Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராமாயணத்தில்.. தாரை
 
பக்தி கதைகள்
ராமாயணத்தில்.. தாரை

‘சுக்ரீவன் பலவானாகி விட்டானா? என்னை எதிர்க்கும் அளவுக்குத் துணிந்து விட்டானா? அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் மேரு மலையை மத்தாக வைத்துக் கடைந்த போது இரு தரப்பினரும் சோர்வுற்றனர். அப்போது இருபுறத்திலும் தயிர் மத்து போல வாசுகிப் பாம்பைப் பற்றியபடி நான் ஒருவனே பாற்கடலைக் கடைந்தேன். அந்த என் பராக்கிரமத்தை நீ மறந்து விட்டாயா? அற்பனான சுக்ரீவன், என் ஒரு கைவீச்சுக்குத் தாங்குவானா’ என வீராப்புடன் பேசினான் வாலி.
மன்றாடிய தாரை, ‘எல்லாம் நான் அறிவேன். ஆனால் நீங்கள் எதிர்க்க வேண்டியது சுக்ரீவனை மட்டுமல்ல, அவனுடன் சேர்ந்திருக்கும் ராமனையும்தான். முடியுமா உங்களால்?’
வாலிக்குக் கோபம் வந்தது. ‘ மீண்டும், மீண்டும் உத்தமனான ராமன் பெயரை இழுக்கிறாய். அவன் சுக்ரீவனுக்குத் துணை போகிறான் என அறிந்த நீ, அவனுடைய கல்யாண குணங்களை அறியாதவளாக இருக்கிறாயே! சித்தியின் மகனான தம்பி பரதனுக்கு சிம்மாசனத்தையே விட்டுக் கொடுத்தவன் அவன். எனக்கும் சுக்ரீவனுக்குமான பிரச்னையில் தலையிடுவானா என்ன? அவன் எங்களுக்கிடையே சமாதானம் செய்ய முயற்சிப்பானே தவிர, என் தம்பி சுக்ரீவனுக்கு ஆதரவாகவும், எனக்கு எதிராகவும் செயல்பட மாட்டான். கவலையை விடு’ எனச் சீறினான்.

‘ராமன் மீதான உங்கள் நம்பிக்கையை பாராட்டுகிறேன். ஆனால் ராமனுடைய தற்போதைய நிலை என்ன தெரியுமா? அவன் மனைவியைப் பறி கொடுத்திருக்கிறான். அதுவும் யாரிடம்? நீங்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறீர்களே... அந்த ராவணனிடம்! அவனிடமிருந்து மனைவியை மீட்க வேண்டிய நிர்பந்தத்தில் ராமன் இருக்கிறான். ஆனால் பலம் வாய்ந்த உங்களின் நட்பு காரணமாக ராவணன், இது போல இன்னும் பல அக்கிரமங்களை செய்து கொண்டே போவான். இத்தனை நேரம் ராமனைப் புகழ்ந்த உங்களால் ராவணனுக்காக ராமனை எதிர்க்க முடியுமா? ராவணனின் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது தெய்வமாக மதிக்கும் ராமனை எதிர்ப்பதா?’ எனக் கேட்டாள் தாரை.

சுக்ரீவனுக்காகத் தன்னை எதிர்ப்பான் ராமன் என்பதை வாலி எதிர்பார்க்கவில்லை.  அதுவும் நேருக்கு நேராக என்னை எதிர்ப்பானா? அப்படி எதிர்த்தால் அவனது பலத்தில் பாதி என்னை வந்து சேரும் என்பது தெரியாதா? சுக்ரீவனுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தாக்குவானா? அது கோழைத்தனம் அல்லவா? என பலவாறு சிந்தித்தான் வாலி.

 சண்டையைத் தவிர வேறு மாற்றுவழி இல்லை என்பது உறுதியாகி விட்டது. சுக்ரீவனுக்கு ராமன் உதவப் போகிறான் என்பதால் விபரீதம் நிகழப் போகிறது என்பது தாரைக்கும் புரிந்தது.

‘இதோ... உடனடியாக சுக்ரீவனை துவம்சம் செய்துவிட்டு வருகிறேன்’ என போர்க்களம் நோக்கி விரைந்தான் வாலி. ஆனால் சுக்ரீவனுடனான அந்த சண்டை தோல்வியில் முடியும் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. மறைந்திருந்து ராமன் பாணம் வீசியதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அதே சமயம் எந்த செயலில் ராமன் ஈடுபட்டாலும் அதில் நியாயம் இருக்கும் என சமாதானமாகி உயிரை விட்டான். இறக்கும் தறுவாயில் தன் மகன் அங்கதனைக் காப்பாற்றும் பொறுப்பையும் ராமனிடம் ஒப்படைத்தான் வாலி.
 
விபரம் அறிந்து ஓடோடி வந்த தாரை, வாலியின் மார்பின் மீது விழுந்து அழுதாள். ‘வேண்டாம் எனச் சொன்னேன். ராமன் தர்மநெறி தவறமாட்டான் என உறுதியளித்தீர்கள். ஆனால் என்ன கொடுமை, ராமனின் அம்பாலேயே உங்கள் உயிர் பிரிய நேர்ந்ததே! உங்கள் மரணத்தை விட ராமனின் அடாத செயல் வாழ்நாள் முழுவதும் விஷ அம்பாக உறுத்துமே?’ என்று அழுதாள்.
பெண்களை அழைத்து தாரைக்கு ஆறுதல் சொல்லும்படி அனுமன் கேட்டுக் கொண்டார். அதன்பின்னரே அவள் அங்கிருந்து புறப்பட்டாள்.  

 இதன்பின் ஒருநாள் ராமன் மனதில், ‘மழைக்காலம் முடிந்ததும் போருக்கு உதவி செய்வதாக வாக்களித்து இருந்தானே சுக்ரீவன். ஆனால் போர் தொடர்பாக ஒரு முயற்சியிலும் ஈடுபடவில்லையே. சீதையின் நினைவால் வருந்திய ராமனுக்கு இந்த அலட்சியம் கோபமூட்டியது. லட்சுமணனை அழைத்தான், ‘இனி பொறுக்க முடியாது என சுக்ரீவனுக்கு தெரிவித்து விட்டு வா’ என்று அனுப்பி வைத்தான் ராமன்.


கிஷ்கிந்தையில் உள்ள சுக்ரீவனின் அரண்மனையை நோக்கிச் சென்றான் லட்சுமணன். தொலைவிலிருந்தே அவன் வரும் வேகத்தை கவனித்த அனுமன் அதற்கான காரணத்தை உணர்ந்தான். வானரப் படையினர் முழுமையாக வந்து சேரவில்லை என்ற உண்மையைக் கூறினாலும் நம்பப்போவதில்லை. வீண் பகையே உருவாகும். அதை தவிர்க்க எண்ணி தாய் போல இருக்கும் தாரையிடம் போய், லட்சுமணனை சமாதானம் செய்யும்படி வேண்டினான்.
நடந்ததை எண்ணி வருந்துவதில் பயனில்லை. ராமனின் கோபம் சுக்ரீவன் மீது திரும்பினால் கிஷ்கிந்தையே மயான பூமியாகி விடும். ஆகவே லட்சுமணனை சமாதானப்படுத்த வேண்டும் என தீர்மானித்தாள் தாரை.
 
தோழியரை அழைத்துக் கொண்டு லட்சுமணனின் முன்பு வந்து நின்றாள். மற்ற பெண்களை ஏறெடுத்தும் பார்க்க கூச்சப்படுபவன் என்பதை அறிந்திருந்த தாரை, அவனது கோபத்தைக் குறைக்க ஒரு உத்தியாக இதைக் கையாண்டாள். பெண்கள் தன்னைச் சூழ்ந்து நிற்பதைக் கண்ட லட்சுமணன் தலை குனிந்தான். கோபம் தணிந்தது. தாரை அவனிடம், ‘உன் கோபத்தின் காரணம் புரிகிறது. சுக்ரீவனும் கொடுத்த வாக்கை மறக்கவில்லை. பல இடங்களுக்கும் சென்றுள்ள வானரப் படைகளுக்கு தகவல் சொல்லி அனுப்பியுள்ளான். அவர்களில் பலருக்கும் வாலி இறந்த விபரம் கூடத் தெரியாது. வீரர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். பகையை வெல்ல உங்களுக்கு வில்லும், அம்பும் போதும், ஆனால் சீதையைத் தேடுவதற்கு இந்த வானரங்களின் உதவி அவசியம். சுக்ரீவன் யாரையும் ஏமாற்றக் கூடியவன் அல்ல. ‘ஆக்கப் பொறுத்தீர்கள். ஆறவும் பொறுத்தல் நலம் தானே?’ ( ஆயிரங் கோடித் துாதர் அரிக் கணம் அழைக்க ஆணை – போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்குத் – தாயினும் நல்ல நீரே தணிதிரால் தருமம் அஃதால் – தீயன செய்யார் ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கம்பர்) என்றெல்லாம் பக்குவமாகப் பேசி லட்சுமணனை சமாதானம் செய்தனுப்பினாள்.
கணவரான வாலியை இழந்த நிலையிலும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு குணவதியாகத் திகழ்ந்தவள் தாரை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar