Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மன்
  உற்சவர்: ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மன்
  அம்மன்/தாயார்: ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மன்
  தல விருட்சம்: வன்னிமரம்
  தீர்த்தம்: சிறுவானி
  புராண பெயர்: கோயம்புத்தூர் (கோவலன் புதூர்)
  ஊர்: சுக்கிரவார்பேட்டை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை, அஷ்டமி, சங்கடஹரசதுர்த்தி, ஆடிவெள்ளி, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் நவராத்திரி, விஜய தசமி, சித்திரைக்கனி, உள்ளிட்ட விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கொலு மண்டபத்தில் ராமலிங்கேஸ்வரருடன் சௌடாம்பிகை அம்மனை கொலு வைத்து நவராத்திரி விழா இனிதே துவங்கும். அம்மன் ஒவ்வொரு நாளும் சரஸ்வதி, துர்கை, லட்சுமி என சிறப்பு அலங்காரத்தில் அருள்புரிவாள்,நவராத்திரியின் போது கோயிலில் உள்ள அம்மனுக்கு ஒரு நாட்களுக்கு ஒரு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும். தொடர்ந்து, ஒன்பது நாள் நவராத்திரி முடிந்ததும், பத்தாவது நாளில் வரலாற்றின்படி கத்திபோட்டு ரத்தம் சொட்ட அம்மனை ஊருக்குள் அழைத்து வருவார்கள்.சித்திரைக்கனியின் போது தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து வரும் பக்தர்களுக்கு சில்லரை காசுகள் வழங்கப்படும். சிவராத்திரி பொதுவாக சிவன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும், ஆனால், இந்த அம்மன் சிவனின் நெஞ்சிலிருந்து தோன்றியதால் இக்கோயிலில் சிவராத்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி விழா வீதியுலாவுடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்று காலை 7 மணியளவில் சாய்பாபா காலனி விநாயகர் கோயிலில் வன்னி மரத்தின் முன்பாக தங்கபாகு என்ற கத்தியை திருமஞ்சன கும்ப தீர்த்தத்தில் வைத்து அம்மனை ஆவாஹனம் செய்வர். பிறகு மங்கள வாத்தியங்களுடன், விண்ணை முட்டும் தண்டகங்கள் முழங்க கத்திபராக்குடன் அம்மனை அழைத்து வந்து மூலவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் வெகு விமர்சையாக நடைபெறும். அம்மனை அழைத்து வரும் போது பக்தர்கள், பெட்டுக்கோ... திசிக்கோ... என கூறியபடி, கூரிய கத்தியால் நெஞ்சிலும், கையிலும் உணர்ச்சிப் பெருக்குடன் போட்டுக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட பவனி வரும் நிகழ்வு, பார்ப்பவர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும். பதைபதைக்க வைக்கும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பக்தர்களின் குடும்பங்களில் கெட்டது எல்லாம் விலகி, நல்லவை யாவும் நடக்கும் என்பது நம்பிக்கை.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள அம்மன் சிவனின் நெஞ்சிலிருந்து ஒளியாக தோன்றியதால், இந்த அம்மன் கோயிலில் நந்தியை வாகனமாக அமைக்கப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மன் திருக்கோயில், ரங்கே கவுடர் வீதி,சுக்கிரவார்பேட்டை,(சின்ன மார்கெட் அருகில்), கோவை– 641 001.  
   
போன்:
   
  +91 422–2479070, 9688324684, 9786899345 
    
 பொது தகவல்:
     
  கோவை மாநகரின் ஒரு முக்கிய மையப்பகுதியாக கருதப்படும் பகுதியில் தான் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் கோயில் மேட்டுப்பாளையம் சாலையின் தொடக்கத்தில் அமைந்துள்ளதால், ஊட்டி மலைக்கு செல்லும் வழியில் உள்ள முதல் கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. இந்த அம்மன் கோயில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்தாலும் கூட இந்த சவுடம்மன் வனக் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறது. ஏன் என்றால், ஆதிகாலத்தில் இந்த அம்மன் வனத்திலிருந்து தான் அழைத்து வரப்பட்டதாக வரலாறு உள்ளது. சௌடேஸ்வரி அம்மனுக்கும், பாலமுருகனுக்கும் தனித்தனி கொடி மரம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் தென்பகுதியில் ராமலிங்கேஸ்வர் நந்தியுடன் காட்சிதருகிறார். கொலுமண்டபத்தில் நடராஜர், காயத்ரி தேவி, லட்சுமி நாராயணன் எழுந்தருளியுள்ளனர். மகாமண்டபத்தில் விநாயகர், பாலமுருகன், நவகிரகங்கள், சந்திரன், சூரியன், நால்வர், தேவல மகரிஷி ஆகியோரும்; உள் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காலபைரவர், துர்க்கை ஆகியோரும் தனிச் சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர்.காலபைரவர் அஷ்டகம், துக்க நிவாரண அஷ்டகம், காயத்திரி மந்திரம், லட்சுமி நாராயண மந்திரம் பொறிக்கப்பட்ட தனி கல்வெட்டுகளை அந்தந்த தெய்வங்களுக்குரிய சன்னதிகளில் பதித்திருப்பது பக்தர்களுக்கு பாராயணம் செய்ய வசதியாக உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  முக்கியமாக தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என்பது தான் இக்கோயிலில் உள்ள அம்மனிடம் வைக்கப்படும் பிரதான வேண்டுதல் ஆகும். 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்களின் பலர் தங்கள் தொழில் வளர்ச்சியடைந்ததால், கோயிலில் புதிய கட்டிடங்கள் கட்டியும், கோயில் திருப்பணிகள் செய்தும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். பெரும்பாலும், அதனை நேர்த்திக்கடனாக கருதாமல், கோயில் திருப்பணியாக செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலில் அம்மனை வனப்பகுதியிலிருந்து மக்கள் அழைத்து வந்ததாக வரலாறு உள்ளது. இதனால். இரவு நேரங்களில் கொலுசு சத்தம் கேட்கும் என்பதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்தனர். மேலும், இக்கோயிலை சுற்றியும் காய் கனி மார்கெட் உள்ளதால், மக்கள் அடிக்கடி குழந்தையின் கால் தடம் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவை தவிர, இந்த அம்மனின் வரலாற்றை வைத்து பார்க்கும்போது இந்த அம்மன் ஜவுளித்துறையினருக்கான அம்மனாக இருக்கும் என்று தான் பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள். ஆனால், இந்த அம்மன் ஜவுளி துறையினருக்கான அம்மனாக இல்லாமல், ஜவுளி துணிகளை உருவாக்கும் ஒரு குலத்தினரின் குல தெய்வமாக உள்ளது. அனைத்து கோயில்களிலும், பிரார்த்தனைக்கு பின்னர் தான்  நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் ஆனால், இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி தான் பிரார்த்தனை செய்வர், வேண்டுதல் வைப்பார்கள். மேலும், ஊட்டி மலைக்கு சுற்றுலா செல்லும் வெளியூர் வாசிகளும் இக்கோயிலை காவல் தெய்வமாக வழிபட்டு செல்வார்கள்.  
     
  தல வரலாறு:
     
  இக்கோயில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில். அம்மன் எழுந்தருளிய வரலாறு குறித்து கோயில் அரங்காவலர்கள் கூறுகையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிவபெருமான், தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆடைகளை தயாரிக்க மனு என்பவனை வைத்தார். அந்த மனு என்பவன் சிறப்பாக தனது பணியை செய்தால், அவனுக்கு முத்தி தருவதாக சிவபெருமான் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து, மனு என்பவனும் அனைவருக்கும் ஆடைகளை தயாரித்து தந்துள்ளான். இந்நிலையில், ஒரு கட்டத்தில் அவன் தன்னுடைய செயலை சிறப்பாக செய்ததால், சிவன் மனு என்பவனுக்கு முத்தியளித்துள்ளார். மனு என்பவனுக்கு பிறகு யாரும் ஆடை தயாரிக்க யாரும் இல்லாததால், தேவர்களும் மற்றவர்களும் சிவ பெருமானிடம் ஆடைகள் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்ற சிவன் தன் நெஞ்சில்  ஒரு ஒளியை எழுப்பி அதிலிருந்து ஒருவரை படைத்து அனைவருக்கும் ஆடை தயாரித்து தர உத்தரவிட்டுள்ளார். அது ஒருமகா முனிவராக உருக்கொண்டது. அம் முனிவரை நோக்கி, நீ மகாவிஷ்ணுவிடம் சென்று நாபிக்கமல நூலை வாங்கி வந்து ஆடைகளை செய்து தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுப்பாயாக! நீ தயாரிக்கும் ஆடைகள் தேவர்களின் அங்கங்களை அலங்கரிப்பதால் நீ தேவலன் என்று அழைக்கப் பெறுவாய்! பின் ஆமோத நகருக்கு அரசனாகி ஆட்சி நடத்துவாய்! என வாழ்த்தினார் ஈசன். மகாவிஷ்ணுவை சந்திக்கப் புறப்படும் முன் அன்னை பார்வதியின் அருள் வேண்டி நின்றான், தேவன். அவனுக்குக் காட்சிதந்த அன்னை மகனே உனக்கு எதிரிகளால் ஆபத்து நேரும்போது என்னை மனதில் நினைத்து துதி உடனே வந்து உன்னைக் காப்பேன் எனக் கூறினாள். வைகுண்டத்தை அடைந்து மகாவிஷ்ணு விடம் ஆசிபெற்று, உந்திக் கமல நூலுடன் திரும்பினான் தேவலன். வழியில் அசுரர்கள் அவனைத் தாக்கினர். தேவலன் மீது அம்பு மாரி பொழிந்தனர். அதில் ஓர் அம்பு தேவலனின் உடலில் தைக்க, உடனே வந்து காத்தருள்க என்று அன்னை பார்வதியை வேண்டியவாறே மயங்கி விழுந்தான். மறுவிநாடி பேரொளியோடு நீண்ட திருமுடியுடன் அன்னை பார்வதி தேவி அங்கே தோன்றினாள். அந்த ஒளி அரக்கர் கண்களைத் தாக்கியது. அவர்கள் சிதறி ஓடி அழிந்தனர். திருமுடிப் பெருமையால் அன்னைக்கு சூடாம்பிகை, சௌடேஸ்வரி, சௌடாம்பிகை எனும் திருநாமங்கள் ஏற்பட்டன. தேவலன் மகிழ்ச்சியுடன் அன்னையின் தாள் பணிந்தான். அப்போது அன்னை சௌடாம்பிகை, நீ வேண்டி அழைக்கும் போதெல்லாம் வந்து காத்து, உன் துயர் நீக்கி, எல்லா மங்களங்களையும் அருள்வேன் என வரமளித்து மறைந்தாள். அன்று முதல் அவனது இனமான தேவாங்க மக்களின் குலதெய்வமாக விளங்குகிறாள், சௌடாம்பிகை. கோவையில் சௌடாம்பிகைக்கு இரு கோயில்கள் உள்ளன. சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எழுந்த இத்தலம் ராமலிங்க சௌடேஸ்வரி புது சௌடம்மன் கோயில் என அழைக்கப்படுகிறது. கருவறையில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் சாந்த சொரூபியாய் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள்.  

சிவனின் நெஞ்சிலிருந்து வந்தவர் தான் அந்த சவுடம்மன் என்று தேவாங்கர் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தேவாங்கர் புராணத்தில் கூறப்பட்டுள்ளதை தவிர தற்போதைய தலைமுறையினருக்கு அவர்களின் முன்னோர் கூறியுள்ள வரலாறு மிகவும் வித்யாசமாகவும், சற்று நெகிழ்ச்சியாகவும் உள்ளது. பல ஆண்டு காலத்திற்கு முன்னர் இந்த அம்மன் வனத்தின் காவல் தெய்வமாக இருந்துள்ளது. இதனை அறிந்த கொங்கு நாட்டு மக்கள் இந்த காவல் தெய்வம், மக்கள் வசிக்கும் பகுதிக்கு வர வேண்டும் என அனைவரும் சென்று அழைத்துள்ளனர். அழைப்பை ஏற்ற காவல் தெய்வம் நான் கண்டிப்பாக வருகிறேன் ஆனால், யாரும் திரும்பிப்பார்க்க கூடாது என கூறியுள்ளது. இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட இடத்திற்க்கு பிறகு காவல் தெய்வத்தின் கொலுசு சத்தம் கேட்கவிலலை. இதனால், சந்தேகத்தின் பெயரில் மக்கள் திரும்பிப்பார்க்க கோபம் கொண்டு காவல் தெய்வம் தலை முடியை விரித்து ஆக்ரோஷமாக மக்களை பார்த்துள்ளது. தங்களின் தவறை உணர்ந்த மக்கள், பாதுகாப்புக்காக ஏந்தி வந்த கூர்மையான கத்திகளை வைத்து கை மற்றும் நெஞ்சுகளில் கீறிக்கொண்டு, அதிலிருந்து வடியும் ரத்ததில் தான் அம்மனை கொங்கு நாட்டிற்க்கு அழைத்து வந்ததாகவும் வரலாறு உள்ளது. இதனால், தான் நவராத்திரி முடிந்ததும் கத்தி போடும் விழா நடப்பதாகவும் கூறப்படுகிறது.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் சிவனின் நெஞ்சிலிருந்து ஒளியாக தோன்றியதால், இந்த அம்மன் கோயிலில் நந்தியை வாகனமாக அமைக்கப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar