Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கரிவரதராஜ பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி பூதேவி
  தல விருட்சம்: வில்வம்
  ஆகமம்/பூஜை : வைகானச ஆகம விதிப்படி மூன்று கால பூஜைகள்
  ஊர்: சரவணம்பட்டி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இத்தலத்தில் வருடத்தில் அனைத்து சனிக்கிழமைகள், திருவோணம், மூலம், மார்கழி, தனுர் மாதபூஜை வைகுண்ட ஏகாதசி, இராம நவமி புரட்டாசி கடைசிவாரம் 6 நாட்கள் கொண்டாடப்படும். பிரம்மோற்சவம் என விழாக்காலங்கள் நீண்டு கொண்டு போனாலும் தீபாவளி விழா இத்தலத்தின் முதன்மை பெருவிழாவாகும். ஊர் மக்கள் அதிகாலை எழுந்து, குளித்து புத்தாடை அணிந்து குடும்பத்துடன் இக்கோயிலுக்கு வந்து பெருமாளை சேவித்த பின் தான் மற்ற கொண்டாட்டங்கள் எல்லாம். தீபாவளியன்று அதிகாலை பெருமாளுக்கு திருமஞ்சனம், திருவாராதனம், சாற்றுமுறை, திருப்பல்லாண்டு என நிகழ்த்தப்படும். இரவு ராமர் பட்டாபிஷேக படத்தை சப்பரத்தில் வைத்து திருவீதிவுலாவுடன் விழா நிறைவுபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தின் ஸ்தல விருட்சம் சிவனுக்கே உரித்தான வில்வம், பிற விஷ்ணு கோயில்களில் காண்பது அரிது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். (இத்தலத்தில் வைகானச ஆகம விதிப்படி காலை 8.30 மணிக்கு காலசந்தியும், 11.00 மணிக்கு உச்சி காலமும் இரவு 7.00 மணிக்கு சாய ரட்சை பூஜையும் என மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. 
   
முகவரி:
   
  அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில், சரவணம்பட்டி, கோவை -சத்தியமங்கலம் சாலை கோயம்புத்தூர்.  
   
    
 பொது தகவல்:
     
  பார்ப்பதற்கு புதிய கோயில் போன்று தோற்றமளித்தாலும் பழம் பெரும் கோயிலாகும். திருப்பணி நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றதால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. பெருமாள் சன்னிதி முன் விளக்குத் தூண் மண்டபத்துடன் அமைந்துள்ளது. ஐந்து கலசங்கள் கொண்ட ஒரு நிலை ராஜகோபுரத்தை விலாசமான முன் மண்டபத்தில் பலிபீடம் கொடிக்கம்பம், பெருமாளை நோக்கி சேவை சாதிக்கும் கருடாழ்வாரையும் காணலாம். மகாமண்டப நுழைவு வாயிலின் வெளிப்புற சுவற்றில் வாயிலுக்கு நேர் மேற்புறம் கஜேந்திர மோட்சம் சுதைச் சிற்பம் அழகிய வடிவில் அமைந்துள்ளது. அச்சிற்பத்து இருபுறமும் தசாவதாரச் சுதைச் சிற்பங்கள்  அலங்கரிக்கின்றன. மகா மண்டபத்தில் வடக்கு நோக்கியவண்ணம் ராமர் பட்டாபிஷேக படம் வைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டப வாயிலில் ஜெயவிஜயன் கம்பீரமாய் காவல்புரிய கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரத ராஜப் பெருமாள் புன்னகை ததும்பும் ஆனந்த முகத்தோடு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அவரது பீடத்தின் முன் ஆதியில் பூஜித்த ஆதிநாராயணப் பெருமாள் தம் தேவியரோடு வீற்றிருக்கின்றார்.  
     
 
பிரார்த்தனை
    
  பெருமாள் அனைத்துவித கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறார். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சம் செய்து புது வஸ்திரம் சாற்றப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  சரவணம்பட்டியில் மாரியம்மன், சிரவணமாபுரீஸ்வரர், பத்திரகாளியம்மன் கரிவரதராஜப்பெருமாள் என நான்கு தொன்மையான கோயில்கள் உள்ளன. அனைத்து கோயில் விழாக்களிலும் மற்ற கோயிலைச் சார்ந்தவர்கள் கலந்து கொள்வது சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக அமைந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு கோயிலைச் சார்ந்த தலைவர்கள் பிற கோயில்களுக்கு முறையான அழைப்பு விடுவர்.
 
     
  தல வரலாறு:
     
  கோவை சத்தியமங்கலம் பெரு வழியில் சரவணம்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ள 300 ஆண்டுகளுக்கு மேல் தொண்மை வாய்ந்த ஓர் ஒப்பற்ற ஸ்தலம் கரிவரதராஜ பெருமாள் கோயில் ஆகும். பொதுவாக தீபாவளி பண்டிகை எல்லா கோயில்களிலும் சிறப்பு அலங்காரங்களுடன் பூஜையும் நடைபெறும். நரகாசூரன் எனும் அரக்கன் பெருமாளின் அவதாரமான கிருஷ்ண பகவான் சம்ஹாரம் செய்த நாள் தான் தீபாவளி. எனவே பெருமாளின் ஓம் அம்சமான கரிவரதராஜப்பெருமான் குடிகொண்டுள்ள இக்கோயிலில் கொண்டாடப்படும் தீபாவளி விழா முதன்மை பெற்றதாகும். முகமதிய தளபதி பக்கத்து நாட்டின் மேல் போர் தொடுக்கச் செல்லும் வழியில் இருட்டி விடவே, இக்கோயில் வளாகத்தில் தன் படை வீரர்களுடன் தங்கி இருந்தான். இவ்விறைவனின் ஆற்றலை ஊர் பொது மக்கள் மூலம் அறிந்த தளபதி புறப்படும் முன் தான் போரில் வெல்ல வேண்டும் என பெருமாளை வேண்டிச் சென்றான்.

போரில் வெற்றி வாகை சூடி திரும்பும் வழியில் இக்கோயிலுக்கு வந்து நன்றிக் கடனாக, திருப்பணிக்கு பெருந்தொகை தந்ததாக செவிவழிச் செய்திமூலம் அறியப்படுகிறது. இக்கோயில் நூற்றாண்டுகளுக்கு மேலாக இராமர் பட்டாபிஷேகபடம் ஒன்று வைத்து தினசரி பூஜையும் சனிக்கிழமைகளில் பஜனையும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன் வரலாறு சற்று வித்தியாசமானது. இந்த ஊரைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் மாதந்தோறும் தவறாமல் பழநிக்குச் சென்று முருகனை வழிபட்டு வருவதை நீண்டகாலமாக வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படிச் செல்லும் போது படக்கடை நடத்திவரும் முகமதியர் நண்பரானார். ஒவ்வொரு முறை பழநி கோயிலுக்குச் செல்லும்போதும் அவர் கடைக்குச் சென்று, அவரிடம் உரையாடி, சிறிது நேரம் ஓய்வுக்கு பின் திரும்புவர். ஒருமுறை அவ்வாறு செல்லும்போது படக்கடைக்காரர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். விசாரித்த போது அவர் மனைவி தீராத வாத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப் பட்டுக் கொண்டிருப்பதாகவும், பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என வருத்தத்துடன் கூறினார்.

நோயின் தன்மையைக் கேட்டறிந்து கொண்டனர். இரு நண்பர்களில் ஒருவர் கை வைத்தியத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர். உடனே அங்குள்ள நாட்டு மருந்து கடைக்குச் சென்று மூலிகைகளையும் மருந்துகளையும் வாங்கி வந்து, அங்கேயே அரைத்து மருந்து தயாரித்து அதை உருண்டை வடிவில் செய்தார். தினசரி காலையும் மாலையும் 2 உருண்டைகள் சாப்பிட்டு வருமாறு சொல்லிவிட்டு ஊர் திரும்பினர். அடுத்த மாதம் பழநி கோயிலுக்குச் சென்று விட்டு படக் கடைக்கு வந்தனர். இவர்களைக் கண்டதும் படக்கடை முகமதிய நண்பர் வாங்க வாங்க என முகமலர மகிழ்ச்சியுடன் வரவேற்றார். நண்பர்கள் இருவர் அவர் மனைவியின் உடல் நலத்தைப்பற்றி விசாரிப்பதற்குள்ளாகவே, கடைக்காரர், ஐயா எத்தனையோ மருத்துவர்களிடம் மருத்துவம் பார்த்தும் தீராத வியாதி உங்கள் மருந்தால் விரைவில் பூர்ண குணம் அடைந்து விட்டார். தற்போது மகிழ்ச்சியுடன் உள்ளார் என்றார். எனது மனைவி தங்களுக்கு நன்றியைத் தெரிவிக்குமாறு கூறியுள்ளார் என்றார். மேலும், உங்கள் வைத்தியத்திற்கு எத்தனை கட்டணம் எனச் சொல்லுங்கள். கொடுத்து விடுகிறேன். எத்தனை ஆனால் சரி என்றார். கடைக்காரர் இவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பர்கள் இருவரின் பார்வையும் சுவற்றில் மாட்டி இருந்த இராமர் பட்டாபிஷேக படத்தின் மீது லயித்திருந்தது. எனக்கு கட்டணம் எதுவும் வேண்டாம். நீங்கள் பிரியப்பட்டால் அந்த இராமர் பட்டாபிஷேக படத்தை எனக்கு தாருங்கள் எனக் கேட்டார். உடனே கடைக்காரர் அன்புடன் அப்படத்தை அளித்தார். ஊர் திரும்பியவுடன்,

அப்படத்தை இக்கோயிலில் வைத்து தினசரி பூஜை செய்ததுடன் சனிக்கிழமைகளில் பஜனையுடன் திருவீதி உலாவும் நடந்து வந்தது. இந்நிகழ்வு நூற்றாண்டுகளுக்கு மேலாக தவறாமல் நடத்தி வருகின்றனர். ஆதியில் பிரதிஷ்டை செய்யப் பெற்ற அருவமான மூர்த்தங்களை பூதேவி ஸ்ரீதேவி சமேத ஆதிநாராயணப் பெருமாள் என்ற திருநாமத்தில் பல ஆண்டுகளாக வணங்கி வந்தனர். பெருமாளுக்கெனத் தனிக்கோயில் அமைத்து அதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாளை பிரதிஷ்டை செய்ய ஊர் மக்கள் முடிவு செய்தனர். அத்தோடு ஆஞ்சநேயருக்கும் தனிச் சன்னிதி அமைக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி ஒரு நல்ல வாஸ்து நாளில் பூமிபூஜை போடப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டது. நிதிபற்றாக்குறை கட்டிடபொருட்கள் கிடைப்பதில் தாமதம் என கட்டிட வேலை எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. இறையருளால் ஒருவழியாக திருப்பணியை முடித்து சிலைகளைப் பிரதிஷ்டைசெய்து வேதவிற்பனர்களின் வேத பாராயண கோஷத்துடன் கும்பாபிஷேகம் கோலாகலமாக நிறைவேறியது. திரிகூட மலையில் அமைந்த சோலைகளுக்கு நடுவே பெருமாள் எழுந்தருளி இருந்தார்.

மனித நடமாட்டமற்ற இடத்தில் எழுந்தருளியிருந்த பெருமாள் திருவுருவ சிலைக்கு நாள் தோறும் வழிபாடு செய்து கொண்டிருந்தது கஜேந்திரன் எனும் யானை. தினந்தோறும் அருகில் உள்ள தடாகத்தில் குளித்து தடாகத்தில் மலர்ந்து இருக்கும் தாமரை மலர்களைப் பறித்து பெருமாள் சிலைக்கு சாற்றி வழிபடுவது வழக்கம். ஒருநாள் தாமரை மலர்களைப் பறிக்க முற்பட்ட போது தடாகத்தில் இருந்த முதலை யானையின் காலைக் கவ்விப் பிடித்தது. கஜேந்திரன் தன் வலிமையை எல்லாம் திரட்டி போராடியும் காலை விடுவிக்க முடியவில்லை. பெருமாள்  வழிபாட்டில் குறை ஏற்பட்டு விடுமோ? என்றுதான் கவலை. வலிதாங்க முடியாமல் பிளிறியது. வேறுவழி தெரியாமல் தான் வழிபடும் பெருமாளை, நினைத்து ஆதிமூலமே என ஒரே ஒருமுறைதான் கூப்பிட்டது. அத்தருணமே திருமால் எழுந்தருளி முதலைக்கு மோட்சமளித்து கஜேந்திரன் காப்பாற்றினார். யானைக்கு அருள்புரிந்து காப்பாற்றியதால், கரிவரதராஜன் எனப்போற்றப்படுகிறார். தம்தேவியரான ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி காட்சி தந்து இருவருக்கும் வைகுந்த பதவியளித்தார். யானைக்கும் முதலைக்கும் அருள்புரிந்து வைகுந்த பதவியளித்த பெருமாள், நாமும் ஆபத்துக்காலங்களில் இறைவனை நினைத்து அவன் திருநாமத்தைச்சொல்லி கூவியழைத்தால் நிச்சயம் வந்து அருள்புரிந்து நம்மைக் காப்பார் இக்கோயில் கரிவரதராஜர்.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தின் ஸ்தல விருட்சம் சிவனுக்கே உரித்தான வில்வம், பிற விஷ்ணு கோயில்களில் காண்பது அரிது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar