Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆண்டாள் சொற்களில் காணப்படும் பரிவு
 
பக்தி கதைகள்
ஆண்டாள் சொற்களில் காணப்படும்  பரிவு

மனிதர்களுக்கு மட்டுமே பேச, சிரிக்க கடவுள் வாய்ப்பு கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட நாம் பிறர் மனதை புண்படுத்தாமல் இனிமையாக பேசுவது அவசியம்.

 யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
 யாவருக்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
 யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
 யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே

என திருமந்திர பாடலில் திருமூலர், ‘இனிய வார்த்தைகளை பேசினாலே போதும். அது கடவுளுக்கு அருகில் செல்லும் வழி’ என்கிறார்.
 ஆண்டாள் பாசுரங்களில் எத்தனை பரிவாக சொற்களை கையாண்டு இருக்கிறாள் என்பதை பார்ப்போம். நோன்பு இருக்க வேண்டி தன் வயதையொத்த சிறுமிகளை அழைக்கும் போது, ‘பிள்ளாய் என்கிறாள், சிறுமியர் கொண்ட அன்பு மிகுதியைச் சொல்ல பேய்ப்பெண்ணே என்கிறாள்,  நாயகப் பெண் பிள்ளை என்கிறாள், நாராயணனுடைய புகழை கேட்பதிலேயே நேசமுடையவளே என்கிறாள், குதுாகலமுடைய பாவாய், மாமன் மகளே, அருங்கலமே, குற்றமில்லாதவளே, மயிலே, நற்செல்வனின் தங்கையே, இளங்கிளியே, பிள்ளாய் என ஆயர் சிறுமிகளை அழைக்கிறாள் கோதை.  


                 தோழிகளுடன் ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி கோயில் வாசலுக்கு வந்தாள் ஆண்டாள். நந்தகோபனின் அரண்மனை வாயிலில் நிற்பதாக கருதி நிற்கிறாள். குரலில் ஏக்கமும் வருத்தமுமாய் தோழிகள், “இப்போது எப்படி போக முடியும். இதோ காவலர்கள் பெரிய கதவுகளை மூடி வைத்திருக்கிறார்களே” என்கின்றனர். உடனே ஆண்டாள், “வருந்தாதீர்கள் தோழிகளே... காவலர்களை வேண்டி கேட்டுக் கொள்வோம். கண்ணன் கொடுத்த வாக்கு இவர்களுக்கு தெரியாது. அதைச் சொல்லி புரிய வைப்போம் வாருங்கள்” என்கிறாள்.

                       கோதையின் தலைமையில் நின்ற சிறுமிகள், “காவலர்களே! ஆயர்பாடியில் வசிக்கும் எங்களின் தலைவன் நந்தகோபன். அவரது அழகிய கொடிகள் பறக்கும் கோட்டை வாயிலை காத்து நிற்கும் வீரர்களே! மணிக்கதவை திறந்து எங்களை உள்ளே செல்ல விடுங்கள்” என்று கேட்டனர்.


                 “சிறுமியரே… நீங்கள் எல்லாம் யார்? யாரைப் பார்க்க இந்த விடியல் பொழுதில் வந்திருக்கிறீர்கள்?”

                    “ ஆயர் சிறுமிகள் நாங்கள். கண்ணனையே காண வந்தோம்“

         “அப்படியா! சற்று பொறுத்திருங்கள். கண்ணன் துயில் எழுந்ததும் அவரிடம் பேசிவிட்டு உங்களை உள்ளே அனுப்புகிறேன்”

           “ஐயா தாங்கள் கண்ணனின் கருணை மழையை புரிந்து கொள்ளவில்லை. எங்களுடைய நல்வாழ்வுக்கான உறுதிமொழியைச் சொல்வதாக அந்த மாதவன் நேற்று எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறான். அவனுடைய பேச்சை நம்பி நாங்கள் எல்லாம் விடியலில் எழுந்து நீராடி உடல், உள்ளத் துாய்மையோடு இருக்கிறோம். எங்கள் உயிரை துாய்மையாக்கிக் கொள்ள அவனை துயில் எழுப்ப வந்திருக்கிறோம்.”

                 “ சரிதான் சிறுமிகளே! ஆனாலும் அவரிடம் கேட்டு விட்டு பதில் சொல்கிறோம்”

                   “ஐயா… மீண்டும் மீண்டும் கதவை திறக்க மாட்டேன் என சொல்லாதீர்கள். தாயைப் போல கருணை கொண்டு இந்த நிலைக் கதவை திறந்து விடுங்கள். நாங்கள் சொல்வதை காதால் கேட்டு நெஞ்சத்தால் உதவுங்கள்” என்றாள் கோதை.

                       இப்படி ஒரு சூழ்நிலை பலரது வாழ்விலும் நேர்ந்திருக்கலாம். நாம் பார்க்க வேண்டிய பெரிய மனிதர் நமக்கு நன்கு தெரிந்தவராய் இருந்து அல்லது நாளை என்னை வந்து பாருங்கள் என்று சொல்லி இருந்தால் நாம் என்ன செய்வோம்? நம் பெயரைச் சொல்லி நான் வந்திருக்கிறேன் என்று ஐயாவிடம் சொல்லு என்போம். எவ்வளவு தான் மனதை பதப்படுத்தி வைத்திருந்தாலும் மனிதருக்கு எப்படியோ இறுமாப்பு வந்து விடுகிறது. ஆனால்  ஆயர் சிறுமி என்னும் பாத்திரமாகவே ஆண்டாள் மாறி விட்டாள். அவள் மட்டுமல்ல, அவளோடு அத்தனை தோழியரையும் மாற்றி விட்டாள். அவர்கள் மனதில் இருந்ததெல்லாம் கண்ணன்… கண்ணன்… கண்ணன் மட்டுமே. இந்த வாயில் காப்பாளன் ஒரு சாதாரண எளியவன். அவனிடம் மட்டுமின்றி அவளது பரிவு எல்லா இடத்திலும் பிரதிபலிக்கிறது.

                                அடுத்ததாக நப்பின்னையை எவ்வாறு அழைத்து இன்னுரை கூறுகிறாள் என்று பார்ப்போம். ‘நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்’ என்ற 18 ம் பாசுரத்திலும் ‘மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை’ என்று 19 ம் பாசுரத்திலும் ‘சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்’ என்று 20ம் பாசுரத்திலுமாக இப்படி மூன்று பாசுரங்களில் நப்பின்னை பிராட்டியை அழைக்கிறாள்.

                    சற்று முன்னேறி வந்து கண்ணனையும் பலராமனையும் எழுப்புகிறாள். இங்கு கண்ணன் உறங்கிக் கொண்டிருக்கும் அறைக்கதவு மட்டும் திறக்கப்படவே இல்லை. அப்போதுதான் அவளுக்கு நினைவு வருகிறது,  கண்ணனின் மனைவியான நப்பின்னை வந்து கதவை திறந்தால் தானே நாம் இங்கு அழைப்பது கண்ணனுக்கு தெரியும். எனவே முதலில் நப்பின்னையை எழுப்ப வேண்டும் என்று ஆண்டாள் நப்பின்னையை எழுப்புகிறாள். அவளை சாதாரணமாக எழுப்பி விட முடியுமா? பெரிய வீட்டு மருமகள் என்பதால் அல்ல.   கண்ணனின் மனம்  கவர்ந்தவள் ஆயிற்றே! சாதாரண வாயில் காப்போனையே பயபக்தியுடன் அழைக்கும் கோதை நப்பினையை எத்தனை பரிவுடன் பெருமையுடன் அழைக்கிறாள்!   அவளுடைய புகுந்த வீட்டு பெருமைகள்  குறித்தும் அவளுடைய சிறப்புகள் குறித்தும் பெருமையாக சொல்லி அழைக்கிறாள்.


                  தன்னை ஆயர் குலத்தில் பிறந்தவளாக கருதி பாவை நோன்பு இருப்பதால்  ஆயர் குலத்தில் பிறந்த நப்பின்னையின் மீது  ஆண்டாளுக்கு பிரியம் அதிகம்.  யானையோடு கூட போராடி வெல்லும் தோள் வலிமையுடைய நந்தகோபன் மருமகளே நப்பின்னையே… கண்ணனுடன் பந்து விளையாடும் விரல்களை உடையவளே… உன் கண்ணனின் புகழ் பாடி அவனுடைய அருளை பெறவே நாங்கள் வந்திருக்கிறோம். செந்தாமரை மலர்கள் போன்ற கைகளை உடையவளே…  நீ எழுந்து வந்து உன் அழகான கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்கும் படியாக கதவுகளை திறந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்கிறாள் ஆண்டாள்.

                            இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். நப்பின்னையிடம் உன்னுடைய கண்ணன் என்கிறாள் ஆண்டாள். எங்கள் கண்ணன் என்றோ, இன்று வாருங்கள் என நேற்று எங்களுக்கு கட்டளையிட்ட கண்ணன் என்றோ அவள் சொல்லவில்லை.  ‘உன்னுடைய கண்ணன் என்றே சொல்கிறாள்.  நப்பின்னையை  மீறி கண்ணன் வெளிவர முடியாது.   தன்னிடம் இருக்கும் கண்ணனை விட்டுப் பிரிய நேருகிறதே என மனம் நோகும் நப்பின்னையின் மனதையும் கனிய வைக்க வேண்டும். அதற்காக  ’உன்னுடைய கண்ணன்’  என்கிறாள். எந்த இடத்தில் என்ன பேச வேண்டும், எத்தனை பரிவாக சொற்களைக் கோர்க்க வேண்டும் என்று அவளுக்கு தெரிந்திருக்கிறது.


                               வெறுமனே உவமைகள் சொல்லி வார்த்தைகளை அழகுற கோர்க்கவில்லை அவள். இளையவளாக இருந்தாலும் ஆழ்ந்த அனுபவம் கொப்பளிக்கிறது அவளிடத்தில். எவற்றை எங்கு சொல்ல வேண்டும் எவ்வாறு சொல்ல வேண்டும் என்ற தெளிவு இருக்கிறது. உலகில் நாம் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற புரிதல் இல்லாமல்  உணர்ச்சிவசப்பட்டு  உளறி கொட்டி அவதியுறுகிறோம். ‘தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’  என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க நம்மால் பிறரோ, பிறரால் நாமோ துன்பப்படுகிறோம். அவ்வாறெல்லாம் அல்லல் படாமல் இருக்க இலக்கியம் நமக்கு துணைநிற்கிறது. இவ்வகை இலக்கியங்கள் நம்முள் புகுவதால் நாமும் பண்படுகிறோம், நம்மால் நம்மைச் சார்ந்தவர்களும் மேன்மை அடைகிறார்கள்.  


                             இப்போதெல்லாம் இளம்பிள்ளைகள் பெரியவர்களை எதிர்த்தும் தாக்கியும் பேசும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். பிறர் மனம் நோக பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்போர் பலர்.  ‘வெடுக் வெடுக்’  என வார்த்தைகளால் வெட்டி கூறுபோடுகின்றனர். வெந்த  புண்ணில் வேல் பாய்ச்சுவது போல சதா வாய்ப்பாட்டு பாடுவோரும் உண்டு. இவர்கள் ஆண்டாளை  உதாரணமாக கொள்ள வேண்டும் .  


                        ஆண்டாள் பாடிய திருப்பாவை அதிகமானோருக்கு தெரிந்திருக்கிறது. அவள் பாடிய நாச்சியார் திருமொழியிலும்  பக்திச்சுவை ஒருபுறம் இருக்க சொல்லழகும் மிளிர்கிறது.   கண்ணனை கூப்பிடும் போதெல்லாம் அத்தனை கனிவு, பரிவு.  மாதவன் மீது காதல் கொண்ட ஆண்டாள்,  அவளை பல வகைகளில் வர்ணிக்கிறாள். குழல் அழகர், வாயழகர்,  கண்ணழகர்,  பூவழகர் என புகழ்கிறாள்.  ‘கொள்ளை குறும்பனை கோவர்தனனை’  என்றும் கொஞ்சி மகிழ்கிறாள்.   அதாவது மென்மையான உள்ளத்தை அழகால் மயக்கி கொள்ளை கொள்ளும் குறும்பு செயல் புரிபவன் என்பது பொருள். கவிதை படிக்கும் போது அதன் சுவை, நயம், கற்பனை தெரிவது இயற்கை தான். இங்கே ஆண்டாளின் சொற்களில் இருக்கும் பரிவும் நம் கண்களுக்கு பெரிதாக தெரிகிறது.   உலகியல் உண்மைகளும் உளவியல் உண்மைகளும் அந்த பரிவில் தெரிகிறது. 


எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்த நம் பிராட்டியார் அவனது பரிவாரங்களின் மீதும் பரிவு காட்டி பாடும் அழகு நினைத்து மகிழத்தக்கது. இப்படி ஒவ்வொரு பாசுரத்திலும் நமக்கு இனிய சொற்களையே பரிசளிக்கிறாள் ஆண்டாள்.  ‘ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்’ என்பார்கள். வெல்லும் சொல் நம் சொல்லாக இருக்க தொடர்ந்து ஆண்டாளின் சொற்களோடு பயணிப்போம்… வாருங்கள்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar