Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பத்ரகாளியம்மன்
  அம்மன்/தாயார்: பத்ரகாளியம்மன்
  புராண பெயர்: அம்பாள்துறை
  ஊர்: அம்பாத்துறை
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அம்பாத்துறை பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும், பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடக்கிறது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் அன்றாடம் அதிகாலையில் விளக்கு பூஜை நடக்கிறது. பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலை 10.30 முதல் மதியம் 12 மணிவரை துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை நடக்கிறது. ஏராளமான பெண்கள் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர். தேய்பிறை அஷ்டமி நாளில் பால பைரவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  கிழக்கு திசை நோக்கியுள்ள கோயில் கருவறையில் பத்ரகாளியம்மன் மற்றும் மீனாட்சியம்மன் மூலவர்களாக உள்ளது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணிமுதல்10 மணிவரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை நடை திறந்திருக்கும். வெள்ளி கிழமை ராகு கால பூஜைக்காக மதியம் 12 மணி வரை நடை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பத்ரகாளியம்மன் மீனாட்சியம்மன் திருக்கோயில், மேலக்கோட்டை, அம்பாத்துறை அஞ்சல்-624 302, திண்டுக்கல்.  
   
போன்:
   
  +91 99653 - 37542 
    
 பொது தகவல்:
     
  கிழக்கு திசை நோக்கியுள்ள கோயில் கருவறையில் பத்ரகாளியம்மன் மற்றும் மீனாட்சியம்மன் மூலவர்களாக உள்ளனர். கருவறையின் வெளியில் வலது புறம் பத்ரகாளியம்மன் இடது புறம் மீனாட்சியம்மன் உற்சவர்கள் உள்ளனர். சுற்று பிரகாரத்தில் முதலில் தட்சிணாமூர்த்தி, சித்தி விநாயகர், நந்திகேஸ்வரர், பாலமுருகன், விஷ்ணு துர்க்கையம்மன் தனி மாடங்களில் உள்ளனர். கோயில் உள் பிரகாரத்தில் நவக்கிரகங்கள்  உள்ளனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  தன்னை தேடி வந்து பிரார்த்தனை வேண்டுபவர்களுக்கு தேவையான நலன்களை வாரி வழங்குவதால் பக்தர்கள் வருகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பத்ரகாளியம்மனிடம் கோரிக்கை வைக்கும் பக்தர்கள் அவை நிறைவேறியதும், கிடா வெட்டுதல், சேவல் விடுதல், எடைக்கு எடை நாணயம் துலாபாரம் வழங்கல் உள்ளிட்ட நேர்த்திகடன்களை செலுத்துகின்றனர். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பங்குனி திருவிழாவின்போது இங்கு எருது பலியிடுதல் நடந்துள்ளது. தற்போது எருது பலியிடுதல் நடப்பதில்லை. 
    
 தலபெருமை:
     
  கோயில் வாசல் முன்புறம் திரிசூலத்துடன் கூடிய பீடம் மற்றும் யாக குண்டம் உள்ளன. இதற்கு முன் பகுதியில் ராஜகோபுரம் உள்ளது. இதன் அருகில் பாலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இதேபோன்று கோயிலின் அருகில் தத்தாத்ரேயருக்கு தனி சன்னதி உள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, அம்பாதுறையில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் பத்ரகாளியம்மன் கோயிலின் வரலாறு தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், பின்னர் வந்த ஜமீன்தார்களுடன் இணைந்துள்ளதாக அறியப்படுகிறது. முன்னொரு காலத்தில், தற்போது நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஜம்புதுரைகோட்டை ஜமீன் பகுதியை ஆண்டு வந்தவர் ஜமீன்தார் பெஞ்சை மாக்கள நாயக்கர். இவருக்கு திருமணம் நடந்ததும், திருமண சடங்குகளில் ஒன்றாகிய வேட்டையாடுதலுக்கு அவர் புறப்பட்டார். காட்டில் வேட்டையாடி களைத்துப்போன ஜமீன்தார், அங்கிருந்த தாமரை தடாகத்தில் தண்ணீர் பருக முயன்றார். அப்போது விஸ்வரூபத்தில் ஓர் உருவம் அங்கு தோன்றியது. தான் காளியின் சொரூபம் எனவும், அகோர பசியில் இருப்பதால் அவரை உண்டு பசியாறப் போவதாகவும் தெரிவித்தது. அதற்கு பதிலளித்த ஜமீன்தார், காளிமாதா தங்களுக்கு என்னை இரையாக தருவதில் தயக்கமோ, தடையோ இல்லை. ஆயினும், திருமண சடங்குகள் இன்னமும் முழுமை பெறவில்லை. கையில் கட்டியுள்ள காப்பினை கழற்றிவிட்டு, எனக்கு உயிர் தந்த பெற்றோரிடமும், வாழ்க்கை துணையாக வந்த மனைவியிடமும், தேவியின் விருப்பத்தை தெரிவித்து விடை பெற்று விரைவில் வருகிறேன் என தெரிவித்தார்.

அர்த்தமுள்ள காரணத்தை கேட்ட காளிதேவி அமைதியடைந்ததால், விரைவாக திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையுடன் வீடு சென்று திரும்ப அனுமதி கிடைத்தது. காடு விட்டு நீங்கி நாட்டிற்கு வந்த ஜமீன்தார், நடந்ததை விளக்கி கூறியதுடன் தெய்வத்திற்கு தந்த வாக்கை மீற முடியாது எனக்கூறிவிட்டு மீண்டும் தாமரை தடாகத்திற்கு வந்து சேர்ந்தார். இதேசமயம், இளைய ஜமீன்தார் இல்லறம் காணாத நிலையில் இறைவிக்கு இரையாகிவிட்டால், வம்சம் தழைக்க வாரிசு இல்லாது போய்விடும் என்ற கவலையால், நாட்டு மக்களும் ஜமீன்தாரின் பெற்றோரும், விண்ணை நோக்கி யாகம் வளர்த்து வேண்டுதலை துவக்கினர். வாக்கு தவறாமல் தான் மீண்டும் வந்த தகவலை மூன்று முறை உரக்க கூறினார். உடனே அங்கு வந்த காளியிடம், என்னை உண்பதற்கு முன் எனது கேள்விக்கு பதில் தர வேண்டும் என அவர் வேண்டினார். இசைவு தெரிவித்ததால் கேள்விகளை கேட்டார் ஜமீன்தார். அடர்ந்த வனத்தில் அவதரித்து உலவும் காரணம் என்னவென்று கேட்டதுடன், தன்னை மட்டும் உண்ண வேண்டும், தன்னை சார்ந்த யாரையும் உண்ண கூடாது என்ற கோரிக்கையையும்  முன்வைத்தார். காளியின் சொரூபம் பின்வருமாறு பதிலளித்தது,மதுரையை ஆண்ட மன்னன் ராஜகண் கூன் பாண்டியன் கொடிய நோயால் துன்புற்றான்.

எந்த வைத்தியமும் பயனளிக்காமல் பரிதவித்த மன்னரின் நித்திரையில் ஒரு தேவதை தோன்றி, ஜம்புதுரைக்கோட்டைக்கு அருகில் அடர் வனத்தில் பத்ரகாளியம்மன் குடி கொண்டுள்ளது. அங்கு சென்று அந்த இடத்தை சுற்றிலும் 108 கிணறு தோண்டி, தவளை விழாத தண்ணீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வந்தால், அல்லல்படுத்தும் நோய் அகன்று போகும் என அருள்வாக்கு அருளியது. அருள்மிகு மீனாட்சி அம்மனின் பக்தரான மன்னர், தன் இஷ்ட தெய்வமான மீனாட்சி அம்மன் சிலையுடன் அந்த இடம் தேடி வந்து, நாளும் ஒரு கிணறாக 108 எட்டு கிணறு தோண்டி, தவளை விழாத தண்ணீரால் பத்ரகாளியம்மனுக்கும், மீனாட்சியம்மனுக்கும் அபிஷேகம் செய்து வந்தார். அதன் முழுமையான பலனாக, முற்றிலும் நோய் குணமடைந்ததால் நாடு திரும்பினார். அதன்பிறகு தொழுவோர் யாருமின்றி, அபிஷேகம், ஆராதனை, படையல் ஏதுமின்றி வனத்திற்குள் பசியுடன் இருக்கிறேன். உன்னுடைய வாக்கு தவறாத வல்லமையை சோதிக்கவே உண்ணப்போவதாக உரைத்தேன், என தெரிவித்தது.

காளிமாதேவி ஜமீன்தாரிடம் மேலும் கூறும்போது, உனக்காகவும்,உன்மூலமாக வம்சம் தழைத்தோங்கவும், உன் பெற்றோரும் மற்றோரும் நடத்தும் யாகத்தை ஏற்று, இனிவரும் காலங்களில் உனக்கும் உனது வழித்தோன்றலுக்கும் தங்கையாக விளங்கி அருள்பாலிப்பேன். இதுவரை கொடூரமான காளியாக இருந்த நான்  இனி உன்னையும் உனது வாரிசுகளையும், என்னை நம்பி வருவோரையும், பத்திரமாக பாதுகாக்கும் பத்திரகாளியாக இருப்பேன், என கூறி மறைந்தது. இதன்படியே, மன்னன் கூன் பாண்டியன் வழிப்பட்டு வந்த இடத்தில் பத்ரகாளியம்மன், மீனாட்சியம்மன் ஆகிய இரு தெய்வங்களையும் ஒரே கருவறையில் வைத்து கோயில் கட்டினார். அத்துடன் அதேபகுதியில் அரண்மனை ஒன்றை கட்டி ஆட்சி செய்ய துவங்கினார். அடைக்கலம் தேடி வரும் அன்பர்களை காத்திடும் அம்பாள் குடி கொண்டதால் அந்த தலத்திற்கு அம்பாள்துறை என பெயர் ஏற்பட்டு பின்னாளில் அம்பாத்துறை என மருவியது. அந்நாளில் அளித்த வாக்கின்படி இந்நாளிலும் தன்னை தேடி வந்து சரணடைவோருக்கு தேவையான நலன்களை வாரி வழங்கி அருள்பாலித்து வருகிறார் அருள்மிகு பத்ரகாளியம்மன்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கிழக்கு திசை நோக்கியுள்ள கோயில் கருவறையில் பத்ரகாளியம்மன் மற்றும் மீனாட்சியம்மன் மூலவர்களாக உள்ளது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar