Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கயாசுரன் வதம்
 
பக்தி கதைகள்
கயாசுரன் வதம்


அசுரர்கள் என்றாலே தீய எண்ணமுடையவர்கள், தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என அனைவரையும் துன்புறுத்தி மகிழ்பவர்கள் என்றே பலரும் நினைப்பர். அசுரர்களில் நல்லெண்ணத்துடன் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன்தான் கயாசுரன்.

தன் சக்தியைப் பெருக்க வேண்டும் என கயாசுரன் தவத்தில் ஈடுபட்டான். அதன் பயனாக சக்திகள் பெருகிக் கொண்டே இருந்தன. இதனால் தேவலோகத்துக்கு துன்பம் நேருமோ என இந்திரன் கவலை கொண்டான். பிரம்மாவிடம் ஆலோசித்த போது,  “கயாசுரனால் துன்பம் நேரும் என்ற உன் அச்சம் நியாயமானதே. அதே வேளையில் தவத்தை இடையில் நிறுத்தினால் அவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரும். அதனால் தேவலோகத்துக்குத்தான் முதலில் ஆபத்து வரும்” எனத் தெரிவித்தார்.

அடுத்ததாகச் சிவபெருமானைச் சந்தித்து ஆலோசனை கேட்டான். “தவம் புரிவோர் வேண்டும் வரத்தை தருவதே என் கடமை. அதை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. உனக்குத் தேவையான உதவியைத் திருமாலிடம் கேள்” என அனுப்பி வைத்தார்.


திருமாலை சந்தித்த போது, “இந்திரா... அசுரர்கள் தாங்கள் பெற்ற சக்திகளைத் தீமை செய்யவே அதிகம் பயன்படுத்துவார்கள். கயாசுரனின் தவத்தை நிறுத்த நான் முயற்சிக்கிறேன்” எனத் தெரிவித்தார். திருமாலின் பதிலைக் கேட்ட இந்திரன் மகிழ்ச்சியுடன் தேவலோகம் திரும்பினான்.
 
கயாசுரன் தவமிருக்கும் இடத்திற்குச் சென்றார் திருமால். அதை நேரில் கண்டதும் அவன் மீது இரக்கப்பட்டு தவத்தைக் கலைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். பயன் தரும் வழியில் ஏதாவது வரம் தர முடிவு செய்தார். “கயாசுரா, உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்றார்.

“சுவாமி... தங்களின் அழகிய தோற்றம் கண்டு மகிழ்கிறேன். தேவர்கள், முனிவர்கள், துறவிகளைக் காட்டிலும் என் உடல் புனிதமாக மதிக்கப்பட வேண்டும். என் பாதங்களைத் தொட்டு வணங்குவோரின் பாவங்கள் நீங்கி, அவர்கள் புனிதமடையும் வரத்தைக் கொடுங்கள்” எனக் கேட்டான்.  

திருமாலும் வரத்தைத் தந்து மறைந்தார். வரத்தைப் பெற்றதை எண்ணி அசுரனும் மகிழ்ந்தான். இதன் விளைவு பற்றி அறியாத இந்திரனும் தேவர்களுக்கு ஆபத்தில்லை என மகிழ்ந்தான்.  

கயாசுரன் பெற்ற வரத்தின் மகிமையால் மனிதர்கள், முனிவர்கள், அசுரர்கள் என பலரும் தங்களின் இறுதிக் காலத்தில் அவனது பாதத்தைத் தொட்டு வணங்கி எளிதில் சொர்க்கம் சென்றனர்.  தீயவர்கள், அசுரர்கள், கொடிய பாவம் செய்தவர்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.  

 பாவம் செய்தவர்கள் பலரும் தண்டனை இன்றி நேரடியாகச் சொர்க்கம் சென்ற பின்பு, பூலோகத்தில் நற்செயல்கள் குறையத் தொடங்கின. கயாசுரனின் பாதம் தொட்டு வணங்கினால் எளிதாகச் சொர்க்கம் செல்லலாம் என்ற எண்ணத்தில் கோயில்களில் வழிபாடு செய்வதை மறந்தனர்.

மனிதர்கள், அசுரர்கள் என அனைவருக்கும் கயாசுரனே கடவுளாக விளங்கினான். பிரம்மா, திருமால், சிவபெருமான் உள்ளிட்ட எந்தக் கடவுளுக்கும் பூமியில் மதிப்பில்லாமல் போனது. பூமியில் இருந்து நரகத்திற்கு செல்வோர் யாருமில்லை. தனக்கென பணி எதுவுமில்லாமல் போன எமதர்மன் கவலையுடன் பிரம்மாவைச் சந்தித்தான். “சுவாமி, அசுரனின் பாதம் தொட்டு வணங்கி அனைவரும் சொர்க்கம் செல்வதால், நரகம் தேவையில்லை என்ற நிலை உருவாகி விட்டது. சொர்க்கத்திற்குச் செல்வோருக்கு மறுபிறப்பு இல்லை என்பதால் பூலோகத்தில், பிறப்பு, இறப்பு சுழற்சியே நின்று விட்டது. படைப்புக் கடவுளான தாங்கள் தான் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

பிரம்மாவும் எமதர்மனுடன் சேர்ந்து வைகுண்டம் சென்று திருமாலைச் சந்திக்கச் சென்றார். “சுவாமி... கயாசுரனுக்குத் தாங்கள் கொடுத்த வரத்தால் பூமியில் நற்செயல் ஏதும் நடக்கவில்லை. தீயவர்களும் கயாசுரனின் பாதம் தொட்டு வணங்கினால் சொர்க்கம் செல்லலாம், செய்த பாவத்திற்கு  தண்டனை இல்லை என மரண பயமின்றி வாழ்கின்றனர். இந்த பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும்” என வேண்டினார். கயாசுரனிடம் பேசி விரைவில் தீர்வு காண்பதாக திருமாலும் உடனடியாகத் தெரிவித்தார்.  

அதன் பின்னர் கயாசுரனைச் சந்தித்த திருமால், “வரத்தின் பயனாக தீயவர் பலரும் உன்னால் சொர்க்கம் சென்று விட்டனர். மரண பயம் என்பதே பூமியில் இல்லாமல் போனது. அந்த பயமே, ஒருவனை நல்வழியில் கொண்டு செல்லும். பூமியில் நற்செயல்கள் தொடர நீ உதவி செய்ய வேண்டும்” எனக் கேட்டார்.
வரம் கொடுத்த திருமாலே உதவி கேட்டு வந்திருப்பதை நினைத்துப் பெருமைப்பட்ட அசுரன், “என்ன உதவி வேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான்.

 “வரத்தின் பயனாக உன் மூலம் தீயவர் பலர் சொர்க்கம் சென்றுள்ளனர். அவர்கள் செய்த பாவங்களுக்கான தண்டனை நம்மைச் சேருமோ என்ற அச்சம் உண்டாகிறது. அதைப் போக்கவும், நடந்த அனைத்தையும் நல்லதாக மாற்றவும் வேள்வி நடத்த வேண்டும். அதற்கான புனித இடம் வேறில்லை. தற்போதுள்ள நிலையில் உன் உடல் மட்டுமே புனிதமானதாக உள்ளது. எனவே உன் உடலை தானமளிக்க வேண்டும் என்றார்.
சிறிது நேர யோசனைக்கு பின், “தாங்கள் நடத்தும் வேள்விக்கு என் உடலைத் தானமளிக்க சம்மதிக்கிறேன். அதற்கு முன்னதான என் விருப்பத்தை தாங்கள் நிறைவேற்ற வேண்டும்” என்றான். அதை திருமாலும் சம்மதித்தார்.

 “வேள்விக்குத் தரப்படும் என் உடல் இருக்குமிடம் ‘கயா’ என்னும் என் பெயரில் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்க வேண்டும். அனைத்துத் தெய்வங்களும் ஒன்றாகச் சேர்ந்து இங்கு வருவோருக்கு அருள்புரிய  வேண்டும். திதி, தர்ப்பணம் செய்வோருக்கு அவர்களின் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கி அனைவரும் சொர்க்கத்தை அடைய வேண்டும்” என வேண்டினான்.

இறப்பிற்குப் பின்பும், அவனது உடல் இருக்கும் இடத்தில் வழிபடுபவர்கள் சொர்க்கம் செல்ல வேண்டும் என கேட்பதை அறிந்த திருமால் வியப்படைந்தார். அசுரனின் வேண்டுதலை ஏற்பதாக திருமால் தெரிவித்தார்.   

 கயாசுரன் வடக்கு நோக்கித் தலை வைத்து, தெற்கு நோக்கிக் காலை நீட்டிப் படுத்தான். அவனது உடல் மீது பிரம்மாவின் தலைமையில் வேள்வி நடந்தது. அது முடியும் போது, வேள்வியின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் அசுரனின் உடல் சற்று அசைந்தது.  அப்போது திருமால் அவனது மார்பின் மீது ‘தர்மசீலா’ எனக் குறிக்கப்பட்ட கல்லை வைத்து உடலை அசைவின்றி செய்தார். வேள்வியும் சிறப்பாக நிறைவேறியது.   

வேள்வி முடிந்த பின்னர் அசுரன் உடலில் வைக்கப்பட்ட கல்லின் மீது கால்கள் இரண்டையும் பதித்த திருமால், அந்த உடலை பூமிக்குள் அழுத்தவே மண்ணுக்குள் புதைந்தது. உடல் புதைந்த இடம் ‘கயா’ என பெயர் பெற்றது. அசுர குலத்தில் தோன்றினாலும் பெற்ற வரத்தால் அனைவரும் சொர்க்கம் செல்ல உதவியதாலும், திருமாலின் வேள்விக்கு உடல் தானம் அளித்ததாலும் அவன் திருமாலின் திருவடிகளை அடைந்தான்.

திருமாலின் திருவடி பட்டதால் அவன் உடல் புனிதமடைந்தது. பெற்ற வரத்தின்படியே, அனைத்துத் தெய்வங்களும் கயாவில் ஒன்று சேர்ந்தனர். மேலும் முன்னோர் வழிபாடு செய்தால் அவர்கள் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்க்கம் அடைந்தனர். முன்னோர் வழிபாட்டுக்கான சிறந்த தலமாக கயா இன்றும் விளங்குகிறது. 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar