Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: குழந்தை வேலப்பர்
  ஊர்: ஐவர் மலை, பழநி
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி இக்கோயிலில் முக்கிய திருவிழாவாகும். இத்தலத்தில் அமாவாசை பவுர்ணமி, கிருத்திகை ஆகிய தினங்களில் விசேஷ பூஜை, அலங்கார ஆராதனைகள் உண்டு. வள்ளலார் கோயில் இருப்பதால் தைப்பூசமும் கார்த்திகை தீபமும் வருட முக்கிய திருவிழாக்கள் ஆகும். கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் நடப்பதைப் போன்றே சொக்கப்பனை கொழுத்தி தீபம் ஏற்றுவது முக்கிய நிகழ்வாகும். மகாசிவராத்திரியின் போது திரௌபதி யம்மன் கோயிலில் விசேச வழிபாடுகள் உண்டு. அம்மன் தேரில் திருவீதி உலா கிரிவலப்பாதையில் நடந்து அந்த நிகழ்ச்சி தற்போது என்ன காரணத்தினாலோ தடைபட்டுவிட்டது.  
     
 தல சிறப்பு:
     
  குழந்தை வேலப்பர் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. முருகனின் திருவுருவம் வேறு எந்த கோயிலிலும் காணப்படாத திருவுரு ஆகும். குழந்தை வேலப்பர் தோகை விரித்த மயிலின் முன், மயிலின் கழுத்தை இடக்கையில் அனைத்த வாறும் வலக்கையை இடுப்பில் ஊன்றியபடியும், ஸர்ப்பம் பாதத்தருகே படம் எடுத்த நிலையிலும் அமைந்திருப்பது சிறப்பாகும். இந்த அமைப்புள்ள முருகனை “மயூரப்பிரியின்” என்பர். இத்தோற்றத்தை அபிஷேகத்தின் போது மட்டும் தான் காண இயலும். அலங்காரத்தில் இத்தோற்றம் மறைந்து விடும். கோயில் வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள நவகிரஹ மண்டபத்தில், நவகிரஹங்கள் வட்ட வடிவில் அமைந்துள்ளது. ஒரு வித்தியாசமான அமைப்பு, கோயில் முன் சுற்றுசுவற்றுக்கு வெளியே விளக்கு தூண் உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை காலை 7.00 முதல் மாலை 5.00 வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் ஐவர் மலை, 624621 பழநி, திண்டுக்கல் மாவட்டம்  
   
போன்:
   
  +91 84898 62935, 93658 41953 
    
 பொது தகவல்:
     
  உட்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி விநாயகப் பெருமானும், தெற்கு நோக்கியபடி ஐம்பொன்னாலான நடராஜரும் சிவகாமித் தாயாரும் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் மயில் வாகனமும் சிறிய கருவறையில் குழந்தை வேலப்பர் எழுந்தருளியுள்ளார்.

முருகன் கோயிலின் எதிரே உள்ள வள்ளலார் ஜோதி மண்டபத்தைக் கடந்தால் ஒரு சுனை உள்ளது. அதற்கருகில் உள்ள மிகப் பெரிய பாறையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளது. இம்மலையின் மிக உயரமான பகுதி இதுவேயாகும். இக் கோயிலுக்குச் செல்ல பாறைமீது படிகளைச் செதுக்கி உருவாக்கி உள்ளனர். மேலே செல்லும் போதும் கவனம் தேவை.
 
     
 
 தலபெருமை:
     
  இம்மலை பிரதான சாலையில் இருந்து 2 1/2 கி.மீ. தூரத்தில் இருப்பதால் நிசப்தமான சூழல் நிலவுகிறது. தற்போது கூட குகைகளில் சித்தர்களும், துறவிகளும் தவவாழ்க்கை மேற்கொண்டுள்ளதைக் காண இயலும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இம்மலையின் சிறப்புகளையும், சமணபடுக்கை போன்ற செய்திகளை கல்வெட்டில் பதித்திருப்பதிலிருந்து இம்மலையின் தொன்மையினையும் சிறப்பையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த கோயிலில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. 1997ல் ஐம்பொன்னிலான உற்சவர் சிலை திருட்டு போய் விட்டது. எங்கு தேடியும் எந்த தடையமும் கிடைக்கவில்லை. காவல் துறையினரின் தேடுதல் வேட்டையும் பயனின்றி போனது. அருகில் உள்ள செங்கல் சூளையில் ஆண்களும் பெண்களும் வேலை செய்து கொண்டிருந்தனர். பெண்கள் இருவர் சிலை காணாமல் போனது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் ஒரு புதருக்கு அருகில் வேலை செய்தவர்கள் ஐயோ பாம்பு. பாம்பு என கத்திக் கொண்டு தலைதெறிக்க ஓடினார்கள். ஆனால் அந்த நல்ல பாம்பு யாரோ ஒருவரைத் தேடுவது போல் ஓடி ஓர் இளைஞரைக் கொத்திவிட்டு புதருக்குள் ஓடி மறைந்தது.

பாம்பால் கடியுண்டவன், “ஐயோ குழந்தை வேலப்பா” எனத் துடித்துடித்துக் கொண்டு புதர் இடைவெளியில் விழுந்தான். அவனோடு வேலை செய்தவர்கள் அவனைக் காப்பாற்றும் முயற்சியில் புதர் அருகே சென்றனர். அவனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். குழந்தை வேலப்பா... குழந்தை வேலப்பா... எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாயில் நுரை தள்ளியும் உடல் நீலநிறமாக மாறியும் அவன் உயிர் பிரிந்தது. அதே சமயம் அப்புதரினுள் ஏதோ மின்னுவதைப்போல் தெரிந்ததால் குப்பைகளையும் சருகுகளையும் நீக்கி பார்த்த போது காணாமல் போன முருகன்  உற்சவ மூர்த்தி சிலை தெரிந்தது. பின் அச்சிலையை வெளியே தூக்கி வந்து சுத்தம் செய்தனர்.

காவல் துறை விசாரணையில் சிலையைத் திருடியவன் சிலகாலம் ஐவர் மலை கோயிலில் வேலை பார்த்தவன் என்றும், அவனே சிலையைத் திருடியுள்ளதாகவும் தெரியவந்தது. “தெய்வம் நின்று கொல்லும்” என்பதை கண்கூடாக நடத்திக் காட்டிவிட்டார் அக்குழந்தை வேலப்பர்.

திருமலை நாய்க்கர் ஆட்சி காலத்தில் உச்சிப்பிள்ளையார் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மலையில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தனித்தனியே பூசாரிகள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குழந்தை வேலப்பர் கோயில் மற்றொரு பாறையின் உச்சியில் அமைந்துள்ளது. உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்திருக்கும் பாறைதான் அதிக உயரம் உள்ளது
 
     
  தல வரலாறு:
     
  2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று பெருமை வாய்ந்த ஐவர் மலை பழநிக்கு அருகில் உள்ளது. பழங்கால கொங்கு நாட்டின் தென் கோடியில் அமைந்திருந்தது இம் மலை. தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழநி வட்டத்தில் உள்ளது. சுமார் 1000 அடி உயரமும் மிகப்பெரிய பாறைகளைத் தன்னகத்தே கொண்ட மலை. தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இம்மலை ஆதியில் ‘அயிரை ’ மலை என வழங்கப்பட்டது. சங்க இலக்கியங்களான பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், குறுந்தொகை போன்ற நூல்களில் ‘அயிரைமலை ’ எனக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். அயிரி என்பது அம்மனின் பல பெயர்களுள் ஒன்று. எனவே அயிரியாகிய பெண் தெய்வம் குடி கொண்டுள்ள மலை என்பதால் அயிரை மலை எனப் பெயர் பெற்றது. பஞ்சபாண்டவர்கள் இம்மலையில் உள்ள குகைகளில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே பிற்காலத்தில் ஐவர் மலை என வழங்கப்பட்டு இப்பெயரே நிலைத்து விட்டது. அயிரை அம்மன் தற்போது திரௌபதி அம்மன் என விளங்குகின்றார்.

இம்மலையில் திரௌபதி அம்மன் கோயில், இடும்பன் சன்னதி வள்ளலார் ஜோதி மண்டபம் (சத்ய ஞான சபை), குழந்தை வேலப்பர் கோயில் மற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் என ஐந்து கோயில்கள் பல்வேறு உயரங்களில் அமைந்துள்ளன. மேலும் பெரிய சுவாமி என்ற முனிவரின் சமாதி, நாராயண பரதேசி சமாதி என இம்மலையில் தவம் செய்து அங்கே சமாதி நிலையில் அமைந்தவர்களுடைய பிற சமாதிகளும் காணப்படுகின்றன. இவர்கள் தவம் மேற்கொண்ட குகைகளும் உள்ளன.

இம்மலையின் அடிவாரத்தில் ஒரு சிறிய ஏரி உள்ளது. அதன் அருகே பெரிய ஆலமரத்தடியில் பாதவிநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து மலைமீது செல்வதற்கான படிக்கட்டுகள் தொடங்குகின்றன. வலப்புறம் தொல்பொருள் ஆய்வு துறையினரின் கல்வெட்டுப் பலகை பதிக்கப்பட்டுள்ளது. இக்கல் வெட்டில் இம்மலையின் தொன்மை, சிறப்புக்கள், இம்மலையில் தவம் புரிந்த தீர்த்தங்கர்கள், கல்வெட்டுகள் சமண பள்ளிகள் இரண்டாம் வர குணபாண்டியனின் கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகளைத் தாங்கி நிற்கின்றது. தொடர்ந்து பயணித்தால் பாதிதூரம் சென்றபின்பு பாதை மூன்றாகப் பிரிகின்றது.

நேரே சென்றால் பெரிய சுவாமிகள் ஜீவ சமாதி உள்ளது. இவர் சுமார் 110 வருடங்களுக்குமுன் இம்மலைக்கு வந்து 60 ஆண்டுகள் மலையை விட்டு இறங்காமல் தவம் மேற்கொண்டு முக்கியடைந்தவர். இச்சமாதிக்கு தென்புறம் என்றும் வற்றாத சுனை உள்ளது.

இச்சமாதிக்கு வடபுறத்தில் பெரிய குகை ஒன்றுள்ளது. கி.மு. 300ல் ஆயிரக்கணக்கான சமணத் துறவிகள் தமிழக பகுதிக்குள் வந்தனர். ஆங்காங்கே சமண கோயில்களையும் சமணப் பள்ளிகளையும் அமைத்தனர். அம் முனிவர்கள் பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத மலைக்குகைகளில் தங்கி தவவாழ்வை மேற்கொண்டனர். இத்துறவிகள் கொங்கு நாட்டின் வழியே தான் தமிழகத்துக்குள் நுழைந்தனர்.

அச்சமயத்தில் ஐவர் மலையிலும் அத்துறவிகள் வந்து தங்கி சமணப் பள்ளிகளைத்துவக்கி தவ வாழ்வை மேற்கொண்டனர். இங்குள்ள குகை பகுதிகள் இயற்கையாகவே பாதுகாப்பாக அமைந்துள்ளது. மழை காலங்களில் நீர்புகாத வாறும், நல்ல கற்றோட்டத்துடன் வெளிச்சமாகவும் உள்ளது. சமண குருமார்கள் “தீர்த்தங்கரர்” என அழைக்கப்படுகின்றனர். குகையின் வடபகுதியில் மேல்புற நெற்றிப் பகுதியை சீர் திருத்தி 16 சமண தீர்த்தங்கர்களின் சிலைகளை புடைப்புச் சிற்பங்களாக வடித்துள்ளனர். இச்சிலைகளை உருவாக்க பொருளுதவி அளித்தவர்களின் பெயர்களை தமிழ் வட்டெழுத்து வடிவில் பொறித்துள்ளனர்.

இச்சிலைகளின் கீழ்புறம் திரௌபதியம்மன் மற்றும் விநாயகர் சன்னதிகள் உள்ளன. திரௌபதியம்மன் சன்னதி எதிரே பெரியவர் ஒருவரின் இருபுறம் இருபெண்மணிகள் இருகரங்கள் கூப்பிய வண்ணம் உள்ளது. இந்த அம்மன் சிலகுலத்துவர்களின் குலதெய்வமாக விளங்குகின்றாள். மேலும் 15 சமண கல்வெட்டுகள் இம்மலையின் பிற பகுதிகளில் காணப்படுகின்றன.

திரும்ப வந்து படிப்பாதையில் பயணத்தைத் தொடர்ந்தால் வழியில் இடும்பன் சன்னதி உள்ளது. இது ஒரு தனிச்சன்னதி விமானத்துடன் அமைந்துள்ளது. மேலும் படிப்பாதையில் பயணித்தால் நாம் காண்பது சமரச சுத்த சன்மார்க்க சங்கமும் வள்ளலார் ஜோதி மண்டபமும்.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில்  சைவ மரபில் வந்த பழனியாண்டியின் முதல் மகனாகத் தோன்றியவர் சுப்ரமணியன் இளமையில் குடும்ப பெரியவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கல்வி கற்று திருப்புகழ், திருமுறை, பாரதியார் பாடல்கள் போன்ற நூல்களை நன்கு கற்றறிந்தார். முருகக் கடவுள் மீது பரம்பரையாக அளவற்ற பக்தி கொண்ட குடும்பம். ஆதலால் முருக உபாசனைகள் இவரது பிறவி இயல்பாய் அமைந்தது. தனது 24 வயதில் பெற்றோரின் அனுமதியுடன் துறவு மேற்கொண்டார். கன்னியாகுமரி முதல் கைலாயம் வரை உள்ள புனித தலங்களில் தங்கி தவம் மேற்கொண்டார். எந்த ஸ்தலத்திலும் 48 நாட்களுக்கு மேல் தங்கமாட்டார். வடலூர்  வள்ளலாரை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு சமரச சுத்த சன்மார்க்க நெறியில் ஈடுபாடு கொண்டார். சதா சர்வ காலமும் “முருகானந்தம்” என சொல்லிக் கொண்டிருப்பதுடன் தன்னைக் காணவரும் பக்தர்களையும் ‘முருகானந்தம்’ என சொல்லச் சொல்வது பழக்கம். இதன் காரணமாக இவருக்கு ‘முருகானந்த அடிகள்’ என்ற திருப்பெயர் உண்டாயிற்று.

வடலூர் ராமலிங்க அடிகளாரின் வழிநின்று சமரச சுத்த சன்மார்க்க நெறியை மக்களிடம் பரப்புவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டார்.

ஐவர் மலையில் ஜோதி வழிபாடு திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் நடைபெற்று வந்தது. அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அளவில் கலந்து கொள்வர். அச் சமயத்தில் அப்பகுதி முழுதும் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். உணவுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. ஜோதி வழிபாட்டில் ‘மழை பதிகம்’ பாடி வேண்டினர். அதன் பலனாக அப்பகுதியில் நல்ல மழை பெய்து வளம் பெற்றனர். அப்பகுதிக்கு விஜயம் செய்த வாரியார் சுவாமிகள் இந்த ஜோதி வழிபாட்டில் கலந்து கொண்டார் என்பது சிறப்பு.

ஒருநாள் சுவாமிகள் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களிடம், இன்று முதல் இங்கு சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைகிறது. கலந்து கொண்ட அனைவருக்கும் “அட்சய பாத்திரம்” எனும் சீட்டு ஒட்டப்பட்ட மண்பானையை கொடுத்து தினமும் உங்கள் வீட்டில் சமைக்கும் முன் 1பிடி அரிசியை இப்பானையில் போடவும். கார்த்திகைக்கு முதல் நாள் சங்கத்தின் நிர்வாகிகள் வரும் போது ஒப்படைக்கவும். இந்த அரிசி அடுத்த நாள் ‘கார்த்திகை ’ யன்று உணவு சமைத்து அன்னதானம் வழங்கப்படும் என அறிவித்தார். இனிமேல் இங்கு உணவுப் பஞ்சம் வராது எனவும் உறுதியளித்தார்.

சுவாமிகள் இப்பணியுடன் நோய் வாய்ப் பட்டவர்களையும் மூலிகை சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்தி வந்தார். ஐவர் மலையில் சன்மார்க்க சபைக்கென தனி கட்டிடம் கட்டப்பட்டு இன்று வரை ஜோதியும் பூஜைகளும் தவறாமல் நடந்து வருகின்றது. மேலும் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் 108 சங்கங்களை நிறுவியதுடன், வள்ளலார் பிறந்த ஊராகிய மருதூரில் அவர் பிறந்த இல்லத்தை விலைக்கு வாங்கி, அந்த இடத்தில் சங்கம் அமைத்து வழிபாட்டு நிலையமாக்கியது குறிப்பிட தக்க ஒன்றாகும். தலைமைசங்கமான ஐவர் மலையில் இவர் குருநாதரான வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த அடுப்பு கடந்த 150 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருப்பது சிறப்பாகும்.

முருகானந்த அடிகளாரின் வாக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதுகின்றனர். அவருடைய வாக்கைப் பெற்றவர்கள் அவைகளை எய்துவது திண்ணம். இவரைப்பற்றி கேள்விப்பட்டவர்கள் இவரை நாடி வந்து வாக்கு கேட்பது வழக்கம்.

ஒருநாள் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரை டோலியில் படுக்க வைத்து 4பேர் தூக்கிவந்து ஜோதி மண்டபத்தில் படுக்க வைத்தனர். சுவாமிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடல் முழுதும் புண் உண்டாகி நீர் வடிய பரிதாபமாகக் காணப்பட்டார். துர்நாற்றம் வேறு தொழுநோய் முற்றிய நிலையில் இருந்தார். அவர் பழநியை சார்ந்த  இலட்சுமண செட்டியார் என்ற நாட்டுக் கோட்டை செல்வந்தர். இந்நோயை குணப்படுத்த பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இனி இதற்குமேல் மருத்துவமே இல்லை என குடும்பத்தாரும் கைவிட்டு விட்டனர். இந்நிலையில் தான் செட்டியாரின் கணக்குப்பிள்ளை (வாசுநாடார்) சுவாமிகளைப் பற்றிச் சொல்லி அழைத்தபோது, முதலில் மறுத்த நிலையில், கடைசி முயற்சியாக இதையும் பார்த்துவிடலாம் எனக்கூறி அவரைக் கொண்டு வந்திருந்தனர்.

சுவாமிகள் செட்டியாரைப் பார்த்து திருநீறும் தீர்த்தமும் அளித்தார். சிறிது நேரம் மவுனமாக கண்மூடி தியானித்தார். பின் செட்டியாரைப் பார்த்து “இந்த நோய் சரியாகி விட்டால் இந்த மலைக்கு என்ன செய்வீர்கள் எனக் கேட்டார். செட்டியாரும் குடும்பத்தாரும் சுவாமிகள் என்ன உத்தரவிட்டாலும் அதை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனர்.

சுவாமி “இந்நோய் விரைவில் நீங்கும். இம்மலைமீது ‘குழந்தை வேலப்பர்’ கோயில் ஒன்று கட்டித் தரவேண்டும் என்றார். செட்டியார், “இந்த உடல் நிலையில் நம்மால் எவ்வாறு இந்த கோயிலைக் கட்ட முடியும் என சிந்தித்தார். செட்டியாரது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சுவாமி, “நீங்கள் நம்பிக்கையுடன் திருப்பணியைத் தொடங்குங்கள். கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேக விழாவில் நடைபெறும் அன்னதானத்தின் போது நீர் பூர்ண குணமடைந்து உங்கள் கையினாலேயே பந்தியில் நெய் வழங்குவீர்கள். அக்காட்சியினை அனைவரும் காண்பர்” என சொல்லி முடித்தார்.

செட்டியார் சுவாமியின் வாக்கின் மீது நம்பிக்கை ஏற்பட்டு நல்ல நாளில் குறிப்பிட்ட இடத்தில் திருப்பணியைத் தொடங்கினார். கோயில் கட்டுமானம் இறையருளால் குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. நோயின் தாக்கமும் சிறிது சிறிதாக குறைந்து வந்தது. ஜோதி வழிபாட்டிலும் கலந்து கொண்டார். திருப்பணி நிறைவுபெற்ற நிலையில் சுவாமி தலைமையில் சான்றோர்கள் கலந்து கொள்ள கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது. சுவாமிகள் வாக்குப்படி செட்டியார் பூர்ண குணமடைந்தார். அன்னதானத்தில் பங்கு பெற்றவர்களுக்கு நெய் வழங்கினார். பூர்ண குணத்துடன் 90 வயது வரை வாழ்ந்தார்.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம்
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: குழந்தை வேலப்பர் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. முருகனின் திருவுருவம் வேறு எந்த கோயிலிலும் காணப்படாத திருவுரு ஆகும். குழந்தை வேலப்பர் தோகை விரித்த மயிலின் முன், மயிலின் கழுத்தை இடக்கையில் அனைத்த வாறும் வலக்கையை இடுப்பில் ஊன்றியபடியும், ஸர்ப்பம் பாதத்தருகே படம் எடுத்த நிலையிலும் அமைந்திருப்பது சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar