Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சலனத்தில் ஆழ்ந்த சகாதேவன்
 
பக்தி கதைகள்
சலனத்தில் ஆழ்ந்த சகாதேவன்


துர்வாசர் வரப்போகிறார் என்று சொன்ன சீடன் தங்களின் எண்ணிக்கை ஐந்தாயிரம் என்றோ, துர்வாசரோடு நாங்கள் வருவது விருந்துண்பதற்காக என்றோ கூறவில்லை. இந்நிலையில் காலைக் கடன்களை முடித்து விட்டு அருவியிலும் நீராடி முடித்து மங்களகரமாக குடிலுக்குள் நுழைந்த பாண்டவர்களிடம் திரவுபதியும் துர்வாசர் வரப் போகிற விஷயத்தை மகிழ்வோடு சொன்னாள். அதைக் கேட்ட தர்மனின் முகம் மிக மலர்ந்தது. அர்ஜூனனும் கூட மகிழ்ந்தான். ஆனால் சகாதேவன் மட்டும் தன் முகத்தில் சற்று சலனத்தை எதிரொலித்தான். அதைக் கவனித்த நகுலன்,
‘‘சகோதரா எதனால் இந்த சலனம்?’’ என்று கேட்டான்.
‘‘வரும் வழியில் நிறைய துர்சகுனங்களை நான் உணர்ந்தேன். ஒரு காட்டுப்பசுவின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் அது இறந்து போயிருந்தது. அதே போல வற்றாத குளம் ஒன்றில் குரங்கு ஒன்று விழுந்து கரையேற முடியாமல் தத்தளித்தது. அதைக் காப்பாற்ற இறங்கிய எனக்கும் காயம் ஏற்பட்டது. வரும் வழியில் எப்போதும் பூத்திருக்கும் கொன்றை மலர்கள் இந்த முறை பூக்கவில்லை. இப்படி கண்களில் பட்ட சகலமும் எதிர்மறையாக இருந்தது. அதனாலேயே இந்த சலனம்...
‘‘போகட்டும் அதற்கும் துர்வாசர் வருகைக்கும் என்ன தொடர்பு. ஒரு மகரிஷி நம்மை நோக்கி வருவது நன்மைக்குத் தானே... அப்படித்தானே கவுதமர் முதல் மார்க்கண்டேயர் வரை பலரும் வந்து நம்மை ஆசீர்வதித்தனர்’’
‘‘உண்மை தான்... மகரிஷிகளின் வருகையும், தரிசனமும் மகா பாக்ய சம்பந்தமுள்ளவையே. ஆனால் ரிஷிகளில் துர்வாசர் மிக வேறுபட்டவர். மிகுந்த கோபக்காரர். அந்த கோபம் காரணமாக அவர் அந்த பரந்தாமனாகிய மகாவிஷ்ணுவை அவருக்கான வைகுண்டத்திலேயே சபித்தவர்’’
‘‘அப்படியானால் அவரது கோபத்தை உத்தேசித்து தான் நீ அச்சப்படுகிறாயா’’அர்ஜூனன் கேட்டான்.
‘‘ஏன் அவர் வருகை குறித்து உங்களிடம் எந்த சலனமும் இல்லையா’’ திருப்பிக் கேட்டான் சகாதேவன்.
‘‘சகாதேவா... நாம் எச்சரிக்கையோடும், குருபக்தியோடும் அவரைப் பணிந்து வரவேற்போம். பாத பூஜையும் செய்வோம். மேலும் அவர் விரும்பும் பணிவிடைகளையும் தயங்காமல் செய்வோம். இப்படி நாம் நடந்து கொண்டால் போதுமே’’ தர்மன் தீர்மானமாக கூறினான்.
‘‘நாம் எல்லோரிடமும் அப்படித்தானே அண்ணா நடந்து கொள்கிறோம். அதனால் அது குறித்தெல்லாம் நான் ஏதும் எண்ணவில்லை. துர்சகுனங்கள் தான் ஏதோ ஒரு சோதனை வரப் போவதாக எனக்கு உணர்த்துகிறது’’ சகாதேவன் அழுத்தமாக குறிப்பிட்டான்.
‘‘அண்ணா... சகாதேவன் காலஞானி! அவன் கூறினால் சரியாகத் தான் இருக்கும். நாம் அவன் கூறியதை வைத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றான் அதுவரை வாய் திறந்திராத பீமன்.
‘‘பிரச்னைகள் நமக்கொன்றும் புதிதில்லை. வனத்தில் வாழ்வது என்பதே ஒரு கொடிய விஷயம் தானே. ஒருபக்கம் சிங்கம், புலி. மறுபக்கம் உயிரோடு கிடைத்த விலங்குகளை எல்லாம் உண்ணும் மலைப்பாம்புகள். அனைத்துக்கும மேலாக புதைகுழிகள், விஷச் செடிகள் என்று இந்த வனம் எல்லாவித ஆபத்துகளையும் கொண்ட ஒன்று தானே...
இப்படிப்பட்ட ஆபத்துகளில் சிக்கி நாம் அழிந்து போக வேண்டும் என்று தானே துரியோதனனும் நம்மை வனவாசம் போகப் பணித்தான். இவற்றுக்கு நடுவில் நாம் இதுவரை வெற்றிகரமாக வாழ்ந்து வரவில்லையா... இதைவிடவா ஒரு பெரிய ஆபத்து நமக்கு வந்து விடப்போகிறது’’ தர்மன் இதமான குரலில் கேட்டான்.
‘‘அப்படியே வந்தால் தான் என்ன... அதை நாம் சந்தித்து தானே தீர வேண்டும். சந்திப்போம்’’ என்ற அர்ஜூனன் தன் வில்லை எடுத்து அதன் நாணினை இழுத்து விட அது அதிர்ந்து துடித்தது.
திரவுபதி மவுனமாயிருந்தாள். எல்லோரும் பேசி முடிக்கவும், ‘‘விவாதித்தது போதும். சாப்பிட வாருங்கள். உச்சிவேளை நெருங்குகிறது’’ என்றாள்.
‘‘திரவுபதி நீ எதுவுமே சொல்லவில்லையே. சாப்பிட அழைக்கிறாயே’’ என்று கேட்டான் பீமன்.
‘‘இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது. மூத்தவர் கூறியது போல சோதனைகள் நமக்கு புதியவை இல்லையே... வருவதை சந்தித்துத் தானே தீர வேண்டும்? அதைப் பற்றி வருந்துவதால் துன்பம் வரும் முன்பே அதற்கு நம்மை ஆட்படுத்துவது அழகலல்ல. எது வந்தாலும் அதை வரும் போது பார்த்துக் கொள்ளலாம். ராஜசபையில் நான் துகில் உரியப்பட்டதை விடவா ஒரு பெரும் சோதனை வந்து விடப் போகிறது. அப்போது காப்பாற்றிய கண்ணன் என்றும் துணையாக இருக்கும் போது எது குறித்தும் கவலை கொள்ளத் தேவையில்லை. சாப்பிட வாருங்கள்’’ என்றாள்.
அவர்களும் சாப்பிட அமர்ந்தனர். மாக்கோலமிட்ட பலகை மீது வாழை இலையிட்டு உணவு பரிமாற திரவுபதி தயாரானாள். அவர்களுக்காக சூரியன் வழங்கிய அட்சய பாத்திரமும் தயாராக இருந்தது. அந்த குடிலின் வடகிழக்கு மூலையில் ஒரு மரப்பெட்டிக்குள் இருந்த அட்சய பாத்திரத்தை சூரியனை வழிபட்டபின் கையில் எடுத்தாள்.
கேட்டதை கேட்ட வண்ணம் வாரித்தரும் அந்த அடசயமும் ஒரு பொன்வட்டிலாய் அவள் கைகளில் மின்னியது. முதில் முக்கனிகள் வர பிரார்த்தித்தாள். அவ்வாறே முக்கனிகளும் நிரம்பி வழிந்தது. அவற்றை பரிமாறினாள். பின் தேன் வர பிரார்த்தித்தாள். அதன்பின் நெய், அன்னம், கீரையமுது, அப்பம், வடை, பனியாரம், சீயம், பச்சடி, துவையல், வெஞ்சிரம் என சகலமும் பிரார்த்திக்க வந்தன. இறுதியாக பால் பாயாசம். பாண்டவர்களும் திருப்தியாக சாப்பிட்டனர். பீமன் இலையில் பார்த்தங்கள் விழும் முன்பே விழுங்கி தீர்த்தான். அட்சய பாத்திரமே அதிரும் அளவுக்கு புசித்து மகிழ்ந்தான். மற்றவர்கள் அளவாக உண்டனர். இலையில் ஒரு சோற்றுப் பருக்கைக்கும் இடமின்றி அந்த போஜனம் ஒரு தோஷம் இல்லாத முழுமையான போஜனமாக விளங்கியது.
எல்லோரும் திருப்தியாக எழுந்த நிலையில் திரவுபதி தனக்கான உணவை அந்த ஐவரின் இலைகளிலும் தருவித்து அவர்கள் எச்சிலை தனக்கான அமுதமாய் கருதி உண்ணத் தயாரானாள். அதற்கு முன் அட்சய பாத்திரத்தை கழுவி மீண்டும் மரப்பெட்டிக்குள் வைத்து விட்டு தானும்  உண்ணத் தொடங்கினாள்.
ஒருவழியாக அன்றைய பகல் உணவு முடிந்தது. இனி மறுநாள் தான் முழுமையான உணவு. மாலையில் பழங்கள், பால் மட்டுமே உணவு. இருட்டிய பின் எச்சில் விழுங்குவது கூட தோனஜம் என்ற வனவாழ்வின் கோட்பாடுகளை அவர்கள் சரிவர பின்பற்றி வந்தனர்.
அட்சய பாத்திரமும் ஒரு பகல் பொழுதுக்கு ஒரு முறையே கேட்டதை எல்லாம் தரும். அதன்பின் அதை கவிழ்த்து வைத்து விட வேண்டும். சூரியன் அப்படி ஒரு நிபந்தனையுடன் தான் தர்மனிடம் அந்த பாத்திரத்தை வழங்கியிருந்தான். ஒருநாளில் ஒருமுறைக்கு மேல் அதை பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும். எனவே திரவுபதியும் அதற்கேற்ப அதை பயன்படுத்தி வந்தாள். அன்றைய பயன்பாடு முடிந்த நிலையில் குடிலுக்கு வெளியே பாண்டவர் ஐவரும் வட்டமாக அமர்ந்து தாம்பூலம் தரிக்கத் தொடங்கினர். அப்போதும் சகாதேவன் சலனத்தோடு தான் இருந்தான்.
‘‘என்ன சகாதேவா எதை உத்தேசித்து இத்தனை சலனம்... து்ரவாசர் குறித்த உன் கவலை இன்னமும் தீரவில்லையா’’ என்று கேட்டான் பீமன்.
‘‘ஆம் அண்ணா... அவர் எப்போது வருவார் என அந்த சீடன் கூறாமல் சென்று விட்டான். அவர் வரும் போது நாம் எல்லோரும் இருக்க வேண்டும். ஒருவர் இருந்து ஒருவர் இல்லாவிட்டால் அதற்காகக் கூட அவர் கோபப்படக் கூடும்.
அடுத்து அவருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்க வேண்டும். மலர் மாலையும் சூட்ட வேண்டும். அவர் அமர்ந்திட ஏற்ற ஆசனத்தை அளித்தாக வேண்டும். பாலும் பழமும் தயாராக இருக்க வேண்டும்’’
‘‘சகாதேவா... நாம் இப்போது அரண்மனை வாசிகள் அல்ல. வனக்குடிசையில் வாழும் பரதேசிகள். அப்படிப்பட்ட நம்மால் ஒரு ராஜ வரவேற்பை அளிக்க முடியாது என அவருக்கும் தெரியும். இதோ இந்த வன்னி மரத்தின் அடிப்பீடமே அவர் அமர்ந்திட ஏற்ற ஆசனம். காட்டுப் பூக்களே அவர் மீது துாவிட நமக்கு உகந்தது. அவர் ஞானம் மிக்கவர். நம்மிடம் உள்ளார்ந்த பணிவையும், பக்தியையும் மட்டுமே அவர் எதிர்பார்ப்பார். நம்மிடம் அதற்குத்தான் ஒரு குறைவுமில்லையே’’ தர்மன் அவ்வாறு கூறிய போது யாரோ வரும் அரவம் கேட்டது. திரும்பிப் பார்த்த போது ஒரு நான்கு பேர் சற்றே மூச்சிறைக்க அவர்ளின் முன்பு வந்து வணங்கினர்.
‘‘நீங்கள்’’
‘‘நாங்கள் துர்வாச மகரிஷியின் சீடர்கள்’’
‘‘ஓ... மகரிஷி வந்து விட்டாரா’’
‘‘வந்த படியே உள்ளார். உங்களிடம் சில செய்திகளைக் கூறவே வந்துள்ளோம். நாங்கள் மொத்தம் ஐந்தாயிரம் பேர். எங்கள் அவ்வளவு பேருக்கும் உணவளிக்க வேண்டுகிறோம். தங்களிடம் அட்சய பாத்திரம் இருப்பதால் அதன் உணவு மகாபிரசாதம் அல்லவா... துர்வாசரும் அட்சய பாத்திர உணவை உண்டு மகிழ சித்தம் கொண்டுள்ளார். அதற்காக இந்த வனத்தில் சாப்பிடும் கூடம் அமைக்க வேண்டும் அல்லவா... அதைக் கூட அட்சய பாத்திரம் வழங்கி விடுமாமே...’’
சீடர்களில் ஒருவர் சொல்லச் சொல்ல திரவுபதிக்கு மயக்கம் வராத குறை. சகாதேவனும் தான் அச்சப்பட்டது போல சோதனை ஏற்பட்டு விட்டதை எண்ணி தன் சகோதரர்களைப் பார்த்தான்.  


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar