Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காளகத்தீஸ்வரர் , பத்மகிரீஸ்வரர்
  உற்சவர்: சோமாஸ்கந்தர்
  அம்மன்/தாயார்: ஞானம்பிகை, அபிராமியம்பிகை
  தல விருட்சம்: நெல்லி மரம்
  தீர்த்தம்: ஐந்து தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காரணாகமம்
  புராண பெயர்: திண்டீச்சுரம்
  ஊர்: திண்டுக்கல்
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  பலபட்டடை சொக்கர்  
     
 திருவிழா:
     
  12 நாட்கள் - சித்திரைப் பெருந்திருவிழா - ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோயிலில் கூடுவர் - சித்திரை கார்த்திகை நட்சத்திரத்தில் கொடி ஏற்றத்தோடு தொடங்கி சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடையும். ஆடி சுக்கிர வார உற்சவம் - சுவாமி அம்பாள் வீதி உலா - கடைசி வெள்ளி புஷ்ப பல்லக்கு - ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடுவர் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உற்சவம், கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை தீப விழா, மார்கழி திருவாதிரை ,ஆருத்ரா தரிசனம், தை வெள்ளி , மாசி மகம் , பங்குனி உத்ரம் ஆகிய தினங்களில் கோயிலில் அபிசேக ஆராதனைகள் நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தவிர அம்மாவாசை, பவுர்ணமி, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்கள் பெருமளவில் கூடுவது வழக்கம்.  
     
 தல சிறப்பு:
     
  எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர் சன்னதி உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திருக்கோயில்-624001, திண்டுக்கல் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-51- 2433 229, 2460 903. 
    
 பொது தகவல்:
     
  மிகப்பழமையான சிவ ஸ்தலம். சேர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் சோழர், பாண்டியர் விஜய நகரப் பேரரசர்கள் மதுரை நாயக்க மன்னர்கள் யாவரும் பணிந்து போற்றித் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையுடையது. இத்தலவிநாயகர் வன்னி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

திண்டிமாசுரனை அழிக்க பைரவராக வந்த சிவன், பிரகாரத்தில் இருக்கிறார். இங்குள்ள ஒரு தூணில் பால துர்க்கை காட்சி தருகிறாள். மற்றோர் தூணில் கருடாழ்வார் காட்சி தருகிறார். முன் மண்டபத்தில் சந்தானக்குரவர்களான மெய்கண்டதேவர், மறைஞான சம்பந்தர், அருள்நந்தி சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் ஆகியோர் இருக்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  ராகு, கேது தோஷம் நீங்க, செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க, இழந்த வேலை மீண்டும் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர்கள் சன்னதி உள்ளன. திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது. பத்மகிரி நாதர் பேரில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய தென்றல் விடு தூது இக்கோயிலின் இலக்கியப் பெருமையைப் பறை சாற்றுகிறது. பலபட்டடைச் சொக்கநாத புலவர் இயற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது என்ற அரிய நூலைப் பதிப்பித்த டாக்டர் உ.வெ.சாமிநாத அய்யர் அந்நூலின் முன்னுரையில் பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் திருநாமம் இதற்கு திண்டீச்சுரம் என்ற திருநாமமும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று என்கிறார்.

இரண்டு தரிசனம்: ஆரம்பத்தில் இங்குள்ள மலையில் பத்மகிரீஸ்வரர் கோயில் இருந்தது. விழாக்காலங்களில் அடிவாரத்திற்கு சுவாமி வருவார். இதற்காக தற்போதைய அபிராமியம்மன் கோயில் இருக்குமிடத்தில், ஒரு மண்டபம் அமைக்கப்பட்டது. இப்பகுதியை ஆண்ட அச்சுத தேவராயர், காளஹஸ்தியில் அருளும் காளஹஸ்தீஸ்வரர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரை தன் இருப்பிடத்தில் வழிபட எண்ணிய அவர், 1538ல் இம்மண்டபத்தில் காளஹஸ்தீஸ்வரரையும், ஞானாம்பிகையையும் பிரதிஷ்டை செய்தார். 1788ல் அன்னியர்கள் இப்பகுதியில் இருந்தபோது, மலை மீதிருந்த சிவன், அம்பிகையை இம்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் இந்த மண்டபமே கோயிலாகக் கட்டப்பட்டது. தற்போதும் இங்கு இரண்டு சிவன், இரண்டு அம்பிகையர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். ஆடி, தை வெள்ளிகளில் அம்பிகையர் இருவரும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவர். தை அமாவாசையன்று இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கும்.

மந்திர அம்பிகை: ஆரம்பத்தில் இங்கு அம்பிகைக்கு சன்னதி கிடையாது. அனலன் என்னும் அசுரனை அழிக்க காளி வடித்தில் வந்த அம்பிகை இங்கு தங்கினாள். உக்கிரமாக இருந்த அவளை சிவன் சாந்தப்படுத்தி, மணந்து கொண்டார். அவ்வேளையில் அம்பிகை மிகுந்த பொலிவுடன் அழகாக இருந்ததால், "அபிராமா அம்பிகை' எனப் பெயர் பெற்றாள். அபிராமம் என்றால் அழகு என்று பொருள். சித்திரையில் அம்பிகை, அசுரனை அழித்த வைபவமும், திருக்கல்யாணமும் நடக்கும்.

சிவத்தலம் என்றாலும் இங்கு அம்பிகையே பிரதானம் பெற்றிருக்கிறாள். இப்பகுதியில் "அபிராமி கோயில்' என்றால்தான் தெரியும். இவளது உண்மையான பெயர், "அபிராமா அம்பிகை' என்பதாகும். இப்பெயரே காலப்போக்கில் அபிராமி என மருவியது. "அபிராமா' என்ற பெயர் மந்திர அட்சரத்துடன் அமைந்ததாகும். இப்பெயரைச் சொல்லி அம்பிகையை வழிபடும்போது, அம்பாளுக்குரிய அத்தனை மந்திரங்களையும் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும். தை அமாவாசையன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும்.

புலியாக வந்த சிவன்!: முற்காலத்தில் இங்கு திருக்கார்த்திகை விழா மிக விசேஷமாக நடந்துள்ளது. பாஹு, சுபாஹு என்னும் இரு சிவபக்தர்கள் கார்த்திகையன்று தவறாது சிவனைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் அவர்கள் இங்கு வந்தபோது, சிவன் புலியின் வடிவில் சென்று, அவர்களைக் கொல்லப்போவது போல் நடித்தார். சிவ தரிசனத்திற்கு பிறகு, தங்களை உண்ணும்படி புலியிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். புலியும் சம்மதிக்கவே, சிவனை வணங்கிவிட்டு புலியிடம் சென்றனர். சிவன் சுயரூபம் காட்டி, வாக்குத்தவறாத அவர்களுக்கு முக்தி கொடுத்தருளினார். கார்த்திகையன்று, சிவன் புலியாக வந்த வைபவத்தை இங்கு பாவனையாகச் செய்வர்.

வேலை பிரார்த்தனை: இந்திரனின் சாபத்தால் பதவியிழந்த வருணன், இங்கு சிவனை வேண்டி பதவியை திரும்பப்பெற்றான். இதன் அடிப்படையில், இழந்த வேலை திரும்பக் கிடைக்க பக்தர்கள் சிவனுக்கு சம்பா சாதம் படைத்து, ருத்ராபிஷேகம் செய்து வேண்டுகிறார்கள். அவர்களுக்குரிய நட்சத்திர நாள் அல்லது பவுர்ணமியன்று இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. சிலர் பதவி உயர்வுக்காக இதே வேண்டுதலைச் செய்கின்றனர்.

பேராசைக்கு பெரும் தண்டனை: விஸ்வாமித்திரர் தான் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட சுமேதன் என்ற அந்தணருக்கு சம்பளமாக பெரும் பொருள் கொடுத்தார். பேராசை பிடித்த அந்தணர், எவ்வளவு கொடுத்தும் போதவில்லை என்றார். அவரது ஆசையை அடக்க எண்ணிய விஸ்வாமித்திரர், அவரை மானாக மாறும்படி சபித்துவிட்டார். வருந்திய அந்தணர், சாப விமோசனம் கேட்க, திண்டீஸ்வரம் இறைவனை வழிபட்டால் விமோசனம் கிடைக்குமென்றார். அதன்படி, அந்த அந்தணர் பத்மகிரீஸ்வரரை வணங்கி சுயரூபம் பெற்றார். சித்திரை பிரம்மோற்ஸவத்தின்போது, கோயில் எதிரில் அந்தணரான மானுக்கு சிவன் அருளும் நிகழ்ச்சி நடக்கும்.

 பவுர்ணமிதோறும் கிரிவலம் செல்கிறார்கள். மார்கழி தேய்பிறை அஷ்டமியில் சிவன், படியளக்கும் வைபவம் நடக்கும். அன்று பஞ்சமூர்த்திகளும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளுவர். சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, இரண்டு சீடர்களுடன் காட்சி தருகிறார். வழக்கமாக சீடர்கள் அமர்ந்து உபதேசம் கேட்கும் நிலையில்தான் இருப்பர். ஆனால், இவர்களிருவரும் நின்றபடி இருக்கின்றனர். குருவிற்கு மரியாதை தரும் விதமாக இவ்வாறு இருப்பதாகச் சொல்கிறார்கள். காளஹஸ்தீஸ்வரர் சன்னதிக்கு பின்புறம் லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில், முருகப்பெருமான் தண்டபாணியாக காட்சி தருகிறார்.

அகத்திய விநாயகர்: பொதிகைக்குச் செல்லும் வழியில் அகத்தியர் இங்கு சிவனை வழிபட்டுச் சென்றார். இவர் வழிபட்ட "அகத்திய விநாயகர்' கிரிவலப்பாதையில் இருக்கிறார். கந்தசஷ்டியின்போது முருகன், வள்ளி இருவரும் இங்கு எழுந்தருளுவர். அப்போது வள்ளியை, விநாயகர் யானை வடிவில் வந்து மிரட்டுவது போல பாவனை செய்வர். பின்பு முருகன், வள்ளி திருமணம் நடக்கும். இவ்வேளையில் தினை மாவு நைவேத்யம் படைக்கப்படும்.

பெருமாளுடன் ஆஞ்சநேயர்: வரதராஜப்பெருமாளுக்கு பிரகாரத்தில் சன்னதி இருக்கிறது. இவர் வட திசையை நோக்கியிருப்பதால், செல்வவளத்துக்காக இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். பொதுவாக ஆஞ்சநேயர், பெருமாள் சன்னதி எதிரில் அல்லது பிரகாரத்தில் தனிச்சன்னதியில்தான் காட்சி தருவார். ஆனால், இங்கு சுவாமியின் அருகிலேயே காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் பக்திக்கு முக்கியத்துவம் தரும் விதமாக இவ்வாறு பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். வரதராஜர் வைகுண்ட ஏகாதசியன்று, கருட வாகனத்தில் சொர்க்கவாசல் கடப்பார். மற்ற தலங்களைப்போல, இவருக்கு தனியே சொர்க்கவாசல் கிடையாது. அபிராமிக்கான பிரதான வாசலையே, சொர்க்கவாசலாகக் கருதி பெருமாள் கடப்பார். தங்கை பார்வதிக்கான வாசல் வழியே அண்ணனான பெருமாள் உரிமையோடு கடப்பதாகச் சொல்கிறார்கள்.

 
     
  தல வரலாறு:
     
  பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக இங்கு சிவனை வேண்டி தவமிருந்தார். சிவன் அவருக்கு ஒரு பத்ம (தாமரை) தடாகத்தின் மத்தியில் எழுந்தருளினார். இதனால் இவர் "பத்மகிரீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் திண்டிமாசுரன் என்னும் அசுரன், பக்தர்களைத் துன்புறுத்தவே, சிவன் அவனை அழிக்கச் சென்றார். சிவனின் பார்வை பட்டதுமே திருந்திய அசுரன், தன் பெயரால் இத்தலம் திகழ வேண்டுமென வேண்டினான். சிவனும் அவ்வாறே அருளவே இத்தலம், "திண்டீஸ்வரம்' எனப் பெயர் பெற்றது.

திண்டீச்சுரம் என்னும் இந்நகரை ஆண்டு வந்த திண்டிமாசூரன் தேவர்கள் மீது படையெடுத்து சென்றான்.இதனால் தேவர்கள் பத்மகிரி சிவபெருமானை நாடினர். இறைவனும் சூலப்படை தாங்கி பைரவர் உருவெடுத்து அசுரனை அழித்தார். தங்களை காத்த பத்மகிரீஸ்வரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தர்ம பாலன் எனும் சிவபக்தி நிறைந்த அரசனிடம் திண்டிமா புரி அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு தேவர்கள் விண்ணுலகம் சென்றனர். தர்மபாலனும் பத்மகிரியின் சிகரத்தில் பத்மகிரீசருக்கு ஆலயம் கட்டினான். மொகலாய ஆதிக்கத்தின்போது மலை மீதுள்ள இறைவனும், இறைவியும் உற்சவ மூர்த்திகளாக நகருக்குள் இப்போதிருக்கும் காளகத்தீஸ்வர ஆலய இடத்தில் வைத்து வழிபட்டனர். பின்பு காளஹஸ்தீஸ்வரரையும், ஞானாம்பிகையையும் பிரதிஷ்டை செய்து அவர்களுக்கும் அதே பூஜை பெருமைகளையும் தந்து வழிபட்டனர். திண்டீஸ்வரம் என்ற பெயர் திண்டுக்கல் என மருவியது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர் சன்னதி உள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar