Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எழுத்தாளரின் பேத்தி
 
பக்தி கதைகள்
எழுத்தாளரின் பேத்தி

என் முன் அமர்ந்திருந்த இளம்பெண்ணைப் பார்த்தேன். பெயர் நிஷா. 25 வயது. பருத்திப்புடவையில் பாந்தமாக வந்திருந்த அழகிக்கு என்ன பிரச்னை இருக்க முடியும்? நாங்கள் இருந்தது ஒரு உணவகத்தில்.
பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு குண்டைத் துாக்கிப்போட்டாள் நிஷா.
“உங்களுக்கு எழுத்தாளர் ...  தெரியுமா?”
“தெரியுமாவா? நான் தெய்வமா மதிக்கற எழுத்தாளராச்சே அவரு. அவரப் பாக்க முடியலேங்கறதுதான் என் வாழ்க்கையில இருக்கற பெரிய சோகம்”
“அவரோட மகள் வயிற்றுப் பேத்தி நான்”
என் மகளைவிட வயதில் குறைந்த நிஷாவைப் பார்த்து எழுந்து நின்று கைகூப்பினேன். நிஷா பதறினாள்.
“இது உன் தாத்தாவுக்குச் செய்யற மரியாதைம்மா. உன் பிரச்னை என்னன்னு சொல்லும்மா”
“தாத்தாவோட எழுத்தையெல்லாம் படிச்சி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கேன். என் தாத்தாங்கறதுக்காகச் சொல்லல. அந்த மாதிரி எழுத்தாளர் ஒரு யுகத்துக்கு ஒரு தரம்தான் பிறப்பாருன்னு தோணுது. ஆனாலும் என் மனசுல ஒரே ஒரு வருத்தம் சார்”
“சொல்லும்மா”
“சிதம்பரம்னு ஒருத்தர் தாத்தாவோட எழுத்த கன்னா பின்னான்னு விமர்சனம் பண்ணியிருக்காரு. அவர் விமர்சிச்ச தாத்தாவோட கதைய எல்லாம் திருப்பி ஒருதரம் படிச்சேன். சிதம்பரம் சுட்டிக்காட்டின குறை எதுவுமே அதுல இல்ல. எல்லாப் புத்தகங்களும் லட்சக்கணக்குல வித்திருக்கு. ரெண்டு கதைய சினிமாவா எடுத்திருக்காங்க. ரெண்டுமே பெரிய அளவுல வெற்றியடைஞ்சிருக்கு. சிதம்பரம் ஏன் அவ்வளவு கடுமையா விமர்சிச்சாருன்னு தெரியல. அம்பது வருஷம் கழிச்சு அந்த விமர்சனத்தப் படித்த எனக்கே  கண்ணுல தண்ணி வருது. அதப் படிச்சபோது தாத்தா மனசு என்ன பாடு பட்டிருக்கும்?””
சொல்லும்போதே நிஷாவின் கண்கள் நிறைந்துவிட்டன.
“எழுத்துன்னு  வந்துட்டாலே விமர்சனம் இருக்கத்தாம்மா செய்யும். அது கடுமையா இருக்கலாம். பொய்யாக்கூட இருக்கலாம். ராமலிங்க வள்ளலார் எழுதின திருவருட்பா பத்தி தெரியுமா?”
“தெரியும் சார்.”
“அதப் படிச்சாலே அழுகை வந்திரும். ஆனா அதையும் ஒருத்தர் அருட்பா இல்ல, மருட்பான்னு விமர்சனம் செஞ்காரு. அந்த விமர்சனத்தால வள்ளலார் பாதிக்கப்படல. அதே மாதிரி சிதம்பரத்தோட விமர்சனத்தால உங்க தாத்தாவோட புகழுக்கு பாதிப்பு ஏற்படலையே. அப்புறம் ஏன் கவலைப்படற?”
“எனக்கு மனசு ஆறல, சார்.”
“இதுல நான் என்ன செய்ய முடியும்னு நெனக்கற நிஷா?”
“தெரியல சார். பச்சைப்புடவைக்காரிகிட்ட சொல்லி அழணும்னு தோணிச்சி. உங்ககிட்ட சொல்லிட்டேன். இனிமே உங்க பாடு, பச்சைப்புடவைக்காரி பாடு. நான் வரேன் சார்.”
நிஷா சென்ற பிறகும் அங்கேயே அமர்ந்திருந்தேன். கல்லாவில் அமர்ந்திருந்த ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள்.
“சாப்பிட்டாச்சுன்னா கிளம்பிடணும். இப்படி உக்காந்துக்கிட்டேயிருந்தா?”
“மன்னிச்சிருங்க மேடம். இதோ கிளம்பிட்டேன்.”
“அந்தப் பெண் சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறாயா?”
மேனேஜரின் குறும்புச் சிரிப்பே அவளைக் காட்டிக்கொடுத்துவிட்டது.
தாயை விழுந்து வணங்கினேன்.
“உன்னை சாக்காக வைத்து இரண்டு பேருக்கு மன அமைதியைத் தரலாம் என நினைக்கிறேன்”
“கட்டளைக்காகக் காத்திருக்கிறேன், தாயே!”
“நாளை எழுத்தாளர் பேத்தியை அழைத்துக்கொண்டு அந்த விமர்சகரைப் பார்க்கப் போ”
“அவர்...’’
“இருக்கிறார். படுத்த படுக்கையாக இருக்கிறார். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்”
நிஷாவை அழைத்து விஷயத்தைச் சொன்னேன்.
“வேண்டாம் சார். பயமா இருக்கு. அந்தாளப் பாத்தேன்னா கண்டபடி கத்திருவேன். அடிச்சாலும் அடிச்சிருவேன். எதுக்கு விஷப் பரீட்சை?”
“சில சமயம் விஷத்த பரீட்சை செஞ்சாத்தான் அதுக்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்க முடியும். பச்சைப்புடவைக்காரியா கொடுக்கற வாய்ப்பு இது. அப்புறம் உன் இஷடம்மா”
சில விநாடிகள் மவுனத்திற்குப் பிறகு வருகிறேன் என்றாள்.  என் செல்வாக்கை பயன்படுத்தி விமர்சகரைப் பார்க்க அனுமதி வாங்கினேன்.
காரில் என்னுடன் வரும்போதே நிஷா உணர்ச்சிப் பிழம்பாக இருந்தாள். ஏதாவது ரசாபாசம் நடந்துவிடக்கூடாதே என தாயிடம் பிரார்த்தித்தேன்.
விமர்சகர் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார். நிஷாவை இன்னார் பேத்தி என அறிமுகப்படுத்தியதும் கை கூப்பினார்.
“உங்களையும் நான் தாத்தான்னு கூப்பிடலாமா?”
நிஷாவின் கேள்வி விமர்சகருக்கு கண்ணீரை வரவழைத்தது.
“ஏன் தாத்தா அப்படி விமர்சனம் எழுதினீங்க? இப்போ அதப் படிக்கும்போதே கண்ணீர் வருதே! என் தாத்தா என்ன பாடு பட்டிருப்பாரு? ஏன் அப்படிச் செஞ்சீங்க, தாத்தா?”
விமர்சகரிடமிருந்து ஒற்றை வார்த்தை உதிர்ந்தது.
“பொறாமை”
நாங்கள் அதிர்ந்தோம்.
பெரிதாக அழத் தொடங்கினார் விமர்சகர்.
“உங்க தாத்தாவும் நானும் உயிர் நண்பர்கள்மா. ரெண்டு பேரும் ஒரே சமயத்துல எழுத ஆரம்பிச்சோம். கடவுள் உங்க தாத்தாவுக்கு அபரிமிதமான திறமையக் கொடுத்திருந்தாரு. எனக்கு அப்படி எதுவும் கொடுக்கல. உங்க தாத்தா வேகமா முன்னேறினதப் பார்த்து பொறுக்க முடியல. என் மனசிலிருந்த பொறாமைதான் விமர்சனமா வெடிச்சது.
“என் பொறாமைக்குச் சரியான தண்டனை கொடுத்துட்டா பச்சைப்புடவைக்காரி. வாழ்வில் எதுவும் சாதிக்காம வீணாப்போயிட்டேன். பக்கவாதம் வந்து பத்து வருஷமா வாழவும் முடியாம சாகவும் முடியாமத் தவிச்சிக்கிட்டிருக்கேன். உன் தாத்தாவுக்குச் செஞ்ச துரோகத்துக்கு உன் கையப் பிடிச்சி மன்னிப்பு கேட்டுக்கறேன் தாயி”
நீட்டிய நிஷாவின் கையில் முகம் புதைத்து அழுதார் அந்த எண்பது வயது முதியவர்.
அதன் பின் யாரும் அதிகம் பேசவில்லை.
வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று காரை நோக்கி நடந்தபோது அந்த வீட்டிலிருந்து பெரிய அழுகுரல் சத்தம் கேட்டது. நானும் நிஷாவும் அர்த்தமுள்ள பார்வைகளைப் பரிமாறிக் கொண்டோம்.
“நிஷா இதுதான் உங்க தாத்தாவுக்குக் கிடைச்ச மிகப் பெரிய இலக்கிய விருது. அவரக் கடுமையா விமர்சிச்சவரே பொறாமையிலதான் அப்படி எழுதினேன்னு சொன்னாரு பாரு அதவிட பெரிய அங்கீகாரம் உங்க தாத்தாவோட எழுத்துக்கு இருக்கவே முடியாது.”
நிஷா இறங்க வேண்டிய இடம் வந்ததும் கண்ணீர் மல்க கைகூப்பி  விடைபெற்றாள். நான் காரில் ஏறும் முன் அங்கே வண்டியில் காய்கறி விற்கும் பெண் என்னை அழைத்தாள்.
“நடந்தது நிஷாவிற்கு நிம்மதி கொடுக்க அல்ல. அந்த விமர்சகருக்கு நிம்மதியான சாவையும் நல்ல மறுபிறவியையும் கொடுக்க. அவன் என் பக்தன். அவன் வாழ்வில் இருந்த ஒரே கரும்புள்ளி இந்தப் பொறாமைதான். அதையும் நிஷாவின் மூலம் துடைத்துவிட்டேன். உனக்கு என்ன வேண்டும் கேள்”
“பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறேன் தாயே!”
“என் அடிமை பயத்தில் நடுங்கினால் எனக்குத்தானே அவப்பெயர்?”
“நான் அந்த விமர்சகரை வில்லனாகப் பார்க்கவில்லை. சாதாரண மனிதராகத்தான் பார்க்கிறேன். நான் எத்தனையோ பேரின் மீது பொறாமைப்பட்டிருக்கிறேன். அது கடுமையான வார்த்தைகளாக வெளிப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் என் மனதில் தீமை இருந்தது உண்மைதானே தாயே!’’
“உண்மைதான். இனி உன் மனதில் பொறாமையே வரக் கூடாது என்ற வரத்தைக் கேட்கப் போகிறாயோ? அதை வரமாகத் தரமுடியாது”
“அது இல்லை, தாயே என் எழுத்தைப் படிப்பவர்களுக்கு உங்கள் மீது அன்பு வரவேண்டும். எந்தக்காரணம் கொண்டும் என் மீது பொறாமை வரக்கூடாது. என்னால் யாருடைய வாழ்க்கையும் அந்த விமர்சகர் வாழ்க்கையைப் போல் சிக்கலாகி விடக் கூடாது தாயே!”
பச்சைப்புடவைக்காரி மறைந்த பின்னும் அவள் சிரிக்கும் சத்தம் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar