Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஜலகண்டேஸ்வரர்
  உற்சவர்: சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்
  அம்மன்/தாயார்: அகிலாண்டேஸ்வரி
  தல விருட்சம்: வன்னி
  தீர்த்தம்: கங்காபாலாறு, தாமரை புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை : சிவாகமம்
  புராண பெயர்: வேலங்காடு
  ஊர்: வேலூர்
  மாவட்டம்: வேலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம்.  
     
 தல சிறப்பு:
     
  பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர் - 632 001, வேலூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 98947 45768, 98946 82111, + 416 222 3412, 222 1229 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடக்கும். சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது.

நாகதோஷம் உள்ளவர்களும், பல்லி தொடர்பான தோஷம் இருப்பவர்களும் சிவனை வணங்கி இவற்றையும் வணங்கிச் செல்கிறார்கள். ஆதிசங்கரர், பிரகாரத்தில் இருக்கிறார். சித்திரையில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது, 8 சப்பரங்களில், 8 நாயன்மார்கள் வீதம் 63 நாயன்மார்களும் வீதியுலா செல்வர். இவர்களுடன் சிவன், யானை வாகனத்தில் பவனி செல்வார். இந்த வைபவம் இங்கு மிகவிசேஷமாக நடக்கும். சனி, குரு பெயர்ச்சியின் போது விசேஷ ஹோமங்கள் நடக்கும். இத்தலத்து விநாயகர் செல்வ விநாயகர் எனப்படுகிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
 

ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, தடைபட்ட திருமணங்கள் நடக்க, சகல திருஷ்டிகளும் விலக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  பிரம்மா, திருமால் இருவரின் அகந்தையை அடக்குவதற்காக சிவன், ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில், இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் எழுந்தருளுகின்றனர். அன்று மாலையில் ராஜகோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் செய்து, பின்பு வீதியுலா செல்வர். இந்த ஒருநாளில் மட்டுமே மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசிக்க முடியும். கார்த்திகை கடைசி சோமவாரத்தன்று (திங்கள்) சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.

தீப சிறப்பு: அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில், "அணையா நவசக்தி ஜோதி தீபம்' இருக்கிறது. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருளுகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்கிற்கு மேளதாளத்துடன், சுத்தான்ன நைவேத்யம் படைத்து விசேஷ பூஜை நடக்கிறது. அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமி காட்சி தருகின்றனர்.

மும்மூர்த்திகளைப் போல முப்பெரும் தேவியரையும் இங்கு தரிசிக்கலாம் என்பது மேலும் விசேஷம். இஙகுள்ள நந்தியின் முன்பு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை. இவருக்கு மாட்டுப்பொங்கலன்று விசேஷ பூஜை உண்டு.

ஜுரகண்டேஸ்வரர்: சிவன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். நோய் நீக்குபவராக அருளுவதால், "ஜுரகண்டேஸ்வரர்' என்றும் பெயருண்டு. பக்தர்கள் இவருக்கு அதிகளவில் ருத்ராபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க, அவர்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தி வணங்கும் வழக்கமும் இருக்கிறது. இவரை வேண்டி அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து கொள்கிறார்கள்.

ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம், அம்பிகைக்கு காய்கறி, பழங்களால் அலங்கரிக்கும் "சாகம்பரி' உற்சவமும் நடக்கிறது. இவ்வேளையில் சிவன், அம்பிகையை தரிசித்தால் அன்னத்திற்கும், விளைபொருட்களுக்கும் குறையில்லாத நிலை ஏற்படும் என்பர்.

வேலூரில் "காசி': பிரகாரத்தில் கங்கை நதி, கிணறு வடிவில் இருக்கிறது. இதற்கு அருகில் சிவன், "கங்கா பாலாறு ஈஸ்வரர்' என்ற பெயரில் காட்சி தருகிறார். இவர் இந்த கிணற்றில் கிடைக்கப்பெற்ற மூர்த்தியாவார். கங்கை நதியே இங்கு பொங்கியதாகச் சொல்கிறார்கள். இந்த லிங்கம், சற்றே கூம்பு போல காட்சியளிக்கிறது. இந்த சிவனுக்கு பின்புறத்தில் பைரவர் இருக்கிறார். இவ்வாறு காசி அமைப்பில் சிவன், கங்கை தீர்த்தம், பைரவர் என மூன்றையும் இங்கு தரிசிக்கலாம். இவரது சன்னதியில் தீர்த்தத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள். இதனை பக்தர்களே சிவனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.

இங்கு வேண்டிக்கொள்ள காசியில் விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள். தட்சிணாமூர்த்தி, நான்கு சீடர்களுடன் உற்சவராக இருக்கிறார். சனீஸ்வரரும் ஜேஷ்டாதேவி, மாந்தியுடன் உற்சவமூர்த்தியாகக் காட்சி தருகிறார். சனி, குரு பெயர்ச்சியின்போது இவ்விருவருக்கும் விசேஷ ஹோமங்கள் நடக்கும்.

கலையம்ச கல்யாண மண்டபம்: மன்னர் பொம்மி, சிவனுக்கு கோயில் எழுப்பியபோது சுற்றிலும் ஒரு பிரமாண்டமான கோட்டையைக் கட்டினார். கோட்டையைச் சுற்றி தண்ணீர் நிறைந்த பெரிய அகழி இருக்கிறது. பிரகாரத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் இருக்கிறது. கோயில் வளாகத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் வித்தியாசமான பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது.

வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணப்பர் வரலாறு, நரசிம்மரின் பாதம் அருகில் வணங்கியபடி கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள்,  மகரிஷி யோகாசனம் செய்யும் சிற்பம், மேல் விதானத்தை தாங்கும் கிளிகள் என கண்ணைக்கவரும் பலவிதமான சிற்பங்கள் இருக்கிறது.

இந்த மண்டபத்தின் அழகில் லயித்த வெள்ளையர் தளபதி ஒருவர், தூண்களோடு பெயர்த்துச் செல்ல விரும்பினார். இதற்காக வெளிநாட்டிலிருந்த கப்பலையும் வரவழைத்தார். ஆனால், அக்கப்பல் வழியிலேயே விபத்தைச் சந்தித்ததால், இத்திட்டத்தைக் கைவிட்டார்.
 
     
  தல வரலாறு:
     
  சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில், லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. லிங்கத்தை புற்று மூடிவிட்டது.பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கத்தை சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். பொம்மியும் பயபக்தியுடன் கோயில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே சுவாமிக்கு "ஜலகண்டேஸ்வரர்' என்று பெயர் ஏற்பட்டது.

அந்நியர் படையெடுப்பின்போது, இந்த லிங்கம் பாதுகாப்பு கருதி சத்துவாச்சாரி என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. 1981ல் மீண்டும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar