பராசர முனிவர், மீனவப் பெண் சத்தியவதிக்கு (மச்சகந்தி) யமுனை ஆற்றின் நடுவில் உள்ள தீவில் பிறந்தார் வியாசர். கருப்பு நிறம் கொண்டவர் என்பதால் ‘கிருஷ்ணா’ என்றும், தீவில் பிறந்ததால் ‘த்வைபாயனர்’ என்றும், வேதங்களைத் தொகுத்ததால் ‘வேத வியாசர்’ என்றும் பெயர் பெற்றார்.
வியாசரின் பிறந்த நாளை ‘குரு பூர்ணிமா’ எனக் கொண்டாடுகிறோம். குருமார்களுக்கு நன்றி செலுத்தும் நாள் இது. வாழ்நாள் முழுவதும் ஆன்மிக போதனை, தத்துவங்களை
வழங்கிய ஞானி வியாசர். உலகில் தர்மம் குறைந்து அதர்மம் தலைதுாக்கியது. மனிதர்கள் கடமைகளில் இருந்து தவறியதால் ஒழுங்கீனம் பெருகியது. எது சரி, எது தவறு என்பதை மக்களுக்கு உணர்த்த விரிவான காவியம் ஒன்றை இயற்ற முடிவு செய்தார் வியாசர்.
வேத சாரத்தையும், உபநிடதங்களின் தத்துவம், கதைகள், உரையாடல்கள், உதாரணங்கள் மூலம் எளிய முறையில் மக்களுக்கு நீதிகளைச் சொல்ல விரும்பினார். மகாபாரதம் அவர் சிந்தனையில் உதித்தது.
இது வெறும் போர்க்கதை மட்டுமல்ல. அரசியல், சமூகவியல், பொருளாதாரம், தத்துவம், உளவியல், நீதி, ராஜநீதி, போர் தந்திரம் என அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. மகாபாரதத்தின் மையப் பகுதியான பகவத் கீதை முக்கியமானது. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்த
ஞானக் களஞ்சியம். இது வாழ்வின் நோக்கம், கடமையை உணர்த்துகிறது.
பாண்டவர்கள், கவுரவர்களுக்கு இடையிலான போரையும் பதிவு செய்யும் வரலாற்று ஆவணம் மகாபாரதம்.
மகாபாரதத்தின் கதை சிறந்த காவியமாக அமையப் போகிறது என்பதையும், அதற்கு தகுந்த பாடல்கள் மனதில் இருந்து உருவாகும் போது அதை எழுதுவதற்கு தகுந்த ஒரு ஞானி தேவை என கருதினார் வியாசர். அதற்கு தகுதியானவர் யார் என சிந்தித்த போது அவர் முன்பு படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றி, ‘தாங்கள் சொல்லும் வேகத்துக்கு ஏற்ப எழுதக் கூடியவர் விநாயகர் ஒருவரே’ எனச் சொல்லி மறைந்தார்.
வியாசரும் அவரைத் துதிக்க விநாயகர் காட்சியளித்தார். ‘எதற்காக அழைத்தாய்?’ எனக் கேட்டார். காவியம் இயற்றப் போவதாக தெரிவித்தார். “ நீ சொல்வது சரிதான். உனக்கு ஒன்று தெரியுமா? நான் எழுத ஆரம்பித்து விட்டால் கையில் இருக்கும் எழுதுகோலை நிறுத்த மாட்டேன். எழுதிக்கொண்டே இருப்பேன். அதற்கு ஏற்ப நீயும் பாடல்களைச் சொல்லிக் கொண்டே போக வேண்டும். அப்படியானால் உன் வேண்டுகோளை ஏற்கிறேன்’’ என்றார் விநாயகர்.
சற்று அதிர்ந்தாலும், எப்படியாவது சரி செய்து விடலாம்; எழுதினால் போதும் எனக் கருதி, ‘‘உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுகிறேன். ஆனால் நான் வேகமாகச் செய்யுளைச் சொல்லிக் கொண்டு வரும் போது, அதன் பொருளை உணர்ந்து எழுத வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” என எதிர்நிபந்தனை விடுத்தார் வியாசர். சில இடங்களில் கடினமான பொருள் உள்ள பாடல்களைச் சொல்லும் போது, அதன் பொருளைப் பற்றி விநாயகர் சிந்திக்கும் தருணத்தில், மனதிற்குள் பல செய்யுட்களை உருவாக்கிக் கொள்ளலாம் எனக் கருதி வியாசரும் சம்மதித்தார்.
தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி மேரு மலையை ஏடாக வைத்து பாரதம் எழுதி முடித்தார் விநாயகர். இப்படிப்பட்ட மகாபாரதக் கதையின் சிறப்பை உலகிற்கு எடுத்துச் சொல்ல விரும்பிய விநாயகர், தேவர்களிடம் தராசு ஒன்றை கொண்டு வரச் சொன்னார். எதற்காக அப்படிச் சொன்னார் என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தராசின் ஒரு பக்கத் தட்டில் நான்கு வேதங்களை வைத்தார், மறுபக்கம் பாரதக் கதையை வைத்தார். இரண்டு பக்கமும் சமமாக இருக்க தராசின் முள் நடுவில் நின்றது. மனித வாழ்வுக்கு ஆதாரமாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் வேதத்திற்கு சமமானதாக பாரதம் இருக்கிறதென்றால்? அது வெறும் பாரதம் இல்லை, ‘மகாபாரதம்’ என தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
8800 ஸ்லோகங்களை எழுதுவது என்பது அவ்வளவு எளிதான செயலா? அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நால்வகை நோக்கங்களையும், சமூகம், உலகம், தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளை பற்றி இது விளக்குகிறது. இது 74,000க்கும் மேற்பட்ட பாடல்களையும், நீளமான உரைநடைப் பகுதிகளையும் கொண்டுள்ள இதில் 18 லட்சம் சொற்கள் உள்ளன. உலகின் நீண்ட இதிகாசங்களில் ஒன்றாக உள்ளது.
‘‘மகாபாரத காவியத்தில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். ஆனால் இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படா’’ என்கிறது மகாபாரதத்தின் முதல் பர்வம். ஆறாவது பர்வமான பீஷ்ம பர்வத்தில் பகவத்கீதை உள்ளது. போர் தேவைதானா என அர்ஜூனனுக்கு ஏற்பட்ட குழப்பத்தை போக்கும் கிருஷ்ணரின் உபதேசத்தை கொண்டது இது. ஐந்தாம் வேதம் எனப் போற்றப்படும் மகாபாரதத்தை வியாசர் சொல்ல விநாயகர் எழுதினார் என்றால் அது நாம் செய்த புண்ணியம் தானே...