Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மாலியவான் என்ற மதியூகி
 
பக்தி கதைகள்
மாலியவான் என்ற மதியூகி

சுகேசன் என்ற அரக்கனுக்கும், தெய்வகதி என்ற கந்தர்வப் பெண்ணுக்கும் பிறந்த மூன்று மகன்களில் மூத்தவன் மாலியவான். அவனுக்கு சுமாலி, மாலி இருவரும் இளையவர்கள்.

சகோதரர்கள் மூவரும் பாதாள உலகிற்குப் படையெடுத்துச் சென்று, நாகர்களை அழித்தனர். அது மட்டுமின்றி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் அனைவரையும் துன்புறுத்தி வேடிக்கை பார்த்தனர். தேவர்கள் மஹாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் அரக்கர் மூவரையும் அழிப்பதாக உறுதியளித்தார்.

இதைக் கேள்விப்பட்ட அரக்க சகோதரர்கள் போர் புரிய புறப்பட்டனர். கடைசித் தம்பியான மாலியை வதம் புரிந்தார் மகாவிஷ்ணு. மற்ற இருவரும் பாதாள உலகில் ஒளிந்து வாழ்ந்தனர்.  அங்கு சுமாலி, தன் மகளான கேகசிக்கும் விச்ரவசுவிற்கும் திருமணம் முடித்தான். இத்தம்பதிக்குப் பிறந்தவனே அரக்கனான ராவணன். இவன் இலங்கை மன்னரான குபேரன் மீது போர் தொடுத்து விரட்டியடித்தான். தேவர்களின் தலைநகரான அமராவதி மீது தாக்குதல் நடத்தினான். இப்போரில் ராவணன் சார்பாக பிரகத்தன், மாரீசன், மாபெரும்பக்கன், மகோதரன் ஆகியோருடன் தாத்தா சுமாலியும் ஈடுபட்டார்.  அஷ்டவசுக்களில் ஒருவரான சாவித்திரன் கதாயுதத்தால் சுமாலியின் தலையை பிளக்க அவன் இறந்தான்.
இப்போது அரக்க சகோதரர் மூவரில் எஞ்சியவன் மாலியவான் மட்டுமே. மஹாவிஷ்ணுவுக்கு பயந்து பாதாள உலகில் பதுங்கியிருந்த இவன், தம்பியின் பேரனான ராவணன் வீரனாக இருந்ததால் இலங்கைக்கு வந்தான். ராவணனும் தன் மூத்த பாட்டனார் என்னும் உறவால் ஆதரித்தான். அமைச்சர் பதவியும் அளித்தான்.

ஆனால் மாற்றான் மனைவியைக் கவர்ந்த ராவணன் மீது மாலியவானுக்கு உடன்பாடு கிடையாது. பரம்பொருளான மஹாவிஷ்ணுவே ராமராக அவதரித்துள்ளார் என்பதை அவன் அறிந்திருந்தான். அனுமனால் இலங்கை தீக்கிரையான போது ராவணன் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் மாலியவான் பங்கேற்கவில்லை.
ஆனால் கடல் மீது பாலம் அமைத்து வானரப்படை இலங்கை நோக்கி வந்த போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றான். கலக்கமுடன் இருந்த  ராவணனிடம்,  ‘எதிரியான ராமனுடைய வரவு என்னை வருத்துகிறது. அனுமன் புரிந்த அழிசெயல்களை பொறுத்துக் கொண்டோம். கடலில் பாலம் கட்டியதன் மூலம் எதிரிகளின் பேராற்றலை அறிந்தோம். கடலும் ராமனுக்காக பாலம் கட்ட வழி விட்டது. ஒளிவீசும் மணிகளை ராமனுக்குக் காணிக்கையாக அளித்து மகிழ்ந்தான் வருணன். இந்த நிகழ்வுகளால் என் நெஞ்சமே பிளந்தது போலிருக்கிறது. இனி என்ன செய்வேன்?’ என பரிதவித்தான் மாலியவான்.
அவ்வளவுதான்... ராவணன் ஆத்திரம் அடைந்தான். மறைமுகமாக ராமனிடம் சரணடைய ஆலோசனை சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டான். ‘பாட்டனார் என்பதற்காக ஆதரித்ததற்கு நீங்கள் காட்டுகின்ற நன்றி போதும். உங்களின் பேச்சு வேடிக்கையாக இருக்கிறது. என்னுடன் சேரப் பிடிக்கவில்லை என்றால் துரோகி விபீஷணனைப் போல நீங்களும் ராமனுடன் சேருங்கள்’ என எரிமலையாக வெடித்தான்.
 
அப்போது வானரப்படையை வேவு பார்த்து விட்டு வந்த சுகன், சாரணர் என்னும் இருவர் படுகாயத்துடன் தப்பி வந்தனர். இவர்கள் ராவணன் அனுப்பிய ஒற்றர்கள் எனத் தெரிந்த வானரப்படையினர் நையப் புடைத்தனர். கடைசியாக ராமனின் கருணையால் உயிர் பிழைத்து வந்ததாகவும் கூறினர். பிரமிக்கத்தக்க வகையில் இருந்த வானரங்களின் எண்ணிக்கை, அவர்களின் பலம், ஆவேசம், போர்த்திறம் பற்றி இருவரும் எடுத்துரைத்தனர். ‘ராமன் கோபம் மிகக் கொண்டிருந்தான். அந்த செந்தாமரை முகம் கோபத்தால் சிவந்தது. ‘இனி இலங்கைக்கு மன்னன் விபீஷணனே, நான் பட்டம் சூட்டி விட்டேன். சீதையை விடுவிக்காவிட்டால் நரகத்தில் இட்டு அவனைப் பொசுக்குவேன்’ என ராமன் சபதம் செய்ததாகவும் தெரிவித்தனர்.  ராமனின் தோற்றமே அவனது ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அவனும், அவன் தம்பி லட்சுமணன், அனுமன் உள்ளிட்ட வானரங்கள் ஆவேசமாக செயல்படுகிறார்கள். இனியாவது சீதையை விடுதலை செய்து வரப்போகும் ஆபத்தில் இருந்து விடுபடுங்கள்’’ என்றனர்.  
 
ராவணன் மனம் கலங்கினான். இதைப் புரிந்து கொண்ட அரக்கர் படைத் தலைவன் பிரகத்தன், ‘ஒற்றர்கள் பணியை மட்டும் செய்வது நல்லது. ஆலோசனை சொல்ல தேவையில்லை. எதிரிகளின் படைபலத்தை மனதில் கொண்டு அதற்கேற்ப உத்திகளை வகுப்போம். ராமனைச் சரணடைவது நம் அரக்கர் குலத்துக்கே அவமானம்’’ என்றான்.

அதைக் கேட்டு தைரியம் கொண்டான் ராவணன். அங்கிருந்த  மாலியவான், ‘அந்தப் பரந்தாமனே ராமனாக உருவெடுத்து வந்திருக்கிறான்; ராமனின் தம்பியாக வந்திருக்கும் லட்சுமணன், அந்த ஆதிசேஷனின் அம்சம் ஆவான். பிரம்மா வழங்கிய வில்லைத்தான் ராமன் ஏந்தியுள்ளான். வாயு புத்திரனான அனுமனே வரும் யுகத்தில் பிரம்மனாகத் திகழப் போகிறான் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். அதோடு நீலன் முதலான வானரத் தலைவர்களாக வந்திருப்பவர்கள் தேவர்கள். கடலில் அமுதத்தோடு தோன்றிய மகாலட்சுமியே சீதை. இலங்கைக்கு அனுமன் வந்தபோது நம் காவல் தெய்வமான இலங்கா தேவியே தன் பொறுப்பில் இருந்து விலகி ஒதுங்கிச் சென்று விட்டாள். ஆகவே ராவணா, இனியும் தாமதிக்காதே. சீதையை விட்டு விடு’’ என மன்றாடினான்.
ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும்
சேயவள் எளியள் என்னா சிந்தையின் இகழல் அம்மா
துாயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றாத்
தாயவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார்
– கம்பர்
மாலியவான் ஒருகாலத்தில் இதே இலங்கையை ஆட்சி செய்தவன். விஷ்ணுவை எதிர்த்ததால் தன் தம்பி மாலியை இழந்தவன். இவனுக்கு விஷ்ணுவின் பலம் தெரியும். ஆகவே ராமனாக வந்துள்ள விஷ்ணுவை எதிர்த்தால் அழிவைத் தவிர வேறு வழியில்லை என நொந்து அறிவுரை சொன்னான். ஆனால் ராவணன் அவனது பேச்சை துச்சமாக மதித்தான். ‘விலகுங்கள் என் வழியை விட்டு லட்சியம் நிறைவேறாமல் நான் ஓயமாட்டேன்’  என கர்ஜித்தான். மறுநாளே சார்த்துாலன் என்னும் ஒற்றனை அனுப்பி வானரப் படையை வேவு பார்த்து வரக் கட்டளையிட்டான். குற்றம் புரிந்தவனுக்கு சந்தேகமும், பயமும் கூடவே வளரும். ஏற்கனவே சென்ற ஒற்றர்கள் எல்லாம் வானரங்கள் தாக்கியதால் புத்தி பேதலித்துப் போய்விட்டனர் என்றே கருதினான். ஆகவே மீண்டும் உறுதிப்படுத்த விரும்பி புதிய ஒற்றனை அனுப்பினான்.  
(தொடரும்)
பெட்டிச் செய்தி:
27.10.2023 (மாலியவான் – 1)
இந்தத் தொடரின் ஆசிரியர் பிரபு சங்கர் எழுதிய கோவிலுக்குப் போகலாமா சுட்டிகளே, என்ன விரதம் என்ன பலன், ஓம் சக்தி புத்தகங்களைப் பெற 18004257700ல் தொடர்பு கொள்ளலாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar