Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தண்டாயுதபாணி
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: பஞ்சநதி
  ஊர்: செட்டிகுளம்
  மாவட்டம்: பெரம்பலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  அருணகிரிநாதர்.  
     
 திருவிழா:
     
  பங்குனி உத்திரம் - 10 நாட்கள் திருவிழா - மண்டகப்படி - தேர்த்திருவிழா - தினந்தோறும் வாகனங்களில் சுவாமி வீதியுலா -இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தைப்பூசம் - தேர்த்திருவிழா - 10 நாட்கள் திருவிழா சித்திரை முதல் தேதி - படிவிழா - எல்லாப்படிகளுக்கும் விளக்கு பூஜை நடைபெறும். வைகாசி விசாகம் - சங்காபிசேகம் - சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெறும் ஐப்பசி சஷ்டி 7 நாட்கள் அபிசேக விசேசம் நடைபெறும். அப்போது நடக்கும் லட்சார்ச்சானை மிகவும் சிறப்பாக இருக்கும். ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை அன்றும் பூஜை நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு தண்டாயுதபாணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி 3,4,5 தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளி சுவாமி மீது விழும். அப்போது சூரியன் அஸ்தமனம் ஆக ஆக சுவாமியின் பாதத்திலிருந்து முகம் வரை சூரிய ஒளிக்கதிர்கள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டே வரும். இங்குள்ள தண்டாயுதபாணிக் கடவுள் தலையில் முடியுடன் காணப்படுகிறார். இங்குள்ளவர் சுயம்பு மூர்த்தி ஆவார். சுவாமி 4 ஆடி உயரம் இருப்பவராக உள்ளார். கையில் 11 கணுக்களுடைய செங்கரும்பை ஏந்தியபடி காட்சி தருகிறார். இது வேறு எந்த முருகன் தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பு  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை, வெள்ளி, கிருத்திகை நாட்களில் காலை 8 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம்- 621104 பெரம்பலூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4328 268 008, 99441 17450, 98426 99378 
    
 பொது தகவல்:
     
 

மலைக்கு நேரே ஊருக்குள் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்விரு கோயில்களும் எதிரெதிரே உள்ளது. சித்திரைப் பிறப்பன்று 240 படிகளுக்கும் பூஜை நடக்கும். ஆடி வெள்ளி அம்பிகைக்குரிய நாளாக இருந்தாலும், முருகனுக்கு சிறப்பு பூஜை நடப்பது விசேஷம். பொதிகை சென்ற அகத்தியர், இங்கு முருகனைத் தரிசிக்க வந்தார். அப்போது, முருகன் வளையல் விற்கும் செட்டியாராக அவருக்கு காட்சி தந்தார். இதனால் ஊர் "செட்டிகுளம்' எனப்பட்டது. வடபழநிமலை என்றும் இத்தலத்திற்கு பெயருண்டு. மதுரையில் இருந்து கோபத்துடன் கிளம்பிய கண்ணகியை, இத்தல முருகன் சாந்தப்படுத்தினார். இதனால், உக்கிரம் குறைந்த அம்பிகை, இவ்வூர் அருகிலுள்ள சிறுவாச்சூரில் மதுரகாளியம்மனாக கோயில் கொண்டுள்ளாள்.


மலைக்கு ஏறும் படிக்கட்டுகள் 240ம் இறங்கும் படிக்கட்டுகள் 253ம் அமைந்துள்ளது. இம்மலைமீதுள்ள முருகன் செட்டிகுளத்தில் , சிவ ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேசுவரரை அதாவது தனது அப்பாவை பார்த்தபடி உள்ளார் என்பது விசேசம். முருகனின் படைத்தளபதி வீரபாகு இங்கு வீரபத்திரசுவாமியாக விளங்குகிறார்.


 
     
 
பிரார்த்தனை
    
 

கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.


இத்தலத்து முருகனை வணங்குவோர்க்கு நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணமாற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியன நீங்குவதால் இத்தலம் சிறப்பு பெற்று வருகின்றது. படி ஏறி வந்து முருகனை வழிபடுவதால் கை கால் சுகம் பெறுகிறது. மேலும் இத்தலம் மலைக்கோயில் என்பதால் மலையில் உள்ள மூலிகை காற்றை சுவாசித்துக் கொண்டே பக்தர்கள் செல்லும்போது தங்கள் உடம்பில் உள்ள பல நோய்கள் விலகுகின்றன.


 
    
நேர்த்திக்கடன்:
    
  முடி காணிக்கை, காவடி எடுத்தல், துலாபாரம் செய்தல், ஆடு, மாடு, கால்நடைகள் காணிக்கை போன்றவற்றை பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக தருகின்றனர். குழந்தை வரம் வேண்டியவர்கள் தாங்கள் வரம் கிடைக்கப்பெற்றவுடன் கரும்புத் தொட்டில், கரும்பு காவடி கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வெள்ளி வேல் செய்து வழங்குகின்றனர். உண்டியல் காணிக்கையும் உண்டு. பால் தயிர், இளநீர், எலுமிச்சை, சந்தனம், பஞ்சாமிர்தம் அபிசேகம், தைலம் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்கின்றனர். சஷ்டி அன்று கலசாபிசேகம் செய்கின்றனர். இத்தலத்தில் சண்முக ஹோமம் செய்வது பக்தர்களால் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த நேர்த்திக்கடன் ஆகும். அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர் 
    
 தலபெருமை:
     
 

தலை முடி உள்ள தண்டாயுதபாணி: தண்டாயுதபாணிக் கடவுள் என்றால் மொட்டையாண்டியாக இருப்பார் என்று நினைத்து விடக்கூடாது. பழநியில் உள்ள தண்டாயுதபாணிக்கடவுள் மொட்டைதலையுடன் ஆண்டியாக உள்ளார். அதுபோல இங்கு கிடையாது. இங்குள்ள தண்டாயுதபாணிக் கடவுள் தலையில் முடியுடன் காணப்படுகிறார். இங்குள்ளவர் சுயம்பு மூர்த்தி ஆவார். சுவாமி 4 ஆடி உயரம் இருப்பவராக உள்ளார். கையில் 11 கணுக்களுடைய செங்கரும்பை ஏந்தியபடி காட்சி தருகிறார். இது வேறு எந்த முருகன் தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பு.


வளையல் செட்டி: வளம் மிகு செட்டிகுளம் வடபழநி மலைமீது கோயில் கொண்டு அகத்திய மாமுனிவருக்கு வளையல் செட்டிவடிவாக முருகன் இத்தலத்தில் காட்சி தந்தாராம். கண்ணகியின் கடும்சினத்தை தணித்து சிறுவாச்சூரில் மதுரகாளியாக அமர ஆற்றுப்படுத்தி, உறையூர் சோழன் பராந்தகனுக்கும் பாண்டியன் குலசேகரனுக்கும் முதியவர் வடிவில் தோன்றி சிவலிங்க இருப்பிடம் காட்டியவர் என்றும் இத்தலத்தில் முருகப்பெருமானின் சிறப்பு சுட்டிக்காட்டப்படுகிறது.


இத்தலத்து முருகப்பெருமான் பழநியில் இருப்பதைப் போன்று இங்கும் மலைமீது தண்டாயுதபாணியாக காட்சி தருவதால் இத்தலம் வடபழநி எனவும் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள முருகன் உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தி என்பது முக்கியமான சிறப்பம்சம்.


இத்தலத்தில் உள்ள தண்டாயுதபாணிக் கடவுள் கையில் செங்கரும்புடன் உள்ளார். இவ்வாறு முருகன் கரும்புடன் காணப்படுவது வேறு எங்குமே பார்த்திர முடியாது. மலை மீது சுணை உள்ளது. அதற்கு தேனருவி என்று பெயர் இந்த சுணை வருடத்தின் 365 நாட்களும் தண்ணீர் இருக்கும். மழைக் காலத்தில் பெய்யும் மழை நீர் எல்லாமே மலையிலுள்ள மூலிகை மரம் செடி கொடிகளுக்கு இடையில் ஒடி வந்து கீழே உள்ள பஞ்ச நதிக்குளத்தில் விழும். எனவே இத்தலத்தில் குளிப்பவர்கள் பிணி நீங்கப்பெறுவர்.


பழநிக்கு நேர்ந்து கொண்டவர்கள் இத்தலத்தில் நேர்த்திகடனை செலுத்தலாம். அகத்தியர் வழிபட்ட சிறப்பு வாய்ந்த தலம்.


உச்சிக்குடுமி முருகன்: 240 படிகளுடன் உள்ள மலை மீது அமைந்த கோயில் இது. வழக்கமாக வேலுடன் காட்சி தரும் முருகன் இங்கு, கரும்புடன் காட்சியளிக்கிறார். அலங்காரத்தின்போது மட்டும் வேல், சேவல் கொடி வைக்கின்றனர். தலையில் உச்சிக்குடுமியும் உள்ளது. உற்சவர் கையில் வேல் இருக்கிறது. கரும்பு பார்ப்பதற்கு தடிமனாக இருந்தாலும், உள்ளே இனிமையான சாறு இருக்கும். இதைப்போலவே, நாமும் பார்ப்பதற்கு கரடு முரடானவராகத் தெரிந்தாலும், நற்குணம் கொண்ட நல்ல மனம் என்னும் இனிய சாற்றை கொண்டிருக்க வேண்டுமென்பதை இவர் உணர்த்துகிறார்.

கரும்புத்தொட்டில்: குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், சஷ்டியன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பங்குனி உத்திரத்தன்று, கரும்புத்தொட்டிலில் குழந்தையைக் கிடத்தி, கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விவசாயிகள், விவசாயம் செழிக்க இவரிடம் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். தங்கள் நிலத்தில் முதலில் விளைந்த தானியம், பழம், காய்கறிகளை முருகனுக்கு படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மலையடிவாரத்தில் விநாயகர், பாதை நடுவே இடும்பன், கோயில் வளாகத்தில் ராஜகணபதி, வீரபாகு சன்னதிகள் உள்ளன. சிவனுக்குரிய வில்வமே இத்தலத்தின் விருட்சமாகும்.

மூன்று திருக்கல்யாணம்: வழக்கமாக கோயில்களில் விழாவின்போது ஒருநாள் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கும். இங்கு, ஒரே திருவிழாவில் ஒருநாள் விட்டு மறுநாள் என மூன்று முறை திருமணம் நடக்கிறது. பங்குனி உத்திரத்தை ஒட்டி நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 5ம் நாள் மற்றும் 7ம் நாளிலும், உத்திரத்தன்று (9ம் நாள்) சுவாமி தேரில் எழுந்தருளும் முன் ஒருமுறை என மூன்று முறை திருக்கல்யாணம் நடக்கிறது. இவ்வேளையில் சுவாமியைத் தரிசித்தால் திருமணத்தடை உள்ளோருக்கு தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும். இவ்விழா நடக்கும் அனைத்து நாட்களிலும் சுவாமி கிரிவலம் சென்று வருவது மற்றொரு சிறப்பு.அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம்.


 
     
  தல வரலாறு:
     
  ஒருசமயம் இவ்வழியே சென்ற வணிகன் ஒருவன், ஒரு இரவில் இங்கிருந்த அரச மரத்தின் மீது படுத்துக் கொண்டான். நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்கவே விழித்தபோது, பேரொளியின் மத்தியில் தோன்றிய சிவலிங்கத்தை தேவர்கள் பூஜித்ததைக் கண்டான். ஆச்சர்யமடைந்தவன், மறுநாள் மன்னன் பராந்தக சோழனிடம் தகவல் தெரிவித்தான். அச்சமயத்தில் குலசேகரபாண்டிய மன்னன், விருந்தினராக அங்கு வந்திருந்தான். இரு மன்னர்களும் இங்கு வந்தனர். லிங்கம் இருந்த இடத்தைத் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது, கையில் கரும்புடன் அங்கு வந்த முதியவர் ஒருவர் அவர்களிடம், தான் சிவனின் இருப்பிடத்தைக் காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். ஓரிடத்தில் லிங்கத்தை காட்டிவிட்டு மறைந்து விட்டார். மன்னர்கள் வியந்து நின்றபோது, அருகிலிருந்த குன்றின் மீது முதியவர், கையில் கரும்புடன் முருகனாகக் காட்சி கொடுத்தார். தான் விருந்தாளியாக வந்தபோது தரிசனம் கிடைக்கப்பெற்றதால் மகிழ்ந்த குலசேகர பாண்டியன், மலையில் முருகனுக்கும், லிங்கம் இருந்த இடத்தில் சிவனுக்கும் கோயில் எழுப்பினான். சிவன் ஊருக்குள் ஏகாம்பரேஸ்வரராகக் காட்சி தருகிறார்.

கயிலாயத்தில் சிவன் பார்வதி இருக்கும்போது அரக்கர்கள் தொல்லை குறித்து தேவர்கள் முறையிடுகின்றனர். அப்போது அங்கிருக்கும் முருகப்பெருமான் அவர்களை தான் அழித்துவிட்டு வருவதாக தனது தாயார் பார்வதி தேவியிடம் கூறி அவரது கையில் உள்ள சக்தி வேலை வாங்கி செல்கிறார். அசுரர்களை சூரசம்காரம் செய்கிறார். பின்பு சூரசம்காரம் முடிந்ததும் தன் வெற்றியைத் தெரிவிக்க தனது அம்மாவிடம் வருகிறார். தன் வெற்றியை தன் அன்னையிடம் தெரிவிக்கிறார். தன் மகன் பெற்ற வெற்றியை பார்த்து பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டார் பார்வதிதேவி. இந்த வெற்றியின் அடையாளமாக தனது கையிலிருந்த கரும்பை முருகனுக்கு பார்வதி தேவி பரிசாக வழங்கினார். அதை வாங்கிக் கொண்டு முருகப்பெருமான் இம்மலையில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தண்டாயுதபாணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி 3,4,5 தேதிகளில் சூரியன் மறையும்போது ஒளி சுவாமி மீது விழும். அப்போது சூரியன் அஸ்தமனம் ஆக ஆக சுவாமியின் பாதத்திலிருந்து முகம் வரை சூரிய ஒளிக்கதிர்கள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டே வரும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar