Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நளன் என்ற சாதனைப் பொறியாளன்
 
பக்தி கதைகள்
நளன் என்ற சாதனைப் பொறியாளன்

சீதையைக் கண்டதன் அடையாளமாக சூளாமணியுடன் வந்த அனுமன், இலங்கையில் சீதை இருப்பதை உறுதிப்படுத்தினான். அதைக் கண்டதும் சீதையைக் கண்டது போல மகிழ்ந்தான் ராமன். ஆனால் சீதையை மீட்கும் முயற்சியில் பதினான்கு ஆண்டுக்கும் மேலாக வனவாசம் நீடிக்குமோ என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. ஆனால் சீதை இருக்குமிடம் தெரிந்து விட்டதால் ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல் மீட்க வேண்டும் என உத்வேகம் கொண்டான். ஆனால் அதற்குப் தடையாக இருப்பது இந்தக் கடல்தான். அனுமன் தன் பராக்கிரமத்தால் விஸ்வரூபம் எடுத்து தாவிச் சென்று கடலைக் கடந்தான். ஆனால் போரில் ஈடுபடும் வானர வீரர்கள் எப்படி கடலைக் கடப்பார்கள்? நீண்ட பாலம் அமைப்பதுதான் ஒரே வழி. ஆனால் பாலத்தைக் கட்ட எத்தனை நாட்களாகும் என்ற கேள்வி அவனை சோர்வடைய வைத்தது.

இதைப் புரிந்து கொண்ட அனுமன், ‘கவலை வேண்டாம் ஐயனே... தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகன் நளன். இவன் சுக்ரீவனுடைய படைத் தளபதிகளில் ஒருவன்,  கிஷ்கிந்தை அரண்மனையை நிர்மாணித்தவன். இவன் கடலைக் கடப்பதற்கு உபாயம் செய்வான்’ என ஆறுதல் கூறினான்.

 ராமனும் அவனை அழைத்து வரச் சொன்னான்.  ஓடோடி வந்த நளன், ‘ஐயனே... கடலை அனுமன் எப்படி கடந்தான்? தங்களின் திருநாமத்தைச் சொல்லித் தானே சாதித்தான்! அதே போல என் அறிவுக்கும் தங்கள் அருளே பக்க பலமாக இருக்கும்’ என்றான்.  
ராமனும் புன்னகைக்க உற்சாகத்துடன் பணியைத் தொடங்கினான் நளன். வானர வீர்ர்களை பல குழுக்களாகப் பிரித்தான். அக்குழுவினர் பாறைகள், கற்கள், உறுதி வாய்ந்த கொடிகள், பாறைகளுக்கு ஏற்படும் இடைவெளியை அடைக்க பாசிகள் என பொருட்களைக் கொண்டு வர ஆணையிட்டான்.
ராமனின் அருகே நின்றிந்த சுக்ரீவன், ‘ இந்த நளன் வரம் பெற்றவன். இவன் கையால் எந்த பொருளைக் கடலில் வீசினாலும் அது மிதக்கும். பராக்கிரமம் மிக்கப் படைத் தளபதி. இவன் நுாறாயிரம் கோடி வானரர்களுக்குத் தலைவன்’ என அவனது பெருமைகளை விவரித்தான்.

ஆக, கடலில் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்று ராவணனுடன் போரிடும் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெற்றது. பாறாங்கற்களை வானரவீரர்கள் துாக்கி வந்தனர். சிலர் மலைகளைப் பெயர்த்தனர். வேறு சிலர் பாறைகளை வாலால் கட்டி இழுத்து வந்தனர். எறியப்பட்ட குன்றுகளைக் கால்களால் உருட்டிக் கொண்டு சிலர் வந்தனர். பிரம்மாண்ட மரங்களும் அம்பாரமாக வந்து சேர்ந்தன. சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த நளன்,  கொண்டு வரும் போதே தரம் பிரித்து தனித்தனியாகக் குவிக்கச் சொன்னான்.

முதலில் பெரிய பாறைகளை கடலுக்கு அருகில் அடுக்கச் சொன்னான். அவற்றை ஒவ்வொன்றாகக் கடலில் எறிந்தான். கச்சிதமாக அவை மிதந்தன. தளும்பிய நீரில் ஆடிய பாறைகளின் மீது கொடிகளை வீசி ஒன்றாகப் பிணைத்தான். இவ்வாறாக பாலத்தின் நீள, அகலத்தை விரிவுபடுத்தினான். இலங்கைக்கு எத்தனை லட்சம் வீரர்கள் செல்வர், அதோடு அவர்கள் எடுத்துச் செல்லும் போர்த் தளவாடங்களின் எடை எவ்வளவு இருக்கும் எனக் கணித்து பாலத்தை உறுதிப்படுத்தினான். இதனை,
முடுக்கினன் தருகஎன மூன்று கோடியர்
எடுக்கினும் அம்மலை ஒரு கையேந்தியிட்டு
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை
நடுக்கினன் நளன் எனும் நவையின் நீங்கினான்

என்கிறது கம்ப ராமாயணம். அவனுடைய  தொழில் நுணுக்கத்தைக் கண்டு ராமன், லட்சுமணன் வியந்தனர். கடலும் ஆர்ப்பரிக்காமல் அவனது செயலுக்கு துணைபுரிய மூன்றே நாளில் பாலம் கட்டி முடித்தான். இறுதியாக அனுமனை அனுப்பி பாலத்தின் உறுதியைப் பரிசோதித்து அனைவரும் அதன் வழியாக இலங்கை செல்லலாம் எனத் தெரிவித்தான் நளன். வானர வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். சீதையை மீட்கும் உற்சாகத்தில் ராமனும் வேகமாக நடக்க, அவனுடன் லட்சுமணன், சுக்ரீவன், அனுமன் ஆகியோரும் புறப்பட்டனர்.  
இதோ வந்தாயிற்று. ராவணனின் அரண்மனைக்கு எதிரிலுள்ள கடற்கரையை அடைந்தனர். .
நளன் அங்கு பரபரப்பாகச் செயல்பட்டான். ஆர்வமும், தேர்ச்சியும் பெற்ற வானர வீரர்களை சேர்த்துக் கொண்டு ஆலோசித்தான்.
போர் முடியும் வரை வீரர்கள் தங்க பாசறை வேண்டுமே! அங்கிருந்த சுவேல மலையின் அடிவாரத்தை தேர்வு செய்தான். நிலத்தை சமப்படுத்தி பருமனான மூங்கில்களை துாணாக நிறுத்தினான். நீளமான மூங்கில்களை குறுக்கும், நெடுக்குமாகக் கட்டி கூரை முழுவதும் தர்ப்பைப் புற்களை வேய்ந்தான். துாண்களையும். உத்திரங்களையும் உறுதியான தழைகளால் பிணைத்து பர்ணசாலையை ராம, லட்சுமணனுக்காக உருவாக்கினான். தலைமைப் பொறுப்பு ஏற்கும் தன் அரசரான சுக்ரீவன், ராவணனின் தம்பியான விபீஷணனுக்கு தனித்தனி பாசறையை நளன் அமைத்தான்.
 ‘ஐயனே... இது எங்களின் கூட்டு முயற்சி. தாங்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டான் நளன். அப்படியே ராமனும்  கைகளை உயர்த்தி அனைவருக்கும் பெருமை செய்ய, அங்கே உற்சாகம் கரை புரண்டது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar