Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தவமிருந்த ஜெயத்ரதன்
 
பக்தி கதைகள்
தவமிருந்த ஜெயத்ரதன்


ஜெயத்ரதனை மன்னித்து விடலாம் என்று தர்மன் கூறவுமே அவன் சகோதரர்கள் சகலரும் அதிர்ச்சியை எதிரொலித்தனர். பீமன் அதைக் கூடுதலாகவே காட்டத் தொடங்கினான்.
‘‘அண்ணா... என்ன இது பேதைத்தனம்? இந்த ஈனப்பிறவியை மன்னிப்பதா... அதற்கா இவனை குடுமியைப் பிடித்து இழுத்து வந்தேன். அன்று துச்சாதனன் சபையில் துகில் உரிந்ததை விட மோசமான செயலை இவன் செய்திருக்கிறான். இவனை மன்னிப்பதும், மதயானையை கட்டவிழ்த்து விடுவதும் ஒன்றல்லவா’’ என்று கேட்டான்.
‘‘உண்மை தான். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இவன் நம் மாப்பிள்ளையாகி விட்டான். நம் சகோதரியின் கணவன் இவன். இவனை தண்டிப்பது நம்மை நாமே தண்டித்துக் கொள்வது போன்றது’’
‘‘யார் சகோதரி... திருதிராஷ்டிரரின் புதல்வி துச்சலையா... அப்படி நீங்கள் சொன்னால் ஆயிற்றா... அவள் ஒருமுறையாவது நம்மை அண்ணா என்று அழைத்திருப்பாளா’’
‘‘பீமசேனா... அவள் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாம் பங்காளிகள் இல்லை என்றாகி விடுமா? தண்ணீரால் தண்ணீரை அடித்திட அது விலகிடுமா?’’
‘‘போதுமண்ணா... பெருந்தன்மைக்கும் ஒரு எல்லையுண்டு. நீங்கள் இவனை நம் மாப்பிள்ளை என்கிறீர்கள். இவனோ நம்மை இவனின் அடிமைகள் என்கிறான். அதைக் கேட்டுமா உங்களுக்கு இவனை மன்னிக்கத் தோன்றுகிறது?’’
‘‘பீமசேனா... உணர்வைக் கட்டுப்படுத்து. இவன் தன் வாழ்வில் மேலானவர்களையே பார்த்ததில்லை. பழகியதும் இல்லை. அதனாலேயே இவன் நடத்தையும் கீழானதாக இருக்கிறது. நாம் இவனுக்கு மேலானதைக் காட்டி புரிய வைப்போம். ஒரு வாய்ப்பு தருவோம். தண்டிப்பதை விட மன்னிப்பது தான் கொடியது. தண்டித்தால் தண்டனை முடியவும் கணக்கு தீர்ந்து விடும். நம் மீது கோபமும், தாபமும் குறையாமல் அப்படியே தான் இருக்கும். மன்னித்து விட்டாலோ அந்த கோபமும் தாபமும் குன்றிப் போகும். சிந்திக்கத் தோன்றும்.
‘‘நீயே யோசி. இதில் எது மேலானது?’’
‘‘நீ்ங்கள் என்ன சொன்னாலும் சரி. இவனை மன்னிப்பது மடத்தனத்தில் தான் முடியும். அறியாமல் தவறு செய்து விட்டு வருந்துபவர்களை மன்னிக்கலாம். இவன் இப்போது கூட தான் தவறு செய்து விட்டதாகவே கருதவில்லை. இவனை இப்படியே விடக் கூடாது. குறைந்த பட்சம் இவன் சிரத்தில் பஞ்ச குடுமிகளை உருவாக்கி இவனை இவன் நாட்டுக்குள் மக்கள் பார்க்க இழுத்துச் சென்று அரண்மனை வாசலில் காலால் எட்டி உதைத்து விட்டாவது வர வேண்டும். அதற்காவது நீங்கள் அனுமதிக்க வேண்டும்’’ என்றான் பீமன்.
‘‘அப்படிச் செய்வது மன்னிப்பதாகாது பீமா... கேவலப்படுத்துவதாகும். இவன் நாட்டு மக்களை உத்தேசித்தாவது இவனை இப்படியே விட்டு விடுவதே நமக்கு அழகு. ஜெயத்ரதா... புறப்பட்டு செல்! இனியாவது நேர்வழியில் நட... நல்ல புத்தியோடு உன் மனைவிக்கு தகுதியுள்ள கணவனாக வாழப் பார்.
ஒரு அரசனுக்கு பல பத்தினியர் இருக்கலாம். அதை ராஜநீதி அனுமதிக்கிறது. ஆனால் அதற்கு சில அடிப்படை காரணங்கள் வேண்டும். குழந்தை இல்லாமல் போனாலோ, அடைக்கலமாக வந்து நின்றாலோ, ராஜ்ய பாரத்தை சுமக்க கட்டாயம் ஒரு துணை தேவை என்றாலோ ஒரு அரசன் ஒன்றுக்கு நான்கு மனைவியரை ஏற்கலாம்.
வெறும் ஆசைக்காக ஒரு பெண்ணை அடைய நினைப்பது அரச லட்சணம் அல்ல. அது நீசனின் செயல். நான் சொல்வதில் பிழை இருப்பதாக கருதினால் உன் குருவிடம் கேள். அவர் உனக்கு நான் சொன்னதை வழிமொழிவார் என்று தர்மன் புத்தி சொல்லி ஜெயத்ரதனை வழியனுப்பி வைத்தான். ஜெயத்ரதனும் தர்மனின் பெருந்தன்மைக்காக நெகிழாமல் மனக்குமுறலோடு  வெளியேறினான்.
..............
தன் நாடு திரும்பியவன் தனிமையில் மனம் புழுங்கினான். பீமன் பேச்சும், தர்மன் பேச்சும் மாறி மாறி அவன் காதில் ஒலித்தது. யாரிடமாவது மனம் விட்டு பேசி ஆறுதல் தேடிக் கொள்வதோடு, பாண்டவர்களை அழிக்க ஒரு வழியையும் கண்டாக வேண்டும் என மனம் தவித்தது. அப்போது அவனைக் காண அவனது பிராமண குருவான தைத்யர் என்பவர் வந்தார்.
‘‘ஆசிகள் ஜெயத்ரதா... என்னைக் காண விரும்பியதாக அறிந்தேன்’’
‘‘ஆம் குருவே... வனம் சென்ற நான் பாண்டவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை மிகவே இழிவுபடுத்தி விட்டனர். என்னால் அதை தாங்க முடியவில்லை’’
‘‘இது என்ன விந்தை. பண்டவர்களா அப்படி நடந்து கொண்டனர்’’
‘‘ஏன் நம்ப முடியவில்லையா’’
‘‘ஆம்... நீ என்ன செய்தாய் என்று சொல்லவில்லையே’’
‘‘அது எதற்கு உங்களுக்கு. அவர்களை அழித்தே தீர வேண்டும். அவர்கள் உயிரோடு இருப்பது எனக்கு இழுக்கு’’
‘‘ஒருதலை பட்சமாக பேசினால் எப்படி? எதனால் இந்த கோபம். நீ என்ன செய்தாய்?’’
‘‘அவர் என் மைத்துனன் துரியோதனனின் அடிமைகள் தானே?’’
‘‘இந்த கேள்விகள் இப்போது எதற்கு’’
‘‘ஒரு அடிமையை ஒரு அரசன் விரும்புவது தவறா’’
‘‘புரிகிறது. திரவுபதியை கவரப் பார்த்தாயா’’
‘‘அடைய விரும்பினேன். அவள் அழகுக்கு வனத்தில் ஒரு சன்யாசினி போலவா வாழ்வது’’
‘‘ ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது போல் உள்ளது உன் பேச்சு’’
‘‘குருவே... என்னையா ஓநாய் என்கிறீர்’’
‘‘கோபிக்காதே. உதாரணத்திற்காகச் சொன்னேன்’’
‘‘உங்கள் உதாரணம் தவறு. அவள் ஒரு வண்ணமயில். அவளை நான் ஆதரிக்க விரும்பினேன். நான் ஒரு ரசிகன்’’
‘‘சரி... என்னிடம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறாய்?’’
‘‘எனக்கு திரவுபதி வேண்டும். பாண்டவர்கள் அழிக்கப்பட வேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள்’’
‘‘துணிவிருந்தால் போரிடு. அதை விட்டு என்னிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது?’’
‘‘போரிட்டு அவர்களை வெல்ல முடிந்திருந்தால் என் மைத்துனன் எப்போதோ  செய்திருப்பானே... சூதாடவா அழைத்திருப்பான்’’
‘‘அப்படியானால் அவர்களை அழிக்கும் குறுக்குவழி எது என்று தெரிய வேண்டும். அப்படித்தானே’’
‘‘ ஆம்... இப்போதாவது உங்களுக்குப் புரிந்ததே’’
‘‘ குரு என்பவர் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்பவர். நீ என்னை இருளுக்கு வழிகாட்டச் சொல்லி என் ஸ்தானத்தையே மாற்றப் பார்க்கிறாய்’’
‘‘உபதேசம் போதும். வழி இருந்தால் கூறுங்கள்’’
‘‘பாண்டவர்களை வெல்வது அசாத்தியம். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மேலானவர்கள். வரசித்தி பெற்றவர்களால் மட்டுமே அவர்களை வெல்ல முடியும்’’
‘‘வரசித்தி என்றால்...’’
‘‘தவம் செய்து வரம் பெறுவது..... இரணிய கசிபு போல்... சூரபத்மன் போல்’’
‘‘இதற்காக நான் தவம் புரிய வேண்டுமா’’
‘‘ஆம்... வேறு வழியில்லை’’
‘‘எத்தனை நாட்கள் தவம் புரிய வேண்டும்’’
‘‘நீ எவர் குறித்து தியானிக்கிறாயோ அவர் தோன்றும் வரை’’
‘‘கால அளவு கிடையாதா’’
‘‘மழைநீர், கடல்நீர், தவம் மூன்றும் அளவிற்கு அடங்காதவை. உன்னால் முடியாது. மனதை சமாதானம் செய்து கொண்டு ராஜ்ய விஷயங்களில் கவனம் செலுத்து’’
‘‘முடியவே முடியாது’’
‘‘அப்படியானால் தவத்தில் அமர்ந்திடு’’
‘‘அமர்கிறேன். வரம் பெற்றும் காட்டுகிறேன்’’
‘‘உன்னை வாழ்த்துகிறேன். ஒரு தீமை இப்படி கூடவா நன்மை செய்யும்’’
தைத்யர் புன்னகையுடன் கூறியது ஜெயத்ரதனை கொம்பு சீவி விட்டது போலாக்கியது. அடுத்த கணமே ராஜ உடைகளை களைந்து மரவுரி தரித்தான். கமண்டலம், தண்டத்துடன் அருகிலுள்ள காட்டுக்கு நடந்தான். அரச மரத்தின் கீழ் புலித்தோலை விரித்து அதன் மீது அமர்ந்தான். ‘ஓம் நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினான்.
 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar