Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆயுதங்களை மறைத்த பாண்டவர்கள்
 
பக்தி கதைகள்
ஆயுதங்களை மறைத்த பாண்டவர்கள்


அர்ஜூனன் தன்னை ஒரு அரவாணியாக்கிக் கொண்டு பிருகன்னளை என்ற பெயரில் திகழப் போவதை குறிப்பிடவும் தர்மனின் பார்வை அடுத்து நகுலன் மீது சென்றது. ‘‘நகுலா... விராட நாட்டில் நீ என்ன செய்ய விரும்புகிறாய்?’’ எனக் கேட்டான். நகுலன் நன்றாக சிந்தித்து விட்டு ‘‘அண்ணா... நான் குதிரைகளை அறிவதில் நாட்டமுள்ளவன். அவற்றின் குணமறிந்தவன். நாட்டுக் குதிரை முதல் ஜாதிக் குதிரை வரை சகலத்தையும் அறிந்தவன். அவைகளை பராமரிப்பது, பழக்குவது என்பதெல்லாம் நன்கறிந்த விஷயங்கள். எனவே குதிரைகளின் காப்பாளனாக  திகழ விரும்புகிறேன். அச்சமயம், ‘தர்மக்ரந்தி’ என பெயர் சூட்டிக் கொள்வேன் என்றான்.
அடுத்து சகாதேவன் ‘‘அண்ணா... நகுலனுக்கு குதிரைகள் என்றால் எனக்கு பசுக்கள். மாடுகளை பராமரிப்பதிலும், அவைகளோடு இணக்கமாய் பழகுவதிலும் எனக்கு விருப்பம். அந்த வகையில் நான் விராடனின் மூவாயிரம் பசுக்களையும் பராமரிக்கும் ஒருவனாக ‘தந்திரபாலன்’ என்ற பெயரில் திகழ்வேன்’’ என்றான்.
அடுத்து மீதிமிருந்தாள் திரவுபதி.
‘‘என் இனிய ராஜேந்திரரே! நான் ‘சைரந்திரி’ என்ற பெயரில் அலங்காரக் கலை நிபுணியாக திகழ விரும்புகிறேன். ராஜ குடும்பத்து பெண்கள் அலங்காரத்தில் விருப்பம் உள்ளவர்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள். அப்படிப்பட்ட விராடனின் மனைவி, மகள்களுக்கு மருதாணியிட்டு, தலை பின்னி விட்டு அவர்களைப் பேரழகு பெட்டகம் போலாக்குவேன். அதுபோக பூக்கட்டுதல், மலர் அலங்காரம் செய்தல், ஆடை அணிகளை வடிவமைத்தலிலும் ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல தோழியாக அவர்களுக்கு ஆறுதலாக பேசி கதைகளும் கூறிடுவேன்’’ என்றாள்.  
மொத்தத்தில் தர்மன் ‘கங்கன்’ என்ற பெயருடனும், பீமன் ‘வல்லன்’ என்ற பெயருடனும் அர்ஜூனன் ‘பிருகன்னளை’ என்ற பெயருடனும், நகுலன் ‘தர்மக்ரந்தி’ என்ற பெயருடனும், சகாதேவன் ‘தந்திரபாலன்’ என்ற பெயருடனும், திரவுபதி ‘சைரந்திரி’ என்ற பெயருடனும்  விராட நாட்டுக்குச் சென்று விராடனின் அவையில் தங்களை ஒளித்துக் கொண்டு வாழ முடிவு செய்யவும், அதை தவுமிய மகரிஷியும் வரவேற்றார்.  
‘‘நீங்கள் திறனறிந்து உங்களை மாற்றிக் கொள்ள எண்ணியிருக்கிறீர்கள். நிச்சயம் உங்கள் அக்ஞாத வாசம் வெற்றிகரமாய் திகழ்ந்து முடியும்’’ என்றார். அப்படியே நீங்கள் பின்பற்ற வேண்டிய ராஜ நீதிகளை உங்களுக்கு உரைப்பேன். இவற்றை பின்பற்ற வேண்டியதும் அவசியம்.
எப்போதும் அரண்மனைக்குள் ‘உள்ளே வரலாமா’ எனக் கேட்டு அனுமதி பெற்ற பிறகே நுழைய வேண்டும். அரண்மனையில் விசேஷமான விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும். அவற்றை  ஒருக்காலும் தீண்டக்கூடாது. அதே போல் அரசன் கேட்காத நிலையில் ஒரு போதும் கருத்து கூறக் கூடாது.
அதே போல உகந்த தருணங்களில் உரியவரை புகழ்ந்திடத் தயங்கக் கூடாது. அரசனிடம் யாரேனும் பொய்யுரைத்தால் அதை எவரும் இயலாத தருணத்தில் அரசனின் அனுமதி பெற்று அது பொய் என்பதை எடுத்துரைக்க வேண்டும்’  இப்படி நடந்து கொண்டால் உங்கள் அக்ஞாத வாச காலம் குறைவின்றி கழிந்திடும்’’ என்றார் தவுமிய மகரிஷி.
அதன்பின் பாண்டவர்கள் விராட நாடு நோக்கி புறப்பட்டனர். வனவாச காலத்தில் தங்களை ஆதரித்த முனிகள், ரிஷிகள் என்று சகலரிடத்திலும் விடைபெற்றனர்.
காம்யக வனத்தை விட்டு புறப்பட்ட அவர்கள் ஒவ்வொரு நாளும் அறுபது நாழிகை நேரம் நடந்தனர். முதலில் தசார்ண தேசம், பின் பாஞ்சால தேசம், பின்யக்ருல்லோம தேசம், சூரசேன தேசம் என்று பல தேசங்களின் வழியே நடந்து யமுனா நதியின் தென்கரையை அடைந்து அங்கிருந்து மேற்கு முகமாக உள்ள விராடனின் மச்ச நாட்டுக்குள் நுழைந்தனர். இதற்கு அவர்களுக்கு 18 நாட்கள் தேவைப்பட்டன. வழியில் அவர்களை ஒருவருக்கும் அடையாளம் தெரியவில்லை. யாரோ தேசாந்திரிகள் என பார்ப்பவர்கள் கருதினர். வழி எங்கும் தர்ம தேவனான தர்மராஜனின் வரம் அவர்களுக்கு கைகொடுத்தது.
அதே வேளை துரியோதனனால் ஏவப்பட்ட நுாற்றுவர் படை அவர்களை நாடு நாடாக தேடியபடி திரிந்தது. அந்த படை சார்ந்தவர்களில் சிலர் பாண்டவர்களைப் பார்த்த போதும் அவர்களால் உணர முடியவில்லை. இறுதியாக விராட நாட்டு எல்லையை எட்டிய போது அவர்களின் ஆயுதங்களை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. தர்மனின் உடைவாள், பீமனின் கதாயுதம், அர்ஜூனனின் வீரகாண்டீபம், நகுலனின் கட்டாரி, சகாதேவனின் வஜ்ரகோடாரி ஆகிய ஐவகை ஆயுதங்களும் குருகுலத்தில் துரோணரால் அவர்களை ஆசியளித்து வழங்கியவையாகும். அதுபோக ஈட்டிகள், விசேஷ பாணங்கள், கத்திகளை அவர்கள் வரசித்திகளாய் பெற்றிருந்தனர். இவைகளை என்ன செய்வது என்ற கேள்வி அவர்களிடையே பிரதானமாயிற்று. அப்போது அவர்கள் விராட நாட்டு எல்லையில் ஒரு சுடுகாட்டையும், அந்த காட்டின் ஓரத்தில் உயர்ந்த ஒரு வன்னி மரத்தையும் கண்டார்கள். அந்த மரம் ஆயிரம் ஆண்டுகளை கடந்திருந்தது. அதன் கிளைகளும், தழைகளும் ஒரு பிரம்ம ராட்சஷனின் தலைமுடிக் கற்றைகள் போலிருந்தன. அந்த வன்னிமரத்தின் கிளைகளில் ஏராளமாக கூகைகளும், பிணந்தின்னிக் கழுகுகளும் அமர்ந்து கூடு கட்டியிருந்தன. காட்டு நாய்களும், நரிகளும், கீரிப் பிள்ளைகளும் அதன் அடிப்பரப்பில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தன. அந்த வன்னி மரத்தில் பெரிதாக ஒரு துவாரமும் அதனுள் நாகங்களும் குடியிருந்தன.
ஒரு தீப்பந்தத்தை உண்டாக்கிக் கொண்டு பீமன் முதல் ஆளாக அந்த மரத்தின் நிழல் பகுதியை அடையவும் நாய்களும், நரிகளும் தெறித்து ஓடின. ஆங்காங்கே கழுகுகள் புசித்து விட்டு துப்பிய எலும்புகள் கிடந்தன.
மற்ற ஐவரும் மெல்ல அந்த பகுதிக்கு வந்தனர். ‘‘அண்ணா... இந்த மரம் மனிதர்கள் நெருங்கி வர அச்சமூட்டுவதாய் உள்ளது’’ என்று அவன் சொன்ன சமயம் மரக்கிளை ஒன்றில் யாரோ ஒருவன் துாக்குப் போட்டுத் தொங்கிய நிலையில் அவன் உடலின் சதைகள் காலத்தால் உதிர்ந்த நிலையில் எலும்புக் கூடு மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது.
திரவுபதி பயந்தாலும் வெளிக் காட்டாமல் மனதுக்குள் சாவித்ரி தேவியின் காயத்ரியை உபாசித்தாள். இதனால் அவள் புலன்களுக்கு ஆவிகள் சிலவும் கண்ணில் பட்டன. சில ஆவிகள் முக்காடிட்டு அமர்ந்திருப்பது போல சாம்பல் நிறத்தில் தென்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தன.
‘‘நான் வாழ்வின் துன்பத்தை தாங்க இயலாமல் தற்கொலை செய்து கொண்டது பெரும் பிழை. அதனால் விண்ணேக முடியாமல் மறுபிறப்புக்கும் வழியின்றி விதேகமாய் இப்படிக் கிடக்கிறேன். எனக்கு எப்போது விமோசனம் கிட்டும் என தெரியவில்லையே’’ என்று அது அரற்றுவது திரவுபதி காதில் ஒலித்தது. பாண்டவர்களும் கூட அதைக் கேட்டனர்.
‘‘அண்ணா... மனிதர்கள் நடமாட்டம் இல்லாத எவரும் வர அச்சப்படும் ஒரு இடமாக இந்த இடம் உள்ளது. இங்கே உள்ள மரப் பொந்துக்குள் நம் ஆயுதங்களை மூடையாக கட்டிப் போட்டு விட்டு செல்வோம். அக்ஞாதவாசம் முடியவும் வந்து எடுத்துக் கொள்வோம்’’ என்றான் அர்ஜூனன்.
‘‘ஆம் தம்பி... இப்போது நமக்கிருக்கும் ஒரே வழி இது தான்’’ என தர்மனும் ஒப்புக் கொண்டான். சகாதேவனோ தான் அறிந்த விருட்ச சாஸ்திரத்தை தொட்டு பேசலானான்.
‘‘அண்ணா... வன்னி மரமானது வீரம், செல்வம் இரண்டையும் தரவல்லது.  இதற்கு தெய்வீகத்தன்மை உண்டு. மகாலட்சுமியின் அம்சமாகவும், அமுத கடைசலில் கிட்டிய விருட்ச விதைகளில் இது பிரதானமானது. கற்பக விருட்சத்தின் தன்மைகளில் நுாற்றில் ஒரு பங்கு இதற்கு இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே நம் புனித ஆயுதங்கள் இங்கே இருப்பதே சாலச் சிறந்தது’’ என்றான்.
சகாதேவா... இது போல் எந்தெந்த விருட்சங்கள் மனிதர்களுக்கு இதமானவை என்று கூறுவாயா?’’ என்று கேட்டான் பீமன்.
‘‘நான் அறிந்ததை கூறுகிறேன். தேக்கு நிலையானது. அழிவற்றது. கருங்காலி எதிர்மறைக் கதிர்வீச்சை கத்தரிக்கும். கருங்காலி கையில் இருக்க திருஷ்டி உண்டாகாது. புளியன் நோயுண்டாக்கும். ஆனால் அதன் கொழுந்து மருந்தாகும். ஆலும், அரசும் தாயும் தந்தையும் போல மிக இனியதாகும். அதிலும் அரசங்காற்றில் ஜீவத்தன்மை மிக உண்டு. ஆலின் விழுதுக் கொழுந்து எலும்புக்கு வலு சேர்க்கும். வேம்பு தெய்வீகமானது. தேவதைகள் இளைப்பாறிட இடம் தருவது. இதன் வேர் முதல் இலை, பழம் என எல்லாமே மாமருந்து. நோவண்ணா(நோனா) அமிர்த குணம் மிக்கது. இதன் பழங்களை தொடர்ந்து உண்பவர் 120 ஆண்டுகள் நோயின்றி வாழ்வர். துளசி சுவாச கோசங்களுக்கு மாமருந்து. வில்வம் உடற்சூட்டை தணிக்கும். எட்டி வித்தைக்கானது. இதன் பலகை மேல் அமர்ந்தே எதிர்மறை வித்தை கற்பர்.
இப்படி சகாதேவன் கூறிக் கொண்டே போனான். அதே வேளையில் ஆயுதங்களை ஒரு மூடையாக சீந்தில் கொடிகளாலும், காட்டுக் கொடிகளாலும் கட்டி முடித்து அதை மரப் பொந்துக்குள் போட்டு மேலே சில காய்ந்த மரத்துண்டுகளை வைத்து மூடினான் அர்ஜூனன்.
அப்படியே ஐவரும் அந்த வன்னி மரத்தடியில் தாங்கள் மாற வேண்டிய வேடத்தை மனதில் நினைத்துக் கொண்டு தர்ம தேவனை துதிக்க அவர்களின் உருவங்கள் விரும்பிய பணிக்கான உருவமாக மாறின. அதன்பின் ஒவ்வொருவராக விராட மன்னனை சந்திக்க புறப்பட்டனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar