Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பொன்னேஸ்வரி அம்மன்
  அம்மன்/தாயார்: பொன்னேஸ்வரி
  தீர்த்தம்: எண்கோண கிணறு
  ஊர்: பொன்மலை
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி மாதம் இந்த கோயில் பத்து நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நவராத்திரி உற்சவம், ஆடி முதல் வெள்ளி மற்றும் தை கடைசி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கு பூஜை என அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலின் சிறப்பு, கோயிலின் உள்ளே சென்று மலையை நோக்கி படிகளில் ஏறிச் சென்றால், மலைமீதுள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலை அடையலாம். மைந்தனையும் தன்னருகே இருத்திக்கொள்ள விரும்பிய அன்னை, மலைமீது தன் புதல்வனுக்கு ஓர் அழகிய கோயிலை அமைத்துக் கொடுத்திருக்கிறாள். பின்புறம் நெடிதுயர்ந்த பொன்மலை காட்சி தர, ரம்மியமான சூழலில் அருள்கிறார் முருகப்பெருமான்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் மணி 11 வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பொன்னேஸ்வரிஅம்மன் திருக்கோயில், பொன்மலை, திருச்சி.  
   
    
 பொது தகவல்:
     
  கோயில் முகப்பைத் தாண்டியதும் நீண்ட மண்டபமும், ராஜகோபுரமும் உள்ளன. அடுத்து மகாமண்டபமும், பீடமும், கொடிமரமும், சிங்கத்தின் சிலையும் உள்ளன. கருவறையில் அன்னையின் இரண்டு வடிவங்கள் காட்சி தருகின்றன. பழைய திருவுருவம் பின்புறமும், புதிய திருவுருவம் முன்புறமுமாக இரு அம்மன்களும் ஒரே சன்னதியில் அருள் பாலிக்கின்றன.  
     
 
பிரார்த்தனை
    
  விரைந்து திருமணம் நடைபெறவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்குள்ள பால் கிணற்றில் நீராடி அன்னைக்கு அபிஷேகம் செய்தால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் ஏராளமான பெண்கள் வணங்கி வேண்டுதல்கள் நிறைவேறப் பெறுகின்றனராம். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி நாட்களில் நவகிரக சன்னதியில் சிறப்பு யாகங்கள் நடைபெறுகின்றன. 
    
 தலபெருமை:
     
  அன்னை அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் டமருகம், சங்கு, சூலம், கிண்ணம் ஏந்தி புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கின்றாள். திருச்சுற்றில் மதுரை வீரன், கருப்பண்ணசாமி, கன்னி மூலை கணபதி, கருமாரியம்மன், பாலமுருகன், சிவபெருமான், விநாயகர் மற்றும் நாகர்கள் அருள்பாலிக்கின்றனர். மேற்குப் பிராகாரத்தில் சப்த மாதர்கள் தனிச்சன்னதியில் தரிசனம் தருகின்றனர். வடக்கு கோட்டத்தில் துர்க்கை அம்மனும், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களும் உள்ளனர். கோயிலின் ராஜகோபுரத்தின் வெளியே, அக்னி மூலையில் எண் கோண வடிவில் கிணறு ஒன்று உள்ளது. இது பால் கிணறு என்று அழைக்கப்படுகிறது. இதன் நீர் பால் போல் இருப்பதால் இந்தப் பெயர். இந்த ஊர் வளர்ச்சி பெறுவதற்கு முன் ஊர் மக்கள் அனைவரும் தங்களது அனைத்து தேவைகளுக்கும் இந்த கிணற்று நீரையே  பயன்படுத்தி வந்தனர்.

எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும் இந்தக் கிணறு ஊறிக்கொண்டே இருக்குமாம். தற்போது இந்தக் கிணற்றின் நீர்மட்டம் பூமியின் மட்டத்தைவிட உயர்ந்து காணப்படுவது வியப்பான விஷயம்! அன்னையை தரிசிக்க அனைத்து மதத்தினரும் தங்கு தடையின்றி கோயில் வருவது நம்மை சிலிர்க்க வைக்கும் உண்மை. கோயில் முகப்பைக் கடந்தால், அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் கையில் வேலுடன் முருகன் முத்துக்குமார சுவாமி என்ற திருநாமத்துடன் வள்ளி-தெய்வானையுடன் அருட் காட்சியளிக்கிறார். கார்த்திகை மாத திருக்கார்த்திகை அன்று கோயிலின் முன் சொக்கப்பனை கொளுத்துவதும், அன்று மலையின் உச்சியில் பெரிய தீபம் ஏற்றுவதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகளாகும். இந்த தீபம் ஏற்ற பல டின் இலுப்ப எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். மாத கார்த்திகைகளில் இறைவன், இறைவிக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. கந்த சஷ்டி, வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் இங்கு அலைமோதும். பங்குனி உத்திரம் அன்று திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். மலைமேல் இருக்கும் முருகனையும், அடிவாரத்தில் இருக்கும் பொன்னேஸ்வரியையும் தரிசிப்பதால், நம் வாழ்வில் மலை போல் வரும் துயரமெல்லாம் பனிபோல் விலகுவது நிச்சயம்!
 
     
  தல வரலாறு:
     
  இந்திரன் சபையில் ஒரு முனிவர் இருந்தார். அவர் பெயர் நாகர்ஜுன முனிவர். அவர் ஒரு காளி பக்தர். தினசரி காளியை வணங்காமல் எந்த வேலையையும் செய்ய மாட்டார். ஒருநாள் ரதிதேவியைக் கண்ட முனிவர் அவள் அழகில் மயங்கினார். சதா அவள் நினைவிலேயே இருந்தார். தவறுசெய்யும் முனிவரை தடுத்தாட் கொள்ளவிரும்பினாள் பார்வதிதேவி. எனவே முனிவரை அழைத்தாள். அன்னையின் குரல் முனிவரின் செவிகளில் விழவில்லை. அந்த அளவுக்கு அவர் மனதை ரதி ஆக்ரமித்திருந்தாள். தன் அழைப்புக்கு செவிமடுக்காத முனிவரின் மேல் கோபம் கொண்டாள் பார்வதி. நீ பூலோகம் போய் மனிதனாகப் பிறக்கக்கடவது என சாபமிட்டாள் அன்னை. அன்னையின் சாபப்படி முனிவர் இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார்.

வளர்ந்ததும் தனக்கு இடப்பட்ட சாபம் பற்றி உணர்ந்தார். எனவே இமயமலை அடிவாரத்தில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார். அப்போது ஒருநாள், தென் கயிலையை அடுத்துள்ள மலையில் தவம் செய்து சாப விமோசனம் பெறுவாயாக! என ஓர் அசரீரி ஒலித்தது. அந்த மலையைத் தேடி அலைந்தார் முனிவர். கடைசியாக மல்லிகைக் கொடி நிறைந்த மலைப்பகுதியயை வந்தடைந்தார். அந்த இடமே தன் தவத்திற்கு சிறந்த இடம் என்று முடிவு செய்த முனிவர், அங்கேயே தவம் செய்யத் தொடங்கினார். யாகத்திற்கு பொன் தேவைப்பட்டது. பொன் வேண்டி மகாலட்சுமியை வணங்கினார். மகாலட்சுமியும் வருவதாகக் கூறினாள். ஆனால் மகாலட்சுமி பொன் தருவதில் தாமதம் ஏற்பட்டது. முனிவருக்கு ஒன்றும் புரியவில்லை. பொன் கிடைக்காமல் போகவே வேதனைப் பட்டார். பிரச்னை தீர வழி தெரியாததால் தான் தவம் செய்து கொண்டிருந்த மலையில் தன் தலையை மோதி உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அதன்படி தலையை மலையில் மோதவே, அன்னை அவருக்குக் காட்சி தந்து, அவரது செயலைத் தடுத்தாள். யாகம் செய்ய பொன் இல்லை.

நான் என்ன செய்வேன்? என முனிவர் அன்னையிடம் கேட்டார். நீ தவமிருக்கும் இந்த மலையில் உனக்கு வேண்டிய அளவு பெயர்த்து யாகத்தில் போடு. அதுவே பொன்! என்று கூறிய அன்னை, அந்த மலையில் முனிவர் பெயர்த்து எடுக்கும் பகுதி பொன்னாக மாற அருளிவிட்டு மறைந்தாள். பராசக்தியின் ஆசிப்படி முனிவர் யாகத்தை தொடங்கினார், யாகத்திற்கு கங்கை நீர் தேவைப்பட்டது. உடனே மலையின் அடிவாரத்தில் அக்னி மூலையில் ஒரு அருவியை உருவாக்கினார். பார்வதி தேவியின் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வணங்கினார். அன்னை மீண்டும் முனிவருக்குக் காட்சி தந்தாள். மீண்டும் அவர் இந்திரசபை செல்லும்படி சாப விமோசனம் தந்தாள். மலையடிவாரத்தில் முனிவர் வழிபட்டு வரம் பெற்ற பார்வதி தேவி சிலையில் அன்னையின் அருள் அம்சம் நிரந்தரமாகத் தங்கிற்று பொன்மலை அம்மன், பொன்னாச்சி அம்மன், பொன்மலை ஈஸ்வரி அம்மன் என மக்கள் பெயரிட்டு வணங்கி வந்தனர். அந்தப்பெயர் நாளடைவில் பொன்னேஸ்வரி அம்மன் என வழங்கப்படலாயிற்று.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலின் சிறப்பு, கோயிலின் உள்ளே சென்று மலையை நோக்கி படிகளில் ஏறிச் சென்றால், மலைமீதுள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலை அடையலாம். மைந்தனையும் தன்னருகே இருத்திக்கொள்ள விரும்பிய அன்னை, மலைமீது தன் புதல்வனுக்கு ஓர் அழகிய கோயிலை அமைத்துக் கொடுத்திருக்கிறாள். பின்புறம் நெடிதுயர்ந்த பொன்மலை காட்சி தர, ரம்மியமான சூழலில் அருள்கிறார் முருகப்பெருமான்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar