சப்த ரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவர், கர்தபிரஜாபதியின் மகளான அனுசூயாவை திருமணம் செய்தார். கற்பில் சிறந்த அனுசூயாவைக் கண்ட சரஸ்வதி, மகாலட்சுமி, பார்வதி ஆகிய மூவரும் அவளைச் சோதிக்க முடிவு செய்தனர். அதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பூலோகத்திற்கு முனிவர்கள் வடிவில் அனுப்பினர். அவர்களும் அத்ரி முனிவரின் இருப்பிடத்தை அடைந்த போது அனுசூயா மட்டும் தனியாக இருந்தாள். அவளிடம் தங்களின் பசியைப் போக்க உணவளிக்கும்படி வேண்டினர். உணவு சமைத்த அவள் பரிமாற வந்த போது கோரிக்கை ஒன்றை விடுத்தனர்.
ஆடை உடுத்தாமல் உணவு பரிமாற வர வேண்டும் என்றனர். அனுசூயா தன் கணவரான அத்ரி முனிவரை தியானித்து வழிகாட்டும்படி வேண்டினாள். என்ன ஆச்சரியம்! மூவரும் குழந்தைகளாக மாறினர். அவர்களை வாரி எடுத்து பாலுாட்டினாள் அனுசூயா. கணவர் வந்ததும் நடந்ததை தெரிவித்தாள். ஞான திருஷ்டியால் நடக்கப் போவதை அவர் அறிந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் மும்மூர்த்திகள் திரும்பி வராததால், தேவியர் மூவரும் நாரதர் மூலம் நடந்ததை எல்லாம் கேட்டு அறிந்தனர். அனுசூயாவிடம் மன்னிப்பு கோரி கணவர்களைத் திருப்பித் தருமாறு வேண்டினர். இரக்கப்பட்ட அவளும் மூவரையும் பழைய நிலைக்கு மாற்றும்படி கணவரிடம் வேண்டினாள். அவரும் சம்மதிக்க குழந்தைகள் அங்கிருந்து மறைந்தன. பின்னர் மும்மூர்த்திகளும் தங்களின் இயல்பான கோலத்தில் அனுசூயா, அத்ரி முனிவருக்கு காட்சியளித்தனர். அத்ரி, அனுசூயா தம்பதியின் மகனாக மும்மூர்த்தி அம்சத்துடன் ‘தத்தாத்ரேயர்’ என்னும் பெயரில் மகாவிஷ்ணு பிறக்க இருப்பதாகச் சொல்லி விட்டு புறப்பட்டனர்.
அதன்படியே சுசீந்திரம் என்னும் தலத்தில் மார்கழி பவுர்ணமி அன்று மிருகசீரிட நட்சத்திர நாளில் சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா இணைந்த அவதாரமாக தத்தாத்ரேயர் அவதரித்தார். மவுனமாக இருந்த அவர், மலைகளிலும், குகைகளிலும், காடுகளிலும் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். அவரைச் சுற்றி எப்போதும் ஒளிவெள்ளம் இருந்தது. அவரைக் கண்ட முனிவர்கள் அனைவரும் குருநாதராக ஏற்றுக் கொண்டனர்.
மும்மூர்த்திகளின் அம்சமாக சங்கு, சக்கரம், மழு, திரிசூலம், ஜபமாலை, கமண்டலத்தை தத்தாத்ரேயர் தாங்கியிருந்தார். காணாமல் அல்லது திருடு போன பொருட்களை மீண்டும் பெறச் செய்யும் கார்த்தவீரியார்ஜுன மந்திரத்தின் மூலகாரணர் தத்தாத்ரேயரே. பரசுராமருக்கு குருவாக இருந்து ஸ்ரீவித்யா உபாசனை உள்ளிட்ட மந்திரங்களை உபதேசித்தவரும் இவரே. இவருக்கு 24 குருநாதர்கள் இருந்தனர். தத்தாத்ரேயர் அவர்களைப் பற்றிச் சொல்லும் போது, ‘பூமி, நீர், காற்று, தீ, ஆகாயம், நிலா, சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, தேனீ, யானை, தேன் எடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் தாசி, குரரம் என்னும் பறவை, சிறுவன், ஆயுதம் தயாரிப்பவன், சிறுமி, பாம்பு, சிலந்தி, புழு ஆகியோர் என் குருநாதர்கள். இதில் பூமியிடம் பொறுமையைக் கற்றுக் கொண்டேன். துாய்மையை நீரிடம் தெரிந்து கொண்டேன். யாருடன் பழகினாலும் பட்டும், படாமலும் இருக்க வேண்டும் என்பதைக் காற்று உணர்த்தியது. எப்போதும் பிரகாசமுடன் இருக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; மனம் பரந்து விரிந்ததிருக்க வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
வளர்பிறை முடிவில் பவுர்ணமியாகவும், தேய்பிறை முடிவில் அமாவாசையாகவும் மாறினாலும் நிலா ஒன்று தானே. அதுபோல இளமை, முதுமை என மாறுபாடு வந்தாலும் அவை உடலுக்கே அன்றி உயிருக்கு அல்ல என்பதை உணர்ந்தேன். ஒரே ஒரு சூரியன் இருந்தாலும் அது தண்ணீரில் பலவாக பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
வேடன் ஒருவன் புறாக் குஞ்சுகளை வலைவிரித்துப் பிடித்தான். அவற்றின் மீது பாசம் கொண்ட தாய்ப்புறா தானும் வலிய வந்து அவனிடம் சிக்கியது. இதில் இருந்து துன்பத்திற்கு காரணம் பாசம் என்பதை அறிந்தேன். எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் இரையை ஏற்பது போல, கிடைப்பதை உண்டு வாழ வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் மனதை ஓரிடத்தில் செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது. தேனீக்கள், பூக்களிடம் இருந்து தேனைப் பெறுவது போல, துறவிகளும் உணவை யாசகமாக பெற வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
குழிக்குள் விழுந்த பெண் யானையைக் கண்ட ஆண் யானை, அதன்மீது ஆசை கொண்டு தானும் குழியில் வீழ்ந்தது. இதிலிருந்து பெண்ணாசை துன்பத்துக்கு ஆளாக்கும் என்பதை உணர்ந்தேன்.
தேனீக்கள் சேகரித்த தேனை, தேன் சேகரிப்பவன் அபகரித்துச் செல்கிறான். இதிலிருந்து அபரிமிதமாக சேர்த்த பொருள் அபகரிக்கப்படும் என்பதை அறிந்து கொண்டேன்.
ஓடுவதில் சிறந்தது மான், அது இசையைக் கேட்க நேர்ந்தால் மயங்கி விடும். அப்போது கொடிய விலங்குகள் அதை இரையாக்கி கொள்ளும். எனவே இசை, நடனத்தில் நாட்டம் கொள்ளக்கூடாது என உணர்ந்தேன். நாவை அடக்க முடியாததால் வரும் சபலத்தால், துாண்டிலில் மீன்கள் சிக்கும். எனவே நாவை அடக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றேன்.
பிங்களா என்ற நாட்டியக்காரி தன்னை நாடி வந்தவர்களின் மூலம் வருமானம் பெற்றாள். பின்னர் கிடைத்தது போதும் என்று நிம்மதியாக துாங்குவதைக் கண்டேன். அவளிடம் இருந்து ஆசையை விட்டால் திருப்தி ஏற்படும் என்பது புரிந்தது.
குரரம் என்பது ஒரு சிறுபறவை. அது துாக்கிச் செல்லும் மாமிசத்தை மற்ற பெரிய பறவைகள் பறிக்க வந்தால், உணவை கீழே போட்டு விடும். பெரிய பறவையும் அதை துரத்தாமல் மாமிசத்தை நாடிச் செல்லும். ஆசையைக் கைவிட்டால் துன்பம் நெருங்காது என்பதைக் கற்றேன்.
சிறுவனின் மனம் இன்பம், துன்பத்திலும் சிக்குவதில்லை. ஒருவர் திட்டினாலும், புகழ்ந்தாலும் எந்த மனநிலையிலும் பொருட்படுத்துவதில்லை. அதே மனம் நமக்கும் வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.
ஆயுதம் செய்பவனின் மனஒருமைப்பாடு வியக்கத்தக்கது. அருகில் நடப்பதை பொருட்படுத்தாமல் ஆயுதத்தை முழுமைப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவான். அவனிடம் இருந்து மன ஒருமைப்பாட்டைக் கற்றேன்.
சிறுமி ஒருத்தி அணிந்திருந்த இரு வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசி ஒலி எழும்பியது. அதில் ஒன்றைக் கழற்றியதும் சப்தம் அடங்கியது. இதன் மூலம் இரண்டு நபர் சேர்ந்தாலும் வீண் விவாதம் ஏற்படும் என்பதை அறிந்து தனிமையே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன். அழியும் இந்த உடலுக்காக பாம்பு தனக்கென வீடு கட்டிக் கொள்வதில்லை. அதுபோல ஞான வாழ்வில் ஈடுபடுவோரும் வீடு கட்டக் கூடாது என்பதை பாம்பிடம் கற்றேன்.
சிலந்தி வலை பின்னி அதில் வாழும். இறுதியில் வலையைத் தானே விழுங்கி விடும். அதுபோலவே கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி பின்னர் ஊழிக் காலத்தில் தன்னுள் அடக்குகிறார் என்பதை அறிந்தேன்.
கூட்டில் தங்கியிருக்கும் புழுவானது எப்போதும் குளவியை சிந்தித்து தானும் அதுவாக மாறி விடும். இதன் மூலம் எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதுவாகவே மாறும் குணம் மனிதனுக்கு உண்டு என்பதை உணர்ந்தேன். இந்த 24 பேரும் தான் என்னுடைய குருநாதர்கள்’’ என்கிறார் தத்தாத்ரேயர்.
இந்தியா, நேபாளத்தில் வழிபடப்படும் தெய்வமாக இருக்கிறார்.
ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தந்நோ தத்தஹ ப்ரசோதயாத்
என்பது இவருக்கான காயத்ரி மந்திரம்.
........................
எக்ஸ்ட்ரா கட்டுரை
நர்மதை நதிக்கரையில் உள்ள மகிஷ்மதி நகரத்தை தலைநகராக ஆண்ட ஹேஹேய நாட்டின் மன்னன் கிருதவீரியனின் மகன் கார்த்தவீர்யார்ஜுனன் என்பவன் ஆவான். அவன் எவரும் அடையாத சக்தியை பெற விரும்பினான். கர்க மகரிஷியிடம் சென்று தன் விருப்பத்தை தெரிவித்தான். அவரே தத்தாத்ரேயரிடம் செல்லும்படி வழிகாட்டினார். தன் மனைவியுடன் நர்மதா நதியில் நீராடி விட்டு ஆஸ்ரமத்தில் இருந்த தத்தாத்ரேயரை வழிபட்டான். என்ன வரம் வேண்டும் என கேட்டார் தத்தாத்ரேயர். தனக்கு ஆயிரம் கைகள் வேண்டும் என்றும், என்றும் இளமை வேண்டும் என்றும் வரம் கேட்டான். அப்படியே ஆகட்டும் என அருள்செய்தார். பிரம்மபுராணத்தில் இந்த வரலாறு உள்ளது.
தத்தாத்ரேயரை குருவாக ஏற்க விரும்பினார் பரசுராமர். அவரைக் காணச் சென்ற போது தத்தாத்ரேயரின் மதுஜாடியும், இளம் பெண்ணுடன் குடிபோதையில் இருப்பவராகக் காட்சி தந்தார். பரசுராமர் அவரைக் கண்டதும் தன் கோடாரியை கீழே போட்டு விட்டு சரணடைந்தார். அந்த நொடியே மதுரச ஜாடியும், இளவயது பெண்ணும் மறைந்தனர். தத்தாத்ரேயர் அமர்ந்திருக்க, அவரருகே ஒரு நாயும் இருந்தது. பரசுராமர், தத்தாத்ரேயரிடம் தனது மோட்சத்தை அடைந்தார். தத்தாத்ரேயர், இந்த உலகில் எதை வேண்டுமானாலும் தன்னால் செய்ய முடியும். அதேசமயம் அதில் தொலைந்து போகாமலும் இருக்க முடியும் என்று பரசுராமருக்குக் காண்பித்தார். ஏனென்றால், பரசுராமர் மகத்தான திறனுடைய மனிதர். ஆனால், அவருடைய திறனெல்லாம் அவர் உணர்வுகளின் காரணமாக கோபமாக எழுந்து , பல நேர்மாறான விதங்களில் வெளிப்பட்டன. இதனால் பரசுராமரிடம் தத்தாத்ரேயர் இந்த சிறு தந்திரத்தை உபயோகித்தார். ஆயுஸ் என்ற மன்னருக்கு குழந்தைப்பேறு இல்லை. தத்தாத்ரேயர் ஆசியால் நகுஷன் என்னும் மகனைப் பெற்றெடுத்தார். வடஇந்தியக் கோயில்களில் அவருக்கு ஒரு தலை, இரண்டு கைகள், நான்கு நாய்கள், ஒரு பசுவுடன் இருப்பதாக ஓவியங்களில் வரைகின்றனர்.