Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாரியம்மன்
  ஊர்: வீரபாண்டி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புகழ்பெற்ற இத்தலத்தில் வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி தினங்களில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. வைகாசி மாதத்தில் வரும் தேர்த்திருவிழா நவராத்திரி, மற்றும் மூன்றாவது ஆடிவெள்ளி ஆகிய விழாக்கள் முக்கிய உற்சவங்களாகும். 21 நாட்கள் கொண்டாடப்படும் வைகாசி திருவிழாவில் அம்மன் பூச்சாட்டிற்கு பின் வரும் ஞாயிற்றுக்கிழைகளில் மகா திருமஞ்சனம் நடைபெறும். இத்திருமஞ்சனத்தில் 1008 இளநீர், 200 லிட்டர் பால், 101 லிட்டர் தயிர் மற்றும் 65 மூலிகைகளால் அபிஷேகம் செய்து, அலங்கார ஆராதனை நடைபெறும். இத்திருவிழாவில் ஆயிரக்கண்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து தீர்த்தக் கிணற்றில் குளித்து விட்டு ஈர உடையுடன் கோயிலை நோக்கி திருவீதிகளில் அடி அளந்து - நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விழுந்து வணங்கி வருவர். இதனை சரணாகதி தத்துவம் எனகின்றனர். இவ்வாறு வழிபடுவதன் மூலம் உடல் பிணி நீங்கி பூர்ண உடல் நலத்துடன் வாழ்வதாக நம்புகின்றனர். நேர்த்திக் கடனாக அலகு குத்தி சிறிய தேரை இழுத்து வரும் நிகழ்வு பார்ப்பபோரை மெய்சிலிர்க்க வைக்கும் விழாவில் அணிக்கடை எனும் பேழை மூடியில் அம்மனின் ஆபரணங்கள், பட்டுசேலை, மலர்மாலை ஆகியவற்றை அருகில் உள்ள நாயக்னூரை, மாப்பிள்ளை வீடாக பாவித்து, சீர்வரிசையினை தங்கைக்காக பெருமாளே தாரை தப்பட்டை முழங்க அணிவகுத்து வருவது அற்புத காட்சியாகும். மாவிளக்கு அக்னி கும்பம் எடுத்து வருவதும் இவ்விழாவில் முக்கிய அங்கமாகும். ஆடி அனைத்து வெள்ளிக் கிழமைகளும் அம்மனின் கோலாகல திருவிழாத்தான் அதிலும் மூன்றாவது வெள்ளிக்கிழமை - முக்கிய திருவிழா - அன்று அம்மனுக்கு சொர்ணாபிஷேகம் இதன் பின்ணணியில் உள்ள ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பார்க்கலாம். அம்மனை சரணடைந்து அவனருளால் வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டவர்கள் ஏராளம் அப்படி பட்டவர்களில் ஒரு தம்பதியினர் அன்னைக்கு இன்னமும் சிறப்பாக வழிபாடு செய்ய என்ன செய்ய வேண்டும் என அர்ச்சகரிடம் கேட்டனர். நான்கு தலைமுறைகளாக அம்மனுக்கு பக்தியுடன் பூஜை செய்து வரும் அர்ச்சகர்கள் இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிறப்புடன் வாழவும் எல்லா நிலைகளில் உயரவும் அம்மனின் திருமேனிக்கு சொர்ணாபிஷேகம் செய்யுங்கள் என்றார். அவர் கூறியது போலவே அந்த தம்பதியினர் சொர்ணபுஷ்பங்களை தயார் செய்து முதன் முதலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு சொர்ணாபிஷேகம் செய்தனர். இது தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அன்று அம்மனுக்கு தங்க கவசம் சாற்றி, நவரத்தினம் மற்றும் ஆபரணங்களை அணிவித்து மலர் மாலைகளால் அலங்காரம் செய்வித்து கனக புஸ்பத்தினால் அம்மனை அர்ச்சனை செய்வர். இந்த பூஜையில் அம்மனை காண என்ன தவம் செய்தோமே என வியக்கும் அளவில் அமைந்திருக்கும். இப்பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பூஜையில் வைத்த நாணயம், மங்கலப் பொருட்கள் பிரசாதம் என அனைத்தும் வழங்கப்பெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தின் சிறப்பு சைவ வைணவ ஒற்றுமை மாரியம்மன் கோயில் ராமர் பஜனைகுழு என்ற அமைப்பினர் மார்கழியில் திருப்பாவை திருவீதி உலா புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு கிருஷ்ண ஜெயந்தி ராமநவமி போன்ற வழிபாடுகளையும் பஜனைகளையும் செய்து வருகின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 முதல் 1.00 வரை. மாலை 4.30 முதல் 8.30 வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு மாரியம்மன் கோயில் வீரபாண்டி - 641 605 மேட்டுப்பாளையம் ரோடு கோயம்புத்துார்  
   
போன்:
   
  +91 422 -2695638. 
    
 பொது தகவல்:
     
  மூலசன்னதியின் மேற்கு பகுதியில் மாகாளியம்மனின் தனிச் சன்னதி விமானத்துடன் உள்ளது. அனைத்து திருப்பணிகளும் நிறைவுற்ற நிலையில் 2000 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் வடக்கு நோக்கி அமைந்திருந்தாலும் முக்கிய நுழைவு வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது வடக்குப்புறம் ஒரு வாயில் உள்ளது. வடக்குபுற நுழைவாயிலின் மேற்புறத்தில்  அன்னபட்சி வாகனத்தில் நாகம் குடைபிடிக்க எழிலார்ந்த கோலத்தில் அமர்ந்திருக்கும் அம்மனின் சுதைச் சிற்பம் நம்மை வரவேற்கின்றது. அடுத்து நாம் காண்பது, அழகிய வடிவில்  கலைநயத்துடன் வடிக்கப்பட்ட குறிஞ்சி மண்டபம் வைகாசி உற்சவ காலத்தில் அனைத்து தேவர்களும் இம்மண்டபத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம்.

கருவறை எதிரே வசந்த மண்டபத்தில் பிரம்மாண்டமான சூலம் காணப்படுகின்றது. இதை வேண்டுதல், சூலம் என அழைக்கின்றனர். பக்தர்களின் வேண்டுதல்களை அம்மனிடம் வைத்து இந்த சூலத்தில் எலுமிச்சம் கனியை குத்தி விட்டால், வேண்டுதல் நிறைவேறி விடுகிறதாம். நீண்ட காலமாக இவ்வழிபாடு நடந்து வருகின்றது. சூலத்தை அடுத்து பலி பீடமும் சிம்ம வாகனமும் உள்ளன. அர்த்த மண்டப நுழை வாயிலில் நீலி, சூலி இருவரும் காவல் புரிய கருவறையில் அமர்ந்த கோலத்தில் புன்னகை ததும்பும் முகத்துடன் கருணை பொழியும் விழிகளுடன் சாந்த சொரூபியாய் அருள்புரிகின்றார். முன் வலக்கையில் சூலத்தையும், பின் வலக்கையில் உடுக்கையையும், முன் இடக்கையில் கபாலத்தையும் பின் இடக்கையில் மழுவையும் ஏந்தி இடப்பாதத்தை மடித்து வலப்பாதத்தை மகிஷன் தலமீது வைத்தபடி அமர்ந்துள்ளார். மலர் அலங்காரத்தில் அம்மனைக் காண கண்கோடி வேண்டும். விழிகள் அம்மனை விட்டு அகலா. மகிஷனின் ஆணவத்தை அடக்கிய தலம். இந்த அம்மனை மனதார வணங்குபவர்களின் ஆணவத்தை நீக்கி அமைதியாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

கோஷ்டத்தில் மஹாலட்சுமி, பிரம்மஹி, துர்க்கை, சாமுண்டி மற்றும் வராஹி ஆகியோர் அருள்கின்றனர். அனைத்து கோஷ்ட தெய்வங்களுக்கும் காவல் தெய்வங்களும் ஒரே நிறத்தில் (நீலம்) புடவை அணிவித்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. மகா மண்டப நுழைவாயிலில் சப்த மாதர்கள் சன்னதியும் கோயிலின் வடபுறத்தில் வேப்பமரத்தடியில் ஆதி மாரியம்மன் சன்னதியும் அமைந்துள்ளன. தினமும் 3 காலை பூஜை நடைபெறுகிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத் தடை, குழந்தைப் பேறு, உடல் நலம் சிறக்க

 
    
நேர்த்திக்கடன்:
    
  திருமணத் தடை, குழந்தைப் பேறு, உடல் நலம் ஆகியவற்றுக்காக வெள்ளிக்கிழமை மாலை மஞ்சள் குடத்துடன் வேப்பிலையை ஏந்தி கோயிலை மூன்று முறை வலம் வந்து அந்நீரால் அபிஷேகம் செய்து வேண்டினால் விரைவில் பலன் கிடைக்கிறதாம். 
    
 தலபெருமை:
     
  அம்மன் ஆற்றலை அறிந்த சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர் மக்கள் தொடர்ந்து கோயிலுக்கு வரத் தொடங்கினர். விழாக் காலங்களில் கூட்டம் அலைமோதியது. சிறிய கோயிலாக இருந்ததால் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாயினர். கோயில் நிர்வாகிகளும் ஊர் பெரியவர்களும் கலந்து பேசினர். கோயில் விரிவாக்கம் மற்றும் கும்பாபிஷேகம் மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டதை உணர்ந்தனர். துல்லியமாகத் திட்டமிட்டு அம்மனுக்கு கல்கார கருவறை, அர்த்தமண்டபம் உட்பிரகாரத்துடன் கூடிய மகாமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு பின் வசந்த மண்டபத்தையும் மிகவும் விசாலமான முறையில் வடிவமைத்து கட்டிஉள்ளனர். திருவிழா காலங்களில் வசந்த மண்டப மையப்பகுதியில் கம்பம் கட்டு அதன்மீது பூவோடு எனப்படும் அக்னி சட்டியை வைத்து அக்னியை வளர்ப்பர். தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். அந்த புகை மண்டபத்தினுள் வராதபடி உயரமான விதானம் புகை, வெப்பம் மற்றும் காற்று இலகுவாக வெளியேற 4 புறமும் திறந்த வெளியும் விதானத்தின் நடுவில் புகை போக்கி போன்ற அமைப்பை கலைநயத்துடன் அழகிய வடிவில் அமைத்துள்ளனர். கம்பத்தை சுற்றி இளைஞர்கள் மேள தாள இசைக் ஏற்ப சுற்றி வந்து ஆடுவது கண்களுக்கு விருந்தாகும். உயர்ந்த பகுதியில் உள்ம புற உள் சுவற்றில் அஸ்டதிக் பாலகர்கள், மீனாட்சி, மாரியம்மன், காமாட்சியம்மன் அபிராமி ஆகியோரது 12 சுதைச் சிற்பங்களை கலைநயத்துடன் நேர்த்தியாக வடித்துள்ளனர்.

கோயிலைச் சுற்றி உள்ள ஊர்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயிகள். சுபகாரியங்கள், கிணறு வெட்ட, ஆள்துளை கிணறு அமைக்க அம்மனிடம் பூவரம்  கேட்டு உத்தரவு கிடைத்தபின் அக்காரியத்தை மேற்கொண்டு பலனடைந்து வருகின்றனர். பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி தரும் தாயாக விளங்குகின்றாள். பள்ளிக்கு மற்றும் தேர்வுக்குச் செல்லும் குழந்தைகள் அம்மனை வேண்டி அருள் பெற்றுச் சென்று வெற்றியும் பெருகின்றனர்

முற்பிறவி இப்பிறவியில் செய்த வீனைதீர வீரபாண்டி மாரியம்மனைத் தொழ உடனே வினை தீரும் என்கின்றனர். சமயபுரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வேண்டி நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். எனவே இக்கோயில் கொங்கு சமய புரம் எனப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலம் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அப்போது ஏற்பட்ட இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மனதளவில் கடுமையான துன்பத்திற்கு ஆளாயினர். இனி அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டதை உணர்ந்தனர். தாங்கள் மனதார வணங்கி வந்த மாரியம்மனிடம் தங்கள் நிலையைக் கூறி நல்லவழி காட்டுமாறு பணித்தனர்.

அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஒன்றுகூடி அங்கிருந்து இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு செல்லும் முடிவை எடுத்தனர். செல்வதற்கு முன் தாங்கள் போற்றி வணங்கி வந்த மாரியம்மனையும் தங்களுடன்  எடுத்துச் செல்ல ஏகமானதாக உறுதி செய்ய அவ்வாறே மிகவும் பாதுகாப்பாகவும் சர்வஜாக்கிரதையாகவும் மாரியம்மனை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.  தமிழக எல்லையை அடைந்து கோவைக்கு அருகே உள்ள நெ. 4 வீரபாண்டியை அடைந்தனர்.

மாரியம்மனை பிரதிஷ்டை செய்யவும், தாங்கள் குடியேறவும் ஏற்ற இடமாக அமைந்திருப்பதை உணர்ந்தனர். மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த இடத்தில் சிறிய மேடைக் கோயிலை அமைத்து தினசரி பூஜைகள் செய்து வந்தனர்.

நாளுக்கு நாள் அன்னையின் ஆற்றல் பெருக, அன்னையத் தரிசிக்க அதிக அளவில் மக்கள் வரத்தொடங்கினர். சிறிய மேடைமீது இருந்த கோயிலை எண் கோண வடிவில் மாற்றியமைத்து மேற்கூரையமைத்தனர். இக்கட்டிடத்தில் சிலையை நிறுவி வழிபட்டுவரலாயினர். மாரியம்மன் இந்த ஊர் மக்களின் காவல் தெய்வமாகவும் உற்ற தெய்வமாகவும் ஏழை எளிய மக்களின் இதய தெய்வமாகவும் விளங்குகின்றார். அனைத்துக்கும் மேலாக கண்நோய் மற்றும் இயல்பு தொற்று நோய் தீர்க்கும் மருத்துவராக பரிமளிக்கின்றார்.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம்
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தின் சிறப்பு சைவ வைணவ ஒற்றுமை மாரியம்மன் கோயில் ராமர் பஜனைகுழு என்ற அமைப்பினர் மார்கழியில் திருப்பாவை திருவீதி உலா புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு கிருஷ்ண ஜெயந்தி ராமநவமி போன்ற வழிபாடுகளையும் பஜனைகளையும் செய்து வருகின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar