Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நாகேஸ்வரர்
  அம்மன்/தாயார்: முத்து வாளியம்மன்
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: காஞ்சிமாநதி தீர்த்தம்
  ஊர்: முட்டம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தமிழ்மாதம் முதல்தேதி, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, அஷ்டமி ஆகிய தினங்களில் வழிபாடுகள் சிறப்புற நடைபெறுகிறது. பவுர்ணமி அன்று சிவனை வழிபட்டு சிறப்படைவது தமிழ்ச் சமய மரபு. சித்ரா பவுர்ணமி, மகாசிவராத்திரி ஆகிய விழாக்கள் இத்தலத்தின் சிறப்பு பெருவிழாக்கள் ஆகும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள சிவ லிங்கப்பகுதியில் நாகத்தின் உருவம் அமைந்திருப்பது சிறப்பாகும். இத்தலத்தில் பூஜைகள் அனைத்தும் தூய தமிழில் நடைபெறுவது பெருஞ்சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை9 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், முட்டம், கோயம்புத்தூர்.  
   
    
 பொது தகவல்:
     
  விநாயகப் பெருமான் சன்னிதி கன்னிமூலையில் அமைந்துள்ளது. நாகேஸ்வரருக்குரிய ஆவுடையார் முன்பு சதுர வடிவில் பீடமாக பழுதுற்ற நிலையில் இருந்தது. பழமையான திருக்கோயிலின் வட்டவடிவமான ஆவுடையாரை பக்தர் ஒருவர் வழங்க, முன்பிருந்த சதுர வடிவ ஆவுடையார் கீழே பொருத்தப் பெற்று, மேலே வட்ட ஆவுடையாரில் உயரமாக நாகேஸ்வரரை லிங்க வடிவில் எழுந்தருளச் செய்யப் பெற்றது. நாகாபரணத்துடன் கூடிய அலங்காரத்தில் அருள் புரியும் நாகேஸ்வரரை துதித்து அருள் பெறலாம். இத்தலத்தில் தூய பசும்பால் மட்டுமே அபிஷேகத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  பாக்கெட்பால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதையடுத்து சண்டிகேஸ்வரர், முருகன், திருமால் ஆகியோருக்குத் தனி சன்னிதிகள் உள்ளன. கோவிலின் வடகிழக்கு பகுதியில் பைரவர் தனிச் சன்னிதியும் நவகிரஹ சந்நதியும் உள்ளன. ராகு, கேது, நாகங்கள் சிவபெருமானை வழிபட்ட தலம் ஆதலால் ஐந்துதலை ஆதிசேசன் விளக்கு தூண் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருநாளன்று இத்தூணின் மீது தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். காஞ்சிமா நதிக்கரையில் இருந்து நாகம் ஒன்று. தினமும் நடு இரவில் வந்து வழிபட்டுச் சென்றுள்ளது. நாககன்னிகள் காஞ்சிமா நதி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்ததாக ஐதீகம்.  
     
 
பிரார்த்தனை
    
  இராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் துன்பம் நீங்கி இன்ப நிலையை எய்துவர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  இராகுகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கார்த்திகை தீபத்திருநாளன்று கோயிலிலுள்ள ஆதிசேசன் விளக்கு தூண் மீது தீபம் ஏற்றி வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  அம்பிகை முத்து வாளியம்மன் என்ற திருநாமத்தில் அருள்புரிகின்றார். முத்துக்களால் அமைந்த காதணி அணிந்ததால் இப்பெயர் பெற்றார். அம்மனின் சிற்பத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். உயர்ந்த பேரழகுடன் கூடிய சிற்பம். உலகில் வேறு எங்கும் காண இயலாத ஒன்று. வலது கையில் நீலோத்பல மலரை ஏந்தி உள்ளார். முன்கையில் பரியகம் எனும் ஆபரணம் உள்ளது. இருதோள்களிலும்அடுக்கடுக்காக அரும்புகள் பொருந்திய கடகங்கள் உள்ளன. அவற்றின் நடுவே வட்டமான மலர்மொட்டுக்கள் உள்ளன. கை விரல்களில் உள்ள மோதிரம் மற்றும் ரேகைகளைக் கூட காண முடிகிறது. தலையில் உள்ள முடி 9 அடுக்குகளாக பூவேலைப்பாடுகளுடன் பொருந்தியுள்ளது. மூக்கில் மூக்குத்தி அணியத்தக்கவாறு ஒரு சிறு துவாரம் உள்ளது. மணிக்கழுத்தில் சவடியும் காறைகளும் சிறப்பாக அமைந்துள்ளது. இவைகளின் நடுவே ஒரு சிறு துவாரம் உள்ளது. இதில் அணிகலனை மாட்டலாம்.

அம்பாள் திரிபுரை அம்சமானவர் ஆதலால் மணிவயிறும் மார்பும் பிடியளவு இடையுடன் காட்சியளிக்கிறார். இடுப்பில் மேகலை என்ற ஆபரணம் சிறப்புடன் விளங்குகின்றது. மேகலை இதழ் இதழாகத் தொங்குகின்றன. மேகலை மாட்டுவதற்கு 16 துவாரங்கள் உள்ளன. 16 கோவை உள்ள மேகலைக்கு கலாபம் எனப் பெயர். இவ்வணிகலனை அணிந்து ஒயிலாக கலாப மயில் போல் காட்சியளிக்கிறாள் மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியோடு விளங்கும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் தொழலாம். (கோயில் அர்ச்சகர் இத்துவாரங்களில் ஊது பத்தி குச்சியை நுழைத்து துவாரம் இருப்பதைக் காட்டினார்) கற்சிலையில் துல்லியமாக சிறிய துவாரங்களை ஏற்படுத்துவது என்பது எளிதான காரியமில்லை. மதுரை மீனாட்சியம்மன் சிலையையும், இச்சிலையையும் ஒரே சிற்பி வடித்ததாக கூறப்படுகிறது. தட்சிணாமூர்த்தி சிலையில் மடித்து வைத்துள்ள இடதுகாலை நந்தியானது வருடிக் கொண்டுள்ளதைக் காணலாம். வேறெங்கும் காணக்கிடைக்காத ஆபூர்வ சிற்பம் ஆகும்.
 
     
  தல வரலாறு:
     
  தென்கயிலை எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஊர் முட்டம். மலையின் அடிவாரமே முட்டம் என அழைக்கப்படுகிறது. வெள்ளியங்கிரி மலையில் இருந்து தோன்றிய காஞ்சிமாநதி தெற்குநோக்கி ஓடி புகழ்பெற்ற முட்டமாகிய தலத்தைத் தாண்டி கூடுதுறையில் சிற்றாறு எனும் நொய்யல் நதியில் கலந்து பேரூரை அடைகிறது. கயிலையின் சிறப்புக்கு கங்கை நதி தென் கயிலைக்கு வளம் சேர்க்க  காஞ்சி மா நதி எனப்படும் நொய்யல் ஆகும். இந்நதி கரூர் வழியாக பயணிக்கின்றது. முட்டத்தில் தொடங்கி கரூர் வரை 36 சிவன்கோயில்களை சோழ மன்னர்கள் கட்டி உள்ளனர்.

மிகப் பழமை வாய்ந்த சிவன்கோயில்களை கரிகாற் சோழன் திருப்பணி செய்ததாக சரித்திர சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. அந்நாளில் இவ்வூரை அமர புயங்க நல்லூர் சதுர்வேதி மங்கலம் என வழங்கியதாக கல்வெட்டு குறிப்புகளில் காணப்படுகிறது. இத்தலத்தைச் சுற்றி கோட்டையும் அடர்ந்த வனங்களும் சூழ்ந்திருந்தன. கோயில் அருகே ஒரு குளம் அமைந்திருந்தது. கோயில் மிகுந்த கலைநயத்துடனும், சிற்பங்கள் மிகத் துல்லியமாக கலை நுணுக்கத்துடன் சிற்ப கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. சேர சோழர்கள் காலத்தில் சிறப்பு விளங்கிய கோயில் படிப்படியாக பராமரிப்பின்றி அழியத் துவங்கின. ஓய்சள வல்லாளர் காலத்தில் முற்றிலுமாக கவனிப்பாரற்று சேதம் அடைந்து விட்டது. அயல் சமய தாக்கங்களாலும் ஆங்கிலேயர் படையெடுப்பாலும் கோயில் பொலி விழந்தது.

கோயிலில் பூஜித்து வந்த அந்தணர்களும் மானிய குழப்பங்களாலும் இயற்கை சூழலாலும் குடிபெயர்ந்து விட்டனர். காலப்போக்கில் பெருங்காடாக மாறிவிட்டது. கோயிலைச் சுற்றிலும் சப்பாத்தி கள்ளி மரங்கள் அடர்ந்து வளர்ந்து கொடிய மிருகங்கள் வாழும் புகலிடமாக மாறிவிட்டது. தொல்லியல் அறிஞர் ஐ. இராமசாமி, பதினைந்து வயது முதல் முட்டத்து கோயிலுக்குச் சென்று வருகிறேன். அம்மனின் தோற்றமும் பேரழகும் என்னைக் கவர்ந்தன. அம்மன் கோயிலுக்கு கதவுகள் கிடையாது. கோயில் பாதி அளவு மண் மூடி இருந்தது. எங்கும் சப்பாத்தி கள்ளி மரங்கள் சூழ்ந்திருந்தன. கோயில் புதர்களால் மூடப்பட்டு கிடந்தது. குறுங்காடை குருவிகளின் அவலக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. என கோயில் நிலைபற்றி குறிப்பிட்டிருந்தார். இக்கோலத்தில் இருந்த கோயிலை, பழந்திருக்கோயிலின் அமைப்பிலேயே அமைக்க வேண்டும் என முடிவெடுத்து பழைய பொலிவு மாறாமல் திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டத்தில் பேரூராதினத்தின் பங்கு அளிப்பறியதாகும். முட்டத்து நாகேஸ்வரம் காலம் தோறும் மன்னர்களாலும், சான்றோர்களாலும் போற்றி பாதுகாக்கப்பட்ட இத்தலம் 14.12.11 அன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்று பக்தர்கள் வழிபாட்டுக்குரியதாக திகழ்கின்றது.

படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சிவ லிங்கப்பகுதியில் நாகத்தின் உருவம் அமைந்திருப்பது சிறப்பாகும். இத்தலத்தில் பூஜைகள் அனைத்தும் தூய தமிழில் நடைபெறுவது பெருஞ்சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar