Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திரிசடை என்ற திருமகள்
 
பக்தி கதைகள்
திரிசடை என்ற திருமகள்

அசோகவனத்தில் திரிசடைதான் சீதைக்கு ஆறுதலாக இருந்தாள். கணவனைப் பிரிந்து தனிமையில் வாடும் அவளை ராவணனுடன் இணங்கிப் போகும்படி நிர்பந்தம் செய்யும் குரூர அரக்கியரின் நடுவில் விடிவெள்ளியாக திரிசடை தெரிந்தாள். மாயம் செய்து மயக்க முயற்சி செய்யும் ராவணனின் திட்டங்களைத் தன் மனவலிமையால் மட்டுமன்றி, திரிசடையின் ஆதரவாலும்தான் சீதை தகர்த்தாள்.
   
தன்னால் ராமனை வெல்ல முடியாது என்ற உண்மை லேசாக ராவணனுக்கு உறைக்க ஆரம்பித்தது. போர் முடிவதற்குள் சீதை இணங்கி விட்டாள் என்றால் போரிடும் தேவையே இருக்காது. அது மட்டுமா, ராமனையும் கைது செய்து அடிமையாக்கி விடலாம் என விபரீதமாக சிந்தித்தான் ராவணன். இறுதி முயற்சியாக இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். அதன் தாக்கத்தால் லட்சுமணன், அனுமன் உள்ளிட்ட வானரங்கள் மயங்கினர். ராமன் மனம் சோர்ந்தான். ராவணனின் கவனத்துக்கு இதை அரக்கர்கள் கொண்டு சென்றனர். சூழ்நிலையை சாதகமாக்க நினைத்தான் ராவணன்.
 
அதாவது போரில் ராமன், லட்சுமணன் இறந்து விட்டதாக வதந்தியைப் பரப்பினான். அசோகவனத்தில் உள்ள அரக்கியர் மூலம் சீதையின் காதுக்கு விஷயம் வந்தது. அவ்வளவுதான், கீழே புரண்டு அழ ஆரம்பித்தாள்.
அது மட்டுமல்ல, ‘என் புஷ்பக விமானத்தில் சீதையை ஏற்றிக் கொண்டு போர்க்களத்துக்கு செல்லுங்கள். அவளே அந்த காட்சியை கண்ணால் காணட்டும்’ என்று ராவணன் ஆணையிட்டான்.
இதைக் கேட்ட சீதை மயங்கினாள். எதிர்பார்த்தது நடக்காமல் வேறொன்று நடப்பதை அவளால் தாங்க முடியவில்லை. என்னதான் திரிசடை ஆதரவாக இருந்தாலும், தனிமைச் சூழலில் பரிதவிக்கும் அபலையானாள் சீதை.

இந்த சூழலிலும் திரிசடைதான் ஆதரவுக்கரம் நீட்டினாள். ‘கவலைப்படாதீர்கள் அம்மா, பயப்படும்படியாக ஏதும் நிகழாது. நான் சொல்கிறேனே என நீங்கள் அசட்டையாக இருந்து விட வேண்டாம். அப்படி ஒரு காட்சியைக் காண உங்கள் மனம் சகிக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் பெரியப்பா(ராவணன்) நிர்பந்தம் செய்து உங்களை அங்கே அழைத்துச் செல்ல ஆணையிடுவார். போர்க்களத்துக்குப் போவதை நீங்கள் தவிர்க்க முடியாது. அதே சமயம் வீண்பயம் வேண்டாம். நானும் உங்களுடன் வருகிறேன். பெரியப்பா பரப்பிய வதந்தியாக கூட இது இருக்கலாம். காதில் கேட்டதற்கே மனம் உடைந்து, வேதனைப்படுவீர்கள் என அவர் எதிர்பார்ப்பார். உங்களின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக மாற்ற முயற்சிப்பார். விழிப்புடன் இருங்கள். இதோ இந்த புஷ்பக விமானத்தில் ஏறுங்கள். போர்க்களம் செல்வோம்’’ என்றாள்.
உடல் நடுக்கத்துடன் விமானத்தில் ஏறினாள் சீதை. பஞ்சவடியில் இருந்து அவளைக் கடத்திக் கொண்டு வந்த அதே விமானம்! விண்ணில் பாய்ந்து போர்க்களத்தில் இறங்கியது. அங்கே ராமனும், லட்சுமணனும் மயக்கமடைந்து கிடந்தனர். அவ்வளவுதான். சீதையும் கண்ணீருடன், ‘என் நாயகனே இது என்ன அலங்கோலம்! கொழுந்தனாரே, நீங்கள் துயின்று நான் பார்த்ததில்லையே. ‘உறங்கா’ வரம் பெற்றவராயிற்றே. இப்படி அண்ணனுடன் விழுந்து கிடக்கிறீரே! இந்த கோலத்தைக் காணவா பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தேன்… எங்கள் குலதெய்வமே... ரங்கநாதா... ஏன் இந்தக் கொடிய சோதனை’’ என கதறினாள் சீதை.

சூழ்ந்து நின்ற அரக்கிகளை விலக்கி விட்டு சீதையின் அருகில் சென்ற திரிசடை, ‘புலம்பாதீர்கள் அம்மா. இதுவும் பெரியப்பாவின் தந்திரம்தான். அதோ பாருங்கள் உங்கள் கணவரை. அவர் மீது அம்பு ஏதாவது தைத்திருக்கிறதா? எங்கேனும் காயம் இருக்கிறதா? அவரின் முகத்தைப் பாருங்கள், தாமரையாக மலர்ந்திருக்கிறது. லட்சுமணனின் முகமும் பிரகாசமாக இருக்கிறது. மயங்கித்தான் கிடக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்’’ என ஆறுதல்படுத்தினாள் திரிசடை.
சீதையின் முகத்தில் நம்பிக்கை ஒளி ஊடுருவியது. திரிசடையும் நிம்மதியானாள். அதை வலுப்படுத்தும் விதத்தில் ‘அம்மா... ஒரு நல்ல தகவலை சொல்கிறேன். இந்த புஷ்பக விமானம் இருக்கிறதே, இது கணவரை இழந்த பெண்ணை சுமக்காது. அப்படி யாராவது ஏற முயன்றால் உதறி கீழே தள்ளிவிடும். உங்களை சுமக்கிறது என்றால், நீங்கள் ஸ்ரீராமனின் மனைவியாக சுமங்கலி பாக்கியத்துடன் இருக்கிறீர்கள் என பொருள்’’ என்றாள்.
தன் நாயகனைத் தானே குறைத்து மதிப்பிட்டு விட்டோமே என்ற உணர்வால் சீதை வெட்கப்பட்டாள். மானசீகமாக கணவர், கொழுந்தனார் லட்சுமணனிடம் மன்னிப்பும் கேட்டபின் திரிசடையுடன் அசோகவனம் புறப்பட்டாள்.
**************
இரவில் ஒருநாள் அசோவனத்தில் திரிசடை துாங்கிக் கொண்டிருந்தாள். அப்போது சீதைக்கு இடது புருவமும், கண்ணும், தோளும் துடித்தன. இது நல்ல சகுனம் என்பதை உணர்ந்து மகிழ்ந்தாள். அதைத் தெரிவிக்க திரிசடையை எழுப்பினாள்.
‘அடடா… நான் நல்ல கனவு ஒன்று கண்டேன். ஆனால் பாதியில் எழுப்பி விட்டீர்களே’’ என வருந்தினாள் திரிசடை.
‘நான் கண்ட நல்ல சகுனத்தை சொல்லவே எழுப்பினேன். அதுசரி, நீ கண்ட கனவுதான் என்ன’ எனக் கேட்டாள் சீதை.
‘பத்துத் தலைகளிலும் எண்ணெய் வழிந்தோட, சிவந்த ஆடையுடன் என் பெரியப்பா ராவணன், கழுதை பூட்டிய தேரில் சென்றார். கூடவே அவரது சுற்றம், மக்களும் சென்றனர். எங்கு பார்த்தாலும் கரையான்கள் ஓடின. மேகமே இல்லாமல் வானில் இடி இடித்தது. அந்தப் பேரொலியால் அரண்மனையில் விளக்குகள் உடைந்தன. இரவில் சூரியன் உதித்தது. ரத்த மழை பொழிந்தது. பெரியம்மா மண்டோதரியின் கூந்தல் அவிழ்ந்தது.
அப்போது இரண்டு சிங்கங்கள் இலங்கை அரண்மனையை நோக்கி வந்தன. மகாலட்சுமி, திருவிளக்கைக் கையில் ஏந்தியபடி ராவணன் அரண்மனையில் இருந்து வெளியேறி என் தந்தையான விபீஷணரின் வீட்டிற்குள் புகுந்தாள். அப்படி அவள் புகும் போது நீங்கள் என்னை எழுப்பி விட்டு விட்டீர்களே...’’என்றாள் திரிசடை.
‘அடடா, இரண்டு சிங்கங்கள் என்ன செய்தன எனத் தெரியவில்லையே திரிசடை, எனக்காக நீ இன்னும் கொஞ்ச நேரம் துாங்குவாயாக. கனவை மங்களகரமாக முடிப்பாயாக’’ என நெகிழ்ந்தாள் சீதை.
பொன் மனை புக்க அப்பொரு இல் போதினில்
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என
அன்னையே அதன்குறை காண் என்று ஆயிழை  
இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள் – கம்பர்
தாய்ப்பாசத்துடன் சீதையை அப்படியே அணைத்துக் கொண்டாள் திரிசடை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar