Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பூமிநாதர்
  அம்மன்/தாயார்: மரகதவல்லி
  தல விருட்சம்: புன்னை மரம்
  தீர்த்தம்: சிவகங்கை, தாமிரபரணி
  ஆகமம்/பூஜை : காமிகம்
  புராண பெயர்: தர்மநல்லுார், புன்னை வனம், வேத வனம்
  ஊர்: வீரவநல்லுார்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மார்கழி திருவாதிரை 10 நாள், ஐப்பசி திருக்கல்யாணம் 15 நாள்  
     
 தல சிறப்பு:
     
  பூமாதேவியும், தர்ம தேவனும், 4 வேதங்களும் வழிபட்ட தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மரகதவல்லி சமேத பூமி நாதர் திருக்கோயில் வீரவநல்லுார்- 627426 திருநெல்வேலி  
   
போன்:
   
  +91 94864 27875 
 
பிரார்த்தனை
    
  திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, சொத்து பிரச்னைகள் தீர, நிலம் வாங்க இங்கு பிரார்த்தனை செய்ய படுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அர்ச்சனை செய்யப்படுகிறது. 
    
  தல வரலாறு:
     
  தோற்றுவாய்

தெய்வப் புகழ் பாடும் திருப்புராணங்கள் பதினெட்டு என்பர். அவற்றுள் சிவபெருமானுக்குரியன பத்து ஆகும். இப்பதினெண் புராணங்களும் வழிவழியாய்ச் சிவபெருமானால் நந்திக்கும், நந்தியால் சனற்குமாரருக்கும், சனற்குமாரரால் வியாசருக்கும், வியாசரால் சூதமுனிவருக்கும், சூதமுனிவரால் சுகருக்கும் ஓதப்பட்டு வந்தன என நூல்கள் கூறும்.

இறுதியாகச் சூதமுனிவராலும், சுகமுனிவராலும் நைமிசாரண்யத்திலுள்ள முனிவர் பலரும் இப்புராண வரலாறுகளை அறிந்து அவர்கள் வாயிலாக உலகில் பலரும் அறியலாயினர்.

சைவ புராணங்கள் பத்தனுள் முதலாவதாகிய சிவபுராணம் சங்கிதை காண்டம், வைபவ காண்டம் என இரு பிரிவுகளையுடையது. இவற்றுள் வைபவ காண்டத்துள் தல வரலாறுகள் பல பேசப்படுகின்றன. விண்ணவர் போற்றும் வீரைமாநகர் எனும் வீரவநல்லூரின் தலச்சிறப்பும் அங்குக் கூறப்பட்டுள்ளது என வீரைத் தலபுராணம் பாடிய புலியூர் சிவாசாரியார் கைலாசநாதப் பண்டாரம் அவர்களின் கூற்றால் அறிகின்றோம்.

நைமி சாரண்ய வனத்தில் சூதமுனிவரால் ஓதப்பட்ட புராண வரலாறுகளைக் கேட்டறிந்த முனிவர் பலருள் சங்கயோகி என்பவர் சிவவனம் எனப்படும் இந்த வீரையம்பதியைக் கண்டு வணங்கும் அன்பால் தென்திசை வந்து இப்பதி சார்ந்து சித்தர்கள் சூழப் பொங்கு தீர்த்தத்தில் ஒரு குகையில் வதிந்து இத்தல வரலாற்றுச் சிறப்பைப் பலருமறிய உபதேசித்தருளினார் என்பர்.

இந்நிலையில், வீரசேனன் எனும் மன்னன் ஒருவன் பொதியமலைக்கு வந்து அகத்தியமுனிவரைக் கண்டு வணங்கி அவரது ஆசி பெற்றுக் களாவனம் எனும் இவ்வீரைத்தலம் சார்ந்து சங்கயோகியைக் கண்டு வணங்கி இத்தல விசேடத்தை உரைத்தருளுமாறு வேண்டிக் கொள்ள அவரும் கூறுவாராயினர்.

பொதிகாசலச் சருக்கம்

சிவபெருமான் தமது கைலையங்கிரிக்கு இணையாகப் பூதலத்தில் எட்டு மாமலைகளைக் கொண்டார். அவற்றை அட்டமா பர்வதங்கள் என்பர். அவற்றுள் பொதிகை மலையும் ஒன்றாகும். சிவபெருமானின் கட்டளையின்படி அகத்திய முனிவர் வந்து இங்கு வாசம் செய்தார். பெருமான் இங்குவந்து அகத்தியனாருக்குத் தம் மணக்கோலங் காட்டி அருள்புரிந்தார். இப்புனித மலையைப் போற்றி வணங்கி யோகியர் பலர் வந்து குழுமிச் சிவனைத் துதித்து வணங்கி, வேண்டும் வரம் கேட்க, அவர் அவர்கள் முன் தோன்றி, “இப்பொதியத்திற்கு ஈசான மூலையில் பொருநைக் கரையில் புன்னைவனம் எனும் தலம் உள்ளது. மாமறையும் மண் மகளும் பூசித்துப் பேறு பெற்ற தலம் அது. இப்பூமியில் நலம் சிறந்த பதியாகும். நீவிர் அங்குச் சென்று நம்மைப் பூசித்து வணங்குவீரேல் வேண்டிய வாரங்கள் விருப்புடன் அளிப்போம்” என்று அருளி மறைந்தார். முனிவர்களும் மனமகிழ்ந்து, புனிதன் ஆணையிட்டவாறு புன்னைவனம் எனும் இந்த வீரைநகர் வந்து சேர்ந்தனர்.

வந்து சேர்ந்து, புன்னைவனத்தின் மாட்சியைக் கண்டு வியந்து மனமுருகித் திரியும் போது ஓரிடத்தே ஒரு சூக்கும லிங்கத்தைக் கண்டு, எல்லையிலாக் களிப்படைந்து, பலவாறு போற்றித் துதிக்க, ஈசனும் அவர்களுக்குக் காட்சிதந்து வேண்டும் வரமருளி மறைந்தார். அவர்களும் பொதியம் சென்றனர். ஆயினும் நாடோறும் வந்து புன்னைவனநாதனை வணங்கி மீண்டனர்.

விசுமுகன் வரலாறு

தண்பொதிகையின் சிறப்பையுணர்ந்த வானத்துத் தேவர்களும் முனிவர்களும் பலமுறை பூலோகம் வந்து பொதிகையை வணங்கிச் சென்றனர். இவர்கள் வாயிலாகத் தேவேந்திரனின் மந்திரிகளில் ஒருவனாகிய விசுமுகன் என்பவன் பொதியத்தின் பெருமையைக் கேள்வியுற்று அவனும் சிலமுறை வந்து வணங்கி மீண்டான். ஒருநாள் அவன் தேவோலகத்திலுள்ள பஞ்சதருக்களின் மலர்களோடு பொதிகையை வணங்கப் புறப்பட்டான். அப்போது எதிரே வந்த இந்திரன் அம் மலர்களின் மணத்தில் மயங்கி அவற்றைத் தன் மனைவிக்கு அளித்திடுமாறு வற்புறுத்திப் பெற்றான். இதனால் மனம் உடைந்த விசுமுகன் பொதிகைக்கு வந்து அங்குள்ள முனிவர்களைக் கண்டு வணங்கி இறுதியில் அகத்தியரை அடைந்து அடிபணிந்து நின்றான். அவர் அவனை ஆசீர்வதித்துப் பொதிகை மலையின் சிறப்பையும், பார்வதி பரமேஸ்வரன் திருமணக் காலத்தில் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்ததையும், அதைச் சமப்படுத்த இறைவன் தன்னைத் தென்திசை அனுப்பத் தான் வந்து பொதியத்தில் தங்கியதையும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் அவர் மூலமாக வீரைத்தலம் பற்றியும் அங்கு இறைவன் ஜோதிலிங்கமாகக் குடிகொண்டிருப்பதைப் பற்றியும் கேள்வியுற்று இத்தலத்திற்கு வந்து சேர்ந்தான்.

சேர்ந்தவன் இங்குள்ள முனிவர்களை வணங்கி அவர்கள் வாயிலாக இத்தலப் பெருமையையும். தீர்த்தங்களையும் அறிந்து ஞான தீர்த்தத்தில் நீராடிப் பூசனைக்கு வேண்டியவைகளையெல்லாம் ஆகம முறைப்படிச் சேகரம் செய்து ஜோதிலிங்கத்தைச் சிறப்பாக வழிபட்டு உளங்கசிந்து இறைவனைப் பலவாறு துதித்தான். இறைவனும் அவனுக்கிரங்கி அருள்புரிந்து யாதும் வரம் வேண்டுமென வினவினார். மந்திரன் எனும் பெயருடைய அந்த விசுமுகனும். “ஐயனே, மலர் விஷயத்தில் இந்திரன் செய்த தவற்றினை மன்னித்திருள வேண்டும். தாம் இந்த லிங்கத்திலே நிலையாகக் குடிகொள்ள வேண்டும். இவ்லிங்கம் என் பெயரால் மந்திரலிங்கம் என அழைக்கப்படல் வேண்டும். இத்தலமும் இந்திர லோகம் எனும் என் ஊர்பெயரால் இந்திரேசுரம் என வழங்கப்படல் வேண்டும்’ என வேண்டிக் கொண்டான். ஐயனும் அவ்வாறே அருள்புரிந்து மறைந்தார்.

இவன் இவ்வாறு இங்கு வதிவதைத் தேவேந்திரன் உணர்ந்து தேவர்கள் சிலருடன் இங்கு வந்து தாங்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்கப் போவதைக் கூறி விசுமுகனைத் தேவலோகம் வருமாறு அழைத்தான். தான் இறைவனிடம் விடைபெற்று வருவதாகக் கூறி அவன் யாவரையும் அனுப்பிவிட்டு இறைவனைப் பணிந்து வானுலகு சென்றுவர, வரம் கேட்டான். இறைவன் அசரீரியாக “அன்பனே நீ வான் செல்லல் வேண்டா. பாற்கடலினின்று வரும் ஆலகால நஞ்சினால் தேவர் துன்பமுறப் போகின்றனர். நீ இங்குதானே இரு. யாம் உனக்கு அமுதம் வரவழைத்து அளிப்போம்” என உரைத்தருள அவனும் அங்ஙனமே இங்குத் தங்கினான். இறைவனும் அவனுக்கு அமுதம் வரவழைத்து அளித்தருளினார். அன்றுமுதல் இந்த லிங்கம் அமுதலிங்கம் எனப் பெயர் பெறுவதாயிற்று. விசுமுகனும் இறைவனைப் பரவிப் பலநாள் வாழ்ந்து இறுதியில் வீட்டுலகப் பேற்றினையடைந்தான்.

புன்னைவனமாகிய வரலாறு

ஒருமுறை வேதங்கள் நான்கும் மங்கையர்வடிவு கொண்டு, கைலைக்குச் சென்று இறைவனை அன்போடு வழிபட்டுவர, அவரும் மனமகிழ்ந்து அப்பெண்களுக்குக் காட்சிதந்து, “வேண்டும் வரங்களைக் கேளுங்கள்” என, அவர்கள் “எம்பெருமானே, நாங்கள் அசுரர்களால் அபகரிக்கப்பட்டு அல்லல் அடைகின்றோம். அத்தகைய தீயோரிடமிருந்து எங்களைக் காத்து அழியா வரம் அருள வேண்டும்” என வேண்டிக் கொள்ள ஈசனும் அவ்வாறே அருள்புரிந்து, மேலும் வேண்டிய வரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு புகல. “முழுமுதலே தங்களை இடையறாது பூசிக்கும் வரம் தருக ” என வேண்டிக் கொண்டனர். சிவபிரானும் மகிழ்ந்து “பூதலத்தே தவவனம் என்னும் வீரைப்பதி ஒன்றுளது. அவன் சென்று எம்மைப் பூசித்து வருக என அருள்புரிந்தார். அங்ஙனமே வேத மங்கையர் இவ்வீரையம்பதி வந்து ஜோதி லிங்கத்தை வழிபட்டுப் புன்னை மரங்களாகி  இறைவனருகே நின்று நிழல் கொடுத்து வந்தனர். பெருமானும் அவர்தம் அன்புக்கு உவந்து காட்சிதந்து ஆசியருளினார். அவர்களும், “ஆதி நாதா! இத்தலம் எம்பெயரால் புன்னை வனமென அழைக்கப்பட வேண்டும்” என வேண்டிக் கொள்ள இறைவனும் அவ்வணமே அருள்புரிந்து மறைந்தார். அது முதல் இப்பதி புன்னைவனம் எனப் பெயர் பெற்றது. இறைவனும் புன்னை வனநாதன் ஆனார்.

விருகமுனிவன் வரலாறு

அடர்ந்த எழில் வனமொன்றில் விருக முனிவன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் கலைஞானம் ஆகிய வரலாற்றையும் தன் தந்தையிடம் கற்றுணர்ந்த ஒழுக்கசீலன். அவன் ஒருமுறை தன் தந்தையை அணுகித் “தந்தாய், என் மனம் தவம் செய்து இறைவன் அருளைப்பெற விழைகின்றது. எளிதில் இறைவனருள் கிட்டும் இனிய தலமெது என்பதனை எனக்கு அறிவித்தருள வேண்டும்” என வேண்டிக் கொண்டான்.

தந்தையும் மகிழ்ந்து “பிள்ளாய், பாரில் பல தலங்களிருப்பினும் தென்னகத்தே பொதிகையின் தென்கீழ்த் திசையில் தவவனம் என்றொரு தலமுளது அத்தலம் எத்தலத்தையும் விட முத்திக்கு எளிதில் வழிகாட்டும். யானும் அங்குச் சென்று தவமியற்ற அவாவுகின்றேன்; இன்றே செல்வோம் ” எனக்கூறி இருவரும் இப்பதி வந்தடைந்து ஜோதிலிங்கத்தைக் கண்டு ஆகம முறைப்படி வழிபட்டு வந்தனர். விருக முனிவன் நாடோறும் ஆகாய மார்க்கமாய்க் காசியை அடைந்து அங்கிருந்து கங்கை நீரைப் புனித கமண்டலத்திற் கொண்டுவந்து இறைவனை அதால் நீராட்டி வழிபட்டு வந்தான். ஒருநாள் வழக்கம்போல் கொண்டு வந்த நீர் மறைந்து கமண்டலம் காலியாக இருக்க, முனிவன் வருத்தித் தன்னை அழித்துக் கொள்ள நினைத்தான். இறைவன் அவன் அன்புக்கு மகிழ்ந்து அசரீரியாக, “அன்பனே பொறு. தீர்த்த நீர் மறைந்ததுகண்டு வருந்தவேண்டாம். என் சன்னதி முன் கீழ்த்திசையில் முன்னர் சிவகங்கை இருந்தது. அவ்விடத்தை நீ தோண்டின் தீர்த்த நீர் கிடைக்கும். அதுகொண்டு எம்மை நீராட்டு ” என்று அருள்புரிந்தார்.

முனிவனும் வியந்து இறைவன் குறிப்பிட்ட இடத்தைத் தோண்ட அங்கிருந்து புனித கங்கை நீர் ஊற்றெடுத்துப் பொங்கியது. முனிவன் அது கண்டு மகிழ்ந்து தினமும் அந்நீர் கொண்டே இறைவனை முழுக்காட்டிப் பூசனை செய்து வந்தான். சிவபெருமானும் அவன் பூசனையில் மகிழ்ந்து அவனுக்குக் காட்சி கொடுத்து இனி அவன் பெயரால் தன் நாமம் விருகநாயகன் என அமையும் என்பதாக அருள்புரிந்து மறைந்தார். முனிவனும் பலநாள் வாழ்ந்து வழிபட்டு இறுதியில் வீடு பெற்றான்.

அரியும், அயனும் பூசித்த வரலாறு

ஒருசமயம் தம்முள் யார் உயர்ந்தவர் எனத் திருமாலுக்கும், பிரமனுக்கும் பிணக்கு ஏற்பட்டு முடிவையறியச் சிவபிரானை நாடி வணங்கிக் கேட்டனர். தனது பெருவடிவின் அடிமுடியைக் கண்டு வருபவரே பெரியவராவார் என இறைவன் மொழிந்தார். திருமால் பன்றி வடிவெடுத்து எம்பிரானின் திருவடியைக் காணப் பூமியைத் துளைத்துச் சென்றார். ஆயினும் அது இயலாதவராய் தவ வனம் எனும் இத்தலத்தில் வந்து தவம் செய்வாராயினர். பிரமன் அன்னப்புள் வடிவெடுத்து இறைவனின் திருமுடியைக் காண மேலே பறந்து சென்றான். அது முடியானாகித் திரும்பும் போது ஈசனின் முடியினின்று கழிந்துவிழுந்த ஒரு தாழை மடலைக் கண்டான். தான் திருமுடியைக் கண்டதாகப் பொய்ச்சாட்சி கூறுமாறு அதனுடன் கலந்துபேசி ஒப்பச்செய்து அம்மடலுடன் இறைவனிடம் வந்தான். பிரமனின் புரட்டை உணர்ந்த கைலைக் காவலராகிய நந்தியம் பெருமான் அவர்களை உள்ளே விடாது தடுத்ததுமின்றி “நீ இன்று முதல் பூசனைக்கு உதவாய் ” எனத் தாழை மலருக்கும், “நினக்கு இனி கோயிலும், பூசனையும் கிடையா மற்றும் நீ ஒரு அலகையாகத் (பேயாகத்) திரியக்கடவாய்” எனப் பிரமனுக்கும் சாபம் கொடுத்தார்.

பேய் வடிவு பெற்ற பிரமன் தன் தவறுணர்ந்து வருந்தி அப்பாவம் தீரத் தவம்புரியும் பொருட்டு இத்தலத்தை நாடி வந்து திருமாலைக்கண்டு இருவருமாக இறைவனைப் பலவாறு துதித்துப்போற்றி வழிபாடு செய்து வந்தனர்.

நிற்க, தேவர்கள் ஒன்றுகூடிக் கைலையில் சிவபிரானைக் கண்டு வணங்கித் திருமாலும், பிரமனும் பூலோகத்துத் தவவனத்தில் தவம் செய்யப் போய்விட்டதால் காப்புத் தொழிலும், படைப்புத் தொழிலும் தடை செய்யப்பட்டிருப்பதை எடுத்துக் கூறி இருவருக்கும் அருள்புரிந்து பழைய பதவியை அளித்தருளப் பணிந்து வேண்டிக் கொண்டனர்.

இறைவனும் மனமகிழ்ந்து தவவனம் சார்ந்து பிரம்ம, விட்டுணுவுக்குக் காட்சி நல்கி அருள்புரிந்து பிரமனின் பேய்வடிவை மாற்றி அவர்தம் முன்னைய தொழில்களில் அவர்களை நிறுத்தினார். அது முதல் பிரமன் வழிபட்டு வந்த தீர்த்த நிலை பிரமதீர்த்தம் (வடமேற்கு மூலையில்) எனவும், இலிங்கம் பிரம லிங்கம் (பார்த்திபலிங்கம்) எனவும் பெயர் பெற்றன.

நகுஷன் சாபம் நீங்கிய வரலாறு

நூறு அஸ்வமேத யாகங்கள் செய்ததின் பலனாக நகுஷன் எனும் மன்னன் இந்திரப் பதவியைப் பெற்றான். சப்தரிஷிகளால் சுமக்கப்பெற்ற தண்டிகையிலேறி இந்திராணியன் அந்தப்புரத்தை நோக்கி அவன் சென்று கொண்டிருக்கும் போது மோகாவேசத்தால் விரைவாகச் செல்க எனப் பொருள்படும் “ஸர்ப்ப ” எனும் சொல்லைப் பலமுறை கூவி முனிவர்களைத் துரிதப்படுத்தினான். இது பொறாத அகத்திய முனிவர் அவனை சார்ப்பமாகுமாறு சபித்தார். பிழையுணர்ந்த அவன் அவர்களைப் பணிந்து சாப விமோசனம் கேட்டபோது இத்தலத்திற்கு வந்து இறைவனைப் பூசிக்குமாறு அவர்கள் அவனுக்குப் பணித்தனர். அதன்படி அவன் பாம்புருவில் இத்தலம் வந்து இறைவனைப் பூசித்து வந்தான். ஒருநாள் நைமிசாரண்ய வனத்திலிருந்து வாமதேவர். வசிட்டர், கண்ணுவர், மரீசி முதலிய முனிவர்கள் இறைவனைப் பணிய இங்கு வந்தனர். அத்திரி முனிவரும் வந்தார். அவரிடம் மற்ற முனிவர்கள் இத்தலப் பெருமையைக் கேட்டனர். அவரும் விரிவாக எடுத்துரைத்தார். நகுஷனும் பாம்பு வடிவில் அவற்றைக் கேட்டு நல்லுணர்வு பெற்றான். ஒருமுறை காட்டுத்தீயில் நகுஷன் அகப்பட்டுக் கொண்டான். அந்த நேரத்திலும் நகுஷன் இறைநாமம் மறவாமல் அவனைத் துதித்துக் கொண்டே வலப்புறமாய்த் துள்ளி வீழ்ந்து தீயில் கருகி மடிந்தான். இறைவன் தேவியுடன் காட்சி தந்து சாப விமோசனம் அருளினான். அவனும் நல்லுருப் பெற்றுப் புட்பக விமானமேறி விண்ணடைந்தான்.

பூமி தேவி பாரம் நீங்கிய வரலாறு

என்றும் பதினாறு வயதென இறைவனருளால் வரம் பெற்ற மார்க்கண்டேயர் வரலாறு யாவரும் அறிந்ததே. மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத்தபோது எமன் ஒரு கொடியாக மாறி இத்தலம் வந்து கிடந்தான். எமனின் தொழில் தடைப்பட்ட காரணத்தால் பூமியில் உயிர்களின் தொகை அதிகரித்துப் பாரம் மிகுவதாயிற்று. பாரம் தாங்கமாட்டாத பார்மகள் பரமனிடம் சென்று முறையிட்டாள். இத்தலம் வந்து தன்னைப் பூசிக்குமாறு அவர் அவளுக்கு ஆணையிட்டார். பூமி தேவி அதிசயித்து இத்தலப் பெருமைபற்றி இறைவனை வினவினாள். இறைவனும் தராசின் ஒரு தட்டில் வானுலகையும், இவ்வீரைத் தலமாம் தவ வனத்தை ஒரு தட்டிலுமாக வைத்து நிறுத்தார். இத்தலமிருந்த தட்டே தாழ்ந்து நின்றது. வானுலக மிருந்த தட்டு உயர்ந்து நின்றது. பூமிதேவி அதுகண்டு வியந்து மகிழ்ந்து, இந்தத் தவவனம் வந்து இறைவனை நீராட்டிப் பல மலர் தூவி ஆவின் பாலும், சுரைக்கறி அமுதும் படைத்துப் பூசித்து வந்தாள். இறைவனும் மனமகிழ்ந்து அவளுக்குக் காட்சிதந்து எமனை உயிர்ப்பித்துப் பூமியின் பாரம் குறைய வழி செய்தார். பூமி வணங்கியதால் இறைவனுக்குப் பூமிநாதர் எனும் திருநாமம் ஏற்பட்டது. தீர்த்தமும் நேமி (பூமி) தீர்த்தம் எனப்பட்டது.

தருமன் பூசித்த வரலாறு

முன்னைய அத்தியாயத்தில் கூறியபடி பூமிதேவி இறைவனிடம் வந்து, தன்பாரம் தீர்க்குமாறு வேண்டிக் கொண்டபோது சிவபெருமான் நந்தியம் பெருமானை அழைத்துக் கொடியாக உருமாறிக்கிடக்கும் எமதருமனை அழைத்துவரப் பணித்தார். நந்திதேவரும் இத்தலம் வந்து எமனைப் பெயர்கூறி விளித்தார். எமனும் கொடி வடிவம் நீங்கப் பெற்றுப் பழைய வடிவுடன் வந்து தோன்றினான். இருவரும் இறைவன் முன் வந்தனர். இறைவன் எமனை நோக்கி, “அந்தகா நின் பிழையை மன்னித்தோம். முன்னைய வடிவும் தொழிலும் தந்தோம். எம்மை அருச்சித்து வணங்கி ஏகுவாயாக ” எனப்பணித்தார். எமதருமனும் மன மகிழ்ந்து கங்கை நீர் கொணர்ந்து இறைவனை நீராட்டிப் பலவகை மலர்களால் அருச்சித்துத் தொழுது போற்றினான். இறைவன் உளம் நெகிழ்ந்து “நீ வேண்டு வன கேள்” என்றார். “எம்பெருமானே எனக்குச் சாபவிமோசனம் அளித்த இத் தலமும் இதிலுள்ள தீர்த்தமும், இங்குக் கோயில் கொண்டுள்ள தாமும் என் பெயரால் வழங்கப்பட அருள்புரிய வேண்டும் ” என எமதருமன் வேண்டிக் கொண்டான். அதுமுதல் இத்தலம் தருமபுரி எனவும். தீர்த்தம் தருமதீர்த்தம் எனவும் பெயர் பெற்றன. இறைவனும் தருமநாயகன் எனப் பெயர் பெற்றார். இங்கு வந்து இத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கி வழிபடுவோர்க்கு எமபயம் இல்லை என்பர்.

அகத்தியர் பூசித்த வரலாறு

திருக்கைலை மலைதனில் எம்பெருமான் பார்வதி பிராட்டியாரைத் திருமணம் செய்துகொண்ட நாளில் மூவுலகத்தாரும் அவன் சென்று கூடியதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதனைச் சமப்படுத்த இறைவன் அகத்திய முனிவரைத் தென்பால் அனுப்பினர். அகஸ்தியரும் பொதிகை மலை வந்தார். பூமி சமநிலை பெற்றது. பின்னர் முனிவர் இவ்வீரைத்தலம் வந்து அங்குத் தவமியற்றும் முனிவர்களைக் கண்டார். அவர்கள் அவரை வணங்கி வந்த காரணம் வினவினர். அகஸ்தியரும் தான் தென்திசை வரநேர்ந்ததை விரிவாக எடுத்துரைத்து வீரையம்பதிப் பெருமானைக் கண்டு வணங்க வந்தததாகக் கூறினார். முனிவர்கள் அதுகேட்டு அதிசயித்து உளமகிழ்ந்தனர். பின்னர் அகஸ்திய முனிவர் இறைவனை ஆகம விதிப்படி வழிபாடு செய்து வந்தார். இறைவனின் இலிங்க வடிவின் இடப்பாகம் மரகத வண்ணமாய்க் காட்சியளித்தது. அகஸ்தியரும், மற்ற முனிவரும் அதுகண்டு அதிசயித்துத் துதிபல பாடிப் போற்றி வழிபட்டனர். இறைவனும் தேவியுடன் இடபவாகனராய்க் காட்சி நல்கி அருள் புரிந்தார். அதுமுதல் தேவியார் மரகதவல்லி என்னும் திருநாமம் பெற்றார். இறைவனும் அகஸ்திய நாதர் என அழைக்கப்பெற்றார். தீர்த்தமும் அகஸ்தியர் தீர்த்தம் ஆயிற்று. குறு முனிவரும் இறையருளை எண்ணி வியந்து வணங்கிப் பூசித்து ஏனைய முனிவரிடம் விடைபெற்றுப் பொதிகை சென்றார்.

கனகமுனி பூசித்த வரலாறு

வீரசென்மன் எனும் மன்னன் சேதி நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்குச் சுகணசீலன் என ஒரு மகன் பிறந்தான். சுகுணசீலன் தந்தைக்குப் பின் நாடாண்டு வந்தான். இவன் ஒருமுறை வேடர்களோடும், வேண்டிய படைக்கலன்களோடும் வேட்டைக்குப் புறப்பட்டுத் தன் நாட்டை அடுத்துள்ள காடு வந்தடைந்தான். அக்காட்டில் தவம் செய்துகொண்டிருந்த பல முனிவர்கள் கூடி ஒரு பெருவேள்வி செய்வதற்குப் பந்தலிட்டு ஆயத்தம் செய்து வைத்திருந்தனர். வேட்டைக்கு வந்த மன்னனின் ஆட்கள் வெறியில் அப்பந்தரை அழித்து ஆயத்தங்களைப் பாழாக்கி விட்டனர். அதனால் அம்முனிவர் வெகுண்டு மன்னனைப் பன்றியாகுமாறு சபித்து விட்டார். இதையுணர்ந்த மன்னன் வருந்தி அவர்களை வணங்கித் தனக்கு தெரியாமல் நடந்துவிட்ட அப்பிழைக்காகத் தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். அவர்களும் சீற்றம் மாறி “இட்ட சாபம் இட்டதே, நீ தென்னாட்டிலுள்ள தவவனம் (வீரைநகர்) சென்று இறைவனை வழிபட்டுவர, சாபம் நீங்கப் பெற்று பொன்மயமான உடலைப் பெறுவாய். நீ பன்றியாக மாறினும் நின்முன்னைய அறிவு மங்காதிருக்க வரம் தந்தோம்” என்று அருளி அனுப்பி வைத்தனர். மன்னவன் பயணமானான். வழியில் பொன்வனம் வந்தான். அங்குத் தவம் செய்து கொண்டிருந்த ரோமரிஷியைக் கண்டு வணங்கி நின்றான். அவரும் அவனை ஆசீர்வதித்து அவன் வரலாற்றைக் கேட்டறிந்து உடல் மனித உடலாகவும், முகம் மட்டும் பன்றி முகமாகவும் மாற்றித் தவவனத்தின் பெருமைகளையும் கூறி அவனை அங்கு அனுப்பி வைத்தார். மன்னவன் தவவனம் சேர்ந்தான். இறைவனைக்கண்டு உளமுருகித் தொழுது வழிபடவும் அவனது சாபம் நீங்கப் பெற்றது. மன்னன் மகிழ்வோடு இறைவனைப் பலவாறு பாடித் துதித்துக் கொண்டிருக்கும்போதே அவனது மேனி பொன்னிறமாய் மாறிற்று. சூழ நின்ற முனிவர்கள் அதுகண்டு அதிசயித்தனர். மன்னனும் மாமுனிவர் கூட்டத்தில் சேர்ந்து விட்டான். கனக மாமுனி எனும் பெயரையும் பெற்றான். கனகம் என்பது பொன்னாம். பின்னர் அக்கனக மாமுனி இத்தலத்திலேயே தங்கித் தவம்புரிந்து ஞான கங்கையில் நீராடி முறையோடு நாள் வழிபாடியற்றி வந்தான்.

அவனது தவத்திற்கு மெச்சிய இறைவனும் அவன் முன் “தோன்றியருளி விரும்புவன வேண்டுமாறு பணித்தார். முனிவன் மகிழ்ந்து “எம்பெருமானே கயிலையை இவன் வரவழைத்துக் காட்ட வேண்டும். அக் கயிலையிலே நின்திருக்கோலக் காட்சியைக் கண்டு நான் களிக்க வேண்டும்” என வேண்டிக் கொண்டான். இறைவனும் அவ்வாறே கயிலைக் காட்சியைக் காட்டியருளி “மாமுனியே நீ இக்கயிலையை அடைந்து இன்பார்ந்திருப்பாயாக ” என்று வரமருளினான்; அன்று முதல் இப்பதி தென்கையிலாயம் எனப்பெயர் பெற்றது. இறைவனும் வான்பணிநாதன் என அழைக்கப்பட்டான்.

இராக்கத மோசனம் பெற்றது

ஆதிநாள் செய்த பாவத்தின் காரணமாகப் பார்க்கவன் என்ற முனிவன் அரக்கனாகப் பிறந்து ஒரு வனத்திடை வாழ்ந்து வந்தான். அவ்வழி வருவோரைக் கொள்ளையடித்தும், யாகங்களை அழித்தும் பிற உயிருக்குத் தீங்கு செய்து வந்தான்.

இந்நிலையில் கும்பகோணத்திலிருந்து ஒரு தவ வேதியன் இத்தவ வனத்தைப் பற்றிக் கேள்வியுற்று இங்கு வழிபாடியற்றி வணங்கிப் போகப் புறப்பட்டு, அரக்கன் பதுங்கியிருக்கும் வழியாய் வந்தான். அவ்வேளை வேறு ஒரு கூட்டத்தாரைப் பக்கத்து வழியில் கண்ட அரக்கன், தன் கையில் உண்ண வைத்திருந்த முழு மாங்கனியைப் பாதையில் எறிந்துவிட்டு அக்கூட்டத்தாரை மடக்கிக் கொள்ளையடிக்கப் போய்விட்டான். மாங்கனி கிடப்பதைக் கண்ட வேதியன் தேவபூஜைக்கு உதவுமென அதை எடுத்துக் கொண்டு இத்தலம் வந்து இறைவன் முன் படைத்து அருச்சித்து வணங்கினான். அரக்கனும் சிலநாட் கழித்துத் தவவனம் வந்து சேர்ந்தான். மாங்கனி அருச்சிக்கப் பெற்ற மகிமையால் அவன் நன்மனமடைந்து இங்குத் திரிந்துவரும்போது முனிவர் பலரும் இத்தலப் பெருமைகளைப் பாராட்டிப் பேசுவதைப் பன்முறை காதால் கேட்டான். இறுதியில் ஒருநாள் இத்தலத்திலேயே அவன் ஆயுள் முடிந்தது. அவனைக் கொண்டுபோக எம தூதர்கள் வந்தனர். அவர்களோடு சிவகணங்களும் வந்து சேர்ந்தன. பலவிதத்தும் பாவியாகிய இவனைத் தாங்கள் கொண்டுபோய் நரகில் சேர்ப்பதே பொருந்து என எமதூதர் வாதாடினர். இவனது கைக்கனி இறைவனது வழிபாட்டுக்குப் பயன்பட்டமையாலும், தலப்பெருமையைக் காதால் கேட்டதாலும், இத்தலத்திலே உயிர் விட்டதாலும் இவன் தங்களால் கைலாயம் கொண்டு செல்லத் தக்கவனாவன் எனச் சிவகணங்கள் வாதாடின. இறுதியில் சிவகணத்தார் வெற்றி பெற்று அரக்கனைக் கைலாயம் கொண்டு சென்றனர்.

கங்கை பூசித்த வரலாறு

ஒருமுறை கங்கையானவள் சிவபிரானிடம் “எம்பெருமானே! பகீரதனின் வேண்டுகோளின்படி நான் பூலோகம் வந்தேன். நீர் என்னை நுமது சடைமுடியில் தாங்கிச் சிறிது வெளிவிடுத்தீர். பின்னர் ஜன்னு முனிவரால் உண்ணப்பட்டு அவரது செவிவழி வெளிவந்தேன். மக்கள் என்னில் நீராடித் தங்கள் பாவங்களைக் கழுவுதலினால் அப்பாவங்கள் என்னைச் சேருகின்றன. இந்தப் பாவங்கள் நீங்க அருள் புரிய வேண்டும்” எனப் பிரார்த்தித்துக் கொண்டாள். இறைவன் அவளிடம் தவவனம் எனும் இவ்வீரைத் தலத்தின் சிறப்பெல்லாம் எடுத்துக்கூறி அங்கு சென்று தம்மை வழிபட்டு வருமாறு கூறினார். கங்கையும் அவ்வாறே இத்தலம் நோக்கிப் புறப்பட்டாள்.

கைலையிலிருந்து வருகின்ற வழியில் அநேக தலங்களைத் தரிசித்து வணங்கிக் கொண்டு இறுதியில் இங்கு வந்து சேர்ந்தாள். சேர்ந்து தீர்த்த நீராடி மரகத தேவியோடு கூடிய மகேஸ்வரனை வழிபட்டு வந்தாள். இறைவனும் அவள் பூசனையில் மகிழ்ந்து திருக்கோலாக்காட்சி நல்கி வேண்டிய வரத்தினைக் கேட்டுக் கொள்ளுமாறு பணித்தார். கங்கை இறைவனை நோக்கி, “ஐயனே இத்தலத்திலுள்ள என் வடிவான தீர்த்தங்களில் நீராடுவோர் எல்லா நலனும் பெற அருள்புரிய வேண்டும்” என வேண்டிக் கொண்டாள். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்து மறைந்தார். இத்தலத்தின் கீழ்த்திசையில் கங்கை நிலையாகத் தங்கி வசித்து வருவாளாயினாள்.

பாண்டிய மன்னன் திருப்பணி செய்த வரலாறு

பாண்டிய நாட்டை ‘அதிவீரவழுதி மாறன் ’ எனும் மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். வகுளத்தாமன் எனும் பகை மன்னன் ஒருவன் அவனோடு போர் மலைந்து தோற்று ஓடிப்போய் மீண்டும் பெரும் படையுடன் வந்தெதிர்த்தான். இரு திறத்தாருக்கும் கடுமையான போர் நடைபெற்றது. இம்முறை பாண்டிய மன்னன் படைதோற்றது. மன்னன் அதிவீரன் மானம் பொறானாய் மனங்கவன்று ஓடி மறைந்தான். தென்திசை வந்து தவவனம் எனும் இத்தலம் சார்ந்து திரியும்போது இலிங்க வடிவிலிருக்கும் இறைவனைக் கண்ணுற்றான். கண்டதும் கண்ணீர் அருவியெனப் பொழிய அழுது புலம்பித் தன் அவல நிலையை இறைவனிடம் முறையிட்டு வழிபட்டு வந்தான். இறைவன் அவன் மீது இரக்கங்கொண்டு அசரீரியாக, “ அன்பனே அஞ்ச வேண்டாம். நீ மீண்டும் சென்று எஞ்சிய நின் சிறு சேனையோடு பகைவனை எதிர்த்துப் போரிடுவாயாக. எம் அருளால் நின் சேனை பகைவர் கண்களுக்குப் பலவாய்க் காணப்படும். நீ வெற்றியும் பெறுவாய். பின்னர் நீ ஈண்டு வந்து எமக்கு ஏற்ற திருப்பணி செய்து வழிபட்டு நீடு வாழ்ந்து இறுதியில் எம் இணையடி சேர்வாயாக ” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அதுகேட்ட மன்னன் அகமிக மகிழ்ந்து இறைவனை வணங்கித் தன்பதிக்கு மீண்டும் சென்று எஞ்சியிருந்த தன் சிறுபடையைத் திரட்டிப் பகை மன்னனை எதிர்த்தான். போர் நடந்தது. இறைவனும் ஒரு குதிரை வீரனாகத் தோன்றி பாண்டியன் படையூடு நிற்க அம்மகிமையால் பாண்டியனின் சிறுபடை மாற்றார் கண்களுக்குப் பலவாய்க் காணப்பட்டது. இதுகண்டு பகையரசன் அஞ்சிப் பாண்டியனுக்கு மேலும் மேலும் புதுப்படைகள் வருகின்றன என எண்ணி நடுங்கி வெல்ல மாட்டானாய் படைகளுடன் புறமுதுகிட்டு ஓடிப்போனான். பாண்டியன் தனக்குரியவற்றை மீண்டும் பெற்று இறையருளை எண்ணி மகிழ்ந்தான்.

பின்னர் இத்தவவனம் வந்து, “எம்பெருமானே நின் அருட்பெருக்கை என்னென்பேன்! என் பொருட்டு நீ குதிரை வீரனாய் வந்தனையோ? நின்னை அடியேன் ஏவல் கொண்டேனே!” என மனங்கசிந்து உருகிப் போற்றிச் சேர்ப்பன சேர்ந்து ஆகம முறைப்படி பூசனையியற்றி வழிபட்டு வாழ்ந்து வந்தான்.

தீர்த்தச் சிறப்பு

இத்தவ வனத்திலுள்ள வரநதித் தீர்த்தத்திலும், விண்ணவரும் வந்து நீராடும் வேத தீர்த்தத்திலும் விரும்பி நீராடுபவர்கள் எண்ணிலாத பொருள்களும் செல்வமும், ஈடற்ற கீர்த்தியும் இன்பமும் எய்திப் புண்ணியத் தவத்தராய்ப் புனிதராகி மோட்ச வீட்டினை அடைவர்.

கங்கை தீர்த்தத்தில் நீராடக் கருதி வருபவர்க்கு எண்ணிய பேறு அளித்திட மங்கைபாகன் இங்குவந்து கோயில் கொண்டுள்ளான். இத்தீர்த்த மகிமையை எடுத்துரைப்போரும் இனிய சாயுச்சிய பதவியை அடைவர்.

வெகு நாட்களாகக் கொடும் பாவங்களைச் செய்துவந்த வேடனொருவன் இருந்தான். வழிப்பறி கொள்ளைகள் நடத்தினான். அறச்சாலைகளை அழித்தான். வேள்விகளை வீணாக்கினான். அடியார்களை அடித்து அலைக்கழித்தான்.

இவன் ஒருமுறை தன் நல்வினைப் பயனால் இத்தவவனம் வந்து தீர்த்த கரையை அடைந்தான். தான் கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்றினைப் புசித்தான். உண்டது போக மீதியைக் கரையில் சிதறிச் சென்றான். அதை ஒரு நாய் வந்து உண்டுபோனது. இவ்வாறு சில நாள் இங்கு திரிந்தலைந்தான். ஒரு நாள் இத்தலத்திலேயே அவன் ஆவி பிரிந்தது. அவனாவியைக் கொண்டுசெல்ல எம தூதர்களும், சிவகணங்களும் வந்து சேர்ந்தனர். எமபடாள் அவனை நகரம் கொண்டு செல்ல முயன்றனர். சிவகணங்கள் அதைத் தடுத்து, “இவன் கொடும் பாவியாயினும் இத்தலத்தில் அலைந்ததாலும், ஒரு உயிர்க்கு அன்னதானம் செய்ததாலும் பாவம் யாவும் நீங்கப் பெற்றுக் கைலாயம் செல்ல உரியவன் ஆனான்” என்றுகூறி அவனைக் கைலைக்குக் கொண்டு சென்றனர். இங்குள்ள தீர்த்தமானது இத்தகைய சிறப்பினையுடையதாம்.

மேலும் சுகுணன் எனும் வேளாளன் ஒருவன் வேடர்களுடன் கூடிக் கொண்டு வேட்டையாடி உயிர்களைக் கொன்று திரிந்து வந்தான். ஒருமுறை இவன் ஒரு விளாமரத்தின் மேலேறி ஒரு விளாங்கனியைப் பறித்துக் கீழே தவ மியற்றிக் கொண்டிருந்த ஒரு முனிவர் மீது வீசியெறிந்தான். முனிவர் வெகுண்டு இவனை மந்தியாகுமாறு சபித்தார். இவன் தன் பிழைக்கு இரங்கி முனிவரை வணங்கிச் சாபம் தீரும் வழியை உசாவினான். தவவனம் சென்றால் அவன் சாபம் நீங்குமென முனிவர் அருளினார். மந்தியும் இந்த வனம் வந்து சேர்ந்தது. இங்குள்ள நாவல் மரங்களில் திரிந்து வந்தது. வருவார் போவார்க்கெல்லாம் நாவற் கனிகளை உதிர்த்துக் கொடுத்தது. அதனால் புண்ணியம் சேர்ந்தது. ஒரு நாள் கங்கை தீர்த்தத்தில் நீர் குடித்தது. உடனே சாபம் நீங்கப் பெற்றுச் சுகுணன் தன் முன் வடிவைப் பெற்றான்.

மற்றும் கந்தன் எனும் பெயருடைய கந்தர்வ அரச குமாரன் ஒருவன் அட்ட சித்துக்களையும் அடையவேண்டி இத்தலம் வந்து கங்கைத் தீர்த்தக் கரையில் தவமிருந்து இறையருளால் தான் நினைத்த சித்துக்களை அடைந்தான்.

வேதனும் மாலும் விதித்த தீர்த்தம், மாதவ தீர்த்தம். விசுமுக தீர்த்தம். வருண தீர்த்தம், கோதம தீர்த்தம், கோலம் நீர் தீர்த்தம், ரோமச தீர்த்தம், வேத தீர்த்தம், மிருக தீர்த்தம், வெண்மலராள் தீர்த்தம், போதமார் தீர்த்தம், கந்தர்வ தீர்த்தம், பூமகளாடிய தீர்த்தம், திருவளர் தீர்த்தம் ஆகிய பல தீர்த்தப் பெருமைகளையுடையது இத்தலம் என்பர்.

சித்திரசேனன் வரலாறு

கோசல நாட்டைச் சுகுணசீலன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். தருமகேதுவின் மகளாகிய சந்திரதிலகம் என்பவளை மணந்து இல்லறத்தையும் இனிது நடத்தி வந்தான். புவி போற்றும் பூவுலக மன்னனாகி இருந்தும் அவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லை. மன்னன் மனங்கவன்றான். இறுதியில் காசியில் கங்கைக் கரையிலிருந்து தவம் இயற்றினான். சிவபெருமான் ஒரு சித்தர்போல் அவன்முன் தோன்றி, “அப்பனே தென்னாடாம் நன்னாட்டில் தவவனம் எனும் வீரையம்பதி உளது. அங்குச் சென்று இறைவனை வழிபடுவாயாயின் உன் எண்ணம் நிறைவேறும் ” என்று அருளி மறைந்தார்.

இறைவனும் வியந்து காசியை விட்டுப் புறப்பட்டு இடையிலுள்ள க்ஷேத்திரங்களையும் வணங்கி வழிபட்டு இத்தவவனம் வந்து சேர்ந்தான். அங்கிருந்த முனிவர்கள் அவனைக் குறித்து விசாரித்தனர். அவன் தன் வரலாற்றையும், அங்கு வந்த காரணத்தையும் கூறினான். அம்முனிவர்களோடிருந்த கனகமா முனிவர் மன்னனைச் சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுமாறு பணித்தார். மன்னனும் அவ்வாறே வழிபட்டுப் போற்றினான். இறைவன் அசரீரியாக “அன்பனே! யாம் நின் வழிபாட்டால் மகிழ்ந்தோம். நீ நின் நாடு செல்.உலகையே ஒரு குடைக்கீழ் ஆளவல்ல ஒரு குமரனை நின் மனைவி பெறுவாள்” எனத் திருவாய் மலர்ந்தருளினான். மன்னன் மகிழ்ந்தான். கனக மாமுனி முதலியோரை வணங்கி மன்னன் விடைபெற்றான். கனகமாமுனி மன்னனை நோக்கி, “வேந்தே நின் மகனுக்கு இத்தலப் பெருமானின் நாமம் விளங்குமாறு. ‘வீரகண்டன் எனப் பெயரிடுக. அவனால் உன் குலம் சிறக்கும்” என வாழ்த்தியருளினார்.

மன்னன் தன்னூர் வந்து சேர்ந்தான். உரிய காலத்தில் அவன் மனைவி உத்தம ஆண்மக வொன்றினைப் பெற்றெடுத்தாள். மன்னன் அவனக்கு ‘வீர கண்டன்’ எனப்பெயர் சூட்டி வளர்த்தான். மகனும் சகலகலா வல்லவனாகவும், நல்லொழுக்கச் செம்மலாகவும் இறையன்பும், இணையிலா வீரமும் உடையவனாகவும் வளர்ந்து காளைப் பருவமெய்தினான். தந்தையின் காலத்துக்குப் பின் கோயில் எடுப்பாயாக எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

வீரகண்டன் கோயிலெடுப்பித்த வரலாறு

தன் பிறப்பின் வரலாற்றையுணர்ந்த வீரகண்டன் வீரைநகர் வந்து இறைவனை வழிபட விழைந்து தன் மனைவியோடும் மற்றும் பரிவாரத்தோடும் புறப்பட்டு இத்தலம் வந்தடைந்து, கனகமாமுனிவர் ஆகியோரைக் கண்டு வணங்கி ஆசி பெற்றான். கனகமாமுனிவரும் அவனை வாழ்த்திக் கங்கைத் தீர்த்தத்தில் நீராடச் செய்து இறைவனை முறைப்படி வழிபட வழிகாட்டினார். வீர கண்டனும் விமலனை மனமுருகித் துதித்து வழிபட்டுப் போற்றினான். இறைவன் அசரீரியாக, “அன்பனே நின் அன்புக்கு வியந்தோம். ஆகம முறைப்படி இவ்விடத்தில் எமக்கொரு கோயில் எடுப்பாயாக ” எனத் திருவாய் மலர்ந்தருளினான்.

வீரகண்டன் “யானிது வாய்க்கப் பெற்றேன்” என மகிழ்ந்து சிற்பவல்லுநரை வரவழைத்து ஆகம முறைப்படி திருக்கோயில் எடுப்பித்து ஆண்டவனைப் பிரதிட்டை செய்து சிறப்பாக பூசனை நடத்தி மகிழ்ந்தான். யாவரும் களிப்பெய்தினர். இத்தலம் விட்டுத் தன்னூர் செல்ல அவன் விரும்பவில்லை. கனகமாமுனிவர் “அப்பா நீ இப்போது நின் நாடு செல். உரிய சமயத்தில் உன் மகனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு மனைவியுடன் இங்கு வந்துவிடுக ’ எனக் கூறினார். மன்னனும் பிரியா விடைபெற்று மனைவியோடும். பரிவாரத்தோடும் தன்னூர் சென்றான். சென்று சிவபிரான் மீது சிந்தை மாறானாய்ப் பன்னெடுங்காலம் நன்னெறியில் ஆட்சிபுரிந்து உரிய பருவத்தில் மகனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு மனைவியுடன் அத்தலம் வந்து சேர்ந்தான். சேர்ந்து மேலும் பல திருப்பணிகளைச் செய்து தன் பெயரால் விநாயகப் பெருமான். முருகப்பெருமான் ஆகியோரையும் பிரதிட்டை செய்து முழுமனதுடன் இறைவனை வழிபட்டு வாழ்ந்து இறுதியில் முக்தியடைந்தான்.

வீரமாறன் வரலாறு

வீரகண்டன் பரம்பரையில் வந்த வீரமாறன் எனும் பாண்டிய மன்னன் ஒருவன் ஒருமுறை பரிவாரங்களோடு வேட்டையாடப் புறப்பட்டான். தென்திசை நோக்கி வந்து காடுகளிற் புகுந்து கொடிய விலங்குகள் பலவற்றை மாய்த்துக் கொண்டே இத்தவவனம் வந்து சேர்ந்தான். அங்கு ஒரு முயலானது வேட்டை நாயை விரட்டக் கண்டு வியப்பெய்தி நிற்கும்போது இலட்சக்கணக்கான எறும்புகள் ஒரே சாரையாய் ஒரு திசை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டு அதனைப் பின் தொடர்ந்து சென்றான். சென்று வீரகண்டன் எடுப்பித்த கோயிலை கண்டு இறும்பூதடைந்து இறைவன்பால் ஈடுபாடு கொண்டு வழிபட்டு அன்றிரவு அவ்விடத்தே கண்துயின்றான். இறைவன் அவன் கனவில் தோன்றி வீரகண்டன் தொடங்கிய திருப்பணியைத் தொடர்ந்து தன் கோயில்த் திருப்பணியை விரிவுபடுத்துமாறு கட்டளையிட்டருளினார். மன்னனும் மகிழ்ந்து வல்லாரையும் பொன்னும், பொருளையும் வரவழைத்துத் திருப்பணியைத் தொடர்ந்தான். ஆகம முறைப்படி மதில், திருச்சுற்று, மாமண்டபம், கோபுரங்கள், யாக மண்டபம், குண்டவேதி, சேவை மண்டபம், நிர்த்த வாத்தியமண்டபங்கள் மற்றும் பல சூழ் தேவைகளுக்குரிய சிறு கோயில்கள் ஆகியவற்றையும் குறைவறக் கட்டி முடித்தான். பல வாகனாதிகள் ஆபரணங்கள் ஆகியவற்றையும் அமைத்தான். திருக்கோயிலைச் சுற்றி வீதிகள் பல அமைத்துப் பல்வகை மக்களையும் குடியேறச் செய்தான். மற்றும் ஊர்ப்புறத்தே நான்கு திசைகளிலும் விநாயகர், முருகன், துர்க்கை, திருமால், சாத்தன், காளி ஆகியோருக்கும் தனித்தனிக் கோயில்கள் எடுப்பித்தான். தனக்கும் ஒரு மனைனை அமைத்துக் கொண்டு இங்கேயே வதிந்து வந்தான். ஒருநாள் மேற்றிசையிலுள்ள சண்பகவனத்தைச் சார்ந்து அங்குள இறைலிங்கத்தைக் கண்டு பெருமகிழ்வெய்தி அங்கும் பல திருப்பணிகளைச் செய்தான். விக்ரம பாண்டி விநாயகர், சண்பகவல்லித் தாயார் ஆகியோருக்கும் கோயில்கள் எடுப்பித்தான். இவ்வாறாக இவன் பணிசெய்து விழாவெடுத்துச் சுத்த மனத்தனாய் வழிபட்டுவர இறைவன்  மகிழ்ந்து அவன் முன் தோன்றி, “அன்பனே நின் பணியால் யாம் மகிழ்ந்தனம்; வேண்டும் வரம் கேள் ” என்றனன். வீர மாறனும் இறும்பூதெய்து, இறைவா, இந்நகரும் இங்குள நீயும் விநாயகரும், மேற்கு திசையிலுள்ள சாத்தனும் காளியும் மற்றும் இங்குள கண்ணாறும் விளாகமும் சன்னதித் திருப்பணியும் நின் ஆரத்துப் பதக்கமும் வீரமாறன் என்ற என் பெயரோடிணைந்து விளங்குமாறு அருள்புரிய வேண்டும் என வேண்டிக் கொண்டான். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்து மறைந்தார். அன்று முதல் இத்தலம் வீரவநல்லூர் ஆயிற்று. மற்றவையும் அவ்வாறே பெயர் பெறலாயின.

இவ்வாறாகச் சங்கயோகி என்பர் வீரசேனன் எனும் மன்னனுக்கு இவ்வீரையம்பதியின் புராண வரலாற்றினை (முதல் 18 அத்தியாயங்கள்) எடுத்துரைத்தார். வீரசேனனும் மற்றும் சூழ்ந்திருந்த யோகியரும் யாவும் கேட்டு மகிழ்ந்தனர். பின்னர் அனைவரும் சங்கயோகியின் தலைமையில் புறப்பட்டுக் கனகமா முனிவரின் ஆசிரமம் சென்று அவரை வணங்கி ஆசிபெற்றுக் கொண்டு இறைவனின் திருக்கோயிலை அடைந்து திரிகரண சுத்தராய் இறைவனைப் பூசனைசெய்து.

“கயிலை நாயகா சரணம் கருணைவா ரிதியே சரணம்
பயிரவ காரண சரணம் பழமறை நாயக சரணம்
அயிலணி மந்திர சரணம் அமுதலிங் கேசுர சரணம்
சயில பூரண சரணம் தரும நாயக சரணம்”

புன்னை வனேசுர சரணம் பூமிநாயக சரணம்
மின்னு சீதர நாதர வீரகண் டேசுர சரணம்
அன்ன வாகனன் பரவும் ஆனந் தேசுர சரணம்
சென்னிமேல் மதியணிந்த தெய்வ நாயக சரணம் ”

எனப் பலவாறு துதித்து வழிபட்டுப் பேறு பெற்று வாழ்ந்து வந்தனர்.

திருவீரை மான்மியச் சருக்கம்

திருவீரை யென்பது, திருநெல்வேலிக்கு மேற்கும். பாடகப் பிள்ளையார் கோயிலுக்கு வடக்கும், பொதியமலைப் பாவவிநாசத்துக்குக் கிழக்கும் அரிகேசவனல்லூருக்குத் தெற்குமாய். தாமிரபரணி நதியாற் சூழப்பட்டுப் பற்பல தீர்த்தங்களையுடைய வீரவனல்லூரென்று வழங்குகின்றவோர் சிவநகரம். இது, புன்னை வன மென்றுந், தவவனமென்றும், ஞானவனமென்றும், மற்றும் பற்பல அற்புதம் காரண நாமங்களையுடையன; இங்குள்ள மூர்த்தியானவர் புன்னைவனேசர். தவவனேசர். ஞானவனேசர், பூமிநாதர் எனப் பற்பல அற்புதக் காரண நாமங்கள் பெற்று விளங்குகின்றனர்.

இங்கு, மகத்துவமிகுந்த அகத்திய முனிவர் மெய்ம்மையாகிய நைமிசாரணிய முனிவர்கட்குத் தலவிசேடம், தீர்த்த விசேடம், மூர்த்தி விசேடங் கூறிக் கூட்டிக் காட்டிச் சேவிப்பித்துப் பூசிப்பித்துத் தமக்குப் பதியாகப் பெற்ற பொதியையிற் புக்கனர். அதுகண்ட அம்முனிவர்கள் இவரது பிரிவாற்றாராய் இவரது தெரிசனை மாறாததாகிய விப்புன்னைவனத்திற் பன்னசாலை செய்திருந்து நெடுந்தவமியற்ற. அவ்விடைப் பரங்கருணைத் தடங்கடலாகிய கடவுள் ஓர் புன்னையடியிற் பிரசன்ன ராயவர்களுக்கு அஞ்ஞானமற்ற மெய்ஞ்ஞான மோக்கத்தை அளித்தனர்.

பக்தியிற் சிறந்த சித்திரசேனனென்னுஞ் செழியன் சேர்ந்து தனக்குக் குறையாயிருந்த புத்திர பேற்றைக் குறித்து பத்தினியோடு மெய்த்தவம் புரிய. அங்குக் கனிவொடு தோன்றிக் காட்சியளித்துப் புத்திரப்பேற்றையு மருள்செய்தனர்.

பின்னரப் புத்திரனாகிய வீரவன்மனென்னுந் தென்னவன். சித்த சுத்தனாய்ப் பூசித்துச் சந்திரசூட சடாதாரக் கடவுளர தருளினாற் காடு களைந்து நாடுதிருத்தி, சிறப்பு வாய்ந்த சினகரந்தேவர்கோயின் முதலிய வியற்றிப்பன்னற்கரிய நன்னகர் புரிவித்து மேன்மையுற்ற நால்வருணத்தோர் முதலியோரையுமமைத்து. நம்பிரானாருக்குக் காலநியமக் கட்டளை முதலியன ஏற்படுத்திப் பிரியாத  அன்பொடு பெரும் பூசையியற்ற அக்காரணானந்தர் பூரணானந்தராய்க் காட்சியளித்து யாவினுமரிதாம் பேரின்ப வாழ்வளித்தனர்.

பூமி தேவியானவள் பூபாரந் தாங்காளாய் வருந்திக் கடவூரி லொழிந்த சமனை வேண்டி யருந்தவம்புரிய, உளமகிழ்ந் துதித்துக் கருதியவாறு நமனையு நல்கிக் கவலை தீர்த்துப் பின்னுமவன் வேண்டிக் கொண்டபடி எங்கும் விளங்கப் பூமிநாதரெனப் பெயரையுமேற்று விளங்குகின்றனர்.

இன்னுமித் தலத்தில் அகத்திய முனிவரது சாபத்தாலரவுருவாயலைந்த நகுடனுடைய சாபவிமோசனஞ் செய்து தேவபதவி யளித்ததும், விராட்புருடன் முதலாயின பற்பலராற் பூசிக்கப்பட்டருள் செய்தனவும் விரிக்கிற் பெருகு மாதவின் இப்பதி மான்மியமாகிய வீரைத் தலபுராணத்திற் கண்டுகொள்க.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பூமாதேவியும், தர்ம தேவனும், 4 வேதங்களும் வழிபட்ட தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar