Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராமர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ராமர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராமர்
  ஊர்: ஒர்ச்சா தாம்
  மாவட்டம்: கஞ்சன்காட்
  மாநிலம்: மத்திய பிரதேசம்
 
 திருவிழா:
     
  ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி  
     
 தல சிறப்பு:
     
  முக்கியப் பண்டிகை நாட்களில் மக்களை நேரில் கண்டு ஆசிர்வதிக்க ராம ராஜ சர்க்கார் என அழைக்கப்படும் ராமர் வெளியே வருகிறார். பகலில் ஓர்ச்சாவில் அருள்பாலிக்கும் ராமபிரான் இரவு சயனத்திற்கு அயோத்தியா செல்கிறார் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை தான் தலத்தின் முக்கிய சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 7 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ராமர் திருக்கோயில் ஒர்ச்சா தாம், திகாமர், கஞ்சன்காட் மாவட்டம், மத்திய பிரதேசம்.  
   
    
 பொது தகவல்:
     
  கலியுக அவதார மூர்த்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஆவணி மாதம், பூச நட்சத்திர தினம் விக்ரம வருடம் 1630-ல் பக்தர்கள் புடை சூழ ராமராஜர் அயோத்தியாவிலிருந்து கிளம்புகிறார். எட்டு மாதம், 27 தினங்கள் யாத்திரைக்குப் பின்னர் சித்திரை மாதம், பூச நட்சத்திர தினம், விக்ரம வருடம் 1631-ல் ஓர்ச்சாவில் எழுந்தருளுகிறார். இதனிடையில் மதுகர் ஷா இறைவனை தினமும் தரிசிக்க தனது ராஜ்பவன் முன் சதுர்புஜ் மந்திர் என்ற பெயரில் பெருங்கோயிலை எழுப்புகிறார். ஆனால் முதலில் ராணியின் மஹலில் பூச நட்சத்திரத்தில் எழுந்தருளிய இறைவன் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார். கலியுகத்தில் அன்னையாகக் கண்ட ராணி கணேஷ் குன்வரியின் மஹலில் மகனாகத் தங்குவதே உசிதமாக ராமராஜருக்குத் தோன்றியிருக்கலாம். அன்றிலிருந்து ஓர்ச்சா, தாம் என்ற அந்தஸ்தைப் பெற்று ஒரு தீர்த்தத் தலமாகவும் ஆனது.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள ராமரை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்து புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ராமர் விக்ரகம் அவருக்கு நிர்மாணிக்கப்பட்ட சதுர்புஜ் என்ற கோயிலில் எழுந்தருளாமல் ராணி மஹல் எனப்படும் மதுகர்ஷா பட்டத்து ராணியின் மஹாலிலேயே தங்கிவிட்டது. முக்கியப் பண்டிகை நாட்களில் மக்களை நேரில் கண்டு ஆசிர்வதிக்க ராம ராஜ சர்க்கார் என அழைக்கப்படும் ராமர் வெளியே வருகிறார். பகலில் ஓர்ச்சாவில் அருள்பாலிக்கும் ராமபிரான் இரவு சயனத்திற்கு அயோத்தியா செல்கிறார் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை !

ஓர்ச்சா ஒரு புண்ணிய பூமி! ஓர்ச்சா அமைந்துள்ள இடம் புந்தேல்கண்ட் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் காசி குலத்தில் உதித்த பஞ்சதேவ் என்ற அரசன் தெய்வ பக்திமிக்கவன். ஒரு சமயம், மிர்ஜாபூரில் அருள்பாலிக்கும் விந்தியவாசினியை மனதில் தியானித்து கோர தவம் புரிந்தான். தவத்தின் இறுதியில் வாளால் தன் சிரத்தை அறுத்து பலியிட முயல்கிறான். அப்போது ரத்தத் துளிகள் இப்பகுதியில் தெறிக்கின்றன. பூந்த் என்ற சொல் துளிகள் என்ற பொருளுடையது. தேவியால் தடுத்தாட் கொள்ளப்பட்ட பஞ்சதேவ் அரசனுக்கு அவளது அருளும் கிட்ட, பின்னர் வந்த வம்சமும் புந்தேல்கண்ட் என்ற பெயருடன் அழைக்கப்படலாயிற்று. விந்தியவாசினி அவர்களுடைய குலதெய்வமானாள். விந்தியவாசினி தேவியின் கோயில் இன்றும் ஓர்ச்சாவில் உள்ளது. ஓர்ச்சா, இதிகாசப் புகழ் பெற்றது. தவசிரேஷ்டர் துங்கமுனி வசித்த இடம். வால்மீகி ராமாயணத்தில் இப்பகுதி பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. வேத்வா என்றும் பின்னர் பேத்வா என்றும் அழைக்கப்பட்ட நதி தீரத்தில் ஓர்ச்சா அமைந்துள்ளது. கங்கைக்கு சமமாகக் கருதப்படும் இந்நதி பைன் கங்கா (சிறிய கங்கை) என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமாயணத்தின் தண்டகாரண்யப் பகுதியில் பைன் கங்கா நதியைக் கடந்து ராமபிரான் சுதீக்ஷண முனிவர் ஆசிரமத்தை அடைந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. புராண காலத்தில் விருத்தாசுரன் மூலமாக மஹாகம்பீர் என்ற குளம் வெட்டப்பட்டது. அதில் நீர் நிரம்பி வழிந்தபோது அது பேத்வா நதியாகப் பெருகி ஓடலானது. பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணு என முக்கடவுளருடன் அனைத்து தேவர்களும் வாசம் புரியும் பெருமையை உடைய பேத்வா நதியின் கரையில் ஓர்ச்சா தாம் இடம் பெற்றுள்ளது.
 
     
  தல வரலாறு:
     
 

ஆதிகாலத்தில் மன்னர் ஸ்வாயம்புவ மனு, நைமிசாரண்ய தீர்த்தத் தலத்தில் ஹரியை நினைந்து ஆயிரம் வருடங்கள் தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தவத்தால் மகிழ்வுற்ற நாராயணர், ஸ்வாயம்புவ மனு முன் தோன்ற, அவன் கேட்ட வரம் வினோதமானது. பகவானே ! மூன்று ஜன்மங்களுக்கு தாங்களே எனக்குப் புத்திரனாக அவதரிக்க வேண்டும். தங்கள் மீது அன்பைக் கொட்டி நான் களிப்புற அருள வேண்டும். சிறந்த அரசனாகவும் சான்றோனாகவும் திகழும் உனக்கு வாரிசாகப் பிறப்பதில் எமக்கும் மகிழ்ச்சிதான் ! தர்மத்தைக் காக்கவும், சான்றோர்களை ரட்சிக்கவும் வெவ்வேறு சமயங்களில் யாம் அவதாரம் எடுப்போம் ! எனக்கூறி விஷ்ணு மறைகிறார். முதல் பிறவியாக திரேதா யுகத்தில் ரகுகுல தசரதனாக ஸ்வாயம்புவ மனு உருவெடுக்க, ராமபிரானாக விஷ்ணு அவதரிக்கிறார். இரண்டாவது ஜன்மமாக விருஷ்ணி வம்சத்தில் வசுதேவராக ஸ்வாயம்புவ மனு வடிவெடுக்க, கிருஷ்ணராக விஷ்ணு அவதரிக்கிறார். திரேதா யுகத்தில் சுக்ல நவமியில் செவ்வாயன்று பூச நட்சத்திரத்தில் ஸ்ரீராமர் அவதரித்ததாகச் சொல்லப்படுகிறது. அதே சுக்ல நவமி, செவ்வாய், பூச நட்சத்திரத்தில் விக்கிரம சகாப்த ஆண்டு 1631-ல் கலியுகத்தில் ராமரது மூன்றாவது ஜன்மம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது கலியுகத்தில் ஆயிரம் திவ்விய வருடங்கள் கடந்த பின் ஜோதிட வித்வான்கள் அனுமானித்தபடி நிகழ்ந்திருக்கிறது. அதே நாளன்று வால்மீகியின் கலியுக அவதாரமெனப் போற்றப்படும் துளசிதாசர், தனது ராமசரிதமானஸ் என்ற நூலை எழுதத் தொடங்குகிறார். இறப்பு நேரத்தில் இறைவனது நாமத்தை உச்சரித்து அதே நினைப்பில் இருப்போர்க்கு மோட்சம் உறுதி ! ஆனால், அத்தகைய வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. அந்தப் பக்குவ நிலையை அடைய பல ஜன்மங்களில் தொடர்ந்து பயிற்சி தேவைப்படுகிறது. தசரதன் நிலையும் அப்படித்தான் இருந்தது. கைகேயிக்கு அளித்த வரத்தை ஒட்டி ராமனை வனத்திற்கு அனுப்பவும் பரதனுக்கு முடி சூட்டவும் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அளவு கடந்த பாசம் வைத்திருந்த ராமனைப் பிரிந்ததும், பரதனுக்கு முடிசூட முடியாத நிலையும் பெருத்த வேதனையும் தசரதனை வாட்டுகிறது. அந்த புத்திரசோகம், சஞ்சலம் ஆகியவை தசரதனுக்கு மோட்சத்தை மறுத்து மறு ஜன்மம் எடுக்க வைக்கிறது. கலியுகத்தில் மதுகர்ஷா என்ற சிற்றரசனாக தசரதன் பிறவி எடுக்கிறார். (மனுவின் மூன்றாவது ஜன்மம்) புத்திரனாக அவரை வந்தடைகிறார் ராமர். ஓர்ச்சாவில் ராமர் இன்றும் ஓர் அரசனாக வணங்கப்படுகிறார். கடவுள் மன்னனாக தொழப்படும் இடம் ஓர்ச்சா எனக் கூறலாம். ஓர் அரசனுக்கு உரிய மரியாதையாக சூரிய உதயத்தின் முன்னரும் அஸ்தமனத்திற்குப் பின்னரும் சக்கரவர்த்திக்குரிய அணிவகுப்பு மரியாதை ராமருக்கு தரப்படுகிறது. நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப்படும் இந்த வழக்கம் இன்றளவும் தொடருகிறது.



புந்தேல்கண்ட் வம்சத்தைச் சேர்ந்த ருத்ரபிரதாப் என்ற அரசன், தேவி விந்தியவாசினியை தரிசித்துவிட்டு துங்காரண்யம் என அழைக்கப்பட்ட இப்பகுதிக்கு வருகையில் பேத்வா நதிக்கரையில் இருந்த இவ்விடத்தின் அழகில் மெய் மறக்கிறான். தனது சாம்ராஜ்யத்தின் தலைநகரை அங்கு ஸ்தாபனம் செய்ய விரும்புகிறான். ரிஷி துங்கரை அணுகி தலைநகரின் நாமகரணம் பற்றி கேட்கிறான். எந்த இடத்தில் தலைநகரை நிறுவ விரும்புகிறாயோ, அந்த இடத்தில் உனது வாயிலிருந்து எழும் முதல் சப்தத்தையே அதன் நாமமாக வைத்துவிட்டு முனிவர் அறிவுறுத்துகிறார். தனது பரிவாரத்துடன் விடியற்காலையில் அந்த இடத்திற்கு அரசன் செல்கிறான். அந்த வனப்பகுதியில் தனது வேட்டை நாய்களுடன் நிற்கையில், விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்டு நாய்கள் குரைக்கத் தொடங்குகின்றன. அவற்றை அடக்க உச் ! உச் ! என்ற ஒலி மன்னரிடமிருந்து எழுகிறது. முனிவரின் அறிவுரை நினைவிற்கு வர ஓர்ச்சா ! என்ற நாமத்தை அந்நகருக்கு இடுகின்றான். ஓர்ச்சா என்பதற்கு நான்கு புறமும் பரவி, கோட்டை மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதி என அர்த்தம் கூறுவோரும் உண்டு ! அதேபோல் ஓர்ச்சா அமைந்த பகுதி திகம்பர் என்ற பட்டப்பெயரையும் பெற்றுள்ளது. ருத்ரபிரதாப் வழியில் மூன்றாவது அரசர் மதுகர் ஷா. சீலமும் பக்தியும் மிக்கவர். ஐம்பத்தோராவது வயதில் பட்டமேறினார்.



ராமராஜ சர்க்காரின் வருகை: ஓர்ச்சா அரசர் மதுகர் ஷா, கிருஷ்ணரின் பரம பக்தர். அவரது பட்ட மகிஷியான கணேஷ் குன்வரி, பர்மார் வம்சத்தைச் சேர்ந்தவர். தாயார் தந்த ஊக்கத்தாலும் குருவின் உபதேசத்தாலும் பத்து வயது முதற்கொண்டே ராமனின் உபாசினியாகத் திகழ்ந்தவர். ராமரை பால மூர்த்தியாக வழிபட்டவர். ஒருநாள் அரசர் மதுகர் ஷாவிற்கும் அவரது பட்டத்து ராணிக்கும் விவாதம் ஏற்பட்டது. பிருந்தாவன் சென்று கிருஷ்ணரை வழிபட அரசர் ராணியை வலியுறுத்த, ராணியோ அயோத்தியாவில் ராமரை வழிபட விரும்பினாள். கோபமடைந்த அரசர், அயோத்தியா செல்வதானால் குழந்தை வடிவத்தில் ஸ்ரீராமருடன் மட்டுமே திரும்ப வேண்டும் என்று கட்டளை இடுகிறார். அரசரின் அந்த ஆணையை வரமாக பாவித்து ராணி கணேஷ் குன்வரி அயோத்தியாவிற்குப் பயணிக்கிறார். சரயூ நதிக்கரையில் ஊண் உறக்கம் இன்றி கடும் தவத்தில் ஈடுபடுகிறார். ஒரு மாத காலமாகியும் எந்தப் பலனும் ராணிக்குத் தென்படவில்லை. அதனால் விரக்தியடைந்த ராணி, உயிர்த் தியாகம் செய்ய முனைகிறார். அப்போது பால வடிவில் ஸ்ரீராமர் தோன்றி, அவரைத் தடுத்தாட்கொண்டு வேண்டிய வரத்தைக் கேட்குமாறு பணிக்கிறார். அன்னையாகப் பாவித்து ராணியின் மடியிலும் பால ராமர் அமர்ந்து கொள்கிறார். கைகூப்பிய மகாராணி ஓர்ச்சா தலத்தில் பால ராமரை எழுந்தருள வேண்டுகிறார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ராமர், தனது சார்பில் மூன்று நிபந்தனைகளை விதிக்கிறார். முதலாவதாக பூச நட்சத்திரத்தில் ராம நவமி அன்றுதான் ஓர்ச்சாவில் எழுந்தருள வேண்டும். அயோத்தியாவிலிருந்தும் ஒரு பூச நட்சத்திர நன்னாளில்தான் கிளம்ப வேண்டும். இரண்டாவதாக ஓர்ச்சா பயணம் சாதுக்கள் உடன் வர பாத யாத்திரையாக இருக்க வேண்டும். மூன்றாவதாக பூச நட்சத்திரத்தில் எங்கு நிறுவப்படுகிறேனோ, அதே இடம் நிரந்தரமாக இருக்க வேண்டும். தனது நாமமும் ராமராஜ் என வழங்கப்பட வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளையும் மகிழ்வுடன் ராணி ஏற்றுக் கொள்கிறார். துளசிதாசர் கூறியதற்கேற்ப ஸ்ரீராமர் அயோத்தியா கனக பவனத்தில் வைக்கப்படுகிறார். கனக பவனம் ராமபிரானின் பள்ளியறையாகக் கருதப்படுகிறது.



 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: முக்கியப் பண்டிகை நாட்களில் மக்களை நேரில் கண்டு ஆசிர்வதிக்க ராம ராஜ சர்க்கார் என அழைக்கப்படும் ராமர் வெளியே வருகிறார். பகலில் ஓர்ச்சாவில் அருள்பாலிக்கும் ராமபிரான் இரவு சயனத்திற்கு அயோத்தியா செல்கிறார் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை தான் தலத்தின் முக்கிய சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar