Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திருப்பாவை மாநாடு
 
பக்தி கதைகள்
திருப்பாவை மாநாடு


‘‘கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு” என்பார்கள். ஐயைந்தும் ஐந்தும் (5 x 5 + 5) என்பது திருப்பாவையின் 30 பாசுரங்களை குறிக்கும். தமிழராக பிறந்தவர் நிச்சயம் ஆண்டாளின் திருப்பாவை பற்றி தெரிந்திருப்பது அவசியம்.

                    1949 ம் ஆண்டில் காஞ்சி மஹாபெரியவர் திருவிடைமருதுாரில் முகாமிட்டிருந்தார். அப்போது பக்தை ஒருவர்தினமும் புத்தகம் ஒன்றை எடுத்து வந்து சுவாமிகளின் முன்னே பாடி விட்டு செல்வார்.  அங்கு இருந்த ஒரு பக்தரிடம் அந்த பெண் பாடும் திருப்பாவை, திருவெம்பாவை பற்றி தெரியுமா?”  எனக் கேட்டார் மஹாபெரியவர். அவரோ தெரியவில்லை என்றார். அவரை தேவராஜ பாகவதர் என்பவரிடம் அனுப்பி திருப்பாவை, திருவெம்பாவையை பாடல்களைப் பாடினால் மக்களுக்கு தெரியுமா எனக் கேட்டு வரச் சொன்னார்.  இந்த பாட்டுக்கள் பலருக்கும் தெரியாது என்றார் பாகவதர். அத்துடன் யாரும் இதை மக்களின் முன்னிலையில் பாடுவதில்லை என்றும் தெரிவித்தார்.

           மஹாபெரியவர் உடனடியாக திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்த ஏற்பாடு செய்தார்.  அதன்பின் சங்கீத கச்சேரிகளில் திருப்பாவை திருவெம்பாவையை வித்வான்கள் பாடத் தொடங்கினர். கி.வா.ஜகன்நாதன் போன்ற தமிழ் அறிஞர்கள் இதைப் பற்றி சொற்பொழிவாற்ற தொடங்கினர். அது மட்டுமல்ல… அப்போதைய அறநிலைத்துறை ஆணையராக இருந்த ஊத்தண்டராமன் என்பவரிடம் “ மார்கழியில் எல்லா கோவில்களிலும் திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்த ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மஹாபெரியவர்.

             ஓரிரு மாதம் காலம் கழித்து திருவிடைமருதுார் பக்தரிடம், ‘‘திருப்பாவை, திருவெம்பாவை பாட்டுக்களை யாரும் பாட மாட்டார்கள் என்றீரே... இப்போது யாரும் பாடுகிறார்களா?” எனக் கேட்டார் மஹாபெரியவர்.  “பெரியவா... தாங்கள் நினைத்தால் நிஜத்தில் நடக்காததும் உண்டா” என்றார் பக்தர். மாநாட்டுக்குப் பிறகு டி.கே.பட்டம்மாள்,  எம்.எல். வசந்தகுமாரி, ராமானுஜ ஐயங்கார் போன்றோர் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி மக்களிடம் பரப்புகிறார்கள். அப்போது மட்டுமல்ல, இன்றளவும் பிரபலங்கள் பலரும் ஆண்டாள் பாசுரங்களைப் பாடி மனம் உருகுகிறார்கள்.  

                

                   ஆண்டாளை பற்றி எழுத்தாளர் சுஜாதா சொல்வதைப் பாருங்கள்.  “கடல் நீர் வானத்திற்குச் சென்று உயர்ந்து மேகங்களாக மாறி மீண்டும் பெய்யும் உண்மை ஒன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளுக்கு தெரிந்திருப்பது பெரிய ஆச்சரியம். காலை நேரத்தின் பலவித ஓசைகளையும் நடைமுறைகளையும் விளக்கும் திருப்பாவை, இலக்கிய நயம் மிக்க நுால். இதை எழுதிய அந்த இளம் பெண், நுாறாண்டுகள் கடந்தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள். பாடல்களின் அமைப்பு,  சொல்லாட்சி,  பாவை நோன்பு பற்றி ஆராயும் போது இரண்டு விஷயம் தெளிவாகிறது.  ஒன்று ஒரு பெண்ணால் மட்டுமே இத்தனை நளினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்.  ஆண்டாள் இந்த பூமியில் பிறந்து  வாழ்ந்தவர் என்பதை அவரது பெண்மை மிளிரும் பாசுரங்கள் அறிவிக்கின்றன.  இரண்டாவது கடுமையான யாப்பில் எளிய பாடல்களை அமைக்கும் திறமை இவருக்கு இருந்ததை நினைக்க நெஞ்சம் ஆச்சரியப்படுகிறது. இன்று மிகச் சிறந்த கவிஞர்களில்  யாரேனும் கூட திருப்பாவையின் யாப்பமைதியில் பாடல் ஒன்றை எழுதினால் அத்தனை எளிமையாக, அத்தனை அழகாக அமைக்க முடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது”  என்கிறார்.  

                எழுத்தாளரான சுஜாதா தேசிகன், “ நான் படிக்கும் புத்தகங்களை பார்த்துவிட்டு என் அப்பா, நீ எவ்வளவு புத்தகம் படித்தாலும் கடைசி காலத்தில் பிரபந்தம் தான் உற்ற துணையாக இருக்கும்  என்றார். இதை நான் ஒரு முறை சுஜாதாவிடம் சொன்னபோது  என் தந்தையும் என்னிடம் அதேதான் எனக்குச் சொன்னார் என புன்னகைத்தார் சுஜாதா. 2007 நவம்பரில் ஒரு நாள், இப்பொழுதெல்லாம் நான் எதையும் படிப்பதில்லை, படிப்பதிலும் கண்ணுக்கு சிரமம் இருக்கிறது.  நான் கொஞ்ச நேரமாவது படிக்கிற புத்தகம் எது என்றால்  நாலாயிரதிவ்யப் பிரபந்தம் மட்டும்தான்.   இப்பொழுது அதுதான் எனக்கு எல்லாம் என்றார் சுஜாதா. பிப்.27, 2008 மாலை நேரத்தில் அவரது கடைசி தருணங்களில் நான் இருந்த போது அவருக்கு அருகில் அமர்ந்து பாசுரங்களை படிக்க தொடங்கினேன்.   உயிர் பிரிந்தபோது படித்தது ‘சிற்றஞ்சிறுகாலே...’ என்று தொடங்கும் ஆண்டாள் திருப்பாவை பாசுரம் தான். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது என்கிறார் சுஜாதா தேசிகன்.

                  உங்களின் அடுத்த படைப்பு என்ன என்று எழுத்தாளர் பூமணியிடம் கேட்டபோது, “ஆண்டாள் பற்றி எழுத திட்டமிட்டு இருக்கிறேன். ஆண்டாள் எனக்கு ஒரு சகோதரி மாதிரி தெரிகிறார். ஆண்டாளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.   அம்பை,  திரவுபதி தொட்டு ஆண்டாள் வரை ஒரு குரல் நமக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த குரலை தான் எழுதப் போகிறேன்’’  என்று சொல்லி இருக்கிறார்.


                  மார்கழி மாதத்தில் ஆண்டாளின் பாசுரங்களை கேட்பதைவிட உன்னதமானது உலகில் வேறில்லை என்கிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.   அவளைப் போல மார்கழியைக் கொண்டாடியவர்கள் ஒருவரும் இல்லை. மற்ற மாதங்கள் எல்லாம் தன்னை பாடாமல் விட்டு விட்டாளே என்று ஆண்டாளிடம் வருத்தப்பட்டிருக்கும். கொடுத்து வைத்தது மார்கழி மாதம் தான். இப்போதெல்லாம் மார்கழியில் பனி அதிகம் கொட்டுவதில்லை. பூசணி பூக்கள் வைத்து கோலமிட்ட  வீடுகளை காண்பது அரிதாகி விட்டது. ஆனால் ஆண்டாள் எல்லாவற்றையும் நினைவு படுத்தி விடுகிறாள். தன் பாடலின் வழியே அவள் பனியை படர விடுகிறாள். குளிர்ச்சி அவளது சொல்லின் வழி கசிந்தோடுகிறது.  ஆண்டாளின் பாடல்களுக்குள் உணர்ச்சி பூர்வமான நாடகம் ஒளிந்திருக்கிறது. துாக்கம் கலையாத பெண்கள்,  பனியோடு அவர்களை எழுப்பும் குரல், அக்குரலில் வெளிப்படும் கேலி,  பாசாங்கான கோபம், வியப்பு, அதற்கு துணை நிற்கும் பறவைகளின் சத்தம், எதற்காக துாக்கம் கலைந்து நந்தகோபனை பாட வேண்டும் என்பதற்கு அவள் சொல்லும் வியப்பான காரணங்கள், நப்பின்னை மார்பில் உறங்கும்  நாராயணனின் திருக்கோலம் என்று பாசுரங்கள் அனைத்தும் வசீகர நாடகத்தின் தனித்தனி காட்சிகள் போல இருக்கிறது என்று புகழ்கிறார்.


                  கவிஞர் கண்ணதாசன் ஆண்டாளை பற்றி ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். அதிலும் திருமணக்கோலத்தில் இருக்கும் நாயகியை பாடும் பல வரிகளில் கோதை வர்ணனை இருக்கும். ‘டீச்சரம்மா’ என்ற திரைப்படத்தில் ஆண்டாள் மாலை என்பதை ஒரு காதல் முக்கோணத்தில் அருமையாக பயன்படுத்தி இருப்பார்.  
     
           “சூடிக் கொடுத்தவள் நான் தோழி
          சூட்டிக்கொண்டவளே நீ வாழி!
       பாடி கொடுத்தவள் நான் தோழி
          பாட்டை முடித்தவள் நீ வாழி”

 தோழிகள் இருவரும் நாயகன் மேல் காதல் கொள்ள, ஒரு பெண் விட்டுக் கொடுக்கும் காட்சி அமைப்பில் கண்ணதாசனின் இந்த வரிகள் அன்றைய நாளில் சிறப்பாக பேசப்பட்டது
           “நான் ஒரு ஆண்டாளோ திருப்பாவை பாட” என கதாநாயகியின் எண்ணத்தை பாடலாக உருவாக்கியிருப்பார் கவிஞர் வாலி.

                         பரதநாட்டிய கலையை பாரம்பரிய பெருமையோடும் நவீன கட்டமைப்போடும் கலைப்படுத்தும் கலைஞர் அனிதா ரத்தினம். தனக்கும் ஆண்டாளுக்கும் இருக்கும் நெருக்கத்தை பேசி காணொளியாக வெளியிட்டு இருக்கிறார். கலைக்கும் தனிமனித வாழ்க்கைக்கும் ஆண்டாள் எப்படி பாலமாக இருக்கிறார், இன்றைக்கும் என்றென்றைக்கும் ஆண்டாள் ஏன் நமக்குத் தேவைப்படுகிறார் என்பதை விளக்குகிறார். அவர் தன் குழுவினருடன் ’நாச்சியார் நெக்ஸ்ட்’ என்னும் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார்.  கண்ணன் மீதான ஆண்டாளின் பாசம், காதல்,  பிரிவு போன்ற எல்லா உணர்ச்சிகளும் சேர்த்து அவளின் உள்ளக்கிடக்கையை ரசிகர்களிடம் சேர்ப்பித்தது போல் இருக்கும். அந்த நாடகத்தை பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் கிருஷ்ண பக்தர்களாக மாறும் வகையில் காட்சிகள்  தத்ரூபமாக எடுத்தாளப்பட்டிருக்கும். இவை எக்காலத்துக்கும் பொருந்துபவளாக ஆண்டாளை நம் கண் முன் நிலை நிறுத்துகிறது.  


                 பிரபலங்கள் மட்டுமின்றி சாமானிய மக்களும் ஆண்டாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் இல்லங்களில் மட்டுமல்ல, உள்ளங்களிலும் குடியேறி இருக்கிறாள். இப்படி நம் வாழ்விலும் எண்ணத்திலும் நீக்கமற நிறைந்தவள் அவள். குழந்தைகளுக்கு ஆண்டாள் போல அலங்கரித்து, அவளது தனித்துவமிக்க கொண்டையை இட்டு, ஆளுயர மாலை அணிவித்து, இடது கையில் கிளியை கொடுத்து அழகு பார்க்கும் வழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. ஆண்டாளை போற்றுவதும் அவளடியை பின்தொடர்வதும் மகிழ்ச்சியை தந்து பரிபூரணத்தை மனதில் நிறைக்கிறது. இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.  நம்முடனே நம் எண்ணங்களில் உயிர்ப்பாக வாழும் ஆண்டாளை பின்தொடர்ந்து செல்லும் போது சகல ஐஸ்வர்யங்களையும் நமக்கு அள்ளித் தருவாள். தொடர்ந்து செல்வோம்...வாருங்கள்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar