Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்
  அம்மன்/தாயார்: வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி
  தல விருட்சம்: மகிழம், அத்தி
  தீர்த்தம்: பிரம்ம, நந்தி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காரணம், காமீகம்
  புராண பெயர்: திருவொற்றியூர்
  ஊர்: திருவொற்றியூர்
  மாவட்டம்: திருவள்ளூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார்

தேவாரப்பதிகம்

மனமென்னும் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றிச் சினமெனும் சரக்கையேற்றிச் செறிகடல் ஓடும்போது மதமெனும் பாறைதாக்கி மறியும்போது அறியவொண்ணா துணையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.
-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 20வது தலம்.
 
     
 திருவிழா:
     
  சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது. பைரவர், இத்தலத்தில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் இல்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அ/மி. தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்- 600 019. திருவள்ளூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-44 - 2573 3703. 
    
 பொது தகவல்:
     
 

சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள். அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார்.


இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும்.இக்கோயிலில் இருந்து 15 கி.மீ., தூரத்திலுள்ள மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், 25 கி.மீ., தூரத்திலுள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர். இந்த மூன்று அம்பிகையரையும் பவுர்ணமியன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். அன்று இந்த மூன்று கோயில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைநாயகி, வட்டப்பாறையம்மன் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதிகளில் காட்சி தருகின்றனர். தியாகராஜர் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் வங்காளவிரிகுடா கடற்கரையில் பட்டினத்தார் கோயில் உள்ளது.


 
     
 
பிரார்த்தனை
    
  திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
 

மாணிக்க தியாகர்: சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர், மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது, சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர், "மாணிக்க தியாகர்' என்றும் அழைக்கப்படுகிறார்.


பெட்டி வடிவ லிங்கம்: வாசுகி என்னும் நாகம், உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய சிவன், புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இவர், "படம்பக்கநாதர்' என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் அணிவித்திருக்கிறார்கள். சுவாமி இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். அர்ச்சகர்கள் சுவாமியைத் தொட்டு பூஜை செய்வதில்லை.
இத்தலத்தில் மூலவர் படம்பக்கநாதர் எப்போதும் கவசத்துடன் மட்டுமே காட்சி தருவார். கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி 3 நாட்கள் மட்டும், இவரது கலசம் களைந்து தைலாபிஷேகம் செய்யப்படும். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். மூன்றாம் நாள் இரவில் மீண்டும், சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே, சுவாமியின் சுயரூப கோலத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியாது. இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம்.


மூன்று அம்பிகையர் தரிசனம்: அம்பிகை வடிவுடைநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். 51 சக்தி பீடங்களில் இத்தலம் "இக்ஷீ' பீடமாகும். அம்பாளுக்குக் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. கேரள நம்பூதிரிகளே இவளுக்குப் பூஜை செய்கின்றனர். தினமும் காலை 9 மணி, மாலை 6 மணிக்கு இவள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, "புஷ்பாஞ்சலி சேவை' காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு இந்த அலங்காரம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதை, "சுயம்வர புஷ்பாஞ்சலி' என்கிறார்கள்.


வட்டப்பாறை அம்மன்: பாண்டியன் அரசவையில் அநீதி இழைக்கப்பெற்ற கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு உக்கிரத்துடன் கிளம்பினாள். அவள் இத்தலத்திற்கு வந்தபோது சிவனும், அம்பிகையும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். அவளது உக்கிரத்தைத் தணிக்க எண்ணிய சிவன், தாயக்கட்டையை உருட்டி அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார். கண்ணகி, தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள். அப்போது சிவன், அங்கிருந்த வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடி விட்டார். பின்பு, கண்ணகி பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவே இவள், "வட்டப்பாறையம்மன்' என்று பெயர் பெற்றாள். பிற்காலத்தில் இந்த பாறையின் அருகில், தனியே சிலை வடிக்கப்பட்டது. வட்டப்பாறையம்மனின் உக்கிரம் குறைப்பதற்காக, இச்சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்துள்ளார். பக்தர்கள் இங்கு மஞ்சள், குங்குமம் போட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.


சுந்தரர் திருமணம்: சென்னை செங்குன்றம் அருகிலுள்ள ஞாயிறு என்னும் ஊரில் பிறந்த சங்கிலியார், சிவ பக்தையாக திகழ்ந்தார். இளவயதிலேயே இத்தலம் வந்து சிவனுக்கு சேவை செய்தார். திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்திருந்த சுந்தரர், இத்தலம் வந்தார். சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் அவர் மீது காதல் கொண்டார். தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார். அவரும் ஒப்புக்கொண்டு சங்கிலியாரிடம், சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். அப்போது சங்கிலியார் சிவனிடம், சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணந்து கொண்டதால், இரண்டாவதாக தான் எப்படி மணக்க முடியும்? எனக்கேட்டாள். சிவன் அவளிடம், சுந்தரரை அவளை விட்டு பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித்தருவதாகக் கூறினார். இதையறிந்த சுந்தரர், தான் சன்னதி முன்பு சங்கிலியாருக்கு சத்தியம் செய்து தருவதாகவும், அப்போது பிரகாரத்திலுள்ள மகிழ மரத்தடியில் எழுந்தருளும்படியும் சிவனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், சிவன் சங்கிலியாரிடம் சுந்தரரை மகிழ மரத்தடியில் சத்தியம் வாங்கும்படி சொல்லிவிட்டார். அதன்படி இங்குள்ள மரத்தடியில் சத்தியம் செய்து சுந்தரர், சங்கிலியாரை மணந்து கொண்டார்.
மாசி மாதம், மகம் நட்சத்திரத்தன்று சுந்தரர் திருமணம் நடக்கிறது. இவ்விழாவின்போது சிவன் மகிழ மரத்தடியில் எழுந்தருளி, சுந்தரருக்கு திருமணம் செய்து வைப்பார். மாசியில் நடக்கும் இந்த விழாவை, "மகிழடி சேர்வை' என்கிறார்கள். இவ்விழாவின்போது அறுபத்துமூவரும் எழுந்தருளுவர். இங்குள்ள மகிழ மரத்தடியில், சிவன் பாதம் இருக்கிறது. இதற்கு சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கிறார்கள். நீண்டநாட்களாக திருமணத்தடை உள்ளவர்களும், திருமணமான தம்பதியரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.


கலிய நாயனார் முக்தி: கலியனார் என்னும் சிவபக்தர், இங்கு சுவாமிக்கு தினமும் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் அவர் விளக்கிட்டு சிவனை வழிபட்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் தீபத்திற்கு எண்ணெய் வாங்கக்கூட பணமில்லை. எனவே தனது கழுத்தை அறுத்து, ரத்தத்தில் தீபம் ஏற்ற முயன்றார். அப்போது சிவன் அவருக்குக் காட்சி தந்து, அவரது பக்தியை உலகறியச் செய்தார். கலியனார் நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஆடி கேட்டை நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. இங்கு சிவனுக்கு அதிகளவில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.


பட்டினத்தார் கோயில்: காவிரிப்பூம்பட்டணத்தில் வசித்த பட்டினத்தார் என்னும் வணிகர், முக்தி வேண்டி சிவனை வழிபட்டார். அவருக்குக் காட்சி தந்த சிவன், கையில் ஒரு கரும்பைக் கொடுத்து, ""இந்த கரும்புடன் செல்! எவ்விடத்தில் நுனிக்கரும்பு இனிக்கிறதோ, அங்கு முக்தி கிடைக்கும்!'' என்றார். கரும்புடன் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார், இங்கு வந்து சிவனை வழிபட்டார். அப்போது நுனிக்கரும்பு இனித்தது. தனது முக்திக்காலம் நெருங்கியதை உணர்ந்த அவர், இங்கிருந்தவர்களை அழைத்து தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் பட்டினத்தாருக்கு கோயில் எழுப்பப்பட்டது.
இங்கு பட்டினத்தார் லிங்க வடிவில், காட்சி தருகிறார். இவரை சிவனாகவே கருதி பூஜிக்கின்றனர். பிரதோஷம், சிவராத்திரி பூஜை மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகிறது. ஆடி பவுர்ணமியை ஒட்டி வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா கொண்டாடுகின்றனர்.


வள்ளலாருக்கு அருளிய அம்பிகை!: வள்ளலார் வடிவுடையநாயகி மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் இங்கு அம்பிகையை வழிபடுவார். ஒருசமயம் கோயிலில் அர்த்தஜாம பூஜையைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கு தாமதமாகச் சென்றார். கதவு அடைத்திருக்கவே, சாப்பிடாமல் பசியுடனே வெளியில் திண்ணையிலேயே படுத்து விட்டார். வள்ளலாருக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை, ஒரு இலையில் வெண்பொங்கல் வைத்து அவருக்குக் கொடுத்துச் சென்றாள். இதை வள்ளலார் தனது அருட்பாவில் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பசி நீக்குபவளாக இத்தலத்தில் அம்பிகை அருளுகிறாள்.


கலங்கரை விளக்கம்!: வங்கக்கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசர் கடலில் திசை தெரியாமல் செல்லும் கப்பல்களுக்கு, கரையிலிருக்கும் கலங்கரை விளக்கம் வழி காட்டுவதைப்போல, வாழ்க்கையில் வழி தெரியாமல் செல்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் "ஞான தீபமாக' இத்தலத்து சிவன் அருளுகிறார் என்று பாடியிருக்கிறார். வாழ்வில் பிடிப்பில்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது நம்பிக்கை.


வரி இல்லாத தலம்!: சூரிய குலத்தைச் சேர்ந்த மாந்தாதா என்னும் மன்னனின் ஆளுகைக்குட்பட்டு, இப்பகுதியை சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம் அம்மன்னன், இப்பகுதிக்கு வரி கேட்டு ஓலை அனுப்பினான். அந்த ஓலையில் "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க' என்று திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இறைவனே இவ்வாறு ஓலையில் திருத்தம் செய்ததாக கருதிய மன்னன், இவ்வூருக்கு வரி விதிக்காமல் விலக்கி வைத்தான். இதனாலும் இவ்வூருக்கு "திருவொற்றியூர்' என பெயர் உண்டானதாகச் சொல்வர்.
இதை சேக்கிழார் பெரியபுராணம்,
""ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்டமலரும் திருநுதலார்,'' என்கிறார்.


சிவன் இக்கோயிலில் கௌலீஸ்வரர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சுயரூபத்துடன், யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர், இடது மேல் கையில் ஓடு வைத்து, கீழ் கையை மார்புக்கு கீழே வைத்தபடி இருக்கிறார். வலது கையில் சின்முத்திரை காட்டுகிறார். "என்னை மனதில் நிறுத்தி வழிபடுபவருக்கு ஞானம் தருவேன்' என்று சொல்லும்படியாக இவர் இந்த கோலத்தில் காட்சி தருகிறார். குழந்தைகள் இவரிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது கல்வி சிறக்கும்.
படம்பக்கநாதர் சன்னதி முன்மண்டபத்தில் உள்ள விநாயகர்,"குணாலய ஏரம்ப விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள நற்குணம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். குணாலயச்செல்வர் என்றும் இவரை அழைக்கிறார்கள்.


பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களின் பெயரில் வரிசையாக சிவலிங்கங்கள் இருக்கிறது. இந்த லிங்கங்கள் அனைத்தும் வடக்கு நோக்கியிருக்கிறது. மாசி மாதம் சிவராத்திரியன்று மாலையில் இந்த லிங்கங்களுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் நடக்கும். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் தங்களுக்கான நட்சத்திர நாட்களில், அந்தந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து, நெல் தானியத்தை தானமாகக் கொடுத்து வேண்டிக்கொண்டால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.


திருப்தி தரும் சிவன்: வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு அருகில் "திருப்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவன் காட்சி தருகிறார். இவர், ஒரு சதுர வடிவ கல்லில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். வாழ்வில் திருப்தியில்லாதவர்கள் இவரிடம் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை.


சுவாமி, கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். பிரகாரத்திலுள்ள நந்தி, ஒரு உயரமான பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. பிரகாரத்தில் ஆகாச லிங்க சன்னதி இருக்கிறது.


சிறப்புகள் சில வரிகளில்...
முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம் என்பன இத்தலத்தின் சிறப்பைக் காட்டும் பெயர்கள்.


நந்திதேவருக்காக சிவன், பத்ம தாண்டவம் ஆடிக்காட்டிய தலம் இது.


கார்த்திகை 3ம் திங்களன்று, தியாகராஜர் சன்னதியில் சங்காபிஷேகம் நடக்கும். ஐப்பசி பவுர்ணமியன்று ஆதிபுரீஸ்வரருக்கு மட்டும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.


இங்குள்ள அருள்ஜோதி முருகன், அருணகிரியாரால் பாடப்பெற்றவர் ஆவார். வயிற்று வலி நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சங்கிலியாருடன், சுந்தரருக்கு சன்னதி இருக்கிறது. பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.


புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள குழந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


 
     
  தல வரலாறு:
     
  பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது. பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், "ஆதிபுரீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் "திருவொற்றியூர்' என்று பெயர் பெற்றது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar