Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுப்ரமணிய சுவாமி
  உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர்
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: தொரட்டி மரம் (ஆண், பெண் மரங்கள் பிணைந்த நிலையிலுள்ளது)
  தீர்த்தம்: காசி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: பட்டாலியூர்
  ஊர்: சிவன்மலை, காங்கேயம்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆண்டு தோறும் தைப்பூச தேர்த்திருவிழா 16 நாட்கள் சிறப்பாக நடந்து வருகிறது. அதோடு, தமிழ்வருட பிறப்பான சித்திரை கனி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், அடி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடி சஷ்டி, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை ஜோதி, மார்கழி மாத சிறப்பு பூஜைகள், திருவாதிரை, தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், மற்றும் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி என ஆண்டு முழுவதும் சிறப்பான திருவிழாக்கள் சிவன் மலையில் நடந்து வருகிறது. தினமும் ஐந்து கால பூஜைகள் நடக்கின்றன. விழாப்பூஜை : காலை 6.00 மணி; காலசந்தி : காலை 9.00 மணி; உச்சி காலம் : மதியம் 12.00; சாயரட்சை மாலை 6.00 மணி; அர்த்தசாமம் இரவு 8.00 மணி.  
     
 தல சிறப்பு:
     
  சைதன்ய சொரூபமாக இன்றும் சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும், உட்பிரகாரத்தில் குகையில் சிவவாக்கியர் அமர்ந்த நிலையில், வள்ளியோடு சுப்ரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் சிறப்பும் இங்கு கிடைக்கும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலை, காங்கேயம் தாலுகா. திருப்பூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 4257- 220680, 220630 
    
 பொது தகவல்:
     
  கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில், குன்றின் மேல் அமைந்துள்ள கோயில். 10,12ம் நுõற்றாண்டிலேயே கோயில் குறித்த செய்திகள் உள்ளன. 496 படிகள் ஏறிச்சென்றால், ராஜகோபுரம், தீபஸ்தம்பம், கொடிமரம், முன் மண்டபம், சுற்று பிரகாரம், மூலவர் என்ற அமைப்பில் உள்ள முழுவதும் கற்களால் கட்டப்பட்ட, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலாகும். மலையில் ஏறி, ராஜ கோபுர மண்டபம், தீபஸ்தம்பத்திற்கு செல்வதற்கு முன்பு, அரசு, வேம்பு மரங்களுக்கு மத்தியில் எழுந்தருளியுள்ள விநாயகர்,  ஞானாம்பிகை உடனமர்ந்த கைலாசநாதர்,  தீபஸ்தம்பம், கன்னி மூல கணபதியும், தண்டபாணி சன்னதி,கொடிமரம், பலி பீடம், சுமூகர், சுதேகர் என்ற துவார பாலகர்கள், மலையை சுற்றிலும், அட்ட துர்க்கை இருப்பதாக கூறப்படுகிறது. ஆலாம்பாடிவனசாட்சி (காட்டம்மை), பாப்பினி அங்காளபரமேஸ்வரி, காங்கேயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அந்தனுõரம்மன், கரியகாளியம்மன், செல்வநாயகி அம்மன் என எட்டு அம்மன்கள் எழுந்தருளியுள்ளனர். மலையேறும் 18ம் படிக்கு, சத்தியபடி என்ற பெயர் உள்ளது.  முற்காலத்தில் வழக்குகள் இப்படியில் நடந்து, தீர்வு காணப்பட்டுள்ளது. புராணப்படி எனவும் அழைக்கப்படுகிறது. சடைச்சியம்மன் இங்கு குடியிருப்பதாக நம்பிக்கை உள்ளது. அர்த்த மேரு அமைக்கப்பட்டு, அதன் வள்ளியம்மன் திருவடிகள் உள்ளன. மலை படிகளில் ஏறுவதே ஒரு தவமாக கருதப்படுகிறது. காரண மூர்த்தியான சுப்ரமணியர் சன்னதியில் காரண ஆகம விதப்படி நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இங்கு, சனி பகவான் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்கிறார்; மீதமுள்ள எட்டு கிரகங்களும் சூரியனை பார்த்து அமைந்துள்ளன.கோள்கள் வரிசைப்படியாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,  சனி, குரு, சுக்கிரன் என்ற அடிப்படையில் உள்ளன. முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு, சுக்கிரன், கேது வரிசையாக காட்சியளிக்கின்றன. அதே போல், சனியும், செவ்வாயும் இணைந்த அம்சத்தில் அமர்ந்திருப்பது, இப்பகுதியிலுள்ள பழமையான கோயில்களில் பார்க்க முடியாத அருமையான விசேஷமாகும்.இங்கு, நவக்கிரகங்களை வழிபடுவது, ஒவ்வொரு நவக்கிரக கோயில்களுக்கும் தனித்தனியாக சென்று வழிபடுவதன் பலன் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும்.  
     
 
பிரார்த்தனை
    
  வேண்டியவருக்கு வேண்டியதை வழங்கும் பிரார்த்தனை ஸ்தலமாகும். திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குவதால் பக்தர்கள் அதிகமானோர் வருகின்றனர். அதுமட்டுமின்றி இங்குள்ள நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்துனை பிரச்சனைகள்  இருந்தாலும், விடுபடலாம் என்ற ஐதீகம் உள்ளது. சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்கு எழுந்தருளியுள்ள முருகனுக்கு, சிவ+அசலம் + பதி = சிவாசலபதி, தீராத காய்ச்சலுக்கு தீர்வு : மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார்.காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது. 
    
 தலபெருமை:
     
  அனும தீர்த்தம், அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், மங்கள தீர்த்தம், வீர தீர்த்தம், சக்தி தீர்த்தம், பிரமானந்த தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தகங்கள் உள்ளதாகவும், ஆண்டவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த சடச்சி அம்மன் என்ற பெண், கங்கையின் சிறப்பு அறிந்து, கங்கை  செல்ல வேண்டும் என வேண்டியுள்ளார். முருகன் அவருக்கு, காசி, கங்கை தீர்த்தத்தை உருவாக்கி, காசியை காட்டியதாகவும், இன்றும் நந்தவனமாக உள்ள பகுதியில் கங்கை, காசி தீர்த்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மூலவருக்கே முதல் மரியாதை அனைத்து கோவில்களிலும்  விநாயகருக்கு  முதல் பூஜை நடக்கும். இங்கு மூலவரான சுப்ரமணியருக்கே நடக்கிறது. இதற்கு, இங்கு எழுந்தருளியுள்ள விநாயகரே, முருகனை வழிபடுவதாக ஐதீகம் என்கின்றனர்.கருவறையில், மூலவராக வள்ளியம்மை உடனமர் ஸ்ரீ அன்னதான மூர்த்தியாக எழுந்தருளி, வள்ளி மணாளன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். முருகனை நினைத்து வள்ளி இங்கு தவமிருந்து, அறச்சாலை அமைத்து பணி புரிந்ததாகவும்,  வள்ளியறச்சாலை, மருவி வள்ளியரச்சல் ஆனதாகவும், காங்கேய நாட்டில் ஒரு பகுதி வள்ளியறச்சாலையாக இருந்துள்ளது.வள்ளி, தெய்வானை சமேத, சுப்ரமணியர் திருமண கோலமும்,  வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதிகளும் உள்ளது.அனைத்து நோய்களும், பிரச்னைகளையும் தீர்த்து வைப்பதாகவும், அரிய வகை மூலிகை செடிகள் உள்ள காட்டை கடந்து செல்வதால் நோய்கள் தீர்வதாகவும், சித்தர்கள்  பலர் தவமிருந்த மலை; இன்றும் பல சித்தர்கள் இம்மலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஐதீகம் உள்ளது.

கோவில் சிறப்பு உத்தரவு பெட்டி :
சிவன்மலை கோயில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. முன்னமே  ஆண்டவன் உத்தரவு மூலம் சுவாமி உணர்த்துகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ  கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால், ஏற்கெனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் சால்பரி வைத்து பூஜை செய்யப்பட்ட பொழுது, சால்பரிகள் பயன்பாடு குறைந்து, மின் மோட்டார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது, சீனா போர், சைக்கிள் வைத்து பூஜை செய்த போது, மொபட், பைக் என வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தது; தண்ணீர் வைத்து பூஜை செய்த போது, சுனாமி ஏற்பட்டது, மணல் வைத்து பூஜை செய்த போது, மணல் விலை ஏறியது, மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் உருவாகி வளர்ந்தது. மஞ்சள், தங்கம், நெல் என பொருட்கள் வைத்து பூஜை செய்த போது, அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது என , ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மீது ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடந்து வருகிறது.
 
     
  தல வரலாறு:
     
  கொங்கு நாட்டில், குன்றுகளின் மேல் அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு பெற்றது சிவன்லை. அருணகிரி நாதரால் பாடல் பெற்றது; புராணங்கள், தமிழ் இலக்கியங்கள், சிவமலை குறவஞ்சி என பழங்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டின் உறுப்பு நாடுகள் 24ல், காங்கேயநாட்டின் தலைநகராக இருந்தது சிவன்மலை. கங்கையின் புதல்வர் முருகன், காங்கேயன் என்ற சிறப்பு பெற்றதாகவும், கங்கை குல வேளிருக்கு உரியதால் இப்பெயர் பெற்றது, கங்கர்கள் ஆண்டது என பல்வேறு வரலாறுகள் உள்ளது. காங்கேய நாடு கோயில்கள் நிறைந்த நாடு; இன்றும் பல ஆயிரம் ஆண்டு பழைமையான கோயில்கள் காங்கேயம் பகுதிகளில் காணப்படுகின்றன. சிவன் மலை குன்றாகவும், வனமாகவும் இருந்துள்ளது. பட்டாலியே குடியிருப்பாக இருந்துள்ளது. சிவமலை முருகனை பட்டாலியூரன், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் பாலன் என குறிக்கப்படுகிறது. அடிவாரத்திலுள்ள பட்டாலி வெண்ணீஸ்வரர் கோயில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண், அற்புதமான சிற்பங்கள், 13 கல்வெட்டுகள்  காணப்படுகிறது.

சிவமலை குறவஞ்சியில் சிவன் மலை என பெயர் வந்ததற்கு, வள்ளி நாயகியை முருகன் கவந்து வந்த காரணத்தில், ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன்- வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து , மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என பெயர் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10-13ம் நுõற்றாண்டில், மிகப்பெரிய வணிக நகரமாக இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பட்டாலி கல்வெட்டுக்களை 1920ம் ஆண்டே, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. 18 சித்தர்களின் சிறப்பு பெற்றவரும், சிவ வாக்கியம் என்ற நுõலை இயற்சிய சிவஞானியும், சித்தருமாகிய சிவவாக்கியர்  அமைத்த கோயில் ஆகும். சிவ வாக்கியர், முருகனின் உபதேசத்தால், இக்கோயிலை அமைத்ததால், சிவமலை என பெயர் பெற்று, நாளடைவில், சிவன் மலை என பெயர் மருவியுள்ளது. பார்வதியின் பாதங்களில் உள்ள அணி கலன்களிலிருந்து தெறிந்து விழுந்த நவரத்தினங்கள் நவகன்னியராகி, அவர்கள் வயிற்றிலிருந்து முருகனின் போர்ப்படை தளபதிகளாக திகழ்ந்த நவ வீரர்கள் தோன்றினர். இதனால், வீரமாபுரம் எனவும் பெயர் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.சிவமலை. சிவாசலம், சிவராத்திரி, சிவசயிலம், சிவமாமலை. சிவசைலம், சிவநாகம்,சிவகிரி எனவும், புலவர்கள்  தெளி தமிழ்தேர் சிவமலை, செல்வ சிவமலை, கல்யாண சிவமலை, மகிமை சேர் சிவமலை, தவசு புரி சிவமலை என பலர் பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. திரிபுர  சம்ஹாரத்தின் போது, சிவபெருமான் வாசுகியைக்கணையாக வைத்து, மேருமலையை வில்லாக வளைத்த போது, மேரு மலையில் சிகரங்களில் ஒன்று காங்கேகய நாட்டில் விழுந்தது  சிவமலை குன்று. கொங்கு நாட்டின் 24 நாடுகளின் தலைமையானதாக காங்கேய நாடும், அதன் தலைநகராக பட்டாலியூர் சிவன்மலை இருந்துள்ளது. வீதிகள் தோறும் தேர்கள், அன்னதானத்தில் சிறந்த நாடு; கலை வளரும் நாடு; சிவன் மலையில் சீருடன் தேரோட்டும் நாடு, செல்வம் சிறக்கும் நாடு என பழங்கால இலக்கிய பாடல்களில் குறிப்புள்ளது.முத்துரத்தினம் விளையவுள்ள நாடு என்றும் பழங்கால பாடல் குறிப்பிடப்படுகிறது. அதே போல், இங்கு, அரிய வகை கற்கள், நவ ரத்தின கற்கள் எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பழங்காலத்தில், இங்கிருந்து நவ மணிகள் உற்பத்தி; மணிகளாக செய்யப்பட்டு, பெரு வழியில் சென்று, கப்பல்கள் மூலம்  ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது, கொடுமணல் ஆய்வு மூலம் தெரிந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்று பத்தில் பாடல் இடம் பெற்றுள்ளது. அருணகிரி நாதர் பட்டாலிக்கு வந்து மூன்று திருப்புகழ் பாடியுள்ளார். பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோயிலில் 17 கல்வெட்டுக்கள் உள்ளன. குலோத்துங்க சோழன், விக்கிர சோழன், வீரராஜேந்திர சோழன், அபிமான சோழ ராஜ ராஜ  சோழன் உள்ளிட்டோர் கல்வெட்டுக்கள் உள்ளன.சோழ அரசர்கள் கோவிலுக்கு அதிகளவு கொடை அளித்துள்ளனர். சிலைகள், மண்டபங்கள், விளக்கு வைக்க, சிவராத்திரி கொடை, கிணறு, தோட்டம் என பல குறிப்பிடப்பட்டுள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சைதன்ய சொரூபமாக இன்றும் சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும், உட்பிரகாரத்தில் குகையில் சிவவாக்கியர் அமர்ந்த நிலையில், வள்ளியோடு சுப்ரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் சிறப்பும் இங்கு கிடைக்கும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar