Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராமர் பஜனை திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ராமர் பஜனை திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராமர்
  அம்மன்/தாயார்: சீதாதேவி
  ஊர்: ஆர்.எஸ்.புரம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ராமரின் ஜன்ம நட்சத்திரமான புனர்பூசத்தன்று சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனைகளும் நடந்து வருகின்றன. சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, மார்கழி, புரட்டாசி மாதங்களில் விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டாலும் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ராமநவமி மகோற்சவம் தான் வருடப் பெருவிழாவாகும். முதல் நாள் மகாகணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கி, அடுத்த நாள் அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, ராமபிரான் ஜனன பூஜை, லட்சார்ச்சனையை தொடர்ந்து மதியம் சீதா - ராமர் கல்யாண வைபவமும் வெகு விமர்சையாக நடைபெறும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ராமர் பஜனை திருக்கோயில், ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்.  
   
    
 பொது தகவல்:
     
  இந்த ராமபிரானின் மகிமைக்குச் சன்றாக பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. கோயிலுக்கு அருகில் வசித்து வந்த வணிகரின் மனைவி மாணிக்கம் அம்மாள் என்பவர் தவறாமல் கோயிலுக்கு வந்து பூஜையில் கலந்துகொண்டு பஜனையில் ஈடுபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை தன் குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றார். அங்கு விவேகானந்தர் பாறைமீது அமைந்துள்ள மண்டபத்திற்குச் சென்றபோதுதான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது. திடீரென சுனாமி ஏற்பட்டு கடல் கொந்தளிக்க ஆரம்பித்தது. ஆர்ப்பரித்த அலைகள் 20-30 அடி உயரம் வரை எழும்பி, மண்டபத்தின் மீது மோதின. இவருடன் சுற்றுலா வந்த பிற பயணிகளும், அடுத்து என்ன நடக்குமோ? என அச்சத்தில் உறைந்தனர். அந்த அம்மாவின் பேரன், பாட்டி நீதான் ராமர் கோயிலுக்கு தினமும் சென்று வேண்டி பஜனை செய்வாயே. அவரை கூப்பிட்டு நம்மைக் காப்பாற்றச் சொல் எனக் கூறினான்.

உடனே அந்த அம்மாள், ராமா, எங்களைக் காப்பாற்று காப்பாற்று....! என வேண்டி குரல் எழுப்ப, அவரைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் ராமரை பிரார்த்தித்தனர். என்ன ஆச்சரியம். சிறிது நேரத்தில் அலைகள் ஓய்ந்து கடல் அமைதியானது. உடனே படகுகளை இயக்குபவர்கள் லைப்போட் சகிதமாக வந்து, மண்டபத்தில் இருந்த அனைவரையும் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அதன் பின்னர் மீண்டும் சுனாமி ஏற்பட்டபோது அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருந்தனர். அவர்களைக் காப்பாற்றவே முதல் சுனாமிக்கும், இரண்டாவது சுனாமிக்கும் நடுவில் சிறு இடைவெளியை ராமபிரான் உருவாக்கியதை அறிந்து, அந்த ராமச்சந்திர மூர்த்திக்கு எல்லோரும் மனதார நன்றி செலுத்தினர். ராமபிரானின் கருணைக்கு எல்லையும் உண்டோ? ஊர் திரும்பியவுடன் நேரே கோயிலுக்கு வந்து ராமருக்கு நன்றி செலுத்தி, தேவையான திருப்பணிகளையும் கோயிலுக்குச் செய்து கொடுத்தார், அந்தப் பெண்மணி. மேற்கு நோக்கிய கோயில். முகப்பில் ராமர், சீதை, லட்சுமணன் அருள்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் ராமர், சீதாதேவி, லட்சுமணன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்க, ஆஞ்சநேயர் அவர்களை கைகூப்பி தொழுத வண்ணம் அமர்ந்த நிலையில் உள்ளார். கருவறைக்கு இருபுறமும் விநாயகர் மறுபுறம் முருகப்பெருமான் தரிசனம் தருகின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  நீண்ட நாள் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த தெய்வீக திருமண மூர்த்தத்தில் கலந்து கொண்டு சேவித்து மாங்கல்ய பூஜைகளை அவர்கள் கையாலேயே செய்யலாம். அவ்வாறு கலந்து கொண்டு சேவிப்பவர்களுக்கு விரைவில் விவாகம் நடைபெற்று விடும். 
    
நேர்த்திக்கடன்:
    
  திருமணம் ஆன தம்பதியினர் நேர்த்திக்கடனாக சுவாமிக்கு வஸ்திரம் திருமாங்கல்யம் சாற்றி பூஜை மேற்கொள்வதை காணமுடிகிறது. 
    
 தலபெருமை:
     
  மகாமண்டபத்தில் தியாகராஜ சுவாமிகள் சன்னதி உள்ளது. மகாமண்டப உட்புறச் சுவரை ராமாயண நிகழ்வுகளான அகல்யா சாப விமோசனம், சீதா சுயம்வரம், குகனை ராமபிரான் கட்டித் தழுவும் காட்சி, மூதாட்டி சபரி கனிகளை ராமபிரானுக்கு வழங்கும் காட்சி என அழகிய வண்ண ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. கோயில் மேற்கு நோக்கி உள்ளது. இந்த அமைப்பு வேறு எந்த வைணவ தலங்களிலும் காணமுடியாத அமைப்பாகும். சைவத்திற்கும் வைணவத்திற்கும் பாலமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. கும்பாபிஷேகத்தின் போதும் லட்சார்ச்சனையின் போதும் வைணவ ஆச்சாரியர்களும் சிவாச்சாரியார்களும் ஒருங்கே இணைந்து நடத்தியது கலந்து கொண்ட அனைவரையும் பிரமிக்க வைத்தது. இத்தலத்திற்கு சைவர்களும் வைணவர்களும் எந்தவித பாகுபாடும் இன்றி வந்து தொழுது செல்வது சிறப்பு. ஜெயேந்திரர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் இத்தலத்திற்கு வந்து பூஜித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.  
     
  தல வரலாறு:
     
  பொதுவாக கிராமப்புறங்களில் ராமர் படத்தை வைத்து வழிபடும் இடத்தை பஜனை கோயில் என்பார்கள். அதுபோன்ற வழிபாட்டு இடங்கள் பல நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பல சன்னிதிகளோடு முழுமையான ராமர் கோயிலுமாகத் திகழ்ந்து வருகின்றன. அவற்றுள் ஒன்று, கோவை ஆர்.எஸ்.புரம் அருகே அமைந்துள்ள ராமர் கோயில். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் கோவை வளர்ச்சியடையாத ஊராக இருந்தபோது கோயில் உள்ள இடத்திற்கு அருகில் வசித்து வந்த ஐந்து ராம பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறிய இடத்தை வாங்கினர். அந்த இடத்தில் ஓட்டு வீடு அமைத்து, அதில் ராமர் படத்தை வைத்து பாடல்களைப் பாடி வழிபட்டு வந்தனர். கோயிலை நிர்வாகம் செய்யவும், பூஜைகள் தவறாமல் நடக்கவும் வருமானம் தேவைப்பட்டது.

அதற்காக கோயிலின் முன் பகுதியில் இரு கடைகளைக் கட்டி வாடகைக்குக் கொடுத்தனர். காலப்போக்கில் அவர்கள் அதிக இடத்தை ஆக்கிரமித்ததால் கோயில் இருப்பதுகூட வெளியில் தெரியாத நிலை ஏற்பட்டது. எனவே, கடைகளை காலி செய்யும்படி பக்தர்கள் கூறினர். ஆனால், அவர்களோ அதற்கு மறுப்பு தெரிவித்தனர். வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. மிகவும் கவலையடைந்த பக்தர்கள், தங்கள் வழிபாட்டின்போது, கடைகளை காலி செய்யும் கோரிக்கையை தினமும் ராமனிடம் வைத்தனர். நீதிமன்றமே முடித்து வைக்க முடியாத இப்பிரச்னை ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்தது. அவர்களாகவே மனம் திருந்தி, கடையை காலி செய்துவிட்டு போகும்படி செய்துவிட்டார் ராமபிரான். இச்சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர், கோயிலை விரிவுபடுத்தும் நோக்கில் சிமெண்ட் தளம் கொண்டு கருவறை அமைக்கப்பட்டது. ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகிய மூவர் நின்ற கோலத்திலும், அனுமன் கீழே அமர்ந்து அவர்களைக் கைகூப்பி தொழும் கோலத்திலும் அமைந்த சிலைகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar