Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சென்றாயப்பெருமாள்
  உற்சவர்: சென்றாயப்பெருமாள்
  அம்மன்/தாயார்: ருக்மிணி, சத்யபாமா
  தல விருட்சம்: உசிலை மரம்
  தீர்த்தம்: கிருஷ்ணர் தெப்பம்
  ஊர்: கோட்டைப்பட்டி
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு பூஜை, ஓணம், புரட்டாசி சனிக்கிழமைகள்.  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரிடம் சங்கு, சக்கரம் கிடையாது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில், கோட்டைப்பட்டி, பழைய வத்தலக்குண்டு. திண்டுக்கல் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 98658 26387 
    
 பொது தகவல்:
     
  கிருஷ்ண மேடை: 500 படிகளுடன் அமைந்த மலை மீது, மண்டல காலத்தை உணர்த்தும் விதமாக 48 தூண்களுடன் அமைந்த கோயில் இது. கோயில் கொடிமரத்தில் தல வரலாற்றை புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர். சென்றாயர் சன்னதிக்கு வலப்புறம், சுவாமி பசுவிடம் பால் குடித்த இடத்தில் சித்திர ரத மண்டபத்தில், ஒரு மேடை உள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இந்த மேடையின் இரு மூலைகளில் தங்கள் கைகளை வைத்து வழிபடுகின்றனர். சற்று நேரத்தில் அவர்களது இரு கைகளும், ஒன்றாக கூடிவிடும். இதை, அச்செயல் நடக்க சுவாமி தரும் உத்தரவாகவே கருதுகின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  விவசாயம் செழிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க சென்றாயப் பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சென்றாயருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். இவர் கிருஷ்ணர் அம்சம் என்பதால் அதிகளவில் முறுக்கு, சீடை, அதிரசம் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  வித்தியாசமான சுவாமி: சிறுவனாக வந்ததன் அடிப்படையில் பிரதான சன்னதியிலுள்ள சென்றாயப் பெருமாளை, பாலகராகவே வழிபடுகின்றனர். எனவே, உடன் தாயார்கள் கிடையாது. ஆனாலும் இவர் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரிடம் சங்கு, சக்கரம் கிடையாது. உற்சவர் ருக்மிணி, சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். சனிக்கிழமைகளில் இங்கு கிருஷ்ணலீலை, ராமாவாதாரம் பற்றிய பஜனைப் பாடல்கள் பாடுவர். ஓணம் பண்டிகையன்று இவருக்கு மூன்று நாள் யாகசாலையுடன் விசேஷ பூஜைகள் உண்டு. அன்று, ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கு அணிவித்த மாலையைக் கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிப்பர்.

விசேஷ திருவிழா: ஒரு வருடம் விட்டு மறு வருடம், பங்குனி மாதத்தில் இங்கு மூன்று நாள் விழா நடக்கிறது. பங்குனி நான்காம் வெள்ளியன்று இரவில் சென்றாயர், மலையில் இருந்து கீழே செல்வார். அங்கு அவருக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும். இந்த மூன்று நாட்களும் தேவராட்டம் பிரதான இடம் பிடிக்கும். சிவன், பிரம்மாவின் தலையை கிள்ளியபோது, அது சிவன் கையிலேயே ஒட்டிக் கொண்டது. தலையை விடுவிக்க சிவன், இந்திரலோகம் சென்றார். அப்போது, பெருமாள் பாவாடை, சட்டை, கழுத்தில் பாசி அணிந்து, முகத்தில் தாடியுடன், கையில் ஒரு மேளத்தை வைத்துக் கொண்டு கோமாளி வேடத்தில் இந்திரசபைக்குச் சென்றார். அங்கு அவர்கள் சிரிக்கும்படியாக நடனமாடினார். சிவன் கையில் இருந்த பிரம்மாவின் தலை சிரிக்கவே, கீழே விழுந்துவிட்டது. இவ்வாறு, பெருமாள் ஆடிய நடனமே தேவராட்டம் என்கின்றனர். இதனடிப்படையில், தேவராட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடக்கும். இவ்வேளையில் சுவாமி முன் தேவராட்டம் ஆடும்போது, சிலையும் ஆடுவதாகச் சொல்கின்றனர். சனிக்கிழமையன்று ருக்மிணி, சத்யபாமாவுடன் திருக்கல்யாணம் நடக்கும். அப்போது, பெண்கள் நலுங்குப்பாட்டு படிப்பர். விழாவின் கடைசி நாளில், பக்தைகள் சட்டையின்றி, வெண்புடவை மட்டும் அணிந்து மஞ்சள் நீரை சுவாமி மீது தெளித்து விளையாடுவர். கோபிகைப் பெண்கள் கிருஷ்ணருடன் விளையாடியது போன்ற பாவனையில் இந்த வைபவம் நடக்கும்.

சுவாமி உணர்த்தும் தத்துவம்: மனிதர்கள் வாழும் காலத்தில் எவ்வளவு செல்வாக்குடனும், வசதியாகவும், ஆடம்பரமாகவும் இருந்தாலும், வாழ்க்கைக்குப் பின் அவர்கள் கொண்டு செல்வது ஏதுமில்லை. இதை உணர்த்தும் விதமாக பங்குனி விழாவில் கடைசி நாள் வைபவம் நடக்கும். அப்போது, சுவாமியை ஒரு குடிசையில் எழுந்தருளச் செய்து, அனைத்து ஆபரணங்களையும் களைந்து விடுவர். அவர் மீது ஒரு காவியுடையை மட்டும் அணிவிப்பர். அதனுடனேயே, அவர் சன்னதிக்குச் சென்று விடுவார்.

கிருஷ்ண ஜெயந்தி விழா: கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இங்கு விசேஷ பூஜை உண்டு. அப்போது, கிருஷ்ணரை தொட்டிலில் கிடத்தி அவருக்கு சேனை (நாக்கில் தேன் வைத்தல்) வைக்கும் சடங்கும் நடக்கும். பெண்கள் பிரசவமான பெண்களுக்கு தருவதுபோல, வெள்ளைப்பூண்டு, கருப்பட்டி, பெருங்காயம் சேர்த்த மருந்துப் பொருளை இடித்து, சுவாமி சன்னதியில் படைப்பர். மேலும், கிருஷ்ணருக்குப் பிடித்த சீடை, முறுக்கு, அதிரசம், மிட்டாய் உட்பட பல வகையான பதார்த்தங்களையும் படைத்து வழிபடுவர். கிருஷ்ணர் பிறந்ததைக் கொண்டாடும்விதமாக பெண்கள் கிட்டி பந்து என்னும் விளையாட்டையும் ஆடி மகிழ்வர்.
 
     
  தல வரலாறு:
     
  கிருஷ்ண தேவராயர் வம்சாவளியைச் சேர்ந்த ஆதிசென்னம்ம நாயக்கர், என்ற பெருமாள் பக்தர் இவ்வூரில் வசித்து வந்தார். இங்குள்ள குன்றில் பசுக்களை மேய்ப்பது அவரது வழக்கம். ஒருசமயம் பசு மேய்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியபோது ஒரு பசு மட்டும் இல்லாதைக் கண்டார். எனவே, பசுவைத்தேடி குன்றுக்கு வந்தார். ஓரிடத்தில் அந்த பசு நின்றிருக்க, அதன் மடியில் சிறுவன் ஒருவன் பால் பருகிக் கொண்டிருந்ததைக் கண்டார். குட்டி போடாத பசுவிடம் சிறுவன் பால்குடிப்பதைக் கண்டவருக்கோ ஆச்சர்யம். இது இறைசெயலாகவே இருக்க வேண்டுமெனக் கருதியவர் மறைவாக நின்று கொண்டார். அப்போது சிறுவன் அவரை அழைத்து பெருமாளாக சுயரூபம் காட்டினார். அவரிடம், தான் அந்த குன்றில் இருக்க விரும்புவதாகவும், அங்கு தனக்கு கோயில் எழுப்பும்படியும் உத்தரவிட்டார். அதன்படி, பக்தர் இங்கு அவருக்கு கோயில் எழுப்பினார். பக்தர்களுக்கு ஓடிச் சென்று அருள்புரிபவர் என்பதால் சுவாமிக்கு "சென்றாயப்பெருமாள்' என்ற திருநாமம் அமைந்தது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரிடம் சங்கு, சக்கரம் கிடையாது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar