Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சகுனியின் சதி திட்டம்
 
பக்தி கதைகள்
சகுனியின் சதி திட்டம்


சகுனி வெற்றிப் புன்னகையோடு காட்சி தந்திட, துர்வாச முனிவருக்கும் விருந்துபசாரம் மிக பலமானதாக இருந்தது. அவரை சிம்மாசனத்தில் அமரச் செய்து அவரது பாதங்களுக்கு தங்கத் தாம்பாளம் அளித்து பின் அந்த பாதங்களை பன்னீரால் கழுவி அந்த நீரை துரியோதனன் தன் சிரசின் மீது தெளித்துக் கொண்டதோடு தன் நுாறு சகோதரர்களோடு சகுனி, கர்ணன் உள்ளிட்ட சகலரையும் அழைத்து அவர்கள் சிரசிலும் தெளித்து, ‘‘மகரிஷி உங்கள் ஆசிகள் என்னும் எங்களுக்கு துணை இருப்பதாக...’’ என்று பிரார்த்தித்துக் கொண்டான். அவனது பணிவையும், பக்தியையும் கண்டு மகிழ்ந்த துர்வாசரும் வாழ்த்தினார்.  
‘‘துரியோதனா... நான் இங்கு வரும் முன் பெரும் சிந்தனையில் இருந்தேன். உன்னைப் பற்றியும் எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. பங்காளிகளான பாண்டவர்களை நீ பகைத்துக் கொண்டது எனக்கு உடன்பாடான விஷயமன்று. முன்கோபி, பொறாமை பிடித்தவன், சுயநலவாதி என்று தான் உன்னைப் பற்றி சிலர் என்னிடம் கூறியிருந்தனர்.
ஆனால் இங்கே நீ என் முன் நடந்து கொண்டதைப் பார்த்தால் அந்த கருத்துகள்  பிழையானவை என்பதை உணர்கிறேன். உன் குருபக்தி என்னை சிலிர்க்க வைக்கிறது. ஒரு முனிவனை நீ பேரரசனை வரவேற்பது போல் வரவேற்று கவுரவித்து விட்டாய். உன்னோடு சேர்த்து உன் நாட்டு மக்களும் என்னை வரவேற்று வணங்கியதை என்னால் போற்றாமல் இருக்க முடியாது. உனக்கு என் ஆசிகள்’’ என வாழ்த்தினார் துர்வாசர். அதைத் தொடர்ந்து அவருக்கும் அவரது ஐந்தாயிரம் சீடர்களுக்கும் மாபெரும் பந்தலுக்கு கீழே பதினாறு வகை காய்கறிகளோடு விருந்தினை அளித்தான். இப்படி ஒரு விருந்தினை இந்திரனின் அன்ன கூடத்தில் கூட உண்டதில்லை என்றனர் துர்வாசரும் அவரது சீடர்களும்...
இறுதியாக துர்வாசர் தன் யாத்திரையை தொடங்கும் கட்டமும் வந்தது. விருந்துண்டு ஓய்வு எடுத்துக் கொண்ட நிலையில் துர்வாசரும் சீடர்களுடன் புறப்பட ஆயத்தமானார்.
அப்படி புறப்பட்டவருக்கு நினைவுப் பரிசாக அழகிய பல்லக்குடன் நுாற்றி எட்டு தங்கக் குடங்களை பரிசாக அளித்தான் துரியோதனன்.
‘‘துரியோதனா... என்ன இது... நான் துறவி. இதெல்லாம் அரசர்களுக்கானவை. உன் அன்புக்கு நன்றி’’ என்றார் துர்வாசர்.
‘‘நீங்கள் சாதாரண துறவி அல்ல ராஜ துறவி. நீங்கள் கால் கடுக்க நடக்கக் கூடாதென்றே பல்லக்கு... அது உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றே! தங்கக் குடங்கள் தாங்கள் வேள்விகள் நிகழ்த்தும் சமயம் பாலும் தேனும் நெய்யும் கொண்டு வரப் பயன்படும்’’ என்று தன் பரிசுகளுக்கு நியாயம் சேர்த்தான் துரியோதனன்.
‘‘நீ மிகவும் சாதுர்யமானவன். உன்னிடம் எல்லா கேள்விகளுக்கும் ஏற்புடைய பதில் இருக்கிறது. என்னை கவுரவித்த உனக்கு எதையாவது அளிக்கத் தான் வேண்டும். உன்னைப் போல திரவியங்களை என்னால் அளிக்க இயலாது. ஆனால் உன் விருப்பங்களை ஈடேற்றிக் கொள்ளும் வரசித்தியை என் தவ வலிமையால் வழங்க முடியும். அந்த வகையில் விருப்பத்தை சொல். அதற்கான வரசித்தியை அருள சித்தமாக உள்ளேன்’’ என்றார் துர்வாசர்.
அதுவரை அமைதியாக இருந்த சகுனி எவரும் அறியாதபடி துரியோதனன் கையை பற்றி  தன் அருகே அழைத்தான். சகுனி அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தான். உடனேயே துரியோதனன் முகம் சூரியக்கதிர் பட்டு விரிந்த தாமரை போலானது. அந்த மகிழ்வோடு பேசத் தொடங்கினான்.
‘‘மகரிஷி... எனக்கென விருப்பம் ஏதுமில்லை. என் பாட்டன் பீஷ்மரின் ஆசியோடும், குருவான துரோணரின் அரவணைப்போடும், சித்தப்பா விதுரரின் வழிகாட்டுதலோடும், நண்பன் கர்ணன், மாமா சகுனி, தம்பி துச்சாதனனின் துணையோடும் நலமுடன் உள்ளேன். இன்று உங்களை உபசரிக்க நேர்ந்ததில் எனக்கு கிடைத்த ஆசிகளே  போதுமானவை’’ என்ற துரியோதனனை வியப்புடன் பார்த்தார் துர்வாசர்

‘‘நீ இப்படிச் சொல்லும் போது தான் எனக்கும் நிறைய உனக்கு ஆசிகளை வழங்கிடத் தோன்றுகிறது. பரவாயில்லை எனக்காக கேள். என்ன வரம் வேண்டும்?’’
‘‘அப்படியானால் எங்களை வாழ்த்தியது போல வனத்தில் இருக்கும் பாண்டவர்களையும் சந்தித்து திரவுபதி கையால் விருந்துண்டு அவர்களுக்கும் ஆசிகளை அருள வேண்டும்’’ என்றான் துரியோதனன். இதைக் கேட்ட கர்ணன் முதல் சகலரும் ஆச்சரிய அதிர்வுக்குள்ளாகினர். துர்வாசரோ வியப்பின் உச்சிக்கே போய் விட்டார்.
‘‘துரியோதனா... உன்னை நினைக்க பெருமிதமாக உள்ளது. பாண்டவர்களுடனான உன் பகையை எண்ணி நான் கூட வருந்தியுள்ளேன். ஆனால் அப்படி இருந்தும் என் ஆசிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணி அதை ஒரு வரமாகவே கேட்டு விட்டாய். உன்னை நான் பாராட்டுகிறேன். உன் விருப்பப்படியே வனம் சென்று அங்கு என் சீடர்களுடன் விருந்துண்டு பாண்டவர்களை ஆசியளிப்பேன். அப்படியே உன் நல்லெண்ணத்தையும் அவர்களுக்கு தெரிவிப்பேன்’’ என்ற துர்வாசர் அதன் பின் அதே மகிழ்வுடன் விடைபெற்றார்.
துரியோதனன் அவரின் ஐந்தாயிரம் சீடர்களுக்கும் வஸ்திரம், பாத ரட்சைகளை பரிசாகத் தந்து அவர்கள் ஆசிகளை பெற்றுக் கொண்டான்.
இப்படி ஒரு வரவேற்பையும், கவுரவிப்பையும் வனத்தில் தனித்தும், துறவிகளைப் போலவும் வாழ்ந்து வரும் பாண்டவர்களால் துர்வாசருக்கும், சீடர்களுக்கும் அளிக்க முடியுமா...
 இவர்கள் அவ்வளவு பேரையும் அமர வைக்க முதலில் அந்த வனப்பரப்பில் ஒரு தட்டையான நிலம் உண்டா... விருந்துணவை சமைப்பது முதல் பரிமாறுவது வரை அவர்கள் ஐவருக்கும் சாத்தியமா...
துர்வாசரோ சிறு பிழைக்கும் பெரும் கோபம் கொள்பவர். கோபம் வந்தால் அடுத்த நொடியே சாபம் தான். அவர் வைகுண்டத்தில் உள்ள திருமால் மார்பினையே தன் காலால் எட்டி உதைத்தவர். அதன் காரணமாக மகாலட்சுமியே திருமாலை விட்டு விலகிச் சென்றாள். அந்த அளவிற்கு துர்வாசர் என்றால் கோபம், கோபம் என்றால் துர்வாசர் என நினைக்கப்படுபவர் துர்வாசர். இவரைப் போய் பாண்டவர்களிடம் விருந்துண்ணச் சொல்வது என்பது விசேஷமான செயலா?’
இப்படி எல்லாம் கேள்விகள் கர்ணன் உள்ளிட்ட சகலரிடமும் எழும்பின. துர்வாசர் புறப்பட்ட நிலையில் கர்ணன் தன் சந்தேகத்தையும் கேட்டான்.
‘‘நண்பா... துர்வாசரிடம் இப்படி ஒரு விருப்பத்தை முன்வைப்பாய் என நான் நினைக்கவில்லை. பாண்டவர்கள் இப்போது ஆண்டிகள். அவர்களால் எப்படி துர்வாசரையும் அவரின் ஐந்தாயிரம் சீடர்களையும் உபசரிக்க முடியும்’’ என கர்ணன் கேட்டான். தன் மதர்த்த தோள்களை சிலிர்த்தபடி பெரும் சிரிப்பு சிரித்தான் துரியோதனன்.
‘‘என்ன சிரிக்கிறாய்’’
‘‘நீ சிந்திக்காமல் கேட்டால் நான் சிரிக்காமல் என்ன செய்வேன்’’
‘‘சிந்தித்ததால் தானே இக்கேள்வியே... அவர்களால் இயலாது என்பது தான் உண்மை’’
‘‘அது தெரிந்து தானே சொன்னேன்’’
‘‘அப்படியானால்...’’
‘‘என்ன அப்படியானால்... இன்னுமா புரியவில்லை. எதிரிகளை போரிட்டுத்தான் அழிக்க வேண்டுமா... இப்படி கோபம் மிக்க சன்யாசியிடம் சிக்க வைத்தும் அழிக்கலாமே’’
‘‘ஓ... அப்படியா சங்கதி. இப்போது புரிகிறது. துர்வாசர் பெரும் கோபக்காரர். நிச்சயம் பாண்டவர்களால் நம் உபசரிப்பில் நுாறில் ஒரு பங்கைக் கூட அளிக்க முடியாது. துர்வாசரின் கோபத்துக்கும் ஆளாவர். அது சாபத்தில் முடியும். சரி தானே’’
‘‘ஆம்... இந்த அருமையான எண்ணத்தை எனக்கு தந்தவர் மாமா சகுனி. நீ இதற்காக அவரைத் தான் பாராட்ட வேண்டும்’’
‘‘ஓ... சகுனி மாமாவின் திட்டமா இது... பலே!’’
‘‘கர்ணன் சகுனியை பாராட்டி சகுனியும் தாடியை நீவிக் கொண்டே தன் பூனைக் கண்களால் குறுகலாய்ப் பார்த்தபடி சிரித்தான். ‘‘இதைத்தான் ஒரு கல் இரு மாங்காய் என்பர். ஒருபுறம் துரியோதனனுக்கு நல்ல பெயர், மறுபுறம் பாண்டவர்களுக்கு சாபம். புத்தி இருப்பதே இப்படி எல்லாம் யோசிக்கத் தானே’’ என்ற சகுனியின் பேச்சைக் கேட்ட அனைவரும் ஆமோதிக்க துரியோதனனின் மனைவி பானுமதி மட்டும் கவலைப்பட்டாள்.
 துருபதனின் மகளாக வேள்வியில் பிறந்தவள் திரவுபதி. மிக விசேஷமான பிறப்பு! ராஜகுமாரி! ஆனால் பாண்டவர்களை மணந்ததால் இப்போது வனவாசியாகி விட்டாள்.
ஏற்கனவே வனத்தில் பெரும்பாடு! இப்போது துர்வாசரின் சாபமும் சேர்ந்தால் அவ்வளவு தான்... பானுமதியின் கண்கள் திரவுபதியை எண்ணி கலங்கத் தொடங்கியது.

காம்யக வனத்தில் பாண்டவர் குடில் தெரிந்தது. துர்வாசரின் சீடர்களில் ஒருவன் குடிலை நெருங்கிய போது அங்கு காட்டுப்பூக்களை மாலையாக தொடுத்தபடி இருந்த திரவுபதியிடம், முனிவர் வருவதைக் கூறினான். திரவுபதியும் அதிலுள்ள விஷமம் அறியாதவளாய் ‘‘துர்வாசர் எங்கள் குடிலுக்கு வருகிறாரா... ஆஹா... நாங்கள் பாக்கியசாலிகள்’’ என மகிழ்ந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar