Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நவநீத கிருஷ்ணன்
  உற்சவர்: கிருஷ்ணன்
  புராண பெயர்: சதுர்வேதி மங்கலம், ஜோதிர்வனம்
  ஊர்: மேலச்செவல்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஒவ்வொரு வருடமும் தைபூசத்தன்று கலசாபிஷேகம் நடைபெறுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் ஐப்பசி, தை மாத பிறப்பு தினங்களில் கருட சேவை சிறப்பாக நடைபெறுகிறது. கோகுலாஷ்டமி, உரியடிதிருநாள், மார்கழி சயன ஏகாதசி, பின்பத்து திருநாள், திருகார்த்திகை, மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி ஆகியவை மிக சிறப்பாக நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  நவநீத கிருஷ்ணன் குழந்தை வடிவில் தன் இருகைகளிலும் வெண்ணையை வைத்துக்கொண்டிருக்கும் கோலம். சாலக்கிராம கல்லினால் செய்யப்பட்ட விக்ரகம் இவை சிறப்புமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக்கோயில், மேலச்செவல், அம்பாசமுத்திரம் தாலுக்கா, திருநெல்வேலி - 627 452.  
   
போன்:
   
  +91 44-24486660, 9940095670, 9443581917, 9443502744 
    
 பொது தகவல்:
     
  தாமிரபரணி நதிக்கரையில் வயல்கள் நிறைந்த எழில்மிகு கிராமம் மேலச்செவல், திருநெல்வேலியிலிருந்து அம்பா சமுத்திரம் செல்லும் வழியில் 16வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்தள்ளது. நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே அமையபெற்ற கிராமம். சுதந்திரம் அடைவதற்கு முன்பாக திருவனந்தபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமாக இருந்தது. தாமிரபரணி தேவியின் மகாத்மியத்தில் ஜோதிஸ்தலம் என்று அழைக்கப்படும் கிராமம் தான் மேலச்செவல். நான்கு வேதங்களும் அறிந்து புலமை பெற்ற விற்பன்னர்கள் வாழ்ந்த சதுர்வேதிமண்டலம் என்று பெயர் பெற்றது. இந்த மூன்று கோயில்களில் மிகப்பழமை வாய்ந்தது. திரு நவநீதகிருஷ்ணர் ஆலயம். சுமார் இரண்டு ஏக்கர் நிலபரப்பில் அமையபெற்ற கோயிலில் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், மணிமண்டபம் மற்றும் உட்பிரகாரம் போன்றவைகளுடன், இராமாயண, மகாபாரத புராணந்தரின் கதாபாத்திரத்திரங்களின் அழகிய சிற்பங்கள் மண்டபத்தில் மேற்கூறையில் காணலாம். இக்கோயிலின் பழமையை கூற ஆதாரங்களும் சில உள்ளன. 1781ம் ஆண்டின் பிரிட்டிஷ் அரசால் பிரசுரிக்கப்பட்ட கெஜட்டியர் என்ற தஸ்தாவேஜில் இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டப்பட்டது என்ற குறிப்பு உள்ளது.

திருவிதாங்கூர் சமஸ்தான மகாராஜாக்களின் வம்சத்தின், சமீபத்தில் மறைந்த உத்திராடம் திருநாள்வர்மா அரசர் 2002ம் ஆண்டு சேரன் மகாதேவியில் நடைபெற்ற கருத்தரங்கில், தங்களின் முன்னோர்கள் வைணவ பக்தர்கள் என்றும், கிருஷ்ணன் குலதெய்வமமாக வழிப்பட்டார்கள் என்று கூறினார். அவரது முன்னோர்கள் சேரன் மகாதேவியை தலை நகரமாகக் கொண்டு (கிபி 380-1102) அம்பை களக்காடு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஊர்களில் ஆட்சிபுரிந்தார்கள். இப்பகுதிக்கு வேனாடு என்றும், நரசிம்ம நதிர் என்ற பெயர்களும் உண்டு. கி.பி.1436ம் ஆண்டு திரு.மார்த்தாண்டவர்மா ஆட்சியில் கோயில்கள் பல கட்டப்பட்டதாக தெரிய வருகிறது. பின்னர் விஜய நகர சாம்ராஜ்யத்திற்கு உட்பட்டு கோயில்கள் விரிவுபடுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. மகாலிங்கேஸ்வரர் கோயிலில் காணும் கல்வெட்டில் கொல்லம் ஆண்டு 762ல் கோயிலில் அம்பாளுக்கு தனி சன்னிதி கட்டப்பட்டதாக கூறுகிறது. தற்போதைய கொல்லம் ஆண்டு 1178 என்ற கணக்கின்படி இச்சிவன் கோயில் 416 வருடங்கள் பழமை வாய்ந்தது. திரு.நவநீத கிருஷ்ணன் ஆலயத்தின் மடப்பள்ளியில் சுவரில் காணும் கல்வெட்டில் சாகா வருடம் 1147 என்ற குறிப்பு இருக்கின்றது.

தற்போதைய சாகா வருடம் 11924 என்ற கணக்கின்படி இந்த கோவில் 777 வருடங்கள் பழமையானது எனத்தெரிக்கின்றது. கல்வெட்டில் காணப்படும் கொல்லம்  - சாகா வருடங்கள் குறிப்பிட்டு இருப்பதை கொண்டு திருவிதாங்கூர் மற்றும் விஜய நகர சாம்ராஜ்யங்களுக்கு உட்பட்டதாக கொள்ளலாம். கவனிப்பாரற்ற கிடந்த இந்த கோயில் சேதமடைந்து புதர்களாலும் செடி கொடிகள் படர்ந்த நிலையில் இருந்த சமயம் கிராமத்தின் பெரிய பண்ணையார் திரு.பாஸ்கர முதலியார் மற்றும் ஓய்வு பெற்ற டெபுடி கலெக்டர் திரு.நாராயண ஐயர் மற்றும் குலத்தெய்வக்காரர்கள் உதவியாலும் கடந்த 2000 ஆண்டு, கோயில் புதுப்பிக்க பெற்று கும்பாபிஷேகம் நடைந்தேறியது. கடந்த 15 வருடங்களாக தினமும் முறைபடி இரண்டு வேளைகளிலும் ஆகம சாஸ்திரபடி பூஜைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், திருநெல்வேலியில் புகழ்பெற்ற திரு.கோவிந்தன் ஜோசியர் மூலமாக பிரசனம் பார்த்து கோயிலில் இருக்கும் தோஷங்களை நிவர்த்தி செய்ய பரிகார ஹோமாக்கள் பூஜைகள் செய்யப்பட்டன. இந்த கோயில் தமிழ்நாடு அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருக்கிறபடியால், குலதெய்வகாரர்கள் அவர்களின் அனுமதி பெற்று 2015 மே மாதம் 31ந்தேதி கும்பாபிஷேகம் செய்ய உத்தேசித்து,. திருக்குறுக்குடி ஜீயர் ஸ்வாமிகளில் அனுக்கிரகமும் பரிபூர்ணமாக இந்த கோயிலின் குலதெய்வகாரர்களுக்கு கிடைத்து, அவரது அறிவுரைபடி மேற்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடைகள் நீங்க, கல்விபெற, வியாதிகள் நீங்க, கடன் தொல்லை தீர, வியாபாரம் பெறுக, விவசாயத்தில் அமோகமான விளைச்சல் பெற, நவநீத கிருஷ்ணன் அருள் கிடைப்பதாக நம்புகிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  குழந்தை பேறு இல்லாதவர்கள் ஆதிகேசவன் குடையின் கீழ் நவநீத கிருஷ்ணன் நின்றிருக்கும் கோலத்தில் சிலை செய்து கோயிலில் கொடுத்து பிரார்த்தனை செய்து குழந்தை பாக்கியம் பெற்றதாக கூறப்படுகிறது. இப்பவும் குழந்தைபேறு இல்லாதவர்கள் நவநீத கிருஷ்ணர் படத்தை, ஒவ்வொரு மாதம் ரோகிணி நட்சத்திரம் நாளில் பூஜை செய்து பால் பாயாசம் நெய்வேத்யம் செய்தால் குழந்தை பேறு கிடைப்பதாக கூறுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலில் 730 ஆண்டுகள் பழமையான பஞ்சலோகத்தால் ஆன ராமானுஜர், சக்கரத்தாழ்வார், நர்த்தன கிருஷ்ணர் ஆகிய உற்சவ விக்ரகங்கள் சிறப்பு வாய்ந்தவை. கண்ணப்ப நாயானார் சிவபெருமானுக்கு கண் அளிக்கும் சிற்பமும், ராமபிரான் வாலிக்கு தன் திறமையை காண்பிக்கும் பொருட்டு ஏழு மரங்களை துளைத்துக்கொண்டு செல்லும் அம்பும் சிறந்த சிற்பங்கள் உள்ளன. வைணவ ஆகம விதிப்படி கருங்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும். மூலக்கடவுள் திருநவநீத கிருஷ்ணன் குழந்தை வடிவில் தன் இருகைகளிலும் வெண்ணையை வைத்துக்கொண்டிருக்கும் கோலம். சாலக்கிராம கல்லினால் செய்யப்பட்ட விக்ரகம்.

இத்தகைய கோலத்தில் இருக்கும் நவநீத கிருஷ்ணன் கேரளாவில் 5 கோயில்களிலும் திருநெல்வேலியை சுற்றி 5 கோவில்களிலும் மூலவராக தரிசனம் செய்யலாம். யாதவ குல மக்கள் நிறைந்திருக்கும், இந்த கிராமத்தில் நவநீத கிருஷ்ணன் குலதெய்வமாகும். இவர்கள் தினந்தோறும் நைவேத்யம் செய்ய நெல்லும் விளக்குகளுக்கு தேவையான எண்ணை முதலியவைகளை தவறாமல் கொடுத்து வருகிறார்கள். 2000 வருடம் முதல் நவநீத கிருஷ்ணன் கண் திறந்து பக்தர்களை காப்பாற்றுவதாக நம்புகிறார்கள். அவர்களின் நிலங்களில் வாழையும் நெல்லும் சிறப்பாக விளைவதாக கூறுகிறார்கள். தாமிரபரணி புராணத்தில் மேலச்செவலின் வடமேற்கு பகுதியிலிருந்து கல்கி அவதாரம் நடைபெறும் என்று தெரிவிக்கிறது.

மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மூலவருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்து உற்சவரை டோலோத்சவம் நடத்தி நாமசங்கீர்த்தனம் செய்து குழந்தை பாக்கியம் பெறுவதற்கு தம்பதிகளின் நட்சத்திரம் கோத்ரம் பெயரில் விசேஷ அர்ச்சனைகள் செய்கிறார்கள் . மேலும் விபரங்களுக்கு அர்ச்சகர் சீனிவாசராகவன் நவநீதக்ரிஷ்ணன் திருகோயில் மேலசெவேல் கிராமம் அம்பாசமுத்ரம் தாலுகா 627452 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும் ( மொபைல் நெம்பர் 9443502744). தம்பதியர்களின் பெயர் நட்சத்திரம் மற்றும் கோத்ரம் தெரிவித்தால் அன்றைய தினம் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். இந்த வகையில் நவநீதகிருஷ்ணனின் அனுக்ரஹம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். பல வருடங்களாக இந்த பரிஹார பூஜை இந்த கோவிலில் நடைபெறுகிறது
 
     
  தல வரலாறு:
     
  வில்லிபுத்தூரார்க்கும் அவர் தம்பிக்கும் சொத்து பாகம் பற்றிய வழக்கில் இருவருக்குமே அரசினனின் அபிமான புலவர்களாக இருந்த காரணத்தினால், அவர்களை கண்டிக்க மனம் ஒப்பவில்லை.  ஆனால் இருவரின் வழக்கையும் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசனுக்கு இருந்ததினால், இருவரையும் அழைத்து நீங்கள் இருவரும் மகா பாரதத்தை தமிழில் பாடி தந்தால் வழக்கை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னார். அவ்வாறே இருவரும் உடன்பட்டு பாரதம் பாடத்தொடர்கிறார்கள். வில்லிபுத்தூரர் தான் எழுதிய வில்லி பாரத்தில் சமஸ்கிருத மொழியில் இருக்கும் பாரதத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க இந்த கிராமத்தில் இருக்கும் பண்டிதர்களுடன் ஆலோசித்து முடிவு செய்தார். சதுர்வேதி மண்டலம் என்று பெயர் பெற்ற இந்த கிராமத்தில் அந்த காலத்தில் சமஸ்கிருதம் மொழியை கரைகண்ட பண்டிதர்கள் வசித்து வந்தார்கள். படிப்பில் நாட்டமில்லாத வெள்ளிமலை கவிராயரை அவரது தந்தை திருச்செந்தூர் முருகன் கோவிலில்  மடப்பள்ளியில் சேர்த்து விட்டார். முருகனுக்கு தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்ததை கண்டு பெருமை கொண்டார். ஒருமுறை ஆடி கிருத்திகை நாளில் முருகனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் நடந்து கொண்டிருந்த காட்சியை பார்த்து ரசித்து கொண்டிருந்த கவிராயர் நைவேத்யம் தயார் செய்ய மறந்து விட்டார்.

குருக்கள் கவிராயரிடம் நைவேத்யம் கொண்டு வரும்படி கேட்ட போது தான் அவருக்கு தன் நினைவு வந்தது. தான் செய்த தவறை மன்னிக்கும்படி கேட்டும் அவரை கோயில் தர்மகர்த்தா அடித்து விரட்டி விட்டார். உடல் வேதனையும் மன உளைச்சளையும் தாங்காமல் தற்கொலை செய்யும் எண்ணத்தில் அருகில் இருந்த கடலின் ஆழப்பகுதியை நோக்கி சென்றார். அச்சமயம் முருக பெருமான் அவருக்கு தரிசனம் கொடுத்து நீ இந்த உலகில் பிறந்த காரணம் இன்னும் முடிவு பெறவில்லை. ஆகையினால் இந்த கிராமத்திற்கு சென்று அங்கு வசிக்கும் கிருஷ்ண சாஸ்திரியை பார்க்கவும் என்று கூறினார். சாஸ்திரியின் கனவிலும் பெருமாள் தோன்றி கவிராயருக்கு உதவி செய்யுமாறு கூறினார். கவிராயர் இந்த கிராமத்திற்கு வந்து சாஸ்திரியை சந்தித்தார். அவரிடம் திருச்செந்தூர் புராணம் சுவடியில் வடமொழியில் (சமஸ்கிருதம்) இருந்ததையறிந்து அவர் கூறகேட்டு அழகிய எளிய தமிழில் 900 செய்யுட்களாக எழுதினார். அதை திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அரங்கேற்றம் செய்ய நினைத்து தர்மகர்த்தாவை நேரில் சந்தித்து விபரங்கள் தெரிவித்து சம்மதம் கேட்டார்.

தர்மகர்த்தாவும் மற்ற நிர்வாகிகளும் கவிராயரை கேலி செய்து மடப்பள்ளியில் வேலை செய்த நீயாவது புராணத்தை எழுதுவது எப்படி என்று கூறி, சுவடுகளை அவரிடம் பறித்து கடலில் வீசிவிட்டார்கள். கடல், அலையால் சுவடிகள் இலங்கையில் மனைமுறி என்ற இடத்திற்கு அடித்து செல்லப்பட்டன. ஒரு நாள் அப்பகுதியில் குளித்து கொண்டிருந்த முருக பக்தர் ஒருவருக்கு இந்த சுவடிகள் கிடைத்தன. தன் வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் படித்து வந்தார். அச்சமயத்தில் சுக்ரவாசம் என்ற விஷக்காற்று அவ்வூரில் பல மக்களை பலி கொண்டது. ஆனால் இந்த முருக பக்தர் இருந்த தெருவில் மட்டும் அதனுடைய தாக்கம் இல்லாததை கண்டு அத்தெரு மக்கள் திருச்செந்தூர்புராணத்தின் மகிமையை அறிந்து அதை நகல் எடுத்து ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் வைத்து தினமும் படிக்க ஆரம்பித்தார்கள். இப்படி மகிமை வாய்ந்த இப்புராணம் தமிழில் தோன்றியதற்கு காரணமாக இருந்தது. இந்த கிராமம் தான். இன்னுமொறு கர்ண பரம்பரையாக கூறும் கதையானது, ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் கொடிய வெய்யிலின் தாக்கம் பொறுக்காமல் மேய்ப்பதை விட்டு விட்டு ஒரு மரத்தடியில் தூங்க சென்றுவிட்டான். அப்பொழுது ஒரு பாம்பு அவன் மேல் படர்ந்து, தலைக்கு மேல் கவசம் மாதிரி படம் எடுத்து நின்று விட்டது.

இதை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், பாம்பு சென்றவுடன் அவனை எழுப்பி எப்படி பாம்பானது அவனுக்கு நிழல் மாதிரி படம் எடுத்ததை கூறி அவன் பெரியவன் ஆனவுடன் பெரிய பதவிகளை அடைவாய் என்று கூறி சென்று விட்டான். அப்பொழுது என்னை மறக்காமல் ஒரு ஆலயம் கட்டு என்றும் கூறினான். அதிசயமாக அந்த சிறுவனும் பருவ வயசு அடைந்தவுடன், திருவாங்கூர் சமஸ்தானத்தில் வேலைக்கு அமர்ந்தான். தன்னுடைய நேர்மையாலும், திறமையினாலும் வெகுவேகமாக பதவி உயர்வடைந்து, மந்திரியாக அமர்ந்தான். அன்றொரு நாள் ஒரு சிறுவன் இதை கூறியதை தன் நினைவில் கொண்டு, சிறுவனை தேடினான். அச்சிறுவனின் முகம் நன்றாக ஞாபகத்தில் இருந்தும் முயற்சி செய்தும் காணமுடியவில்லை. ஒரு நாள் அவன் கனவில் குழந்தை கிருஷ்ணன் தோன்றி தனக்கு கோயில் எழுப்பச் சொன்னான். இக்கிராமத்தில் தான் அந்த மந்திரி கிருஷ்ணனுக்கு கோயில் எழுப்பினான். இவ்வாறு சிறப்பு வாய்ந்த கிராமம்தான் மேலச்செவல் இங்கு, நவநீத கிருஷ்ணன் வேணுகோபலன் மற்றும் மகாலிங்கேஸ்வர் மூவருக்கும் தனித்தனியே கோயில்கள் அமைத்திருப்பது மேலும் இந்த கிராமத்தின் சிறப்பு அம்சமாகும்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நவநீத கிருஷ்ணன் குழந்தை வடிவில் தன் இருகைகளிலும் வெண்ணையை வைத்துக்கொண்டிருக்கும் கோலம். சாலக்கிராம கல்லினால் செய்யப்பட்ட விக்ரகம் இவை சிறப்புமிக்கதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar