.
நாபிக்கு கீழான பாகம் பெண் மக்களை ஈர்க்கும் வசீகரம் உடையது. மன்மதனுக்கு நிகரானது. ஆக மொத்தத்தில் மேலே சிவனும், கீழே சக்தியும் என்று அர்த்தநாரியாக உள்ளவன் நீ!
இதை நீ முதலில் தெரிந்து கொள்’’ என்றார் மாயதைத்யர். அதைக் கேட்ட துரியோதனன் ஆச்சரியப்பட்டவனாய், ‘‘மாயதைத்யரே! இப்படிப்பட்ட நான் எதனால் கந்தர்வர்களாலும், பாண்டவர்களாலும் தோற்கடிக்கப்பட்டேன். நான் தோற்றிருக்க கூடாதல்லவா’’ என்று கேட்டான்.

‘‘காரணம் இருக்கிறது. அதைச் சொல்கிறேன். உனக்கான காரணத்தை மட்டுமல்ல. பாண்டவர்களை வரும் காலத்தில் வெற்றி கொள்ளவும் நான் உனக்கு வழிமுறைகளைக் கூறுகிறேன். நீ முதலில் பிராயோபவேசத்தை கைவிடு’’ என்றார். துரியோதனனும் சம்மதித்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar