Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கூடல் அழகிய பெருமாள்
  உற்சவர்: சுந்தர்ராஜர்
  அம்மன்/தாயார்: மகாலட்சுமி
  தல விருட்சம்: புளியமரம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  புராண பெயர்: திருக்கூடலூர்
  ஊர்: கூடலூர்
  மாவட்டம்: தேனி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ராபவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம்.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலில் கூடலழகர், அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். இந்த விமானம் ராமாயணம் மற்றும் கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் சிற்பங்களுடன் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 10.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில், கூடலூர்- 625 518. தேனி மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4554 - 230 852. 
    
 பொது தகவல்:
     
  தசரதரின் ஆட்சியிலிருந்து, ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் பிறப்பு, ராமர் திருமணம், அவரது வனவாசம், ராவணனால் சீதை கடத்தப் படுதல், அவரை ராமர் மீட்டு வந்து பட்டாபிஷேகம் செய்தல் என ராமாயண நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் இங்கு தத்ரூபமாக சிலையாக வடித்துள்ளனர். பிரகாரம் சுற்றி வரும் வேளையில் சுவாமி சன்னதி முன் மண்டபம், அஷ்டாங்க விமானத்தில் இந்த சிற்பங்களைக் காணலாம். சிற்ப சிறப்பால் இந்த விமானத்திற்கு, "ராமாயண விமானம்' என்ற பெயரும் உண்டு. மன்னர் இங்கு கோயில் அமைத்தபோது, மூலஸ்தானத்தைச் சுற்றி விமானத்தின் கீழே ஒரு பிரகாரம் அமைத்தார். பக்தர்கள் இப்பிரகாரத்திலும் வலம் வரலாம். இது, புராதனமான கோயில்களில் மட்டுமே காணப்படும் அமைப்பாகும்.

கோயில் முன்மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணையுடன் நவநீத கிருஷ்ணர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகியோர் உள்ளனர். கோயில் முன் மண்டப மேற்சுவரில் ராசி சக்கரம் உள்ளது. இதன் மத்தியில் மகாலட்சுமி காட்சி தருகிறாள். இவ்விடத்தில் நின்று சுவாமியை தரிசித்தால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்கிறார்கள்.

பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் இணைக்கும் மேற்கு மலைத்தொடர்ச்சியின் எல்லையில் அமைந்த ஊர் இது. இரு நாடுகளும் கூடும் ஊர் என்பதால் இவ்வூர், "கூடலூர்' என்று பெயர் பெற்றது. கூடல் நகரான மதுரையில் அருளும் பெருமாள் காட்சி தரும் தலமென்பதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். இங்கு பாண்டியரின் மீன் சின்னம், சேரர்களின் கொடி சின்னங்கள் அடுத்தடுத்து பொறிக்கப் பட்டிருக்கிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  துவங்கும் செயல்கள் வெற்றி பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க, திருமணத்தடை நீங்க கூடலழகரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் ஆகிய தலங்களில் பெருமாள், அஷ்டாங்க விமானத்துடன் அமைந்த சன்னதியில் காட்சி தருகிறார்.இத்தலங்கள் விசேஷ மானதாகக் கருதப்படுகிறது. இதைப்போலவே இக்கோயி லிலும் கூடலழகர், அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். இந்த விமானம் ராமாயணம் மற்றும் கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் சிற்பங்களுடன் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

தலைமை பதவிக்கு பிரார்த்தனை: மூலஸ்தானத்தில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில், தாயார்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வெள்ளிதோறும் வாசனை திரவியம், நல்லெண்ணெய் சேர்ந்த கலவையால் காப்பிட்டு பூஜை செய்கின்றனர்.இவர் மதுரை கூடலழகர் பெயரிலும், உற்சவர் திருமாலிருஞ் சோலையில் அருளும் சுந்தர்ராஜர் (கள்ளழகர்) என்ற பெயரிலும் அழைக்கப்படுவது விசேஷம். இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் மதுரையில் அருளும் இரண்டு திவ்ய தேச பெருமாள்களின் அருளைப் பெறலாம்.பிரச்னையால் பிரிந்த தம்பதியர்கள் அல்லது உறவினர்கள் மீண்டும் சேர சுவாமிக்கு துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மீண்டும் இணைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. பொறுப்புள்ள தலைமை பதவி, கவுரமான வேலை கிடைக்க விரும்பும் பக்தர்கள் சுவாமிக்கு, தோளில் அங்கவஸ்திரம் அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.

சித்ரா பவுர்ணமியன்று ஒரு நாள் சுவாமிக்கு விழா கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், பூஜைகள் நடக்கும். இரவில் உற்சவர் வீதியுலா சென்று, மறுநாள் அதிகாலையில் கோயிலுக்குத் திரும்புவார்.சுவாமி சன்னதி எதிரில் கல் தீப ஸ்தம்பம் உள்ளது. திருக்கார்த்திகையன்று இதில் தீபமேற்றி, சுவாமிக்கு விசேஷ பூஜை செய்கிறார்கள். இங்குள்ள கல்லால் செய்யப்பட்ட கொடுங்கை அவசியம் காண வேண்டியது.
 
     
  தல வரலாறு:
     
  சிவனிடம் வரம் பெற்ற அசுரன் ஒருவன், தேவர்களை துன்புறுத்தினான்.அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர் அசுரனின் அழிவு குறித்து ஆலோசிக்க, தேவர்களை அழைத்தார். அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இத்தலத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்பு, அசுரனிடமிருந்து தேவர்களைக் காத்த மகாவிஷ்ணு, அவர்களின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார்.காலப்போக்கில் இங்கு சுவாமிக்கான வழிபாடுகள் மறைந்துபோனது. பிற்காலத்தில் இப் பகுதியை ஆண்ட, சிற்றரசர் ஒருவர் மதுரை கூடலழகர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தினமும் அவரை தரிசித்துவிட்டு, தனது பணியைத் துவங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அரசருக்கு தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில், கூடலழகருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் எங்கு கோயில் அமைப்பது? சிலை எப்படி அமைப்பது? என அவருக்குத் தெரியவில்லை. தனக்கு அருளும்படி பெருமாளிடம்வேண்டினார்.அவரது கனவில் தோன்றிய கூடலழகர், இத்தலத்தை சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னர், தான் கண்ட அமைப்பில் தாயார்களுடன் சுவாமிக்கு சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினார். சுவாமிக்கு, "கூடல் அழகர்' என்றே திருநாமம் சூட்டினார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் கூடலழகர், அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். இந்த விமானம் ராமாயணம் மற்றும் கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் சிற்பங்களுடன் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar